தலைப்பு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உங்கள் ஆசைகளுக்கு உச்சவரம்பு வைத்துக்கொள்ளுங்கள்!


மனிதர்களின் பேராசையைச் சுருக்கி ஆசையாக்கி அந்த ஆசைக்கும் ஓர் எல்லை வகுத்து அந்த எல்லைக்குள் சேமித்து வைத்த சாயி சேவை எனும் முல்லையைத் தொடுத்து.. தனக்கே ஆரமாய்ச் சூட்டி.. வாழ்வை மணமுள்ளதாய் மாற்றச் சொல்கிறார் இறைவன் சத்ய சாயி...

சுயநலமே ஆசைக்கு மூலகாரணம். உன் ஆசையைக் குறைத்துக் கொள். இன்னும் அதிகமான பேரானந்தத்தை அனுபவிக்கலாம். நீ சமூகத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, அனுபவித்து, இவையெல்லாம் சமூகத்தில் நிகழ்கின்றன. சமூகத்தில் வாழாமல், அனுபவிக்க இயலாது.

உனக்கு மகிழ்ச்சியை அளிப்பது சமுதாயமே, சமுதாயத்திலிருந்து தான் ஒவ்வொன்றும் வருகிறது. இதற்குப் பிரதியாக நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள்?  சமுதாயத்தை முன்னேற்றுவதன் மூலமோ, சமுதாயத்திற்குச் சேவை செய்வதன் மூலமாகவோ, நீங்கள் சமுதாயத்திற்கு நன்றி தெரிவிக்கிறிர்களா? நீங்கள் சமுதாயத்திற்கு ஒன்றும் செய்வதில்லை. மாறாக சமுதாயம் உங்களுக்கு நலன் தர வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இது மிகவும் சுயநலமான போக்கு. இத்தகைய உணர்ச்சி, இதயக் குறுக்கம் ஆகும். இது குறுகிய மனப்போக்குக்குக் கொண்டு செல்கிறது. இதன் விளைவாக, உங்களிடம் அன்பில்லை. ஆகவே இதயத்தை விரிவாக்குங்கள், மற்றவருக்காக அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.


மற்றவர்களுடைய உணர்ச்சிகளில் குறுக்கிடுவது நல்லதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டிலுள்ள கருவிகளைக் கொண்டு ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறான். வீட்டில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு அவன் குதிக்கலாம், அவன் தடைகளை வலுப்படுத்த, ஒரு நீண்ட கம்பை எடுத்து அதைத் திறமையுடன் சுழற்றலாம். அவன் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததால், யாரும் அவன் செயல்களை ஆட்சேபிக்க இயலாது. மாறாக சாலைக்கு வந்து இவற்றையெல்லாம் செய்யத் தொடங்கினால், வழியில் செல்லும் மக்களுக்குத் துன்பம் நேரும். வீட்டில் அவன் விரும்புவதைச் செய்ய அவனுக்கு சுதந்திரம் இருப்பது போல, மக்களுக்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தெருவில் நடக்கச் சுதந்திரம் உண்டு. அவனுடைய சுதந்திரம், மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிட லாகாது. சுதந்திரத்தின் அடிப்படை இயல்பு எல்லோருக்கும் ஒன்றே. ஆனால் சுதந்திரத்தின் பரிமாணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. உன்னை நீ விரும்புவது போலவே அவரவர்கள் தம்மை விரும்புகிறார்கள். நீ உன்னை பற்றி நினைத்துக் கொள்கிறாய்; ஆனால் மற்றவர்களைப் பற்றி நீ கவலைப் படுவதில்லை. உனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்; ஏன், எப்படி, எங்கே, எப்பொழுது நீ சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டும்? ஆனால் அந்தக் கேள்வியை நீ கேட்டுக் கொள்வதில்லை.


உலகம் ஒரு மாபெரும் அதிசயம். ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒருவர் ஆசைகளுக்கு உச்சவரம்பு வைத்துக்கொள்ளவேண்டும். ஆசைகள் வளர்வதால், வியாதிகளும் வளர்கின்றன. ஒரு மனிதனின் ஆசைகள் அளவுடன் இருந்தால், அப்போது அவன் சமுதாய நலனைப் பற்றி நினைக்க இயலும்.குறைந்த சுமையால் பயணத்துக்கு அதிக வசதி(Less luggage more comfort)மனிதனுக்கு. ஆசைகள் இருப்பது சகஜம். உண்மையிலேயே அது அவசியம். உன் தாகத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் ஒரிரு கோப்பைத் தண்ணீர்தான்.கங்கை தண்ணீர் முழுவதையும் குடிக்க முயற்சி செய்யலாகாது. மூச்சுவிடக் காற்று வேண்டும். எந்த அளவுக்கு? எல்லாவற்றிலும் உனக்குள்ள தேவைக்கு ஒரு அளவு வேண்டும். ஆகவே, அளவான ஆசைகள் இருப்பது ஒருவனுக்கு நல்லது. ஆசை செருப்பை போன்றது. செருப்பு மிகச் சிறியதாக இருந்தால், உன்னால் நடக்க முடியாது. அது பெரியதாக இருந்தால், உன்னால் நேராக நடக்க முடியாது. அது சரியான அளவாக இருந்தால் தான் நீ சுகமாகவும் நேராகவும் நடக்க முடியும். உனது ஆசைகள் அனைத்துக்கும் ஒரு வரம்பு வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. உன் ஆசைகளை அளவுபடுத்த நீ தோல்வியுற்றால், துன்பங்களுக்குள் நீ சிக்கிக் கொள்கிறாய். உன் ஆசைகள் அளவுடன் இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாறுகிறது.

ஆதாரம்: சாயி அருளமுதம் கொடை-1994 (தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக