தலைப்பு

செவ்வாய், 22 ஜூன், 2021

காசாளரின் வடிவில் வந்து சேல்ஸ் மேனின் வேலையைக் காப்பாற்றிய கடவுள் சாயி!

இன்ன வடிவம் தான் எடுப்பது என்பது சுவாமியிடம் இல்லை. எந்த வடிவமும் சுவாமியால் எடுக்க முடியும். தனக்கு பிடித்த ரூபத்தில் வரவேண்டும் என பக்தர்கள் வேண்டுவதை விட சுவாமி எந்த ரூபத்தில் அருள் புரிய வருகிறாரோ அதை பக்தியோடு ஏற்க வேண்டும் . காரணம் அதில் மீட்பு இருக்கிறது.. காவல் இருக்கிறது... கருணை இருக்கிறது என்பதை உணர்த்தும் அற்புதப் பதிவு இதோ.... 


1969 இல் ஸ்ரீமதி. D. ராஜலட்சுமியும் அவரது கணவரும், பிரபலமான உம்முடி செட்டியாரின் நகைக்கடைக்கு (மதராஸில்) சென்றனர், சில நகைகளுக்கு ஆர்டர் கொடுத்த பின் கிளம்பிவிட்டனர். அது ஒரு வெள்ளிக்கிழமை. மறுநாள் நகைக்கடையிலிருந்து சேல்ஸ்மேன் ஒருவர், ராஜலட்சுமி அவர்களின் கணவரின் அலுவலகத்திற்கு வந்து, எங்கள் கடையில் ஒரு விலையுயர்ந்த வைர நெக்லஸ் ஒன்று காணாமல் போய்விட்டதென்றும், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை என்றும் ஒருவேளை தவறுதலாக தங்கள் பைக்குள் போட்டுக் கொண்டு வந்துவிட்ட வாய்ப்புள்ளதா? என பதட்டத்தோடு கேட்கிறார். காரணம் நகை காணவில்லை எனில் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் என்ற பதபதைப்பில் அந்த அப்பாவி சேல்ஸ் மேன் அவ்வாறு கேட்கிறார். அவரோ அப்படி நாங்கள் எதுவுமே செய்யவில்லை! என்று கூறவும், மீண்டும் அந்த சேல்ஸ்மேன், “அந்த பொருள் கிடைக்காவிட்டால் தனக்கு வேலை போய் விடுவதோடு பெரிய சங்கடம் வந்து சேரும்,” என வாய் திறந்தே அழாத குறையாக புலம்புகிறார்.     


பணம் படைத்த முதலாளிகள் ஆராயாமல் ஆத்திரத்தில் பழியை தொழிலாளி மீது சுமத்துவது இயற்கை. வறுமையைச் சுமக்கும் முதுகுகள் பழி பாவங்களையும் சேர்த்தே வீணாய் சுமப்பதையும் பார்த்திருக்கிறோம். அந்த பயத்தில் தான் அந்த சேல்ஸ் மேனும் தன்னை நம்பி குடும்பத்தினர் நிறைய பேர் உள்ளனர் என்கிறார். அதற்கு ஸ்ரீமதி ராஜலட்சுமியின் கணவர் கனிவோடு, “அது கிடைக்காவிடில் 15,000 பணம் கொடுத்து உதவுகிறேன்” என்கிறார். ஒரு சிலர் கருணையோடு இருப்பதால் தான் சமூகத்தில் ஓரிரு துளி மழையாவது வானத்திலிருந்து அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது.          

இந்த தம்பதிகள் இருவருமே சத்யசாயி பக்தர்கள் என்று சேல்ஸ்மேனுக்குத் தெரியும் ஆதலால் 'பாபா காப்பாற்றுவார்' என்று கூறிக் கொண்டு சென்றுவிடுகிறார். அத்தகைய பக்தியை சுவாமி மீது சேல்ஸ்மேன் கொண்டிருந்தது தங்கத்தை விட விலை மதிப்புள்ளதாக தோன்றுகிறது. 

           

திங்கட்கிழமை மீண்டும் சேல்ஸ்மேன் ராஜலட்சுமி கணவரின் அலுவலத்திற்கு வந்து, எங்கள் கடையின் காசாளர்(Cashier) பத்து நாட்கள் லீவில் பெரம்பூர் சென்றதாகவும், சனிக்கிழமை தற்செயலாக கடைக்கு பார்வையிட வந்த போது , நகை காணாமல் போன விவரம் கேட்டு ஒரு குறிப்பிட்ட மரப்பெட்டியில்(desk) தேடச் சொல்ல அதில் ஒரு fileக்குள் நகை இருந்தது கண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். கண்டு பிடித்தவர் மீண்டும் லீவுக்காக பெரம்பூர் சென்றுவிட்டார் என்ற சந்தோஷ செய்தியை பகிர்கிறார். சேல்ஸ் மேனுக்கு போன உயிர் திரும்ப வருகிறது... வேலை காப்பாற்றப்பட்டுவிட்டது என்ற பெருமூச்சு பூங்காறாறாய் உடலெங்கும் வீசுகிறத. 

பிறகு திங்கள்கிழமை விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்காக சேர்வதற்கு வந்த கேஷியரிடம் அனைவரும் “நல்ல வேளை நீங்கள் லீவில் இருந்தபோதுகூட கடைக்கு யதேர்ச்சையாக பார்வையிட வந்து, நெக்லஸ் கண்டுபிடித்து கொடுத்தீர்கள் எனக் கூற, கேஷியரோ, “நான் நடுவில் சனிக்கிழமை வரவே இல்லையே! இப்பொழுது தான் லீவு முடிந்து வருகிறேன்” என்கிறார். அனைவருக்கும் திகில் கலந்த ஆச்சர்யம். அந்த சேல்ஸ் மேன் கண்களில் பக்தியை சுமந்த கண்ணீர் துளிகளை கண்கள் சுமந்தபடி இருந்தன...


அந்த சேல்ஸ்மேன் ராஜலட்சுமியின் கணவரிடத்தில் தவறுதலாக சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்ததை நினைத்து மன்னிப்பும் கேட்கிறார். ஸ்வாமி தான் கேஷியர் வடிவில் வந்து விபரீதம் தனக்கு வராமல் காப்பாற்றினார் என்று அழுதபடி கூறுகிறார்!

ஆதாரம்: Gems of Sai Story no 80

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻சேர வேண்டிய பழியை தடுத்தாட் கொண்ட தூய தெய்வம் ஸ்ரீ சத்ய சாயி. இப்படி ஒரு இறைவன் இவ்வுலகில் இல்லை. மனிதனைப் போல் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஏழை பணக்காரர் எனப் பாகுபாடு பார்ப்பதே இல்லை. தூய்மையான பக்தியைத் தேடி ஓடோடி வந்து எந்த கணத்திலும் அருள் புரிபவர் சுவாமி. மானம் உயிரை விட மேலானது என வாழும் எளிய மக்களுக்கு வலிமையாக சுவாமியும் .. அவர்கள் கொண்ட சுவாமி பக்தியுமே அனுதினம் காப்பாற்றி அவர்களை கரை சேர்த்து வருகிறது என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக