உயிரினங்கள், உயிறற்றவை(சேதன, அசேதன) அனைத்தும் பகவானின் படைப்புகள் தானே. உயர்வு தாழ்வு நாம் பாராட்டலாம்.பகவான் அப்படி அல்ல. படி அளக்கும் பரந்தாமன் பாபா, பாகுபாடின்றி, தமது கருணையை அனைவர் மீதும் சமமாக பொழிந்து பாதுகாக்கிறார் அல்லவா...
🌹அனைத்து உயிரும் ஒன்றுதான் சாயி அன்பு வளையப் பிணைப்புதான்:
ஒவ்வொரு ஜீவராசியும், ஒரு பாடத்தை நமக்கு புகட்டுகிறது. நன்றி செலுத்தும் நாயின் நற்குணம், ஆறரிவு கொண்ட மனிதர்கள் கற்க வேண்டிய பாடம். பகவான் பாபா எவ்வாறு உருவத்தில் நாயாகி, உள்ளத்தில் தூயபக்தி செலுத்தியஒரு ஜீவனுக்கு, தம் ஸ்பரிசத்தால் மோட்சம் அளித்தார் என்பதைக் காண்போம்.
ஸ்ரீசத்ய சாயி ஹில் வியூ விளையாட்டு அரங்கம். "வாழ்க்கையே ஒரு விளையாட்டு, அதை வாழ்ந்து நீ விளையாடு" என்கிற பகவானின் பொன்மொழிக்கோர் எடுத்துக்காட்டு.
1982 ல் திறக்கப்பட்ட, அதன் கட்டுமானப் பணிகளின்போது, சாயி மாணவர்கள் L&T நிறுனத்தினரருடன் சேர்ந்து உற்சாக உழைப்பினை நல்கி இருந்தனர். கட்டுமான பணிகள் நடைபெற்ற சமயம் பகவான் பாபா தினமும் மாணவர்களை சந்தித்து, உற்சாகப்படுத்துவார். அரங்கம் அவர்கள் பயன்பாட்டிற்காகவே கட்டப்படுவதை எடுத்துரைப்பார். மாணவர்களும் உடல் சிரமம் பாராமல் தம் உழைப்பினை பலவாறு நல்கினர். பாபாவின் உற்சாகமும் ஊக்குவிப்பும் அளவிடற்கு அரியது. தினம்தோறும் தவராமல் விளையாட்டு திடல் கட்டுமான இடத்துக்கு வந்து, மாணவர்களுடன் அளவளாவி இனிப்புகள் வழங்கி மகிழ்விப்பார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்போதும் சித்தர்கள் வசிப்பதாகவும், அவர்கள் பல உருவங்களில் உலாவுதாகவும் ஒரு நம்பிக்கை. அது போன்ற ஒரு சித்தர்தானோ அந்த நாய். அது பகவான் ஸ்டேடியம் வரும் போதெல்லாம் தூரத்திலிருந்து ஸ்வாமியைத் தொடரும். மற்றவர்களை நாடி அது சென்றதில்லை ஆனால் ஸ்வாமி அதை கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. பகவானின் சித்தம் யாருக்குத் தெரியும். பகவான் திரும்பி சென்ற உடன், உயர்நிலைப் பள்ளியின் அருகிலுள்ள மரங்களின் அடியில் படுத்துவிடும். இவ்வாறு அந்த நிகழ்ச்சி சிலகாலம் தொடர்ந்தது. ஒருநாள் பகவான் தனது வழக்கமான விசிட் முடித்துவிட்டு, காரில் ஏறி பிரசாந்தி நிலையம் திரும்ப தயாரானார். பிறகு ஏனோ சிறிது தயங்கி, காரில் ஏறாமல், சிறிது தூரம் நடந்து சென்றார். உயர் நிலைப் பள்ளியின் கட்டிடத்தை உற்றுப் பார்த்தார். அப்போது அந்த மனம் உருக்கும் நிகழ்வு நடந்தது. அந்த நாய் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறத்திலிருந்து ஓடிவந்து பகவான் அருகில் பவ்யமாக நின்றது.
தாயான பகவான் சற்றே குனிந்து சேயான அந்த புனித ஜீவனை தம் பொற்கரத்தால் வருடி, சில தின்பண்டங்களை வழங்கினார். இந்த ஹஸ்த தீட்சை முடிந்து சில நிமிடங்களில் பகவான் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு அந்த புனித ஜீவனை யாரும் பார்க்கவில்லை.
இதுபற்றி ஸ்வாமியிடம் ஒருவர் வினா எழுப்ப, பாபா கூறினார். "என் கரம் பட்ட அதன் உடலை, வேறு யாரும் தொடக் கூடாதென்று, அது கிணற்றில் விழுந்து உயிர் துறந்து விட்டது."
🌻சாய்ராம்... பகவானின் தரிசனம் காண அனு தினமும் அந்த புனித ஜீவன், இடையறாது ஏங்கியதன் பலனாக , பகவான் அதற்கு தமது பொற்கர ஸ்பரிசம் அளித்து மோட்ச பதமும் அளித்தார். கங்கை நீர் போன்று தூய்மையானது ஆத்மா. அது பல வடிவ பாத்திரத்தில் ( மனித,விலங்கு உடல்)நிரம்பியுள்ளது. ஆகவே பகவான் நமது மனதைத்தான் பார்க்கிறார். வடிவத்தை அல்ல. இதுவே இந் நிகழ்வின் முலம் நாம் தெரிந்து கைக்கொள்ள வேண்டிய படிப்பினை. 🌻
Source: Sri Sathya Sai Digvijayam (1926-2005)
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக