தலைப்பு

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஸ்ரீ சத்ய சாயி: அனைத்தும் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், யாவும் வல்லவர் - P.S.ப்ரியா சக்ரவர்த்தி

சாயி முன்னாள் மாணவர் P.S.ப்ரியா சக்ரவர்த்தி (Alumnus, SSSIHL, Brindavan) அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்! 
                               
1995-ஆம் ஆண்டு தசராவின்போது நடந்தது.SSSIHL பிருந்தாவனில் நான் அப்போது பிஎஸ்சி(Honours) படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைக்கு ஊருக்குச் செல்லாத எல்லா பிருந்தாவன மாணவர்களும் மந்திர்க்கு அருகில் உள்ள பழைய விடுதியில் தங்கியிருந்தோம். எப்பொழுதும் போல மந்திரில் நடக்கும் பஜனையின் போது மாணவர்கள் தாங்கள் அமரும் இருக்கைக்காக முண்டியடித்து செல்வார்கள். நான் எப்போதும் ஒரே இடத்தில் சுவாமியின் தரிசனத்திற்காக அமர்ந்திருப்பேன். ஆனால் சுவாமி நான் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பிக்கூட பார்த்ததில்லை என்பது என் கணிப்பு.

ஒருநாள் தரிசனத்தின்போது சுவாமி என்னுடைய இடத்தில் நான் இல்லாததை கவனித்து என் சகோதரன் வம்சி (MBA 1995 - 1997 படித்துக்கொண்டிருந்தவர்)யிடம் என்னைப்பற்றி கேட்டுள்ளார். என் சகோதரனோ, காரணமே இல்லாமல் நான் தரிசனத்திற்கு வராமல் இருந்து விட்டேன் என எண்ணிக் கவலைப் பட்டுள்ளார். தரிசனம் முடிந்து சுவாமி சில பக்தர்களுடன் இன்டர்வியூ அறைக்குச் சென்றவுடன் என் சகோதரன் வேகமாக நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விடுதியில் இருந்த அறைக்கு ஓடோடி வந்தார். என்னைப் பார்த்து கோபத்தோடு திட்டுவதற்கு வந்த அவர், என்னைக் கண்டதும் மனம் இளகிவிட்டார். நான் அப்போது மிகவும் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன். முகமெல்லாம் மிகவும் வேர்த்து விட்டது. என்னால் படுக்கையில் அமர முடியவில்லை.வலது பக்க வயிற்றில் என்னால் தாங்க முடியாத வலியில் துடித்துக் கொண்டிருந்தபோதும், யாரிடமும் எதுவும் கூறவில்லை.என் சகோதரர் உடனே மந்திர்க்கு திரும்பச் சென்றார். சுவாமி அறையிலிருந்து வெளியே வந்து சக்ரவர்த்தி எங்கே எனக் கேட்டுள்ளார். உடனே என் சகோதரர் நான் வலியில் துடிப்பதை கூறியுள்ளார். இதுதான் நம் சுவாமி சர்வ வியாபியானவர் என்பதை உணர்த்துகிறது. நம் சுவாமி தன் அன்பை அனைத்து ஜீவன்களிடமும் பரிபூரணமாக செலுத்துகிறவர், நாம் அவர் பக்கத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் நம் பக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறவர்.


நம் அன்பு பகவான் என் சகோதரனைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு உடனே ஒரு மருத்துவரை அழைத்து என்னை சூப்பர் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார். என் சகோதரனையும் என்னுடன் செல்லுமாறு கூறினார். நான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களால் கவனிக்கப்பட்டேன். மாலையில் நம் அன்பு பகவான் என் சகோதரரையும் மருத்துவரையும் அழைத்து, புனிதமான விபூதியையும் பணத்தையும் கொடுத்து இளநீர் வாங்கச் சொல்லி, விபூதியை வலியுள்ள இடங்களில் தடவுமாறு கொடுத்தார். எனக்கு மாலையில் விபூதி கிடைத்து,வலியுள்ள இடங்களில் தடவப் பட்டது. இதே போன்று மூன்று நாட்கள் சுவாமியின் அருள் எனக்குக் கிடைத்தது. (சுவாமியின்புனித விபூதியும் இளநீர் வாங்க பணமும் சுவாமியிடமிருந்து எனக்குக் கிடைத்தது.)
மூன்றாம் நாள் சுவாமியின் விருப்பப்படி (ஆணைப்படி)    விபூதிதண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சீனியர்(உயர்) மருத்துவர் எனக்கு அறுவை சிகிச்சை உடனே செய்யுமாறு கூறினார். எனக்கு அப்பென்டிஸ் இருக்கிறது என்றும், அதனால் தான் அறுவை சிகிச்சை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கான தீர்வு. எனவே நான் அறுவை சிகிச்சைக்கு  முன்பு சுவாமியின் தரிசனம் பெற்று, அவரிடம் அறுவை சிகிச்சையைப் பற்றி கூற வேண்டும் என எண்ணினேன்.என்னே.. என் அறியாமை!

எனக்கு சுவாமியின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, முதல் வரிசையில் சுவாமியின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமர்ந்திருந்தேன். எப்போதும் போல நம் சுவாமி மற்றவர்களுக்கு பிரசாதம் வழங்குவதில் ஈடுபட்டிருந்தார். நான் அவரிடம் பேசுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் வராண்டாவில் முன் வரிசையில் இருந்த என் மருத்துவர் என்னிடம், சுவாமியிடம் பேசுமாறு சமிக்ஞை செய்து கொண்டிருந்தார். பின்பு சுவாமியின் சங்கல்பத்தினால், சுவாமியிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சுவாமியிடம், "சுவாமி, மருத்துவர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறுகின்றனர். எனக்கு உங்களின் அருளும் ஆசீர்வாதமும் தேவை" எனக் கூறினேன். சுவாமி என்னை அர்த்த புஷ்டியுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டார். எதுவுமே கூறவில்லை. எனக்கு உடலில் நடுக்கமே வந்துவிட்டது. நான் தவறு செய்து விட்டதாக மிகவும் பயந்துவிட்டேன்.


என்னுடைய அறுவைசிகிச்சை அடுத்த நாள் காலை என்றும், அதற்குண்டான சில மருந்துகளைக் கொடுத்து மருத்துவர் என்னை தயார்ப்படுத்தி வைத்திருந்தார். அதற்கு முன்பாக அவருடைய உதவியாளர்களிடம் எனக்கு ஸ்கேன் செய்து என்னுடைய வலியின் தரத்தைத் சோதிக்குமாறுக் கூறினார்.ஆஹா! ஆனால்... என்ன அற்புதம் நடந்தது தெரியுமா?! என்னுடைய ஸ்கேன் முடிவுகள் வந்தன. அதில் எனக்கு அப்பென்டிஸ் இருந்ததற்கான தடயமே இல்லை. மருத்துவர்கள் கருவி பழுதாகிவிட்டதோ என்று திரும்பத்திரும்ப எடுத்தனர். ஆனால் எனக்கு அந்த நோயின் அறிகுறியே இல்லை. பெரிய டாக்டர் மிகவும் ஆச்சரியமடைந்து, இது சுவாமியின் சங்கல்பத்தினாலேயே நடந்தது எனக் கூறி, சர்வ வியாபியான நம் பகவானின் அற்புதத்தை ஏற்றுக்கொண்டார். என்னை மருத்துவமனையிலிருந்து சாதா அறைக்கு மாற்றினர். அடுத்த நாள் என்னுடைய அறைக்கு வந்து, பின் சுவாமி தரிசனத்திற்கு சென்றுவிட்டேன். அதே இடத்தில் அமர்ந்திருந்த என்னை சுவாமி அன்புடன் பார்த்து ஒரு புன்னகையை என் மேல் வீசிவிட்டு அமைதியாகச் சென்றார்.

சுவாமியின் அற்புதமான லீலைகளில் இதுவும் ஒன்று. அவர் சர்வவியாபி. சர்வசக்தி படைத்த சர்வ வல்லவர். எனக்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகம் உள்ளது. 1993 ஆம் ஆண்டு தீபாவளியின் போது நம் சுவாமி, எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார். எங்கள் அனைவரின் மேலும் அபரிமிதமான அன்பைச் செலுத்தினார். என் பெரிய சகோதரனை அழைத்து தன் உள்ளங்கைகளை காட்டி, என்ன உள்ளது என கேட்க, அவர் வியப்போடும் அதிர்ச்சியோடும், "சுவாமி கைகளில் ரேகைகள் உள்ளன" என்றார். அதற்கு சுவாமி, "அவை வெறும் ரேகைகள் அல்ல. இவ்வுலகம் முழுவதும் இச்சிறிய உள்ளங்கைகளில் அடக்கம்" எனக் கூறி, எங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியையும் சந்தோஷத்தையும் வழங்கினார்.


சுவாமி பின்பு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும், நாங்களே ஒருத்தருக்கொருத்தர் கூறிக் கொள்ளாத விஷயங்களைக் கூறத் தொடங்கினார். எங்களது தாயார் பூஜை அறையில் பூஜை செய்யும் போது புடவையில் தீ பிடித்தபோது காப்பாற்றியதையும், மேலும் தாயார் பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சேர்த்தபோது தானே பக்கத்திலிருந்து அரூபமாகவும் அவர்களை காத்ததாகக் கூறினார். தான் எப்போதும் புட்டபர்த்தியில் ரூபமாக இருந்தாலும், எங்களது தாயாருடன் எப்பொழுதும் இருப்பதாக கூறினார்.(உடனே என் தாயார் எங்களது தந்தையிடம் மருத்துவமனையில் இருந்த பொழுது தன் தலையை யாரோ தொட்டுக்கொண்டு இருப்பதாக கூற, அதற்கு எங்களது தந்தை பணிப் பெண்ணாக இருக்கலாம் எனக் கூறியதை நினைவுப்படுத்தினார்) இந்நிகழ்ச்சி சுவாமியுடனான எங்களது நேர்காணலில் நடைபெற்றது. சுவாமி எங்கள் தாயாரிடம் நான் தான் உன் அருகில் இருந்தது எனக் கூறி, ஒரு சிறிய தங்கத்தினாலான விநாயகர் சிலையைக் கொடுத்து, அதற்கு தினமும் அபிஷேகம் செய்து வருமாறும், அந்த நீரைப் பருகி வந்தால் அவருடைய எல்லா நோய்களும் விரைவில் குணமாகிவிடும் என்றும் கூறினார்.


சுவாமி எங்களது நேர்காணலின்போது, தேவை இருந்தாலொழிய திருமணமான பெண்கள் வெளியே சென்று வேலை பார்ப்பது அவசியமானது அல்ல.. எனக் கூறினார். தன் குடும்பத்திற்கு உழைப்பதே பெரிய வேலைதான் என்றார். மேலும் சுவாமி பெண்கள் வீட்டில் வேலை செய்யும் போது இறைவனை எண்ணிக்கொண்டே செய்யுமாறு கூறினார். சப்பாத்தி செய்யும் பொழுது இறைவனை நினைத்துக் கொண்டே செய்யலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது இறைவனின் அன்பையும் கருணையையும் அருளையும் நம்மிடம் கலப்பது போல் எண்ண வேண்டும். அதை தேய்க்கும் பொழுது நம் மனமும் விரிவடைவதாகவும், அடுப்பில் சூடுபடுத்தி பொரிக்கும்போது, நமது தீவினைகளையும், கோபம் ஆணவம் போன்றவற்றை எரிப்பது போல எண்ணவேண்டும். மற்றவர்களுக்கு அதை பரிமாறும் போது அன்பை அனைவருக்கும் வழங்குவதாக எண்ணிக்கொள்ள வேண்டும். இதே போல் எங்களுக்கு நிறைய முறைகள் நேர்காணல் வழங்கினார். ஒவ்வொரு முறையும் அவரின் தெய்வீகத்தன்மையும், தன்னலமில்லாமல் அனைவருக்கும் அவரின் அன்பும் ஆசியும் வழங்குவதாக இருந்தது. எனக்கு இத்தனை வழங்கிய நம் இறைவனுக்கு, நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்குத் தெரியும்.. என்னால் இந்தக் கடனை அடைக்க முடியாது என்று. ஆனால் அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பு.. அன்பு.. அன்பு ஒன்றுதான். அவரிடம் அன்பாக இருப்பது, அவருக்காக வாழ்வது,இது ஒன்றே என்னுடைய பிரார்த்தனையாகும். நான் அவரை நேசிக்கிறேன், அவருக்காக வாழ்கின்றேன்.
                                       
- P.S. Priya Chakravarthi
Student (1996-1998), Department of Management Studies
Sri Sathya Sai Institute of Higher Learning, Prasanthi Nilayam Campus
Currently, Cyber Infotech, USA


தமிழாக்கம்: திருமதி.உமாராணி சங்கரலிங்கம்,போரூர் சமிதி,சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக