தலைப்பு

புதன், 16 செப்டம்பர், 2020

மனம் எப்போதும் சோர்வாகவே இருக்கிறது.. அதனால் சத்ய சாயியை வழிபட ஏனோ மனம் உந்த மறுக்கிறதே..


கேள்வி: மனம் எப்போதும் சோர்வாகவே இருக்கிறது.. அதனால் சத்ய சாயியை வழிபட ஏனோ மனம் உந்த மறுக்கிறதே.. இதற்கு என்ன தான் வழி?

பதில்: எதிர்மறை எண்ணங்களால் மனம் சோர்வாகிறது.

குற்றச்சாட்டுகள்.. குற்றஞ்சாட்டுதல் .. குறை கூறுதல் .. நேர்மையின்மை.. சோம்பல் .. கோபம்.. சோகம் என
எதிர்மறை எண்ணங்கள் ஒரு லாரி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்..

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதையே இறைவன் சத்ய சாயி வலியுறுத்துகிறார்.

நல்லதையே பார்
நல்லதையே கேள்
நல்லதையே பேசு
நல்லதையே நினை
நல்லதையே உணர் என்கிறார்..

மேலே சொல்லப்பட்டவை எளிதான வார்த்தைகள் ஆனால் மிகவும் ஆழமானவை..

இதைக் கடை பிடிப்பதற்கும் இறைவன் சத்ய சாயி அருள் தேவையே..

அசுத்தமான மனதிலிருந்து சுத்தமான மனதிற்கு பரிணாமம் அடைந்தாலேயே மனமற்ற நிலைக்குச் செல்ல முடியும்!

மனமற்ற நிலையே தியானம்.
மனமற்ற நிலையே சரணாகதி.
மனமற்ற நிலையே முக்தி.

மனம் என்பதே எண்ணங்களின் குவியல் என்கிறார் பகவான் ரமண மகரிஷி.
அந்தக் குவியலை அவியலாக்கி ருசித்து வேறு உண்கிறோம். இருந்தும் பசியாறுவதில்லை.

முதலில் எதிர்மறை எண்ணங்களில் இருந்து நேர்மறை எண்ணத்திற்கு மாற்றம் அடைய வேண்டும்.
நேர்மறை எண்ணம் நிரம்ப நிரம்ப எதிர்மறை எண்ணங்கள் காணாமல் போய்விடும்.

வீட்டில் எலி செத்துப் போயிருந்தால்..
துர்நாற்றம் எடுக்கும்.
முதலில் நாம் அந்த செத்த எலியை வெளியே வீசி எறிய வேண்டும்.
அப்படி வெளியேற்றினாலும்.. துர்நாற்றம் சில நிமிடம் அடிக்கவே செய்யும்.
அப்போது அந்த இடத்தைக் கழுவ வேண்டும். பிறகே ஊதுபத்தி போன்ற வாசனைகளை ஏற்றி வைப்போம்.

எண்ணங்களைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத ஒரு வஸ்து. அதை கண்ணுக்கு தெரியாத ஒன்றாலேயே கழுவ வேண்டும்.


மனம் பலவற்றை உள்ளே பேசிக் கொண்டே இருக்கும் . அவை பேசுவது பெரும்பாலும் அபத்தமே!
அந்தப் பேச்சை மந்திரத்தாலே கழுவ வேண்டும்.

சாயி ராம் என்றோ.. சத்ய சாயி காயத்ரியோ சொல்லச் சொல்ல.. எதிர்மறை எண்ணங்கள்.. மனதிற்குள் நடக்கும் அந்த சப்த இரைச்சல் நின்று நாம லயம் கேட்க ஆரம்பிக்கும்!

தாய் சமையல் செய்யும் போது குழந்தை தவழ்ந்து வந்து பலப் பாத்திரங்களை உருட்டினால் அவள் அந்தக் குழந்தையின் கையில் ஒரே ஒரு விளையாட்டுப் பொருள் தருவாள்.
அது தாயை தொந்தரவு செய்யாமல் அதை விளையாடிய படி இருக்கும்.

அதைப் போல் மனம் தொந்தரவு செய்தால்.. அதை லயித்துப் போகும் அளவிற்கு சாயி நாமத்தில் நிரப்பி விடவேண்டும்..

மனமற்ற நிலைக்கு மனத்தூய்மை அடைந்தாலே செல்ல முடியும்.

அழுக்கான பாத்திரம் முதலில் தேய்க்கப்படும் போது முதலில் அழுக்கு வெளியேறும்.. தேய்த்துக் கொண்டே இருந்தால் கடைசியில் பாத்திரமே தேய்ந்து துரும்பாகிவிடும். இப்படித் தான் அதுவும்‌

கருணை.. பக்தி.. நன்றி உணர்வு .. கோள் சொல்லாமை.. புறம் பேசாமை .. அன்பு.. கனிவு இவை எல்லாமே நேர்மறை அதிர்வலைகளை விளைவிக்கும்.


சாயி பஜன் கேட்பதும் .. பாடுவதும் புனிதமான நேர்மறை அதிர்வலைகளுக்கான விதைகள் தூவும்.. அந்த விதைகளை வளர்க்க நாம் தொடர்ந்து சத்விஷயங்களோடே ஊறிப் போயிருக்க வேண்டும்.

நான் செய்கிறேன் என்பது எதிர்மறை எண்ணம்.
சுவாமி நீயே செய்கிறாய் என்பது நேர்மறை எண்ணம்.

எதிர்பார்ப்பு .. ஏக்கம் இவை எல்லாமே எதிர்மறை அதிர்வலைகள்.

எத்தனை முறை தான் என்னை வேலை வாங்குவார்களோ .. எத்தனை கார்டுகளைத் தான் தேய்த்து என் வாயைப் பிளப்பார்களோ என்று என்றைக்காவது ஏ.டி.எம் கருவி கவலைப்பட்டது உண்டா?

அந்தக் கருவியைப் போல் தான் இறைவன் சத்ய சாயி பக்தர்களாகிய நாம்..
பிறகெதற்கு சோர்வடைய வேண்டும் ?

அந்தக் கருவியை அந்தக் கருவியே இயக்குவதில்லை.. நாமும் அப்படியே!


ரயிலில் பயணம் செய்யும் போது கொண்டு வந்த பெட்டிப் படுக்கையை நம் தலையிலேயே நாம் வைத்துக் கொள்வதில்லை..
நம்மை சுமந்து செல்லும் ரயில் நம் பாரங்களையும் சுமக்கிறது ..
இறைவன் சத்ய சாயியும் அப்படியே !

"அமைதியாக... உற்சாகமாக வாழ்வதற்கு சிறு விழிப்புணர்ச்சியே தேவை.
அதை பெரிதாய் முழுதாய் தர தியானம் காத்திருக்கிறது.

வீட்டு பொருளாதாரம் பற்றி கவலைப்பட்ட நரேந்திரன் தனது குரு ராமகிருஷ்ணரை கேட்டார்.
என்னிடம் ஏன் கேட்கிறாய்.. அன்னை காளியிடம் கேள் என்கிறார்.

காளியிடம் கேட்க கருவறைக்குச் சென்ற நரேந்திரன் என்ன கேட்டார் தெரியுமா?

பக்தி தா
ஞானம் தா
வைராக்கியம் தா...
இவை மூன்றும் நேர்மறை அதிர்வலைகள்.

பொருளாதாரம் கேட்க மறந்து விட்டேன் எனச் சொல்ல.. மீண்டும் பரமஹம்சர் அனுப்புகிறார்..
மீண்டும்

பக்தி தா
ஞானம் தா
வைராக்கியம் தா
என்றே நரேந்திரன் கேட்கிறார்.

விவேகமே ஆனந்தம்.
அந்த விவேகமும் நேர்மறை அதிர்வலைகளே ...

நாமும் இப்படியே பிரார்த்தனை செய்வோம்..

புரிகிறதா..


அமுத சுரபியையே கேட்பவன் தான் புத்திசாலி..
அதிலிருந்து வருபவைகளை அல்ல..

அருளையே கேட்க வேண்டும்.
அதுவே நேர்மறை அதிர்வலைகள் தரும்.

தற்காலிக விடுதலை விடுதலையே அல்ல...
நிரந்தர விடுதலை நோக்கியே நகர வேண்டும்.

சிங்கப்பாலை தங்கப் பாத்திரத்தில் மட்டுமே ஊற்றுவது போல்..
பொருளை பக்தி இதயமே பாதுகாக்கவும்.. சேவை போன்ற அறத்தைப் புரியவும் வழிவகுக்கும்.

"அன்ன பூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே ... ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி"
என
அன்ன பூரணியிடம்
ஞானத்தையும் .. வைராக்கியத்தையுமே பிட்சையாகக் கேட்கிறார் ஆதி சங்கரர்.

ஓட்டை வாளியில் எத்தனை முறை இறைத்தாலும் நீர் தங்காது.
முதலில் பக்குவம் அடைய வேண்டும்..
பிறகே எல்லாம் நம்மிடம் தங்கும்.

இறைவன் சத்ய சாயியிடம் எதையும் எதிர்பார்க்காத நிர்மல பக்தியை வளர்த்து அந்த மனச் சோர்வையே மனச் சோர்வடையச் செய்யுங்கள்!

நிச்சயம் செய்வீர்கள்!
உங்களால் முடியும்..
இறைவன் சத்யசாயி பக்தரல்லவா நீங்கள்!

 பக்தியுடன்
வைரபாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக