சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...
9. ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை வைத்துக் கொண்டு அதில் சேமிக்கும் பொருளை வைத்து சமூக சேவை / நாராயண சேவை ஆற்றுவது:
எவ்வளவு எளிமையான நெறிமுறை.
எவ்வளவு நேர்மையான நெறிமுறை.
எவ்வளவு செயல்பாட்டுக்குறிய வரைமுறை.
இப்போது முதல் கோட்பாடான தியானம் /ஜபம் இதிலிருந்து கொலுப் படியாய் ஒன்பது படிகள்.
நாம் தியானம் / ஜபம் விடாமல் தினசரி சுவாசம் போல் அது நம்மிடம் செயல்பட்டால் தான் ஒன்பதாவது கோட்பாடு வரை .. மிக முக்கியமாக ஒன்பதாவது கோட்பாட்டை கடைபிடிக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்துணர வேண்டும்.
ஆசைக்கு உச்சவரம்பு என்கிறார்.
கடலுக்கே கரை எனும் வரம்பு இருக்கிற போது ஆசைக்கு இருக்கக் கூடாதா?
கடல் சீறினால் மட்டுமில்லை
ஆசை சீறினாலும் சுனாமி எழுந்து வாழ்க்கையை மூழ்கடிக்கும்.
ஆசைக்கு உச்சவரம்பு என்பதை ஆழமாகப் பார்த்தால் ...
எண்ணங்களே ஆசைகளின் கருவறை.
ஆக எண்ணங்களாலேயே ஆசைகள் எழுந்து செயல்வடிவம் பெறுகின்றன..
ஆசைகளின் உச்சவரம்பு என்பது எண்ணங்களின் உச்ச வரம்பே!
எண்ணத்தை குறைக்க வேண்டும்.
எண்ணத்தை மிதப்படுத்த வேண்டும்.
திருவிழாவில் தொலைந்து போகும் குழந்தையாய் ஆசைகளில் அறிவு தொலைந்து போகிறது.
ஆசைகளில் ஆற்றல் முனை மழுங்குகிறது.
ஆசைகளில் புலன்கள் தேய்மானம் அடைகின்றன..
ஆசைகளில் வாழ்க்கை அலைக்கழிக்கப் படுகிறது..
குதிரைக் கடிவாளம் போல் மனதிற்கு கடிவாளம் மிக அவசியம்.
அதை .. அந்தக் கடிவாளத்தை சுவாமி முதல் கோட்பாட்டில் அணிவித்து.. அதன் பயன்பாட்டை இறுதி கோட்பாட்டில் அளிக்கிறார்.
ஐம்புலன்கள் வயதாக வயதாக தேய்மானம் அடைகிறதே ஏன்? .. அதன் கூரிய ஆற்றல் குறைகிறதே ஏன்?
அதன் பயன்பாடு சீரியதாக இல்லையே ஏன்?
வயதினால் இப்படித் தான் என்று பொய்யான சமாதானம் நாம் சொல்கிறோம்.
உண்மையில் புலன்களை மிக மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் அதன் ஆற்றல் தேய்ந்து துரும்பாய் இளைக்கிறது.
சுவாமி நமக்கு புலன்களை அளித்தது use செய்வதற்காக.. நாம் அதை misuse செய்து fuse ஆக்குகிறோம்!
புலன்களே ஆசைகளின் வாகனம்.
அதன் ஜீவ ஊற்று மனமே.
ஆகவே தான் மன எண்ணங்களுக்கு உச்ச வரம்பு வேண்டும் என்கிறார் சுவாமி.
தேசத்திற்கும் தேசத்திற்குமே வரம்பு இருக்கிறது...
வீட்டிற்கும் வீட்டிற்குமே வரம்பு இருக்கிறது.
அது போல் ஆசைகளுக்கும் வேண்டும்!
வரம்பு எனச் சொல்லாமல் உச்சவரம்பு என்கிறார்.
எனக்கு அமைதி வேண்டும் என்று ஒருவர் கேட்க.. சுவாமி முதலில் விடச் சொல்வது "வேண்டும்" என்ற ஆசையையே !!
கைகளை கைக்குட்டைப் பற்றி இருக்கிறதா ?இல்லை கைகள் கைக்குட்டையைப் பற்றி இருக்கிறதா ?
கைகளே.. நாமே .. நம்மால் தான் ஆசைகளே நம் மனதில் புகுந்து நம்மையே ஆட்டிப் படைத்து..
வாடகைக்கு தங்கும் ஒருவர் வீட்டு உரிமையாளரிடமே வாடகை வசூலிப்பது போல் ஆசை மனதை ஆட்டிப்படைக்கிறது.
இறைவன் மூன்று அவதாரம் எடுத்தால்..
ஆசை மனிதனுக்குள் மூவாயிரம் அவதாரம் எடுக்கிறது.
நெருப்பு எரிவதற்கு முன் பற்றுகிறது என்போம்.
நெருப்பு வேகமாய்ப் பற்றக் கூடியது.
எரித்து சாம்பலாக்கக் கூடியது.
அது தீவட்டியில் நின்றாலும்..
அனுமன் வாலிலில் ஏறி நின்றாலும் அழிக்கவே செய்யும்.. அணைக்காது...
அதற்காகவே ஆசையை பற்று எனவும் அழைக்கின்றனர்.
ஒரு சிறு பொறி போதும்... பற்றினால் நெருப்பு காட்டுத் தீப் போல் பரவி சர்வ நாசம் விளைவிக்கிறது.
அது போல் ஆசை எனும் பற்று நுழைய சிறு இடைவெளி போதும்.
அது எந்த ரூபத்திலும் புகுந்து அமைதியை முதல் வேலையாக அழித்துவிடும்.
புத்தராக அவதரிக்கையில் ஆசையை துற எனச் சொன்ன சுவாமியே கால மாற்றம் கருதி ஆசைக்கு உச்ச வரம்பு வைத்துக் கொள் என்கிறார்.
ஆசை என்பது நெருப்பு தான்..
அது கூரை மேல் அல்ல குத்துவிளக்கின் மேல் மட்டும் உச்சவரம்போடு எரியட்டும் என்கிறார்.
உறவுப் பற்று / நட்புப் பற்று/ தொழில் பற்று / தெய்வப் பற்று எல்லாமே ஆபத்தையே விளைவிக்கும்.
அன்பே கெடுதல் இல்லாதவை.
பக்தியே ஆபத்து இல்லாதவை.
சுவாமியிடம் கூட பற்று வைக்காமல் பக்தியே வைக்க வேண்டும்.
சுவாமியிடமே
எதிர்பார்த்தால் அது பற்று.
எதிர்பார்ப்பில்லை எனில் அதுவே பக்தி.
சற்றே பாசத்திற்குக் காரணம் பற்றே! என்பதை புரிந்துணர வேண்டும்.
பற்றே எதிர்பார்ப்பையும்.. ஏக்கத்தையும் ... அவமானத்தையும்... அறியாமையையும் வளர்க்கிறது.
எல்லா எதிர்பார்ப்புகளுமே ஏக்க மயமானவை.. எப்படி கடல் உப்பு மயமானவையோ அப்படியே!
நான்/எனது என்ற எண்ணத்திலிருந்தே ஆசை எழுகிறது. வெறும் சுயநலமான எண்ணங்கள் அவை.
சுயத்தைப் பற்றிய எண்ணமே ஆன்ம ஞானம் அளிக்கும்! சுய நல எண்ணம் நம்மிடம் இருக்கிற அறிவையும் அழித்துவிடும்!
மகான்கள் ஆசையை விடு என்கிறார்கள்.
ஆனால் இறைவன் சத்ய சாயியோ ஆசைக்கு உச்சவரம்பு வைத்துக் கொள் என்கிறார்.
எதை நம்மால் கடைபிடிக்க முடியுமோ அதை மட்டுமே இறைவன் சொல்கிறார் என்பதைப் புரிந்துணர வேண்டும்!
நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொருவிதமான பூர்வ கர்மாவினால் கட்டப்பட்டிருக்கிறது. இதன் விதிப்படி அவரவர்க்கு வாழ்க்கையை அமைப்பதே இறைவன் சத்ய சாயி தான்.
அத்தனைக்கும் ஆசைப்படு எனும் அர்த்தமில்லாத வாசகம் சில காலமாய் பவனி வருகிறது.
அப்படி நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டால் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்படுவோம்.
வெறும் ஆசைப்படுவதோடு ஆசை நின்றுவிடாது. அதை அடையும் முயற்சியில் தீய கர்மாவினை வரவழைத்துக் கொள்வோம்.
இறைவன் சத்ய சாயி சொல்வது "Balancing" சமநிலை...
இந்த சமநிலையில் தான் பூமி சுற்றுகிறது.
கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இயங்குகிறது.
விடியல் நேர்கிறது. மலர்கள் மலர்கிறது. இயற்கை நிகழ்கிறது. இவை எதுவும் தன் உச்ச வரம்பை மீறுவதே இல்லை.
மனிதர்கள் நாம் இயற்கையோடு இயற்கையாக வாழ்வதற்கே இறைவன் சத்ய சாயி ஆசைக்கு உச்சவரம்பை விதிக்கிறார்.
ஒரு மல்லிகை தன்னிடம் வண்டுகள் வரவேண்டும் என ஆசைப்படலாம் ஆனால் அந்த மல்லிகை தான் ரோஜாவாக வேண்டும் என ஒருபோதும் பேராசைப்படுவதில்லை.
புரிகிறதா...
மனிதன் மட்டுமே பிறர் போல் வாழ பேராசைப்படுகிறான்.
ஆகவே தான் இயற்கை போல் ஆசைக்கு உச்சவரம்பு விதித்து வாழ வேண்டும் என்கிறார் இறைவன் சத்ய சாயி.
உணவு
காலம்
பணம்
சக்தி
இவை யாவற்றுக்கும் உச்சவரம்பை விதிக்க வேண்டும்.
உச்சவரம்போடு உணவு உண்பது!
அதாவது
Eat when you are hungry . Not before or after என்கிறார் சுவாமி.
பசித்து புசி என்பதே தமிழ் வாக்கு.
Time waste is life waste .
காலத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதற்கு சமம் என்கிறார் சுவாமி.
தேவைக்கு அதிகமாக பணம் சேர்ப்பது தீது.
Money comes and goes
Morality comes and grows என்கிறார் சுவாமி.
பணம் வரும் போகும்.
பண்பு வந்தால் வளரும் என்கிறார்.
சக்தியை வீணடிப்பது உயிரை வீணடிப்பதற்கு சமம்.
தேவையோடும்/ தேவையில்லாமலும் உணர்ச்சிவசப்படுவது தீமையே உடலுக்கும் மனதிற்கும் விளைவிக்கிறது.
ஆசைக்கு உச்சவரம்பை சரியாக கட்டமைத்தால் தான் அதில் சேமிக்கப்படும் பொருளைப் பயன்படுத்தி சேவையாற்ற முடியும்!
பிறர் பசியாற்றுவதால் நம் பிறவிப் பசியே நீங்குகிறது - நாராயண சேவை.
நாம் நல்ல உணவை உண்டு பிறருக்கு தரமற்ற உணவை வழங்குவது நாராயண சேவை அல்ல..
நாம் என்ன உண்கிறோமே அதுவே பிறருக்கு அளிக்க வேண்டும். காரணம்
அந்த நபரின் உள்ளிருந்து அந்த உணவை ஏற்றுக் கொள்வது சுவாமியே!
பக்கத்துத் தெருவுக்கு போவதற்குக் கூட ஏன் பெட்ரோலை விரயம் செய்ய வேண்டும். சைக்கிளில் செல்லலாம்.
சவுகரியம் என்பது சோம்பேரித்தனமல்ல என்பது புரிய வேண்டும்.
சொகுசாக வாழ முயற்சிப்பதே வியாதிகளுக்கான ஊற்றுக் கண் என்பது பலருக்கு புரிவதே இல்லை.
வாழ்க்கை என்பது பிறர் முன் காட்டிக் கொள்வதற்காக அல்ல.. அது இறைவன் சத்ய சாயி அளித்த பரிசு என நன்றியோடு / பணிவோடு வாழ்வதற்கே...
தன்னை யாருமே நிமிர்ந்து பார்ப்பதில்லை என நிலா அழுது வடிவதில்லை.. அய்யயோ ஒளி வறுமையால் இளைக்கிறோமே பிறர் பார்த்தால் என்ன நினைப்பர் என அப்போதும் நிலா அவமான முக்காடு அணிவதில்லை.
ஏற்றமோ / இறக்கமோ மனிதனும் அப்படியே கடைசி மூச்சுவரை வெளிச்சமாய் வாழ வேண்டும்.
இதில் ஏகப்பட்ட பொருள் மிஞ்சும்.
அந்தப் பொருளில் ஏராளமான மனித சேவையாற்றலாம். சமூக சேவை புரியலாம்.
"நீ ஆசைப்படுவதை நான் தருவதில்லை..
உனக்கு எவை எல்லாம் கொடுப்பினையோ அதை மட்டுமே தருகிறேன்" (I give not what you desire.. I only give what you deserve) என்கிறார் இறைவன் சத்ய சாயி.
எவ்வளவு சத்தியம் !
இது மாத்திரம் புரிந்தால் கூட போதும்..
எளிமையான வாழ்க்கையே
வலிமையான வாழ்க்கை...
ஆசைகளுக்கான உச்சவரம்பே ஆரோக்கியமான வாழ்க்கை...
பிரியமும் / பொருளும் பகிர்ந்து கொள்வதற்கே அன்றி பூட்டி வைப்பதற்கு இல்லை.
சேவை செய்யாமல் தடுப்பது பேராசையே!
சேவை செய்யாமல் தடுப்பது சுயநலமே!
கருமியாக இருப்பது கிருமியாக இருப்பதற்கு சமம்!
சுவாமி மட்டுமே உலகில் எளிமையாக ஒன்பது கோட்பாடுகளை நம்மிடம் செயல்பட வைத்து நம்மை முதலில் மனிதனாக்குகிறார்.
தன்னை உணர்த்தி பக்தனாக்குகிறார்.
பாதம் அளித்து முக்தனாக்குகிறார்.
நவரத்தினம் ஒளிர்ந்தது!!!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக