தலைப்பு

சனி, 19 செப்டம்பர், 2020

'சாயிபாபா' அவதாரத்தைப் பற்றி பாண்டுரங்க பக்தி லீலாம்ருதத்தில் ஆச்சர்யமான குறிப்புகள்!


சாயிபாபா எனும் பெயர் ஷிர்டி சாயி அவதரித்த பிறகே அறிமுகமான பெயர் எனப் பலர் நினைக்கலாம் .. இல்லை அது இறைவன் பாண்டுரங்கனாலேயே உதித்தெழுந்த உன்னத நாமகரணம் என்பதை விளக்கும் பக்தி லீலாம்ருத புத்தகத்திலிருந்து ஓர் அரிய பதிவு இதோ... 


திரேதாயுக ராமன்..  துவாபர கிருஷ்ணன்.. கலியில் ஷிர்டி சாயி அவதரிப்பதற்கு முன்

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டுரங்கனாய் பல லீலைகள் புரிந்து .. பல மகிமைகள் சொரிந்து பல மேன்மைகள் பக்தர்களின் வாழ்வில் புரிந்திருக்கிறான். 

பாண்டுரங்க பக்த பரம்பரை என்பது பக்தர்கள் யாவரும் தினம்தோறும் நெஞ்சில் நிறைத்து வழிபட வேண்டிய பரம்பரை..

பக்த மீரா.. சாந்த சக்குபாய்... கோராகும்பர் .. நாமதேவர் .. ஞானேஷ்வர் என பெயர் வரிசை பக்த அனுமான் வாலாய் நீண்டு கொண்டே போகும்..

பாகவதர்களிடம் கேட்டால் அந்த திவ்ய திருப் பெயர்களை இன்னும் நீண்ட விளக்கமாக சொல்வார்கள்.

அதில் பக்த நாமதேவரின் மறு பிறவி தான் பக்த துக்காராம் மகராஜ்..

பக்த நாமதேவர்

பக்த நாம தேவரின் அபங்கங்கள் பூமி எங்கும் காற்றை இறை சுவாசமாக்கக் கூடிய வல்லமை பெற்றவை.

இன்னமும் முடிவுறாத அவரின் அபங்க எழுத்துப் பணிக்காக இன்னொரு தெய்வீகப் பிறவியை தருகிறார் அதுவே பக்த துக்காராம் மகராஜ்.

அபங்கம் என்பது இறைவன் பாண்டுரங்கனின் மேலான மராட்டிப் பாடல்கள் .. வேத சாரம் மிகுந்தவை..

பஜனை சம்பிரதாயத்தில் பாண்டுரங்க அவதாரமே முன்னோடி.. பாண்டுரங்க பக்தர்களே முன்னவர்கள்.

ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பாண்டுரங்க அவதாரமே என்பதற்கு பஜனை சம்பிரதாயம் மட்டுமல்ல பல சான்றுகள் துக்காராம் மகராஜ் வாழ்க்கையிலேயே கிடைத்தது சுவாமி சங்கல்பமே!

முதலில் சாயி பாபா எனும் பெயர்கள் இறைவன் ஷிர்டி சாயிக்குப் பிறகானதல்ல..

அந்த உரிமத்திற்கு சொந்தக்காரர் இறைவன் பாண்டுரங்கனே...

அதாவது ஷிர்டிக்கும் முந்தைய கிருஷ்ணனின் அவதாரமே பாண்டுரங்கன்..

ரூபத்தையும் நாமத்தையும் மாற்றிக் கொண்டு லீலை புரிவதில் ஜெகஜால கில்லாடி இறைவன் ஸ்ரீ கிருஷ்ணன்...

மாபெரும் பக்தர் மஹீபதி தஹராபுட்கர் இந்த பக்த சிரோண்மணிகளின் வாழ்க்கை சரிதத்தை எழுதி இருக்கிறார்..

பக்தர் மஹீபதி

காதில் கேள்விப்பட்டதை எல்லாம் அவர் எழுதிவிடவில்லை ...

ஒவ்வொரு பக்த மகான்களின் வாழ்க்கை சரிதத்தை அவர்கள் ஜனித்த ஊர் மற்றும் இல்லம் என நேரடியாக சென்று அவர்களின் பரம்பரையோடு பேசி... என அவரின் உழைப்பு என்பது தவம்.

அந்தத் திருநூலே பக்தி லீலாம்ருதம்.

அதில் அனைவராலும் பரவலாக புகழ்ந்து போற்றிக் கொண்டாடப்பட்ட பகுதி ஸந்ந் துக்காராம் வாழ்க்கைப் பதிவு.

இதை அவர் துக்காராமின் பெரிய பேரனான கோபால் பாபாவிடம் நேரடியாக சந்தித்து எழுதப்பட்ட பகுதி அது.

வசித்தால் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

வாசிக்க நேர்ந்தது சத்ய சாயி பாண்டுரங்கன் கருணேயே!

முழுதாய் முடிக்கும் போது இரண்டே இரண்டு தான் தோன்றியது 

"சுவாமி நான் எல்லாம் ஒரு பக்தனா‌.. அடியேனுக்கு துக்காராம் போல் தூய பக்தி தர மாட்டாயா... சுவாமி .. நீ மட்டுமே போதும் என்ற நிறைவை தினமும் தந்து கொண்டே இரு"

அந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க ஞானக் கதவு திறந்தது.. அதில் பாண்டுரங்கனே சத்ய சாயி பாபா என உணர்ந்து கொண்டேன்.

துக்காராம் வழியாக.. அவரைக் கருவியாகப் பயன்படுத்தி பாண்டுரங்கன் நிகழ்த்தாத லீலைகளே இல்லை..

அப்பழுக்கற்ற இல்லறத் துறவி துகாராம்..

துக்காராம்

ஏர் கலப்பையைப் பார்த்த மாத்திரத்திலேயே தங்கமாக்கி இருக்கிறார்..

அவ்வளவு பக்தி சாதனை .. ஆனால்

தன் வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை.. அவ்வளவு பற்றறு நிலை.

பாண்டுரங்கன் துக்காராமோடு சேர்ந்து அவரது இல்லத்தில் உணவு அருந்தி இருக்கிறார்.

பல ரூபங்களில்.. ஏன்... துக்காராம் ரூபத்தில் கூட அவர் போலவே பேசி.. அவர் போலவே செயலாற்றி இருக்கிறார் பாண்டுரங்கன்..

பாண்டுரங்கனையே பிடிக்காத துக்காராம் மனைவி ஆவலி ஒருமுறை காலில் முள் குத்துகையில் தனது மடியில் அவள் பாதத்தை வைத்து தன் கையாலேயே முள்ளை எடுத்து.. கூடவே துணைக்கு நடந்து போகிறார்.

திரௌபதிக்கு செய்தது போல் ஆவலிக்கு வஸ்திராபரணம் அளித்திருக்கிறார்.

துக்காராம் பால் தர.. பாண்டுரங்கன் தன் சிலையிலிருந்து அருந்தி இருக்கிறார்.. ஆவலி தரும் போது முகத்தைத் திருப்பி வைத்தும் .. இப்படி சுவாமி புரியாத லீலையே இல்லை..

வாசிக்க வாசிக்க புல்லரிக்கும்.

அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கம் வரும் போது... தவ நிலை நம் பக்கம் வரும்..

அணு அணுவாய் அடியேன் அனுபவித்திருக்கிறேன்..

இறந்த ஒரு சிறுவனை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்.

இப்படி அவரின் மகிமா லீலைகள் பாற்கடலாய் தவழ்ந்து தழுவிக் கொண்டே பேராச்சர்யம் தரக் கூடியவை...

புத்தகம் நெடுக பக்த மகான் துக்காராம் ஒரே ஒரு பெயர் சொல்லி அழைக்கிறார் ..

அந்தத் திருப்பெயர் வேறு எதுவும் அல்ல...

அதுவே "சேஷ சாயி" (பக்கம் : 129, 159 etc )

சாயி எனப் பார்த்து அதை வாசித்ததும் புல்லரித்தது..

சேஷ சாயி (விஷ்ணு) என பதிவு செய்யப்பட்டிருந்தது..

அப்படியே வாசித்துக் கொண்டிருக்கையில்..

பாண்டுரங்கன் ருக்மணியோடு பேசுகிறார்..

துக்காராமுக்கு குரு சிஷ்ய பரம்பரையின் மேலோ.. அத்வைதத்தின் மேலோ நம்பிக்கையே இல்லை.. அவனுக்கு முக்தி மேல் கூட எண்ணம் இல்லை.. இருந்தாலும் அவனுக்கு கனவில் மந்திர உபதேசம் அளிக்கப் போகிறேன் என்று தெரிவித்ததும்..

சுவாமி அவரை தலையில் கை வைத்து சிரஞ்சீவி ஆக்குங்கள் என ருக்மணி சொல்ல..

ஒரு நல்ல நாளை சுவாமி தேர்ந்தெடுக்கிறார்...

அது வியாழக்கிழமை (அந்தக் கிழமையை இன்னொரு முறை வாசிக்கவும்.. இறைவன் ஸ்ரீ சத்யசாயி தன் அவதாரப் பிரகடனத்தில் என்ன சொன்னார் எனப் புரியும்)

மாதத்தின் பத்தாம் நாள்..

வளர்பிறை / மாசி மாதம்..

ஒரு அந்தணர் கோலத்தில் இறைவன் பாண்டுரங்கன் வருகிறார்..

வழக்கம் போல் அந்தணர்களை வணங்கி பாதத்தில் விழும் பழக்கம் உள்ள மகான் துகா ராம் அப்படியே செய்கையில்..

சுவாமி அவரின் தலைமீது கை வைத்து.. ராம் கிருஷ்ண ஹரி என மந்திரத்தை உபதேசித்து.. இதை தினந்தோறும் ஜபித்துக் கொண்டிரு உலக நன்மைக்காக பாண்டுரங்க தியானம் விடவே விடாதே எனச் சொல்லிவிட்டு .. தன் பெயரைச் சொல்கிறார் சுவாமி..

பாபா சைதன்யர் என ..

துக்காராம் சுவாமியை அழைப்பதோ

சேஷ சாயி.. 

சுவாமி தன் பெயரைச் சொன்னதோ பாபா சைதன்யர்..

அடியேனுக்கு இதய கமலத்தின் உச்சியில் சைதன்ய ஜோதி பிரகாசமாய் எரிய ஆரம்பித்தது... 

தை விட என்ன சான்று வேண்டும்..

சுவாமி தன் குரு பரம்பரையை இப்படி சொல்கிறார்..

ராகவ சைதன்யர் ஒரு விஷ்ணு பக்தர்.. அவரின் சீடர் கேசவ சைதன்யர்.. நான் அவரின் சீடர் பாபா சைதன்யர்..

என்ன ஒரு குறும்பு சுவாமிக்கு..

ராகவன் என்றால் ராமர்..

கேசவன் என்றால் கிருஷ்ணர்..

ராமருக்கு பின் கிருஷ்ணருக்கு பின் 

பாபா.. அது நானே என சுவாமி பாண்டுரங்க பிரபாவத்தில் பொழிகிறார்...

(ஆதாரம் : ஸந்த் துகாராம் .. ஆசிரியர் மஹீபதி.. பக்கம் - 165)

இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்..

ஸ்ரீ மத் பாகவதத்தில் பாண்டுரங்க விஜயமோ.. மகிமையோ .. லீலையோ .. பதியப்படவில்லை .. காரணம் அது துவாபர யுகம்..

பாண்டுரங்க ரசங்கள் பொழிந்தது கலியுகத்தில்..

ஷிர்டி சாயியாய் பாண்டுரங்கன் அவதரிப்பதற்கு முன்...

துக்காராம் வைகுண்டம் ஏக .. சுவாமியால் அனுப்பப்பட்ட புஷ்பக விமானத்தில் ஏறிப் புறப்படுகிறார்..

ஆண்டு: 19/3/1650.

ஒரு கிருஷ்ண பக்தர் இறைவன் சத்ய சாயிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இருந்தார் .. நீங்கள் கிருஷ்ணர் என பாகவதத்தில் குறிப்பு இல்லையே என..

குழந்தைத்தனமான பக்குவமில்லாத கேள்வி...

பாண்டுரங்கன் குறிப்பு கூட இல்லை..

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணன் கோடிட்டே காட்டினார் "சம்பவாமி யுகே யுகே" என..

எப்படி இறைவன் சத்ய சாயி தன் அடுத்த அவதார விஜயத்தை கோடிட்டுக் காட்டினாரோ.. அப்படியே!

இறைவன் சத்ய சாயி நிகழ்த்திக் கொண்டிருக்கும் எத்தனையோ லீலா மகிமைகள் எல்லாம் இந்தக் கலி யுகத்தில் பாண்டுரங்க பிரபாவத்திலேயே ஆரம்பித்துவிட்டது என உணர்கையில் இதயத்தில் இரு கை முளைத்து தலை மேல் கூப்பியபடி...

பண்டரி நாதா பாண்டுரங்கா விட்டல பஜோ

பர்த்தி வாசா சாயி தேவா விட்டல பஜோ

என சதா பரம பக்தியில் தனை மறந்து பாடிக் கொண்டே இருக்கும்!


பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து:

  1. சாய்ராம். பக்தி. லீலாம்ருதம் புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும் தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி

    பதிலளிநீக்கு