தலைப்பு

செவ்வாய், 8 ஜூன், 2021

நமது சிறுசெயலும் யாரையும் பாதிக்கக் கூடாது!


எண்ணற்ற கோடி எறும்பினும் கீழுள ஜீவன்களை பகவான் படைத்து அளித்து காப்பாற்றுகிறார். ஒதுக்கப்பட்ட உயிர்களையும், ஒடுக்கப்பட்ட தீனர்களையும் , கனிவுடன் நோக்கி அவர்கள் கண்ணீரைத் துடைப்பது பாபாவின் கரங்கள் அல்லவா?.. 


சுவாமியின் பிருந்தாவன் வளாகம்.   உள் அடங்கியவை, பகவானின் இருப்பிடமான த்ரையீ பிருந்தாவன், அவர் தரிசனம் தரும் சாயி ரமேஷ் கிருஷ்ணன் ஹால், அவரது நிழலில் ஒதுங்க, மாணவர்களுக்கான ஹாஸ்டல். (வசதியான அறைகள் கொண்ட புதிய ஹாஸ்டல் ஒன்றை, பகவான் பிருந்தவன வளாகத்திற்கு வெளியே எழுப்ப முயன்றபோது, மாணவர்கள் பகவானின் அண்மையைவிட்டு விலக விரும்பாததால் அழுது ஆர்பாட்டம் செய்யவே, பகவான் அதைக் கைவிட்ட கதை அனைவரும் அறிந்ததே..) அடுத்து ஸ்வாமியின் கல்லூரி- பிருந்தாவன வளாகம். 

பகவானது செவ்வண்ண அங்கிள் துவைக்கப் பட்டு, கல்லூரிக்கும் வெளிநாட்டவர் தங்கும் ஹாஸ்டலுக்கும் இடையே கொடியில் உலர்த்தப் பட்டிருக்கும் காட்சியை மாணவர்கள் கண்டு ரசிப்பதுண்டு. காற்றிலே அவை ஆடும்போது, அன்னையிடம் செல்லத் துடிக்கும் மழலை போன்று உருவகப்படுத்த தோன்றுகிறதல்லவா? 


அந்த காலகட்டத்தில்தான் புதிதாக துணி துவைக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது துணிகளை துவைப்பது மட்டுமல்லாமல், அலசி பிழிந்தும் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட மாணவர் ஒருவருக்கு ஒரு உள்ளார்ந்த ஆசை. சுவாமியின் துணிகளை துவைத்து பிழிய தான் ஒரு வாஷிங் மெஷின் வாங்கி தர விரும்பினார். ஸ்வாமியிடம் பேசுவதற்கான அடுத்த சந்தர்ப்பம் கிட்டியபோது இந்த அவாவை அவர் தன் தகப்பனாருடன் சென்று, சுவாமியிடம் தெரிவித்தார். 


அவரது தகப்பனார் இதை சுவாமியிடம் தெரிவித்தபோது, மாயாவியான பகவான் ஒன்றுமே விளங்காதது போல் நடித்து, இந்த விஷயத்தின் காரண கர்த்தாவாகிய அந்த மாணவனிடமே  விளக்கம் கேட்டார்.மாணவர் மகிழ்வுடன் விளக்கியபின் பகவான்  பரிவுடன்  அதை மறுத்து கூறிய அமுதவாக்கு, பகவானின் தாட்சண்ய கருணா ரசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. பகவான் கூறிய பதில் "வேண்டாம். அது அவசியமல்ல. என் அங்கிகளை தூய்மைபடுத்தும் அந்த அன்பர்களின் வேலைக்கு அது பாதகமாக முடிந்து, அவர்களின் சந்தோஷம் பறிபோய்விடும். ஸ்வாமிக்கு அவர்கள்மீது ஏதோ மனத்தாங்கல் என அவர்கள் நினைக்கவும் ஏதுவாகி விடும்" 


🌻 சிறு நிகழ்ச்சிதான். ஆனால் பகவானின் இந்த செயல் ஒரு மாபெரும் நெகிழ்ச்சி. யார் மனமும் புண் படக்கூடாது ( Hurt Never) என்பதற்கு இதைவிட பெரிய விளக்கங்கள் தேவையா?" தன் வாழ்வே தான் கூறும் செய்தி "என பாபா கூறுவதின் உட்பொருள் நமக்கு இதன் மூலம் விளங்குகிறது அல்லவா. 🌻


ஆதாரம்: சுவாமியின் முன்னாள் மாணவர் பகிரும் ஓர் அனுபவப் பகிர்வு...

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக