கேள்வி: திருமணம் என்பது நிச்சயம் அவசியம் தானா? அதனால் ஆன்மீகத்திற்கு ஏதேனும் தடை ஏற்படுமா?
பதில்: உலகப் பற்றுள்ளவர்கள் திருமணம் அவசியம் என்பர்.
திருமணத்தால் தனக்கோ தன்னை சூழ்ந்திருப்பவர்களுக்கோ ஏதேனும் அவமானமோ.. ரண வேதனையோ ஏற்பட்டிருந்தால்.. அந்த வெறுப்பால் திருமணமா அய்யோ அபத்தமானது.. ஆபத்தானது என்பார்கள்.
இரண்டு பார்வையுமே தவறானது.
இறைவன் சத்ய சாயியோ
திருமணம் ஒரு கானல் நீர் என்கிறார்.
(Marriage is A Mirage)
அதே இறைவனே பலருக்கு .. பல நாட்டவருக்கு தன் கையால் அவரவர் குல வழக்கப்படி திருமாங்கல்யம் சிருஷ்டி செய்து Be happy happy happy என திருமணம் நிகழ்த்தி வைத்திருக்கிறார்.
அதேபோல் ஒரு சில பேருக்கு திருமணமே செய்து கொள்ளாதே.. ஆன்மீகமாக வாழ் எனவும் கட்டளைப் பிறப்பித்து.. அந்த ஆன்மீக வாழ்க்கை வாழ பல சௌகர்யங்களையும் செய்து அவர்களை மேன்மையடைய வைத்திருக்கிறார்.
என்ன.. குழப்பமாக இருக்கிறதா?
திருமணம் செய்வதா? வேண்டாமா? எது தான் சரி? என ஒரு கேள்வி இப்போது எழும் !
திருமணத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. அதே சமயத்தில் அதனாலும்.. அது இல்லாமையாலும் பல நன்மைகள் இருக்கிறது.
நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் ...
திருமணம் என்பது நிகழ்த்தப்படுவதல்ல..
அது நிகழப்படுவது..
அது மனித தீர்மானத்திற்கு அப்பாற்பட்டது.
பூர்வ ஜென்ம வாசனைகளாலே நிகழ்வது.
அதைத் தான் "இன்னார்க்கு இன்னார்" என்றும் ..
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள்.
உளமாறப் பார்த்தால்.. திருமணம் பூர்வ ஜென்ம வாசனையோடு அதாவது பூர்வ ஜென்மத் தொடர்போடும் இறைவனின் அனுமதியோடும் அரங்கேறப்படுகிற வைபவம்.
அந்தத் தொடர்பே இல்லாதவர்களுக்கு திருமணம் நிகழ்வதில்லை.
அந்தத் தொடர்பு தீய கர்மாவாக இருந்தால் திருமண வாழ்க்கை வேதனையோடும்..
நல்ல கர்மாவாக இருந்தால் திருமண வாழ்க்கை பிரச்சனை இல்லாமலும் நிகழ்கிறது.
அந்த தீய கர்மா சிறிது காலத்திற்கு மட்டுமிருப்பின்..
அந்த கருப்பு நாட்களில் இருந்து மிகவும் விரைவில் விடுதலையும் கிடைத்துவிடுகிறது!
தன்னை வைத்துப் பிறரை ஒப்பிடுவதும் .. பிறர் வாழ்வைப் பார்த்து தன்னை ஒப்பிட்டுக் கொள்வதும் மடமை.
இங்கே ஒவ்வொருவரும் தனியான கர்மாவோடு பிறந்த தனித்தனி ஆன்மா..
ஒரு மரத்தில் உதிக்கும் ஒரு இலை போல் இன்னொரு இலை இல்லவே இல்லை.
ஆக திருமண விஷயம் என்பது இந்தக் காலக்கட்டத்தில் மிகப் பெரிய சவாலாக.. மிகப் பெரிய மன உளைச்சலாக .. மிகப் பெரிய பொருளாதாரப் பங்கீடு உள்ளதாக மாறிப்போனது துரதிர்ஷ்டமே!
மனம் பார்த்து நிகழ்ந்த திருமணம் மலையேறிவிட்டது..
ஜாதி ... அந்தஸ்து... ஜபர்தஸ்து என எவை எல்லாம் மகான்களும் இறைவனும் விடச் சொல்கிறார்களோ அவைகளை அஸ்திவாரமாக வைத்தே திருமண மண்டபம் கட்டப்படுகிறது.
திருமணம் நிகழவில்லையே என்ற மன வலிகள் ஒருபுறம்.. சரியான மண வாழ்வில்லையே என்ற வலிகள் இன்னொரு புறம் என மனிதர்கள் தவிக்கிறார்கள்.
இதில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
அவசரமாக திருமணம் செய்து கொள்வதை விட சரியான நபரை திருமணம் செய்து கொள்வதே நலம் அளிக்கும்.
கர்மாவை அனுபவிக்கவே இந்த மனிதப் பிறப்பு ஆகையால் மண வாழ்க்கையோ மணமில்லாத வாழ்க்கையோ இரண்டையும் இறைவன் சத்ய சாயி தந்த வாழ்க்கையாக ஏற்பதே பக்திக்கான பரிபக்குவ நிலை!
உடம்பு முழுதும் சூடு வைத்துக் கொண்டால் எப்படி குதிரை வரிக் குதிரையாக மாறாதோ.. அப்படியே அவரவர் வாழ்க்கை அவரவர் அனுபவிக்க வேண்டியவை..
அதற்கான பலனும் அவரவர்க்கானவை மட்டுமே! பிறரைப் பார்த்து இதயம் புகைப்பது அல்ல...
இந்த கர்ம விஞ்ஞானமே ஆன்மீக ஞானத்தின் முதன் நிலை. இதை உணர வேண்டும்.
குந்தி மந்திரம் சொல்லி ஆறு பிள்ளைகள் பெற்றால் .. அதைக் கேள்வியுற்ற காந்தாரி பொறாமை தாளாது வயிற்றில் அடித்து அடித்தே நூறு பிள்ளை பெற்றால்..
கடைசியில் யார் மிஞ்சினர் ஐந்தா ...? நூறா? ஆறில் முதல் குழந்தையும் ஆற்றில் விடப்பட்டு சேராத இடம் சேர்ந்து மாய்ந்த கதை தெரியும்.
ஆகவே பிறரைப் பார்த்து அப்படியே வாழ வேண்டும் என்ற நிலையை முதலில் விட வேண்டும். அது விபரீதத்தில் கொண்டு போய் விடும்.
ஆன்மீகத்திற்கு எதுவும் தடை இல்லை.
திருமணத்திற்குப் பிறகும் ஆன்மீகமாக வாழலாம்..
ஆன்மீகமே புரியாத மனைவியோ / கணவனோ இடித்தும்.. பழித்தபடியும் இருந்தால் அதனால் கூட ஆரம்ப அதிர்ச்சி ஏற்பட்டு சிறு வைராக்கியம் தரலாம்.
ஆனால் அந்த வைராக்கியம் கனிய நாம் ஏன் ஆன்மீகமாக வாழ வேண்டும் என்பதை ஆழமாக உணர வேண்டும்.
பட்டினத்தார் சீடருக்கு கடைசி வரை திருவோட்டின் மேல் பற்று போகவில்லை..
அதை உடைத்த பிறகே ஞானம் உதித்தது.
இல்லறத்தில் இருந்து கொண்டே வேதவதி இறை பக்தியில் மாங்கனி பெற்று.. பிறகு கணவன் பிரிய பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார் ஆனதும் அனைவருக்கும் தெரிந்ததே!
பற்று இல்லாமல் திருமண வாழ்க்கை நிகழ்த்துவது ஒன்றும் சிரமமே இல்லை.
அதற்கு தீவிர வைராக்கியம். திடமான பக்தி .. சரணாகதி உணர்வு வேண்டும். அதுவே பிறவாமை தரும்.
மீசைக்கும் ஆசை ... கூழுக்கும் ஆசை என்பது போல் பந்த பாசத்தோடும் இருப்பேன் .. ஆன்மீகத்திலும் முன்னேற வேண்டும் என நினைத்தால் ஆன்மீக ஞானம் கனியவே கனியாது.
இறைவன் சத்ய சாயி நம்மிடம் தரும் வைரங்களைப் பெற்றுக் கொள்ள முதலில் நம் கைகளில் இருக்கும் கூழாங்கற்களை வீசி எறிய வேண்டும்!
சிலருக்கு திருமண முறிவு .. குழந்தையில்லாமை என்பவை ஏற்படுவது முற்பிறவி கர்மா என்றாலும் அதை ஒரு பெரிய வாய்ப்பாக இறைவன் தந்து நம்மை ஆன்மீகத்தில் முன்னேற்றவே அந்த அற்புதமான அதிர்ச்சி சம்பவங்களை ஏற்படுத்துகிறார் என்ற ஆழமான புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டால் வேதனை தான் வேதனைப்படுமே தவிர நாம் அல்ல...
சமாதானத்திற்காகச் சொல்லவே இல்லை..
சித்தார்த்தனும் அதிர்ச்சி வைத்தியத்தால் தான் புத்தரானார்.
மகான் ராகவேந்திரர் குருவின் வாக்கை ஏற்று தன் மனைவியைப் பிரிந்தே தான் சன்யாசம் ஏற்றார்.
புதுவை ஸ்ரீ அன்னை இருமுறை மணம் புரிந்து விவாகரத்து ஆனவரே!
மகான் அரவிந்தருக்கும் திருமணம் நிகழ்ந்து பிறகு துறவியானார்.
மகான் ராமகிருஷ்ணரைப் புரிந்து கொண்டு இல்லறத் துறவியாக வாழ்ந்தாள் அன்னை சாரதா தேவி..
விவேகானந்தரோ இல்லறமின்றி நேரடி துறவறம் பூண்டவர்..
ஆக துறவு என்பது அகம் சார்ந்ததே தவிர.. புறம் சார்ந்ததல்ல ..
ஒவ்வொருவர் முற்பிறவி கர்மக் கணக்கு படி சம்பவங்கள் உதிக்கின்றன.. ஆனால் சென்றடையும் இலக்கான ஞானம் ஒன்றுதான் !
மண முறிவு என்றால் வேதனைப்படுவதோ வாழ்க்கை முடிந்து விட்டது என நினைப்பது சராசரி அறியாமையே தவிர ஆன்மீக ஞானமல்ல...
உலகில் எந்த ஒரு தாயும் தன் மகவை ஆன்மீகவாதியாக வேண்டும் என விரும்புவதே இல்லை..
ஆதி சங்கரரே படாதபாடுபட்டு .. ஆற்றில் முதலை போன்ற மாய நாடகம் நடத்தித் தான் ஆன்மீக வாழ்வை வாழ தனது தாயிடமிருந்து அனுமதி பெற்றார்.
தன் பிள்ளைகள் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என நினைக்கும் பரிபக்குவமான ஒரே பிரபஞ்ச அன்னை சத்ய சாயி மட்டுமே!
அவர் குடும்பத்தை துறந்துவிடு எனச் சொல்லவே இல்லை! பந்த பாசத்தை துறந்துவிடு என்கிறார்.
அன்பு வை ஆனால் பற்று வைக்காதே என்கிறார்.
ஸ்ரீராமர் கானகத்திற்கு செல்கையில் அவர் மேல் அன்பு வைத்திருந்த கோசலை உயிரோடிருந்தாள்.. பற்று வைத்த தசரதன் இதய வலி கண்டு இறந்து போனார்.
பாசம் அழிக்கும். பாசக் கயிறென அதற்காகத்தான் அந்தப் பெயரே!
உங்கள் வழியாகத் தான் பிள்ளைகள் பிறக்கிறார்களே தவிர அவர்கள் என்றும் உங்கள் உரிமையல்ல என்ற புரிந்துணர்வே விவேகத்தின் முதல் நிலை..
இந்த சத்திய புரிந்துணர்வோடும் வைராக்கியத்தோடும் இல்லறத்தால் இருவராலும் வாழ முடிந்தால் திருமணத்தில் ஆன்மீகத்திற்கான எந்த தடையுமே இல்லை..
வாழ முடியவில்லை என்றால் ஆன்மீகத்திற்கான எந்த விதை நாட்டலும் இல்லை எனப் பொருள்.
எல்லாமே நானே செய்கிறேன் .. நீங்கள் வெறும் கருவிகளே என இறைவன் சத்ய சாயி உறுதியாகச் சொல்கையில் திருமணம் நிகழ்வதும் ... நிகழாததும். குழந்தைப் பிறப்பதும் ..பிறக்காததும்.. மண முறிவு ஏற்படுவதும் எப்படி நம் செயலாகும்..??? அதுவும் இறைவன் சத்ய சாயி சங்கல்பமே!
அதுவும் பெரியதொரு வாய்ப்பாகவே ஆன்மீகத்தின் கதவுகளை அகலத் திறந்துவிடும்!
நாம் இந்தப் பூவுலகிலும் .. நம் வாழ்க்கையிலும் எதையும் தன்னிச்சையாய்ச் செய்வதில்லை எல்லாமே சுவாமி சங்கல்பப் படியே சரியாகவே நிகழ்கிறது. இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை...
திருமணமே அரை மனிதனை முழு மனிதனாக்குகிறது என்ற பொய்களை எல்லாம் நம்ப வேண்டாம்.
ஆன்மீகமே மனிதனை முதலில் மனிதனாக்குகிறது!
சிற்றின்பம் மட்டுமே நோக்கமாக இருப்பின் திருமணம் ஒருநாள் நிச்சயம் முறியும்!
இருவரும் இணைந்து இறைவனுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பாகக் கருதி அமையும் இல்லற வாழ்க்கை நிச்சயம் வெற்றி பெறும்.
அதற்கு பூர்வ கர்மாவும்.. இறைவன் சத்ய சாயி கருணையும் வேண்டும்!
எனக்கு அது இல்லையே என்ற ஏக்கம் உலகப் பொருட்கள் எதன் மீதிருந்தாலும் அது அறியாமையே!
சுவாமி நீ இருக்கிறாய்.. நீயே இருக்கிறாய்.. வேறென்ன வேண்டும்! என்ற நிறைவுணர்வே ஞானத்திற்கான வாசல்!
சிலர் பந்தபாசத்தில் சிக்கி மேலும் அதிலேயே உழன்று அதில் அந்த உறவுகளால் அவமானப்பட்டும் மேலும் அதிலேயே உழன்று கொண்டிருப்பர்.. துளி விவேகமும்.. வைராக்கியமும்.. பற்றறு நிலையும் வருவதே இல்லை..
தன் கையைக் கட்டியிருப்பது இரும்புச் சங்கிலிகள் அல்ல வெறும் சிலந்தி வலைகளே என அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை!
அதில் அவர்களின் பூர்வ கர்மா மிகப் பெரிய மாயையை ஏற்படுத்திவிடுகிறது..
ஆக திருமணத்திற்கும் .. திருமணம் இல்லாமல் இருப்பதற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
நான் செய்கிறேன் என்ற எண்ணங்களைத் துறப்பதே சன்யாசம். வெறும் வெளி வேஷங்கள் அல்ல...
பிறவாமை வேண்டும் ... இறைவன் சத்ய சாயியின் பாதார விந்தங்களே வேண்டும் என இதயம் உண்மையில் உருகினால் நிச்சயம் மலத்திற்கும் கீழான பந்த பாசங்களை நிச்சயம் விட்டு அவரிடம் சரணாகதி அடையும்.
இல்லை எனக்கு பூமி வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது.. நோய்கள் என்னை தாலாட்டுகின்றன என அறியாமையில் நினைக்கும் ஆன்மா இறந்தும் பிறந்தும் ஜென்ம சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்.
புனரபி மரணம்
புனரபி ஜனனம்
பாடலுக்கு
மனித ஆன்மாவே பொருளாகிவிடுகிறது!
மனிதர்களோடு நிகழும் திருமணங்கள் விவாகரத்தில் முடியலாம்..
ஆனால் இறைவனோடு நிகழும் திருமணத்தில் விவகாரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை!
உலக திருமணத்தில் ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு மனைவி.. ஒவ்வொரு கணவன் அமைவர்.
ஆனால் இறைவனோடு இரண்டற கலத்தல் எனும் தியானத் திருமணத்தில் இறைவன் சத்ய சாயியே பரம புருஷன் .. தூய பக்த ஆன்மாக்கள் என்றும் அவரின் மனைவிகளே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக