தலைப்பு

சனி, 12 செப்டம்பர், 2020

சாதனையாளர் குற்றாலீஷ்வரனின் சிறிய பாட்டானாருக்கு ஐ.சி.யுவில் காட்சி அளித்த பாபா!


உலக சாதனையாளரான குற்றாலீஷ்வரனின் குடும்பம் இறைவன் சத்ய சாயி பக்தர்கள். அதில் அவரது சிறிய பாட்டனாரான உயர்திரு சண்முக சுந்தரத்தின் ஐம்பது ஆண்டு கால அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ.. 

அது எழுபதுகள்.
இறைவன் சத்ய சாயி தர்மபுரிக்கு விஜயமாகிறார்.
ஒரு பக்தர் இல்லத்திற்கு வருவார்.
மைதானத்தில் பந்தலிட்டு தரிசனமும் தருகின்ற பொற் பொழுதுகள்.

இள வயது சண்முக சுந்தரத்தை நண்பர்கள் அழைக்கிறார்கள்.
இவருக்கோ மனிதனைப் பார்ப்பதா என்ற ஒரு அஞ்ஞானம்.
முதலில் வர மறுக்கிறார்.
வாடகை கார் வைத்துத் தான் செல்லும் சூழ்நிலை .. எதற்கு அந்த மனிதனைப் பார்க்க காசு செலவளிக்க வேண்டும் என யோசிக்கிறார்.

அந்த பொழுதிலிருந்தே இவரின் வாழ்க்கையில் இறைவன் சத்ய சாயி லீலைகள் ஆரம்பமாகி விடுகிறது.

பல மாதங்கள் வராத பாக்கி தொகை வந்து விடுகிறது.. நல்ல சகுனமாக தோன்ற அந்த கணம் மனம் சற்று இளகுகிறது..
இருந்தும் பக்தியேதுமின்றி போய் விட்டு வருவோமே என்று ஒரு எண்ணம்..
வந்த பணத்தை வேறு உபயோகமாக ஆக்கலாமே என்ற இன்னொரு எண்ணம்.

செல்லும் எண்ணமே செல்லுபடியாகிறது.
அதனால் செல்லும்படியாகிறது.
மைதானக் கூட்டம் ஒரு ஓரத்தில் இருந்து மனித வடிவில் இறங்கி வந்த மகா கடவுளான சத்ய சாயியை தரிசிக்கிறார்.


மாய எண்ணங்கள் விலக ஆரம்பிக்கின்றன..

தரிசிப்பதற்கு முன்.. தரிசிப்பதற்கு பின் என இரண்டு நிலையாக சாயி பக்தர்களின் வாழ்வினைப் பிரிக்கலாம்.
அதில் அத்தனை ஆழமும்.. அர்த்தமும்.. மன மாற்றமும் ஏற்பட்டிருக்கும். பக்தி ஒரு படி கூடி இருக்கும்.

முதல் தரிசனம் கண்டு.. இரண்டு சாயி படம் வாங்கி வருகிறார்.
அதைத் தன் மஞ்சள் மண்டி தொழிற்சாலையில் பூஜையில் மாட்டி வைக்கிறார்.

இவரின் உற்றார் உறவினர்களோ அய்யய்யோ பாபாவிடம் ஏன் சென்றாய் அவர் உன் சொத்தை எல்லாம் பிடுங்கிக் கொள்வாரே என்கின்றனர் ...
இவரோ அப்படி ஒன்று நடக்குமாயின் பரவாயில்லை..
யாவும் சாயி சங்கல்பம் என்று பதில் கூறிவிடுகிறார்.
அடியேனிடம் இதைத் தெரிவித்த போது இருவரும் சேர்ந்து சிரித்தோம் ..

சுவாமி இதயத்தைத் தவிற வேறு எதையும் அபகரிக்காதவர் என்பது பக்தர்களால் மட்டும் உணர முடிந்த ஒரு சத்தியம்‌ என்பதை எங்கள் இருவரின் சிரிப்பொலிகளை மொழி பெயர்த்தால் இப்படியே பேசி இருக்கும்.

கோவையிலிருந்து ஈரோடு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டிருந்த காலகட்டம்.
தனி DP நிர்ணயிக்க வேண்டி ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.
இவரின் தொழிற்சாலையில் ஒரு நுகர்வோர் வந்து பேசி முடித்து விடை பெற அவரின் கையில் சுவாமி மோதிரம் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.

அதை விசாரிக்கப் போய் ஈரோடு சமிதிக்கு அது வழிவகை செய்து..
மூன்று மாவட்ட சமிதிகளின் கலந்துரையாடலுக்கு இவரே இடம் தேர்ந்தெடுப்பதில் இருந்து ...
பல சேவைகளுக்கு அதுவே சாயி சுழி இட்டிருக்கிறது.

இவர் அந்தக் காலத்தில் காவல்துறையின் தன்னார்வலத் தொண்டாளர்.
தனிப் பிரிவு துறையில் இயங்கியவர்.
அதன் வழியாகவும் சமிதி சேவை ஆற்ற ஆரம்பித்திருக்கிறார்.


கண் சிகிச்சை முகாம் நடத்த சொல்லி இருக்கிறார்கள் ...
இவரே தனது சொந்த கையிருப்பிலிருந்து அந்த சேவையை திறம்பட ஆற்றியிருக்கிறார்.
அப்போதே 20,000 செலவு.
மருத்துவர்களை அழைத்து வருதல்.. உணவு விடுதியில் தங்க வைத்தல் என அதன் கிளையாக அதில் பல முக்கிய சேவைகள்.

உற்றார் உறவினர் சொன்னது அன்று  உண்மை தானோ (பாபா சொத்தை எல்லாம் பிடுங்கிக் கொள்வார்) என நினைத்தவர்..
அப்படியே ஆனாலும் பரவாயில்லை..
நாம் செய்வது இறைவனுக்கான சேவை என சேவை வழியில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.


பரம பக்தர்களுக்கே உணர முடியும்..
நம் சுவாமி சேவையில் செலவாவதை பன்மடங்கு திரும்பி அளிப்பார் என்பதும்..
சேவை என்பது கர்மாவைக் கரைக்கும் ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதும்‌.

"சுவாமி நம்ம வேலையில விளையாடினாலும் .. அவர் வேலையை நம்மை வைத்து திறம்பட செய்வார்" என்று அவர் சொன்ன போது..

நம் வேலையில் சுவாமி விளையாட்டுக் காட்டுவதும் கூட "நீயே செய்கிறாய் என்னும் எண்ணத்தை விட்டுவிடு " என்பதை உணர்த்துவதற்கே என அடியேனுக்கு ஆத்மார்த்தமாய் அப்போது புரிந்தது.


பல நபர்களை புட்டபர்த்தி சேவைக்கு அனுப்பி இருக்கிறார்.
அந்த காலத்தில் நேரடி பஸ் வழி இல்லாததால் பெங்களூர் வரை சென்று இன்னொரு பஸ் மாற வேண்டுமாம்.
சேவைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பாக பெங்களூர் வரை சென்று இன்னொரு பஸ்'சில் மாற்றும் வரை கூடச் செல்வார்.
பயணச் செலவுகள் செய்ய முடியாதவர்களுக்கு தன் சொந்த பணத்தை எடுத்து உதவுவார்.

உண்மையில் எல்லாமே சுவாமியின் செல்வம் தான்..
சுவாமிக்கு மட்டுமே உரிமையானவை தான்..
என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.
எவ்வளவு உன்னத சேவை அவையெல்லாம்.


சேவைக்கு செல்வதைக் கடந்து.. சேவைக்கு செல்ல வைத்தல்.. சேவைக்கு செல்ல வழிவகை செய்தல் ..
உன்னத பக்திக்கு உதாரணம் அய்யா சண்முக சுந்தரம்.

புட்டபர்த்தியிலும் இவர் நிறைய சேவையாற்றி இருக்கிறார்.
சுவாமி அறையைத் துடைத்தல்..

துடைத்த இடத்தையே மீண்டும் மீண்டும் துடைக்கச் சொல்வார்களாம் .. அப்போதே அகந்தையும் துடைக்கப்பட்டு பக்குவம் பளிச்சிட ஆரம்பித்திருக்கிறது என்கிறார் இன்றைய 79 வயது பழுத்த பக்தர்.


சேவை வழியாக இவருக்கு இறைவன் சத்ய சாயி பாதத்தை தொட்டு வணங்கும் பாக்கியமும் கிடைத்திருக்கிறது.
பிரசாந்தி செக்யூரிட்டி சேவையையும் ஆற்றி இருக்கிறார்.

முப்பது வயதிற்குள் தான் செக்யூரிட்டு சேவாதளர் அப்போது இருப்பார்களாம்..
பிறகே மெடிக்கல் ஃபிட் உள்ளவர்களையும் சுவாமி இணைக்கச் சொல்லி இருக்கிறார்.. அப்படி இணைந்தவர்களில் இவரும் ஒருவர்.

ஒரு முறை இறைவன் கோடை விஜயத்தின் வழியே..சித்தோடு  கங்காபுரம் வழியாக சுவாமி கார் பயணமாகும் என்பதால் அங்கே பஜனை செய்து கொண்டிருந்தனர் பக்தர்.
இறைவன் வந்து சில பஜனைகளைக் கேட்டு இவரை கைக் காட்டி ஆரத்தி எடுக்கச் சொல்லி இருக்கிறார்.

எவ்வளவு பெரிய பாக்கியம்.
சூரியனுக்கே ஒளியூட்டும் இறைவன் சத்ய சாயிக்கு சூரிய சந்திர தின ஆரத்தியைக் கடந்து.. யோகிகளின் தியானமெனும் தவக் கனலான ஆரத்தியைக் கடந்து இவரும் அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது அவரின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

இவரின் அண்ணன் வழிப் பேரன் உலக சாதனையாளர் குற்றாலீஷ்வரன்.
அவரின் குடும்பமும் சாயி பக்தர்கள்.
தனுஷ்கோடியை டால்ஃபின் மீனாய்க் கடந்த குற்றாலீஷ்வரனை ராமேஸ்வரத்தில் இவரே வரவேற்று ..


தன் வீட்டில் அவருக்காக பஜனை நடத்தி.. இறைவன் சத்ய சாயி திருப்படத்தையும் பரிசாக வழங்கி இருக்கிறார்.

"மனிதனுக்குள் உயிராற்றலாய் நானே திகழ்கிறேன்" என இறைவன் சத்ய சாயி வலியுறுத்தி இருக்கிறார்.
அந்த குற்றாலீஷ்வரன் கடல் கடந்த பெருமையும் இறைவன் சத்ய சாயி ஆற்றலால் அல்லவா என்பதை நினைக்கையில் என் மன அலைகள் சுவாமி பாதத்தை முத்தமிட்டன..

2017லில் சளித் தொந்தரவு என ஆரம்பித்து இதயம் வலிக்க ஐ.சி.யு வில் சண்முகசுந்தரம் அய்யாவை சேர்த்திருக்கிறார்கள்.
இவர் அசரவே இல்லை.

பக்தி எப்படி அசரும்?
பக்தி எப்படி சோரும்?
பக்தி எப்படி அலறும்?

சுவாமி பார்த்துக் கொள்வார் எனச் சொல்லி இருக்கிறார்.


அப்படியே ஆனது.
இவரின் ஐ.சி.யு அறைக்கே இறைவன் சத்ய சாயி தோன்றி தரிசனம் தந்து சிரித்திருக்கிறார்.
இவர் உள்ளம் நெகிழ்ந்து விட்டார்.
அதை அடியேனிடம் பகிர்ந்தபோதே அந்த நெகிழ்ச்சியை உணர முடிந்தது.

ஒரு தனிப்பட்ட பிரச்சனை அவர் உள்ளத்தில் இருந்த சமயம் ..
சுவாமி கனவில் வந்து காட்சி அளித்து ஆறுதல் சொல்லி.. இன்ன இன்ன தேதியில் சரியாகி விடும் எனச் சொல்ல .. அதுவும் அப்படியே நிகழ்ந்திருக்கிறது..

வாசிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும்.
இங்கே இறைவன் சத்ய சாயி மட்டுமே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
பூமி மாற்றத்திலிருந்து வாழ்க்கை மாற்றம் வரை எல்லாம் சுவாமியின் திருவிளையாடல்களே...
மனிதர்கள் வெறும் அவரது கருவிகள் மட்டுமே...

ஐம்பது ஆண்டு கால அனுபவம் என்பது சாதாரணமானது அல்ல..
அதில் நினைவுக்கு எட்டிய வரை நெகிழ்ந்து நெகிழ்ந்து அடியேனிடம் முத்துக்களைத் தந்தபடி இருக்க..
அதிலிருந்து ஒரு சிறு ஆரமே இது..

வாழ்க்கை அனுபவம் எனும் ஆரம் .. சுவாமி அனுபவமாக மாறும் போது அந்த ஆரமே அபாரமாக ஆகிவிடுகிறது‌...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக