தலைப்பு

ஞாயிறு, 6 ஜூன், 2021

EP 5: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - ராஜரிஷி விஸ்வாமித்திர நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... ராஜரிஷி விஸ்வாமித்திர நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


✋ நாடிகள்:


சில மனிதர்களின் கை பெருவிரல் ரேகையை வைத்தே நாடிப் பலன்கள் சொல்வர். பல வெளிநாட்டினர் நம் தேசம் வந்து செய்த ஆட்சி மாற்றத்திலும் ஓரளவிற்காவது ஓலைச் சுவடிகள் தங்கி இருப்பது சுவாமியின் கருணை என்றே உணர்கிறேன். பழமை.. மடமை என்று போகி நாட்களில் சில விஷமிகளால் ஓலைச்சுவடிகள் தீக்கிரைக்கு உள்ளானதும் உண்டு. ஆகவே ரிஷிகள் எழுதியவை ஆங்காங்கே இருந்தபடி இன்னும் வரிசைக் கிரமமாக தொகுக்கப்படாமலே இருந்துவருகிறது.


🌹ராஜரிஷி விஸ்வாமித்திரர்:


இவரை அறியாதவர் எவரும் இல்லை... விஸ்வாமித்திரர் தன் தியானத்தில் கேட்ட மந்திரமே காயத்ரி மந்திரம். அவரே உலகத்திற்கு அதை முதன்முதலில் வெளிப்படுத்தியது. மாபெரும் மன்னராக இருந்து ரிஷியாக மாறியது இவர் ஒருவரே.. அவதாரமாயினும் புத்தர் .. மகாவீரருக்கு எல்லாம் வாழ்ந்து காட்டியதில் விஸ்வாமித்திரரே முன்னோடி.. இவரை கௌசிகர் எனவும் அழைக்கிறோம். சபலத்தில் சறுக்கினாலும் மீண்டும் தபோ பலத்தில் வசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர். சறுக்கலே முடிவல்ல மீண்டும் உயர முடியும்  என்பதற்கு ஆன்மீக உதாரணம் இவர். அப்பேர்ப்பட்ட ரிஷி இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை தனது நாடியில் பதிந்த சில முக்கிய சுவாரஸ்ய பதிவுகள் இதோ...


🌹ராஜரிஷி விஸ்வாமித்திர நாடி:

எடுத்த எடுப்பிலேயே சுவாமியை சிவசக்தி என்கிறார்.. மன்னரிலிருந்து ரிஷியானவர் என்பதால் வாள்முனைக் கூர்மையாக இருக்கிறது இவரது வரிகள்...
சிவசக்தி சங்கரியே ஜெகம் புகழ
வந்தவளே லோகமாதா நவமணியே
நவரசத்தின் பொருளே அம்மா நாற்பத்தி
முக்கோண வடிவே சக்தி சக்தி உன் அடி போற்றி

லோக மாதா என உலகத்தின் அன்னை சுவாமியே என்கிறார் ரிஷி.
நாற்பத்தி முக்கோண வடிவே சக்தி என ஸ்ரீசக்ர நிலையை முன்னிறுத்தி சுவாமியை உணர்த்த சாக்த யோகத்தை வலியுறுத்துகிறார்.


🌹சுவாமியே ஸ்ரீகிருஷ்ணர்:

சாட்சி பட மாயவனின் மறுஉருவாய் மாயம் காட்ட
மாயோன்.. மாயன் என ரிஷிகள் ஒவ்வொருவரும் சுவாமியை ஸ்ரீ கிருஷ்ணர் என்றே உணர்கிறார்கள்..
மாதவனே, மாதவனின் நன்னிலை காட்டும் யோகம் என்று 
பக்தி யோகம்/ ஞான யோகம்/ ராஜ யோகம் / கர்ம யோகத்தை உணர்த்தியவர் சுவாமியே என்கிறார்.


அதே சமயத்தில் ...
இந்த யோகத்தினால் கூட சுவாமியை முழுமையாக உணரமுடியாது என்ற சத்தியத்தை ...
இதனுள் காட்ட யோகம் இல்லை என்கிறார்..
எந்த யோகம் சுவாமியை முழுமையாக வெளிக்காட்ட முடியாது என்பதே இதன் பொருள்.


🌹அவதார சுவாமியின் பிரவேசம்:

இல்லாத மாயம் உண்டு அது தருணம் சுபயோக
நாளதனில் மாயவனின் வருகை நாள் கூறிடவே
தேகம் தன்னில் இணையும் யோகம்
இணைந்தபின் காட்சிபட சூல் திங்கள் மேல் அளித்திடவே

மாயவனின் (கண்ணனின்) வருகை நாள் என அவதார வைபவத்தை சூல் திங்கள் என்கிறார். சூல் என்றால் கர்ப்பம் / மகப்பேறு.. இது மகாப்பேறு அல்லவா... திங்கள் கிழமை என்பதை சூல் திங்கள் என்கிறார்.. என்ன தமிழ்.. என்ன மேன்மையான ரிஷி இவர். இந்த மாயவனின் வருகையைத் தான் மகான் அரவிந்தரும் ஸ்ரீ கிருஷ்ணரின் அதிமானஸ சக்தி மண்ணில் (24/11/1926) இறங்கிவிட்டது என்கிறார். இரண்டு வாசகத்திற்கும் காலகட்டம் வேறாயினும் .. சத்தியம் என்பது ஒன்றே என்பதை இது உணர்த்துகிறது.

காட்சிபட வையகத்தில் சுபநிலைகள் காண யோகம் உண்டு எனவும் வியந்து விவரிக்கிறார்‌.


🌹மூன்று சாயி அவதாரங்கள் பற்றி:

சாலுரைக்க அதன் அம்மை சாம்பசிவன் உமையாளோடு
கண்டுரைக்க யுக பாலகர் யோகம் உண்டு என்பதில்...
ஷிர்டி சுவாமியின் தாயான தேவகிரி அம்மாவுக்கு சிவனும் சக்தியும் தரிசனம் தந்து அளித்த அதே சத்திய வாசகத்தை ராஜரிஷி முற்காலத்திலேயே முன்மொழிகிறார்.

இதில் யுகபாலகர் என்கிறார். பாலகன் என்றால் ஒருமை.. பாலகர் என்றால் பன்மை.. சாயி அவதாரங்கள் மூன்று என்பதால்தான் பன்மை விகுதியைப் பயன்படுத்துகிறார் ரிஷி. 
ஏதோ ஒரு எட்டு வாசித்து கூறும்படியாக ரிஷிகள் எதையும் எழுதுவதில்லை.. அப்படி எழுத மனிதர்களே போதும்.. ரிஷிகள் தேவையில்லை. 
இதே பாடலின் முற்பகுதியில் 
விலகி மார்க்கம் பின் வையகத்தில்
உதித்திடுவான் ஈராண்டுக்குப் பின்
ஈர்வரும் குழந்தை வடிவில் வந்துதிக்க
என மூன்றாவது மாபெரும் அவதாரமான பிரேம சாயியை பதிவு செய்கிறார். 


இப்படி ஆணித்தரமாக பதிவு செய்து.. முத்தாய்ப்பாக ...
இவ்வாறாய் உரைத்திட்டேன் ராஜரிஷியான
மதியில்லா மதிகெட்டவன் கெட்டிட்டு
ஈசனையே நாடியவன் இருந்தும் நூல்விதி என்கிறார்.

சிவசக்தி அம்சமான சுவாமியை நாடியவன் தன்னிலையில் வழுவாமல் தானாய் இருப்பான்.. மதிகெட்டவன் மேலும் கெடுவான் என்கிறார்.
இந்த வாசகத்தில் ராஜஸ உணர்வு உண்டு தான்.. கொஞ்சம் காரமான வரி தான்.. காரணம் விஸ்வாமித்திரரே ராஜரிஷி அல்லவா.. ஆகவே தான் வரிகளின் ஊடே ராஜ சிங்கமாய் கர்ஜிக்கிறார். 

(விஸ்வாமித்திர நாடி படிக்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில்... நாடி படிக்கப்பட்ட நாள் : 25/05/2011)

ஒவ்வொரு ரிஷியின் ஒவ்வொரு நாடிப் பதிவுகளிலும் அவரவரின் ஆன்ம நிலை வெளிப்படுகிறது.. அவரவரின் உணர்வு நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.. அவரவர்கள் வெளிப்படுத்தும் வரிகள் வேறு வேறாக இருப்பினும்.. உட்பொருள் சத்தியமான ஒன்றையே அது ஸ்ரீ சத்ய சாயி எனும் பேரிறைவனையே மிக தீர்க்கமாய் ஆழமாய்ப் பறைசாற்றுகிறது!!

வெண்புறா நாடிகள் சுமந்து தூது சொல்லும்..
ஒரு தம்புரா நாடிகள் சுமந்து தூது சொல்லுமா...
சொல்லும் அடுத்த பகுதியில்..

நாடியின் துடிப்புகள் தொடரும்...

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக