தலைப்பு

திங்கள், 21 செப்டம்பர், 2020

முதலாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)


சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

1. தினசரி ஜபம் / தியானம்: 

பிரம்மாண்ட அண்ட ஜீவராசிகளில் மனிதன் ஓர் முக்கியமான இனம்.
காரணம் அவனால் தேவனாகவும் உயர முடியும்! மிருகமாகவும் இறங்க முடியும்.

இறைவன் சத்ய சாயி அவதரித்ததே மனிதனை தேவனாய் உயர்த்தவே...

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஜனத் தொகை கூட வேண்டுமே தவிர
பூமியின் ஜனத்தொகை அல்ல...

இரக்கம் ஒன்றினால் மட்டுமே பூமி நோக்கி இறக்கம் காண்கிறான் இறைவன்.
அந்த முழுமுதற் பொருளும்... பேரண்ட பேரியக்கப் பரம் பொருளான இறைவன் சத்ய சாயி நம் வாழ்க்கை மேன்மை அடைய ... வாழ்வியல் புனிதமாக..
ஆன்மா ஆன்மீகமாக இறைவன் சத்ய சாயி எனும் அந்தப் பரம் பொருள் வகுத்த மிக மகிமையான.. மிக எளிமையான .. மிக புனிதமான ... மிக மிக அத்தியாவசியமான நவ வித ஆன்மீகக் கோட்பாடுகளில் முதலாவது தினசரி ஜபம் / தியானம். 


ஜபம்:

அதிகாலை துயில் எழுந்து குளிர் நீரில் குளித்து இறைவன் சத்ய சாயி நாமத்தை ஜபிப்பது என்பது ஆன்மா விரிவடையச் செய்வதற்கான ஒரு அற்புதமான வழி.
ஏதேதோ சதா பேசிக் கொண்டிருக்கும்... இல்லை இல்லை உளறிக் கொண்டிருக்கும் மனதை நிறுத்த ஜபம் ஒன்றே வழி.


மனித சரீரம் மந்திர சரீரமாக உருவாக ஜபம் உதவி செய்கிறது.
ஜபம் செய்கிற போது எழுகின்ற தெய்வீக அதிர்வலைகள் உடல் / மனம் சார்ந்த எல்லா நோய்களையும் விரட்டுகிறது.

மந்திரங்களின் மகாராணி காயத்ரி.
இது வேத சாரம் அடங்கியது காயத்ரி மந்திரம்.
கௌசிகர்(விஸ்வாமித்திரர்) அதை தியானத்தில் கேட்ட போது அடைந்த சிலிர்ப்பை விட
இறைவன் சத்ய சாயி அதை உச்சரித்த போது அந்த காயத்ரி மந்திரமே சிலிர்த்து மேலும் புனிதம் அடைந்தது.

இந்த காயத்ரி மந்திரம் ஜாதி/ மத/ மொழி/ தேச பேதங்கள் கடந்து அனைவரும் ஜபிக்க வேண்டும்.

இறைவன் சத்ய சாயி உச்சரித்த விதத்தை (யூ டியூபில்) கேட்டு உச்சரிப்போம்..
உச்சரித்து உச்சரித்தே தீய வினைகளை எச்சரிப்போம்.

காற்று பொது ! அது போல் காயத்ரியும் பொது!

மூன்று விதமான ஜப முறைகள் உண்டு
1. உச்சாடனம் (சத்தம் எழுப்பி உச்சரிப்பது)
2. மனனம் (சப்தம் எழுப்பாமல் உதடு மட்டும் அசைவது)
3. அஜபம்

அஜபமே மிக மிக சக்தி வாய்ந்தது ...
மிக மிக உத்தமமானது.
உதடும் அசையாமல்.. சப்தமும் எழாமல்...
ஏன் நாக்கு கூட அசையாமல் ...
மனம் மட்டும் உச்சரிப்பது..

மனித சரீரம் மந்திர சரீரமாவதற்கு அஜபமே வழிவகுக்கிறது.

அஜபம் புரியப் புரிய பௌதீக சரீரத்தில் உண்டாகும் விழிப்புணர்வு மனோ சரீரத்தில் மேல் எழுப்பும்..
மனோ சரீரமே சூட்சும சரீரம்..

சூட்சும சரீரத்தில் ஆன்மா ஏறி உன்னத நிலைக்கான அஸ்திவாரம் எழுப்பப்படும்.

ஆம்! ஆன்மா உடம்பிலிருந்து மனதிற்கு விரிவடைகிறது.

வாய் மட்டும் பசு அசைப்பதாய் அசைத்து... மனம் குரங்கு போல் எங்காவது தாவிக் கொண்டிருந்தால் ஓட்டை வாளியில் நீர் இறைக்கும் கதை தான் ஜபத்தில் நடக்கிறது.

ஜபம் என்பது மாமருந்து. அதை முறையாகச் செய்ய வேண்டும்.

காயத்ரி மந்திர ஜபம் புரியப் புரிய ஞானம் சம்பவிக்கும்.. ஆன்ம ஒளியை நேரடியாய் அனுபவிக்கலாம்.
காயத்ரி மாதா தரிசனம் தருவாள்.

நீங்கள் தினசரி ஜபித்தும் அப்படி இதுவரை ஏதும் நிகழவில்லை எனில் மந்திரம் பிழையல்ல.. மனமே பிழை..
ஓட்டை வாளியை முதலில் சரிசெய்ய வேண்டும்.

எந்த தெய்வத்தின் மந்திரம் முறையாக ஜபிக்கப்படுகிறதோ அந்த தெய்வம் தரிசனம் தந்தே தீரும்.

நீங்கள் அஜபம் பழகப் பழக நீண்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே அஜபமாய் புரிவது எளிதாகிவிடுகிறது.

ஜபம் உன்னதம் ...
ஜபம் சூட்சுமம் ..
ஜபத்தால் மட்டுமே ஆரோக்கியம் ...
முறையாக ஜபித்தால் நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள்.


தியானம்:

இறைவன் சத்ய சாயி தன் தியான வாஹினியில் பகிராததை எந்த ரிஷியாலும் புதிதாக பகிர முடியாது.

காரணம் தியான உறைதலும்.. தியான நிலையும்.. தியான நிறைவும் சாட்சாத் இறைவன் சத்ய சாயியே!

நான்கு மணிக்கு எழுந்து ஜில்லென்ற நீரால் குளித்து இறைவன் சத்ய சாயிக்கு
தீப தூபம் ஏற்றி கண்களை மூடிக் கொண்டால்.. நீங்கள் கண் திறக்கும் போது நாற்பத்தி ஐந்து நிமிடம் குறைந்தது ஆகியிருக்கும்.

பிரம்ம முகூர்த்தம் தியானத்தின் பலபீடம்.
அது எண்ணங்களுக்கான பலிபீடமும்.

தியானம் பழகப் பழக
உங்கள் குணம் மாறுவதை நீங்களே சாட்சியாக கவனிக்கலாம்.

உற்சாகமாக இருப்பீர்கள்.
எவரிடமும் குற்றமோ .. குறையோ காணமாட்டீர்கள்..
அகந்தை இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்.
சோகம் உங்கள் எதிரில் வரக் கூட நடுநடுங்கும்.
ஏக்கம் என்ற ஒன்றே இருக்காது.
வேண்டுதல் நின்றுவிடும்.
யாவும் சுவாமி சங்கல்பம் என்பதை நேரடியாய் அனுபவிப்பீர்கள்..

பூர்வ ஜென்மக் காட்சிகள் விரியும்.
அகம் பிரகாசமாகி அது முகத்தில் வந்து எட்டிப் பார்க்கும்.
கலை பிரவாகமாய் உள்ளிருந்து பவனி வரும்..
பக்தி இன்னும் திடமாகும் ...
நிறைவுணர்வு ஏற்படும்...
இறைவன் சத்ய சாயி சாட்சாத் பரிபூரண பரம்பொருள் என்பதை உணர்வீர்கள்.
சிலருக்கு தியான தரிசனம் தருவது போல் சுவாமி தரிசனம் தருவார்.
குடும்பத்தோடு அன்பாகவே இருப்பீர்கள் ஆனால் எதிர்பார்ப்பும் பந்த பாசமும் அறுந்து போகும்...
இன்று கூட மரணம் வந்தால் முகம் மலர்ந்து சாயி ராம் என வரவேற்கும் பரிபக்குவம் ஏற்பட்டுவிடும்.

இது தியானம் சம்பவித்தால் ஏற்படுகிற அக மாற்றங்கள்.. அதன் சாமுத்ரிகா லட்சணங்கள்...
வேறெதாலும் இது ஏற்படாது என்பதால் தான் இறைவன் சத்ய சாயி ஜப  தியானத்தை முதல் கோட்பாடாக வைத்தார்.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைகள் இரண்டாம் வகுப்பில் போய் திரு திருவென முழித்துப் பாடத்தைத் திறந்து வைத்து படிப்பதாய் ஏமாற்றும்.
அஸ்திவாரம் ஆழமாக இல்லாத கட்டிடம் சீட்டுக் கட்டு மாளிகையாய் சிறு காற்றடித்தாலே சிதறும்.
எனவே முதல் கோட்பாட்டில் முதலில் நாம் ஆழம் பதிய வேண்டும்!

இறைவன் சத்ய சாயி பக்தர்களிடம் திடமான பக்தியையே விரும்புகிறார்.
அந்த திடமான பிரகலாத பக்தியை தியானமே தரும்.

இல்லை எனில்
முதல் கோட்பாடாக "என்னிடம் பக்தி வை" என்று சொல்லாமல் சுவாமி "ஜபம் தியானம் செய்" என்கிறார்.
அதற்கு இதுவே வித்திடுகிறது என்பதால்...

சாவிகள் ஒன்பதை நம்மிடம் எப்போதோ கருணை கூர்ந்து வழங்கிவிட்டார் சுவாமி.
நாமே திறக்க வேண்டும்..
திறந்தே ஆக வேண்டும்...
வேறு வழியே இல்லை.

கோட்பாடுகளைப் பலமுறை படித்தல் அல்ல
பயிற்சி செய்து பழக்கத்திற்கு கொண்டு வருவதே பலன் அளிக்கும்..

அமுதம் என்று சொன்னாலோ.. அதை எழுதினாலோ அதன் சுவையை அறிய முடியுமா?

நாம் சத்ய சாயி பக்தர்கள் என்பதற்கு எது சான்று?
நவ வித கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் கடைபிடித்தல் மட்டுமே!

நவரத்தினம் ஒளிரும்

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக