தலைப்பு

வியாழன், 24 செப்டம்பர், 2020

சுவாமி விபூதி பூசி இரண்டே இரண்டு நிமிடத்தில் சரியான வினை!

சுவாமியைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் சுவாமி விபூதி பூசிய இரண்டு விநாடிகளில் குணமான பரவசம் மற்றும் அவரின் உடல் உறைந்த அழகான உன்னத 30 நிமிடங்கள் இதோ...

அடியேனை திரைத்துறையில் பலருக்கு தெரியும்.. ஆனால் ஒரு சிலரே நண்பர்கள்..

தொழில் கடந்து குண ஒற்றுமையில் நண்பர்களாக ஒரு சிலர் இணைவார்கள்..

அவர்களின் தொழில் திறமையையும் கலை தாகத்தையும் வெகுவாக ரசித்துப் போற்றி அடியேனால் ஆன உதவிகளைச் செய்வேன் !

நட்பு என்பதே பரஸ்பர புரிதலும்.. பகிர்தலும் .. உணர்தலும்..

இப்படி இணைந்தவர்களில் இணை இயக்குநர் சதீஷ் மிகவும் முக்கியமானவர்.

களரி திரைப்படக் களத்தின் வாயிலாக நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள்..


சதீஷ் அவர்களுக்கு கலை மணமும் கூடவே கை மணமும் அதிகம்.

திரைத்துறை என்பது எப்போதும் இரும்புக் கோட்டையே! அவ்வளவு எளிதில் ஒரு மேலான இடத்தை கைப்பற்றுவது கடினம்..

சாயி அருளும்.. சீரிய முயற்சியும் .. நேரிய திறனும் இருந்தால் படைப்புகள் பரிணமிக்கும்!

குண்டு சட்டிக் குதிரையாக பணியாற்ற விரும்பாதவர்களுக்கான களமே திரைத்துறை!

இறைவன் சத்ய சாயி சங்கல்பமே யாவரையும் வழி நடத்துகிறபடியால் அவரவர்க்கு உரித்தான நேரத்தில் அவரவர் மேன்மை அடைகின்றனர்.

ஒருமுறை சதீஷ் அடியேனுக்கு தன் கையால் செதுக்கிய இறைவன் சத்ய சாயியின் முந்தைய அவதாரமான கிருஷ்ணரின் மரச் சிலையை பரிசளித்தார். அது மிக உயரிய மரம்.

மஞ்சள் நிற மரம். 

கிருஷ்ண பரம்பொருளே பீதாம்பரதாரி தானே!

அதைச் செதுக்க அவருக்கு ஒரு மாத காலம் ஆனது..

பிறகு இருவரும் இணைந்து திரைப்படம் உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை தினந்தோறும் ஆருயிர் நண்பர் இணை இயக்குநர் ஸ்ரீராமோடு சேர்ந்து அடியேன் இல்லத்திலேயே செய்து வந்தோம்!

தெரிந்த / தெரியாத / பழக்கப்பட்ட / பழக்கப்படாத / அப்போதே அறிமுகமான என பலருக்கு இறைவன் சத்ய சாயி புகைப்படமும்.. விபூதி பாக்கெட்டும் தருவேன்..

 அப்போதே உறுதியாக சுவாமி பற்றி எடுத்துரைப்பேன்..

 இப்போதோ கேட்கவே வேண்டியதில்லை.

அப்படியே சதீஷ் அவர்களுக்கும் 

சுந்தரம் பிரசாதமான சிறு விபூதி பாக்கெட்டும் அளித்திருக்கிறேன்.


தினந்தோறும் காலை இருவரும் சந்தித்து திரைப் பணிகளைப் பார்ப்போம். சென்ற வருடம். அப்போது ஒரு காலை..

"ஜி.. என்ன ஜி.. அந்த விபூதியில என்ன இருக்கு?" என்று கேட்டார் சதீஷ்..

"எந்த விபூதி?" என்று புரியாமல் கேட்டேன். 

"நீங்க அன்னிக்கு கொடுத்தீங்களே.. பாபா விபூதி?"

"ஆமா சுவாமி விபூதி.. மிகவும் சக்தி வாய்ந்தது" என்றேன் 

"ஆமா ஜி.. நேத்திக்கு நைட் என்ன நடந்துச்சுன்னு தெரியுங்களா?" எனப் புகைமூட்டம் இல்லாத ஃபிளாஷ் பேக் சொல்ல ஆரம்பித்தார்.. கண்களில் இனம் புரியா ஆச்சர்யத்தோடு இணை இயக்குநர் சதீஷ்.

"நேத்திக்கு என்ன சாப்டேன்னு தெரியல உடம்பெல்லாம் ஒரே ஊறல் ஜி.. அலர்ஜி மாதிரி ஆயிடுச்சு..."

"அய்யோ அப்றம்?" இது அடியேன்.

"ரொம்ப தாங்கவே முடியல.. என்ன பண்றதுன்னு ஒண்ணும் தெரியல.. மெடிக்கல் ஷாப் எதுவும் பக்கத்துல கிடையாது.. "

"அப்றம்"

"டக்'குனு நீங்க பாபா விபூதி கொடுத்தீங்கள்ல.. அது தடவுவோம்னு .. சாயிராம்னு சொல்லி தடவினேன் ஜி.."

"ஓ.. நல்லதுப்பா"

"ரெண்டே நிமிஷம் தான் ஜி.. ஊறல் போன எடமே தெரியல.. என் வைஃப் கூட விபூதிலாம் போட்டா எப்டிங்க போகும்னு நம்பிக்கையே இல்லாம சொன்னா.. ஆனா அவசரத்துக்கு வேற வழியில்லேன்னு தடவினேன்.. நம்பவே முடியல ஜி..

அந்த விபூதியில என்ன ஜி இருக்கு? " என்று இயக்குநன் மருத்துவனாய் மாறி கேள்வி கேட்டான்.

"அது மத்த விபூதி மாதிரி.. சாதாரண விபூதி இல்லப்பா..

கேன்சர் லேந்து பல வியாதிய குணப்படுத்தியிருக்கு" என்று சத்தியம் பகர்ந்தேன்

"ஜி.. பாபா சாதாரண ஆள் இல்ல ஜி" என்றார் சதீஷ்.

அடியேன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு.. சுவாமி நீ கடவுள் என்று போகப் போக அவனுக்குப் புரிய வை என்று மட்டும் மனதில் சொல்லிக் கொண்டேன்.

நாட்கள் வாரமானது..

இன்னொரு காலை இதே போல்‌..

"நேத்திக்கு என் வைஃபுக்கு தடிப்பு தடிப்பா உடம்பு பூரா ஆயிடுச்சு ஜி"

"அய்யோ .. என்னாச்சு"

"தெரியல.. சாப்பிட்ட முட்ட அவளுக்கு ஒத்துக்கலையோ என்னவோ"

ஆனா அன்னிக்கு எனக்கு சரியாயிடுச்சேன்னு அவளுக்கும் அதே பாபா விபூதிய தடவப் போனேன்..

தடிப்புலாம் எப்டீங்க அது குணமாக்கும்னு சொன்னா..

 பாபா பாத்துப்பாருன்னு தடவினேன் ஜி..

 அதே மாதிரி ரெண்டே ரெண்டு நிமிஷத்துல எந்த தடிப்பும் இல்ல..போயிடுச்சு அவளுக்கு இப்ப பாபா மேல சந்தேகமே போயிடுச்சு ..

"ஜி.. எனக்கு ஒரு பாபா ஃபோட்டோ கொடுங்க ஜி.. பூஜை ரூம்ல வைக்கறதுக்கு" என்று ஒரு படம் கேட்டார் நண்பர் சதீஷ்... 

சுந்தரத்தில் வாங்கிய புகைப்படத்தை ஃபிரேம் செய்து கொடுத்தேன்.

பிறகு தான் தெரியும்..

அவர் சுவாமியை மட்டுமே பூஜை அறையில் வைத்து பிரதானமாக வழிபடுகிறார் என...

அதை பார்த்து பரவசம் கொண்டேன்...

இப்படி சுவாமியை பிரதானமாக வைத்து வழிபடுவது எத்தனை ஆனந்தம் ! எத்தனை முழுமை ! எத்தனை சரணாகத பக்தி! எத்தனை பெரும் பேறு!

கங்கையை வழிபடுவது அனைவரும் செய்வது.. ஆனால் அந்த கங்கையின் மூலமான கங்கோத்ரியை வழிபடுவது போல் அண்ட பேரண்ட முழு முதற் பொருளான ஒரே இறைவன் சத்ய சாயியை வழிபடுவது மகா பாக்கியமே!

ஒருமுறை அடியேன் சுந்தரத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்த போது .. சதீஷ் கால் செய்தார்.

ஜி.. எங்க இருக்கீங்க?

சுந்தரத்துல!

சுவாமி கோவில்னு சொல்லி இருக்கீங்களே.. அங்கயா?

பாபா என்று அழைத்தவர்.. சுவாமி என அழைக்க ஆரம்பித்தார்..

"மந்தவெளில தான் இருக்கேன்.. அங்கேயே இருங்க .. எங்கும் போகாதீங்க!"

"ஏழு மணி வர.. அங்கே தான்" என்றேன்.

அசைந்து அசைந்து வந்தார்.


பஜன் ஹால் உள்ளே நுழைந்தார்..

கையில் கொண்டு வந்த திரை எழுத்தை சுவாமி முன் வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார்.

அடியேன் எதுவும் சொல்லவில்லை..

பஜன் ஹாலில் தான் அடியேனுக்கு சேவையே!

அப்படியே கண்களை மூடினார்.

அசையாத சிலை போல் இருந்தார்.

பத்து நிமிடம் ஆனது..

பதினைந்து நிமிடம் ..

இருபது நிமிடம்..

ஒரு பொட்டு அசைவு கூட உடம்பில் இல்லை..

என்ன ஆனது என அருகில் பூனை போல் அமைதியாய் ஓசை படாமல் நடந்து சென்றேன்..

அந்த மாமிச மலை அசையவே இல்லை.

ஒரே ஆச்சர்யமாக இருந்தது.. 

ஒரு வேளை வந்த களைப்பில் தூங்குகிறாரோ என முகத்தை சிறிது தூரத்தில் இருந்து சோதித்தேன்..

முகத்தில் ஒருவித ஆழ்ந்த அமைதி..

தியானத்தில் இருக்கிறார். தொந்தரவு செய்ய வேண்டாம் என சேவை செய்யும் நாற்காலியில் அமர்ந்தேன்... 

முப்பது நிமிடம் ஆனது. மெதுவாக அசைந்து.. எழுந்து அருகே அடிமேல் அடி எடுத்து வந்தார்.

வெளியே அழைத்து..

என்ன ஆனது என வினவினேன்.

"சுவாமிய பாத்து கண்ண மூடினேன்.. அங்க நிக்கற அந்த ஃபோட்டேவுலேந்து ஒரு ஒளி வந்து நெத்தில அடிச்சுது ஜி.. அவ்ளோ தான் தெரியும்.. அப்றம் என்னாச்சுன்னு .. ஒரே அமைதியா இருந்துச்சு"

"நீ இப்ப பண்ணதுக்கு பேரு என்னன்னு தெரியுமா பா" எனக் கேட்டேன்

"என்ன ஜி.. தெரியல "

"இதான் தியானம்"

இதானா.. அப்டியா ஜி.. ஒரே ஆச்சர்யமா இருக்கு.. இங்க நாம அடிக்கடி வரணும்..

படம் ஆரம்பிக்கும் போது சுவாமிய கும்பிட்டுட்டு போகணும் என்றார்.

தியானம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பக்தருக்கு சுவாமி தியானம் நிகழ்த்தி இருக்கிறார்..

அதுவே சதீஷ் முதன்முறையாக அமர்ந்தது.

காரணம் கடவுள் சத்ய சாயியே தியான வடிவம்.. முக்தி ரூபம்..

தியானம் என்பது உயரிய நிலை.. அந்த உயரிய நிலை உருவமெடுத்து இறைவன் சத்ய சாயியாய் வந்தது.

சுவாமியின் அடுத்த அவதார மகிமைக்கு அதுவே அஸ்திவாரமாக அமையும்!

சதீஷ் அவர்களின் திரை விஜயமும்.. திரைப் பயணமும் சுவாமி சங்கல்பத்தோடு நன்கு அமையட்டும்!

இன்று இல்லம் வந்து..

ஜி.. விபூதி காலியாயிடுச்சு தாங்க என்றார்.. 

அந்த விபூதியை அள்ளிப் போடுகையில்.. அவருக்கு நிகழ்ந்த சென்ற ஆண்டு மகிமையோடு தெய்வீக நறுமணமாய் மணந்தது அப்போது ஔடதமான சுவாமி விபூதி!

சுவாமி பூஜை அறையை புகைப்படம் எடுத்து அனுப்ப சொன்னேன்.. அதை மறந்தே விட்டார்.. இருமுறை நினைவு படுத்தினேன்...

அவர் அதிகாலையே பணிக்கு சென்றுவிடுவதால் அவர் மனைவி விளக்கேற்றி பூ சாற்றி கண்களை வழிபாடு செய்திருக்கிறார்..

கண் திறக்க கண் கலங்கிப் போயிருக்கிறார்.. சுவாமி தனது எந்த விபூதியால் இந்த தம்பதி இருவரையும் தன்னிடம் இழுத்து ஆட்கொண்டாரோ .. அதே விபூதியை தன் திருப்படத்தின் மேல் மழையாய்ப் பொழிந்திருக்கிறது..

அவரின் கருணை பொழியத் துவங்கிவிட்டது...

இப்போது அவர்களின் பக்தி மணத்தில் விபூதி மணமும் சங்கமமாகிக் கொண்டிருக்கிறது... 

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக