தலைப்பு

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பக்தர்களின் அனுபவத்தைப் படிப்பதால் ஏதேனும் நன்மை இருக்கிறதா? அது ஒரு விளம்பரம் தேடும் முயற்சி தானே?


கேள்வி: நீங்கள் ஏன் பக்தர்களின் அனுபவங்களை சத்ய சாயி யுகத்தில் பதிவிடுகிறீர்கள்? அனுபவத்தைப் படிப்பதால் ஏதேனும் நன்மை இருக்கிறதா? அது ஒரு விளம்பரம் தேடும் முயற்சி தானே...

பதில்: நிச்சயமாக இல்லை. உங்களின் வெளிப்படையான நறுக் கேள்விக்கு நன்றி முதலில்...

நீங்கள் ஒன்றை நன்றாக யோசித்தால் ஒன்றை உணர முடியும்.
ஆம் ஸ்ரீ மத் பாகவதமே பக்தர்களின் அனுபவத் தொகுப்பு தான்.. வேறொன்றுமில்லை..
மஹீபதி எழுதிய பக்த லீலாம்ருதமும் பக்தர்களின் அனுபவத் தொகுப்பே!

பக்தர்கள் இல்லாவிடில் இறைவன் யாரிடம் தன் லீலா விநோதத்தைக் காட்டுவான்.
ஒன்றுமேயில்லை மீரா என்ற சாயிபக்தையான எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் திரைப்படத்தை 36 தடவைப் பார்த்து ஒருவர் சுவாமி சிவானந்தரின் சீடராகவே (சுவாமி சதா சிவானந்தா) மாறிப் போனார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மீரா என்ற அந்த திரைப்படமே ஒரு பக்தையின் அனுபவம் தான்!

இறைவன் சத்ய சாயி பல பக்தர்களுக்கு பல அனுபவங்களை இன்றளவும் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்.
அதில் பேராச்சர்யம் தரும் நிகழ்வுகள் நிரம்பவே இருக்கின்றன..
நமது பாரத பூமியின் பக்தி இயக்கமே இப்படி ஒவ்வொரு பக்தரின் அனுபவங்கள் வழியாகத்தான் செழித்து வளர்ந்தது..


இறைவன் சத்ய சாயியின் ஆரம்ப காலத்து பக்தர்களின் அனுபவங்களால் தான் நிறைய வாய் வழிச் செய்தியாகப் பரவி பலர்  சுவாமி மேல் பக்தி அனுபவிக்கும் பாக்கியம் பெற்றனர்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே நமது தேசத்துப் பண்பாடு..
பல உயர்ந்த சத்ய சாயி பக்தர்களை உந்துதலாக வைத்தே பலர் பக்தர்களாக மாறி இருக்கின்றனர்.

பக்தியையும்.. பக்தர்களையும் சாதாரணமாக எடை போடுவது தவறு!
இறைவன் சத்ய சாயி செல்வத்துக்கோ.. பதவிக்கோ.. உங்களின் so called சொத்து சுகத்திற்கோ.. அறிவுக்கோ எதற்குமே அடி பணிய மாட்டார்.
ஆனால் தூய்மையான பக்தி எனில் அதற்கு மட்டுமே கட்டுப்படுவார். தொடர்புக்கு வருவார்.

மனிதன் பாசக் கயிறால் கட்டுப்படுவதைப் போல்..
இறைவன் பக்திக் கயிறால் கட்டுப்படுகிறான்.

ஒருவனிடம் தூய்மையான பக்தி அதாவது பக்தி வைத்திருப்பதற்காகவே பக்தி வைத்திருப்பது

The Reason For Devotion is Just Devotion itself

அதாவது எந்தவிதமான எதிர்பார்ப்புமே இல்லாமல் இறைவன் சத்யசாயிடம் வைத்திருக்கும் பக்தி..
அந்த பக்தி ஒருவனிடம் இருக்குமானால் ..
அவனின்/ அவளின் திருப்பாதங்களைக் கழுவிக் குடித்தாலே நமக்கு அந்த பக்தி வந்து விடும்.

சொத்து வரும்.. சுகம் வரும்..
கல்வி வரும்... உறவு வரும்.. ஆனால் பக்தி வருவது அவ்வளவு சுலபம் அல்ல..
அது கடைச் சரக்கும் அல்ல..
அவ்வளவு மலிவானதும் அல்ல..


பக்தி என்பது காட்டிக் கொள்வதல்ல..
வெளி வேஷங்கள் அல்ல...
நான் பக்தன் தெரியுமா ? என்ற கர்வமும் அல்ல...
எவ்வளவு வருட பக்தன் தெரியுமா? என்ற அலட்டலும் அல்ல..
இப்போது என்ன பதவி தெரியுமா ? என்ற இறுமாப்பும் அல்ல

ஆஞ்சநேய பக்தி முன்...
பிரகலாத பக்தி முன்...
துக்காராம் பக்தி முன் ...
நாம் ஒரு கால் தூசி கூட சமானம் இல்லை...

பக்தர்களுக்கு கோவில் கட்டி  வழிபடுகிற சனாதன தர்மம் இது ...

பக்தியே முக்கியம்
பக்தியே ஆரோக்கியம்
பக்தியே பிரதானம்
பக்தியே பரமபதம்
பக்தியே முக்தி

அந்தக் கரைதல்.. அந்த நிறைதல்.. அந்தக் கனிதல்.. அந்தப் பணிதல் ... அந்த உள் உறைதல் அதுவே அதுவே பக்தி

அப்படியும் இருக்கிறார்களா என நீங்கள் கேட்கலாம்..
நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்களின் பக்தி அனுபவத்தை வெளிக் கொண்டு எழுதிப் பகிர்வது என்பது குடத்திற்குள் இருக்கும் ஏற்றிய தீபத்தை குன்றின் மேல் இட்டது போல் அனைவருக்கும் அது நன்மையே அளிக்கும்.உண்மையான பக்தி அடுத்தவரை தொற்றும்.. அடுத்தவரைப் பற்றும்.. .. அது தீ..
பக்தீ...
தீயிடம் சேர்ந்தவை எல்லாம் தீயாகும்...
அது நிச்சயம் அடுத்தவர்க்கு மின்னல் கீற்றாய் பக்தியைக் கிளறி விடும்.

My life is my  message என்று கூறிய கடவுள் சத்ய சாயி
Your life is my message என்றார்
ஏன்?

உன் வாழ்க்கையே என் செய்தி என அவர் சொன்னதிற்கான காரணமே
பக்தி விதை முளைவிட்ட மரம் நிச்சயம் மேன்மையான கனிகளையே தரும் அதில் ருசித்துக் கொண்டிருக்கும் சத்ய சாயி ரசம்.

இன்னொரு கேள்வி கேட்டீர்கள்...
விளம்பரம் தேடும் முயற்சி தானே என்று..

சோப்பு தேய்த்து குளியுங்கள் என்று சோப்பை உங்கள் கண் முன் வைத்தால் நீங்கள் ஏன் சோப்பை வெளியே வைத்து விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்பதைப் போல் இருக்கிறது...

உங்கள் உடலின் நன்மைக்காகவே
பாத் சோப்
உங்கள் உள்ளத்தின் நன்மைக்காகவே
பக்தி சோப்

நான் எல்லாம் குளிக்கவே மாட்டேன் எனக்கெதற்கு சோப் எனக் கேட்டால்..
உங்களின் மன துர்நாற்றம் ஒரு நாள் உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத போது..
இறைவன் சத்ய சாயி காலடியில் விழுந்து அவரின் அருட் கடலில் அகமும் புறமும் சுத்தப்படுத்துவீர்கள்..
அப்போது அடியேன் சொன்ன பக்தர்களே உங்களுக்கு சோப்'பாக பயன்படுவார்கள்..!

ஆரோக்கியமான வாழ்க்கையை
காப்பது பக்தி
பக்தி எவ்விடமோ
ஆரோக்கியம் அவ்விடமே

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக