தலைப்பு

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

எட்டாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

8. ஒருவரைப் பற்றி தவறாக விமர்சிக்கவோ /குறை கூறவோ கூடாது .. குறிப்பாக அவர்கள் இல்லாத போது.

எத்தனை உயரிய விதிமுறை.

எத்தனை மென்மையான நடைமுறை.

எத்தனை இதம் தரக்கூடிய அறிவுரை.

இதைப் பின்பற்றாத எவரும் இறைவன் சத்ய சாயி பக்தரே அல்லர்.

இப்படி தவறாக விமர்சிப்பதை பெரிய பாவம் என்கிறார் இறைவன் சத்ய சாயி.

ஆகவே இந்தக் கோட்பாட்டை நாள் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நம் கர்மா சுத்தமாகிறது.

தீய கர்மாவை கரைப்பதே கடினம்.

நல்ல கர்மாவை கடப்பது சுலபம்.

இரண்டுவிதமான கர்மாவை தாண்டினால் தான் பிறவா நிலை ஏற்படுகிறது.

அனைவருக்கும் உதவி செய்ய முடியாவிட்டாலும் யாரையும் மனம் புண்படுத்தாதே (சொல்லாலும் / செயலாலும்) என்கிறார் இறைவன் சத்ய சாயி.

நன்மை செய்ய முடியாவிட்டாலும்...

தீமை செய்யாமல் இருப்பது தானே குறைந்தபட்ச தார்மீகம்.

அதுவே அடிப்படை ஆன்மீகம்.

ஆன்மீக நெறிமுறைகளை ஒழுங்காக.. சீராக .. முழுதுமாக கடைபிடித்து வந்தால் பிறரை குற்றம் சாட்ட நேரமே இருக்காது‌.

எப்போதும் புண்படுத்தாதே (Hurt never)

என்று இறைவன் சத்ய சாயி சதா சொல்லிக் கொண்டே இருப்பது தீய வினைகளை நம்மிடம் அண்டவிடாமல் இருப்பதற்காகவே..

பழி பாவம் என்பர்.. உண்மையில் பழியே பாவம்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தேவை இல்லாமலும் / தேவை கலந்தும் தவறாக விமர்சிப்பது  சர்வ நாசம் அளிக்கும்.


தன்னை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்பவர்களே பிறரை குறை கூறி அதன் மூலம் தான் குறையில்லாதவன் எனும் மாபெரும் உலகப் பொய்யை மறைமுகமாக  சொல்ல வருகிறார்கள்.

பழகுகையில் இதைப் போன்ற பேர்வழிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சுவாமிக்கு இது சுத்தமாகப் பிடிக்காத குணம்.

அவர்களிடம் சுவாமி தள்ளியே இருக்கிறார்.

ABC of Life is Always BeCareful என்கிறார்.

இதைப் போன்ற குறை சொல்லும் மன நோயாளிகளிடம் நாம் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

உலக வம்பு / ஊர் வம்பு /குடும்ப வம்பு /நட்பு வம்பு பேசி 

இறைவன் சத்ய சாயி நமக்கு அளித்த நல்ல நேரங்களை... நல்ல வாழ்க்கையை வீணடிக்காமல் ... காலத்தை .. கொடுக்கப்பட்டிற்கும் கர்மாவை... நல்ல வழியில் பயன்படுத்துவதே பக்தியின் சாமுத்ரிகா லட்சணம்.

Time (காலம்)

Money (பணம்)

Energy (சக்தி நிலை)

Food (உணவு)

இவை மூன்றையும் நாம் வீணடிக்கக் கூடாது என இறைவன் சத்ய சாயி வலியுறுத்துகிறார்.

பிறரைப் பற்றி தவறாக விமர்சிக்கும் போது

காலம் /சக்தி நிலை இரண்டும் சர்வ நாசம் ஆகிறது.

மனம் குறுக்கு புத்தியோடு இருந்தால் அது உடல் நிலையையும் பாதிக்கிறது.

ஆரோக்கியமான மனமே ஆரோக்கியமான உடலுக்கு அஸ்திவாரமிடுகிறது.

விஞ்ஞான ஆய்வுப்படி உடம்பில் உண்டாகும் நோய்களுக்கு 80% மனமே காரணமாக இருக்கிறது..

இதைப் போன்ற தவறான விமர்சனம் பேசுதாலும்/ கேட்பதாலும்

எதிர்மறை அதிர்வலைகள் மனதை மேலும் ஆட்கொள்கின்றன.. ஆட்கொண்டு ஆரோக்கியத்தை உட் கொள்கின்றன..

அதாவது உடல் /மன சீர்நிலைப்பாடு கெட்டுக் குட்டிச்சுவராகப் போகிறது.

மனிதன் தானே நோய்களை வரவழைத்துக் கொண்டு இறைவன் சத்ய சாயியிடம் நிவாரணத்துக்காக மண்டி இடுகிறான். எவ்வளவு பெரிய அறியாமை!!!

சுவாமி அளித்த நன்னெறிக் கோட்பாடுகளை முறையாகப் பயின்று வந்தாலே எந்த நோயும் எப்போதும்... எந்நாளும்... எந்த சந்தர்ப்பத்திலும்... நம்மை அணுகவே அணுகாது.

இதை ஏன் சுவாமி எட்டாவதாக வைக்க வேண்டும்.

மற்ற படிநிலைகளைப் பின்பற்றி ஏறி வருகையில்..

நாம் ஆன்மீகமாக இருக்கிறோம்.. அவன் இல்லை.. 

நாம் சுவாமி பக்தர்.. அவன் இல்லை..

என்ற ஆணவம் தலை தூக்கி பிறரை தவறாக விமர்சிக்கும் நிலை தோன்றிவிடும்.

அதற்காகவே எதிர்வரும் தடைக்கற்களை எல்லாம் எளிதாக கடந்து போகவும்..

அந்தத் தடைக்கற்களை தவறான விமர்சனங்களாக நாமே உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த முக்கியமான நன்னெறியை அளித்திருக்கிறார் சுவாமி.

வேலைக்காகவோ / சேவைக்காகவோ நான்கு பேர் கூடுகையில் Gossip (வம்பு / வதந்தி/ விமர்சனம்) பேசுவது சகஜம் என தவறாக நினைக்கிறோம்.

அப்போதும் அந்த சேவைக் கூடுதலை சத்சங்கமாக மாற்றிவிட வேண்டும்.

சுவாமியைப் பற்றி.. அவர் வாழ்க்கையைப் பற்றி/ மகிமைகள் / அற்புதங்கள் / பக்தர்களின் அனுபவங்கள் / பஜனைப் பாடல்கள் என பகிர்ந்து கொண்டு சேவாதளர் / பக்தர் ஒன்றிணையும் தருணங்களை தெய்வீகமாய் நாம் மாற்றி விட வேண்டும்.

பூட்டில் நுழையும் சாவி இடது பக்கம் திரும்பினால் பூட்டிக் கொள்கிறது..

வலது பக்கம் திரும்பினால் திறந்து கொள்கிறது.

பூட்டு ஒன்றே.. சாவி ஒன்றே 

எப்படி திருப்புகிறோம் என்பதில் 

அடைத்தலும் / திறத்தலும் நிகழ்கிறது.

அப்படியே மனமும் ..

ஞானமா... மூடத்தனமா..

சொர்க்கமா ... நரகமா ...

பிறவிகளா .. பிறவாமையா..

துயரமா... அமைதியா...

சாதனையா .. சாக்குபோக்கா...

சேவையா ... சுயநலமா...

தியானமா... தூக்கமா...

தெய்வீகமா... அசுரத்தனமா...

சத்தியமா ... போலித்தனமா..

எதில் திரும்புகிறதோ 

அதுவே அதற்கு நிகழ்கிறது 

இந்தக் கோட்பாட்டில் மிகவும் முக்கியமாக ஒருவர் இல்லாத சமயங்களில் அவரை தவறாக விமர்சிக்கக் கூடாது என சுவாமி சொல்கிறார்.


ஒருவர் இல்லாத போது தான் அவரைப் பற்றி தவறாக ஆயிரத்தெட்டு அர்ச்சனை நடக்கும்.

ஒருவரின் கடந்த கால வாழ்வைப் பற்றி Post mortem நடக்கும்.

மனம் பொதுவாக கடந்த காலத்து மலத்தின் மேல் மொய்க்கும் ஈயாகவும்..

எதிர்காலத்து சோப்பு நுரைக் குமிழாகவும் இருக்கிறது..

அதை மாற்றி.. மனதை பக்குவப்படுத்தி..

இறைவன் சத்ய சாயி பாதார விந்தமெனும் மலர்களில் குவிந்து கிடக்கும் பட்டாம்பூச்சியாய் வாழ முடியும்.

அதற்கு மௌனக் கடிவாளங்கள் பூட்டிய உதடுகளால்...

ஞானக் கடிவாளங்கள் பூட்டிய மனங்களால் மட்டுமே முடியும்!

நவரத்தினம் ஒளிரும்

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக