சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...
2. வாரம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சேர்ந்து வீட்டில் பஜனை செய்து கடவுளைத் தொழ வேண்டும்.
இறைவன் சத்ய சாயி பஜனை சங்கீர்த்தனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்.
பஜ என்ற பதமே அற்புதமானது.
பஜ கோவிந்தம் என்று ஆதி சங்கரர் வலியுறுத்துகிறார். இந்தக் கலி எனும் கடலைத் தாண்டுவதற்கான படகே பஜித்தல் தான்!
பஜனை சம்பிரதாயம் முன்பே மகான்களால் ஆரம்பித்திருந்தாலும் இறைவனே அவதரித்து அதை எளிமை செய்தார். ஆம்! இறைவன் சத்ய சாயி பஜனைப் பாடல் வரிகளை .. இறை நாமங்களைத் தோரணமாய்க் கோர்த்து எளிமைப்படுத்தினார். தானே பல பாடல்கள் இயற்றினார்.
மானஸ பஜரே குரு சரணம் என்றே தன் அவதாரப் பிரகடனத்தை பாடலாய் துவக்கினார்.
பெரும்பாலான சத்ய சாயி பஜன்கள் இறை நாமங்களே ... சில பாடல்கள் மொழி சார்ந்த பக்தி திரவியங்கள்.
எளிதாய் நினைவில் கொண்டு வருகிற பஜனை எனும் தெய்வீக வரிகள் நிரம்பிய கொடையை அள்ளி வழங்கினார் ஆண்டவ சாயி.
"எங்கெல்லாம் என் பாடல்கள் ஒலிக்கின்றனவோ.. அங்கெல்லாம் நான் என்னை ஸ்தாபிப்பேன்" என்கிறார்.
அது பரம சத்தியமும் கூட...
பல பக்தர்களின் அனுபவமும் கூட...
பெரும்பாலான மனிதர்களை சத்ய சாயி பக்தர்களாக்கியது பஜனைப் பாடல்களே! இதில் எள் அளவும் மிகையே இல்லை. மரத்தின் அடியில் எப்படி கைகளைத் தட்டும் போது கிளைகளில் அமர்ந்திருக்கும் காகங்கள் ஓடுகின்றனவோ... அப்படியே கைகளைத் தட்டிப் பாடும் போது மனதிலிருக்கும் தீய எண்ணங்கள் பறந்தோடுகின்றன என்கிறார் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
பஜனைப் பொழுதுகளில் சுவாமியின் அதிர்வலைகள் நிரம்பி வழியும்.
இதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்தப் பேரனுபவம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி அனைத்து பக்தர்களுக்கும்!
பக்தி நிரம்பி.. தாளத்தை அனுசரித்து ... பாவனா ரசத்தோடு.. வரிகளை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து தனை மறந்து சத்ய சாயி பஜன் பாடுகையில் பக்தர்களுக்கு அது ஆன்மீக சாதனைக்கு அஸ்திவாரம் இடுகிறது.
முதல் படி அதாவது முதல் கோட்பாடான ஜபம்... தியானம் புரிந்து வருகையில்.. அதை தினசரி அனுசரித்துப் பழகி வருகையில் ... அடுத்த படியான பஜன் பாடுகையில் அதனோடு ஒன்றுபட்டு.. பஜனின் பேரானந்தத்தை அணு அணுவாய் அனுபவிக்கலாம்.
அதற்காகவே ஜப.. தியானத்தை முதல் படியில் வைத்து பஜனையை இரண்டாவது படிநிலையில் வைத்தார் இறைவன் சத்ய சாயி. இதில் கூடுதலான முக்கிய விஷயம்..
வாரம் முறையாவது குடும்பத்தோடு பஜன் செய்வது / கூட்டு வழிபாடு செய்வது நலம்.
குடும்பத்தில் ஒரு இணக்கம் ஏற்பட.. அந்த இணக்கம் இறைவனோடு ஒன்றிணைய ...
குடும்ப உறவுகளுக்கான புரிதலும் வாழ்தலும் எந்த விதமான சிக்கலின்றி .. சர்ச்சையின்றி ... சமரசமாய் .. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை என வள்ளுவனார் வகுத்த இனிய இல்லறமாய்த் திகழ
அந்த அன்புக்கும் அறனுக்கும் ஆன்மீகமே பாலமிடுகிறது..
அந்தப் பாலத்திற்கு சத்ய சாயி பஜனையே கோலமிடுகிறது..
இதயத் துடிப்பாய்த் தாளமிடுகிறது.
ஜபம் தியானம் என்பது தனி சாதனை..
வாரம் ஒருமுறையாவது குடும்பத்தோடு பஜன் என்பது கூட்டு சாதனை.
இரண்டுமே முக்கியம்.
இந்த கலியின் பிணக்கை தீர்க்க வல்லது இறை நாம சங்கீர்த்தனமே அதற்கான எளிய வழிமுறை.
இறைவனை அடைய...
க்ருத யுகம்- தியானம்
ரேதா யுகம் - யக்ஞம்
துவாபர யுகம் - பூஜை, அர்ச்சனை
கலியுகம் - கேசவ கீர்த்தனம்
என்கிறார் ஸ்ரீ சைதன்ய மகா பிரபு
உலகில் ஹரி நாம மகிமையை உணராமல் தான் மக்கள் பலவிதமான துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்கிறார்.
"கலியுகத்தில் ஹரி நாமமே ஸாரமானது. ஹரி நாமத்தை விட்டால் கலியில் வேறு கதியில்லை என்று நான் ப்ரதிக்ஞை செய்கிறேன்" என்றும்
நாம ருசியை உணர்ந்தவனை எந்த ஸம்ஸார சிரமமும் துன்புறுத்த முடியாது என்கிறார்.
(ஆதாரம் : ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் - ஆசிரியர் சியாமளா . பக்கம் - 80/81)
அந்த ஹரியே சாயி என்பது நாம் அனைவரும் அனுபவித்து உணர்வதே!
ஹரி நாமமும் சாயி நாமமும் வேறு வேறல்ல..!!
கூட்டு பஜனையில் பக்தி பரவும்..
கூட்டு பஜனையில் இல்லத்திலும் உள்ளத்திலும் தெய்வீக நேர்மறை அதிர்வலைகள் பரவி சுத்தப்படுத்தும்.
கூட்டு பஜனையில் ஒருங்கிணைதல் நேரும்...
ஹரி பஜன பினா சுக சாந்தி நஹி
என இறைவன் சத்ய சாயியே தன் தாமரை இதழ்களால் பாடி பரவசப்படுத்தி அதன் அர்த்தத்தையும் இதயத்தில் பதிவு செய்கிறார்.
குடும்பத்தோடு நம் இல்லத்து பஜனிலும் / கூட்டு வழிபாட்டிலும் ஆன்மீக சாதனையை ஆழப்படுத்துவோம்
நவரத்தினம் ஒளிரும்
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக