தலைப்பு

திங்கள், 28 ஜூன், 2021

பிறவி ஊமையை பாடவே வைத்த பகவான் பாபாவின் பேரற்புதம்!

மனித ஆற்றலுக்கு எல்லாம் ஆற்றல் தரும் பேராற்றல் இறைவனான ஸ்ரீ சத்ய சாயி எவ்வாறு ஒரு பிறவி ஊமையைப் பாடவே வைத்தார் எனும் பேரன்பும் தாங்கியும் உணர்வுப் பூர்வமான சுவாமியின் கருணை நிறைந்த பதிவு இதோ...


பின்வரும் அனுபவம் செல்வி அனுஷா - ஸ்ரீ சத்யசாயி இன்ஸ்டியூட்டில் மூன்றாம் ஆண்டு ஹோம் சயின்ஸ் படித்த அவரால் விவரிக்கப்படுகிறது....     

அனுஷா ஒரு பிறவி ஊமை! இருமுறை தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தும் பயன் இல்லை... மீண்டும் அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் பயந்தனர். குழந்தை இறந்துவிடக் கூடுமோ என்று! அனுஷாவின் பாட்டி தீவிர சத்யசாயி பக்தை! அவரது அறிவுரையின்படி அனுஷாவின் பெற்றோர் பர்த்தி வந்து பாபாவைப் பார்த்து கடிதம் கொடுத்து, பாத நமஸ்காரம் செய்தனர். மனதிற்கும் ஆயிரம் ஏக்கம்.. சோகம் ததும்பிய முகம்.. வேதனை ததும்பிய அகம்.. கண்ணீர்ப் பாத்திரமாகிப் போன நேத்திரம்.. தனது தலை சூத்திரத்தை மாற்ற வேண்டி பிரசாந்தி நிலையம் எனும் பரம்பொருள் சந்நதியில் மன்றாடிக் கொண்டிருந்தனர். 

பலமுறை பர்த்திக்கும், ஒயிட்ஃபீல்டிற்கும் அனுஷ்காவுடன் வந்து வந்து போயினர். இன்டர்வ்யூவிற்கு சுவாமி கூப்பிடவே இல்லை! சுவாமி செயலுக்கு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கவே செய்கிறது. சுவாமி தனது பூர்வ அவதாரத்தில் சொன்னது போல் பொறுமை , நம்பிக்கை இரண்டும் இரண்டு கண்களாக ஆன்மீகப் பாதையில் அவரவரை சரியாக வழிநடத்திச் செல்கிறது. 

பிறகு 1992இல் தனது தந்தை, தாத்தா இவர்களுடன் ஒயிட் ஃபீல்டில் மஞ்சள் நிறப் பூக்கள், ஒரு கடிதம், விபூதிப் பொட்டலம் இவற்றோடு அமர்ந்திருந்தாள். மனதிற்குள், “சுவாமி எனக்கு நிச்சயம் அருள் புரிவார்” எனப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தாள். இந்தமுறை இறைவனுக்கான அனுகிரக வருகையின் நேரம் நெருங்கியது... 

பகவான் தரிசனம் கொடுக்க வந்தார். இவளது கரங்களில் இருந்த மலர்களை வாங்கி இதழ்களைப் பிரித்து பறக்கவிட்டார். விபூதியை ஆசீர்வதித்து கொடுத்தார். கர்மாவை சுமந்திருந்த கடிதத்தை சுவாமி வாங்கிக் கொண்டார். இதழ்கள் பறந்து வந்து படபடத்து அவள் நாக்கில் உருண்டது! அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த உணர்வு! சுவாமியின் அற்புத லீலை என்னதான் செய்யாது... அப்பப்பா! தனது அறைக்குள் சென்றதும் “பாபா” என முதல் வார்த்தை பேசினாள்! பிறகு படிப்படியாக பேச ஆரம்பித்து விட்டாள். பாபா என்ற வார்த்தை தான் அவளது நாவிற்கு பிள்ளையார் சுழியாகிப் போனது.. எப்பேர்ப்பட்ட பாக்கியம். மௌனங்களையே உச்சரித்த அவளது உதடுகள் முதன்முறையாக சப்த மண்டலத்தை அனுபவித்தது. சுவாமியின் கருணைப் பொழிவை அனுபவித்ததால் மொழியைப் பேச அணு அணுவாக அவளால் அனுபவிக்க முடிந்தது. இதைப் பார்த்த உறவினர்கள் - ஸாயியை தாங்கள் நம்பவில்லை என்று கூறியவர்கள், மனம் மாறி ஸாயியின் பாதைக்கு வந்து விட்டனர். ஸ்ரீ சத்ய ஸாயி இறைவனே எனும் சத்திய‌ அனுபவத்தை அவளது மொழி சப்தம் வழி அனைவரும் விழிப்புணர்வு அடைந்தனர். 

 பிறகு ஸாயி கல்வி நிறுவனத்திலேயே படித்து சுவாமியின் முன்பு பாடவும் செய்தாள். ஸாயிக்கு அவள் நிறைய கடன் பட்டிருக்கிறாள் ஆனால் அதை விட ஸாயியின் கருணை மிக மிகப் பெரியது!!

ஆதாரம்: Sai Sparshan _ P318

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻 பொய்களையும்.. தற்பெருமைகளையும்.. புறம் பேசுவதையும் நிறுத்திவிட்டாலே சப்த மண்டலம் தூய்மை அடைந்துவிடுகின்றன.. பேசும் ஆற்றலின் மகிமையை பேச்சாற்றல் கிடைக்கும் பிறவி ஊமைகளாலேயே உணர்ந்து கொள்ள முடிகின்றன... மனிதனுக்குள் அனைத்து வித ஆற்றலாக இயங்குவது சுவாமியே.. அந்த ஆற்றலை மனிதன் பயன்படுத்தி தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டியதே அந்த மனித ஆற்றல் எனும் திருக்கோவிலுக்கு அவன் செய்யும் குடமுழுக்கு!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக