செல்வங்களை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு சாயிபக்தை ஒருவர் பெங்களூரில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அவர் வணங்கும் பாபா சாய் கிருஷ்ணா அச்சமயம் பெங்களூரில் இல்லாமல் சென்னைக்கு சென்றது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது. அவரது கணவரும் அச்சமயம் சென்னைக்கு அலுவல் விஷயமாக சென்றிருந்தார். மனது முழுவதும் பகவானையே நினைத்தவாறு லக்ஷ்மி பூஜையில் அமர்ந்தார். திடீரென வாசலில் கார் ஹார்ன் ஒலிக்கும் சப்தம் கேட்டது. அது பகவானின் கார் ஹார்ன் ஒலி போல் இருந்தது.
அவர் எழுந்து வெளியே வந்து வீட்டு வாசல் அருகில் நின்றார். அவரது கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. அவரது கணவர் பின்தொடர பாபா உள்ளே நுழைந்தார். அன்பு தெய்வம் உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண்மணி லட்சுமி பூஜையை மறந்துவிட்டு சுவாமிக்கு சாப்பிட ஏதோ தயாரித்து எடுத்து வந்தார். பகவானும் மகிழ்ச்சியில் அதை எடுத்துக் கொண்டார். அப்பெண்மணி உள்ளே சென்று தண்ணீர் கொண்டுவர சென்றார் திரும்பி வந்து பார்த்தால் யாரையும் காணோம்.
பகவான் தன் கணவருடன் சேர்ந்து வேறு ஒரு பக்தர் வீட்டுக்கு சென்று இருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். வெளியே வந்து வாட்ச்மேனை அழைத்து பாபாவின் கார் எந்தப் பக்கம் போயிற்று என கேட்டார். அவரோ எந்த காரையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்மணியோ காவலாளி பொறுப்பே இல்லாமல் பதில் சொல்வதாக நினைத்து கோபப்பட்டார். உடனடியாக பெங்களூரிலுள்ள பகவானுக்கு நெருக்கமான பக்தர்களுக்கு போன் செய்து பாபா தன் வீட்டிலிருந்து யார் வீட்டுக்காவது வந்தாரா எனக் கேட்டார். அவர்களோ, வரவில்லை என்று கூறியதோடு நில்லாமல், மீண்டும் அவர் வீட்டிற்கு சுவாமி திரும்பி வருவார் என்று எண்ணி மாலைகளையும் பூக்களையும் பாபாவுக்கு எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர்களுக்கு பாபா லட்சுமி பூஜையை ஆசீர்வதிக்க வந்து விட்டு மறைந்து இருப்பார் என தோன்றியது. உடனே சென்னைக்கு போன் செய்தனர். அவர்களது சந்தேகம் தெளிந்து சுவாமி சென்னையில்தான் இருந்தார். அவர் எங்குமே செல்லவில்லை. தான் மிகவும் விரும்பியதால் சாயி லட்சுமி ஆகிய பகவான் ஒரு அற்புத சக்தியோடு தங்கள் வீட்டிற்கு வந்து காட்சி கொடுத்து இருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். ஆனால் அப்பெண்மணி இந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகே இருந்த பக்தர்கள் பயம் அடைந்து இதை போனில் பகவானிடம் கூறினார்கள்.
பகவான் போனில் ஒலி வாங்கி பகுதி வழியாக விபூதியை அனுப்ப, அதை அவளுக்கு நெற்றியில் இட்டு வாயிலும் சிறிது கொடுக்கச் சொன்னார். பக்தர்கள் பெருத்த ஆச்சரியம் அடைந்தனர். பகவான் கருணை எதைவேண்டுமானாலும் நடத்தக்கூடும் பகவானின் வாக்குப்படி விபூதியை நெற்றியில் இட்டு வாயிலும் போட அப்பெண்மணி எதுவுமே நடக்காத மாதிரி கண்விழித்து எழுந்து அமர்ந்தார். அனைவரும் பாபாவின் இந்த அற்புத நிகழ்வில் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆதாரம்: BABA SATHYA SAI 2, PAGE NO 100
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 சத்ய சாயியே பார்வதி லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியின் ஐக்கியமான சர்வ தேவதா ஸ்வரூபங்களின் சங்கம இறைவன்.. அமுத சுரபியையே தன் உள்ளங்கைகளில் வைத்திருக்கும் அண்ட பேரண்ட இறைவன் அவர். பரமாத்ம பக்தி என்பது அந்த சத்ய சாயி லக்ஷ்மி தரும் அரும் பொருட்களைக் கேளாமல் அந்த சத்ய சாயி லக்ஷ்மி எனும் பரம்பொருளையே கேட்கும். நாமும் அதே தூய பக்தியில் அவரை மட்டுமே அகத்தில் கேட்போமாக! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக