சுவாமியிடம் நாம் எதையும் வேண்டத் தேவையில்லை. அதற்கு ஒரே காரணம் நம் வேண்டுதல்கள் எண்ணமாகப் பிறக்கும் போதே அது சுவாமிக்கு தெரியும். ஆழமான பக்தியில் வெளிப்படும் இதயத்து வேண்டுதல்களை இமைப் பொழுதில் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை உணர்த்தும் கடலான அனுபவங்களில் ஓர் துளி இதோ...
நான் சுவாமியை ஒருமுறை கூட நேரில் தரிசித்ததில்லை. என் வாழ்க்கையில் அவரது
பரிபூரண அனுக்கிரகத்தை உணர்ந்து இருந்ததாலும், அவரது உபதேச மொழிகள் என்னை ஈர்த்ததாலும், அவர் மேல் மிகுந்த பக்தி கொண்டேன். சுவாமியை நாம் நம்பிக்கையோடு சரணடைந்தால், நடப்பவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,என்று பகவான் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். எனினும் சில சமயங்களில்,நமது குரங்கு மனம்,இதை மறந்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள ஏங்கும். அத்தகைய நேரத்தில், சுவாமி நம்மை சரணடையச் சொல்லி, மிகப் பக்குவமாக இடித்துரைப்பார்.
2019ம் வருடம் ஜூலை மாதம், பிரசாந்தி நிலையத்தில், சத்யசாய் இண்டர்நேஷனல்
லீடர்ஷிப் புரோகிராம்(SSILP) பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் நாளன்று, சுவாமியின் மகாசமாதியில் ஒரு ரோஜா மலரை அர்ப்பணிக்க எண்ணியிருந்தேன்; ஆனால் நீண்ட பயிற்சிகள் மற்றும் பிற வேலைப்பளு காரணமாக, அதைப்பற்றி மறந்தே போனேன். நிகழ்ச்சி நடக்க இருந்த மாலையில், சுவாமியின் மகாசமாதியின்
எதிரே அமர்ந்து, நான் மறந்து போனதை நொந்து கொண்டு, ''சுவாமி,இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, தாங்கள் எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்கு ஒரு ரோஜா மலரை காணிக்கையாக்க நினைத்திருந்தேன்; நாங்கள் உடனடியாக ஊர் திரும்ப இருப்பதால், என்னால் இந்த முறை ரோஜாவை சமர்ப்பிக்க இயலாதே!"
என்று மனதிற்குள் புலம்பியபடி இருந்தேன்.
நிகழ்ச்சி தொடங்க ஒருசில நிமிடங்களே இருந்த நிலையில், மிகவும் கனத்த இதயத்துடன் கண்களைத் திறந்தேன்.அங்கு ஒரு இளம்பெண், "சகோதரி, தயவுசெய்து என்ன, ஏது என்று கேட்காமல், நாம் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் இந்த ரோஜாவை சுவாமிக்கு சமர்ப்பியுங்கள்", என்று ஒரு ரோஜாவை நீட்டினார். என்னுடைய மனமுருகிய வேண்டுதல் சில நொடிகளில் நிறைவேறியதில், வாயடைத்துப் போனேன்!! எங்கள் குழுவினருடன் இது போன்று எதுவும் முன்னரே விவாதித்திருக்கவில்லை, ஆதலால், இது அனைத்தும் அறிந்த அந்த சுவாமியின் கருணையே அன்றி வேறென்ன!!
சுவாமி,நாம் அவரிடம் முழுவதுமாகச் சரணடையும் போது, நமக்கு வேண்டிய அனைத்தும் நடந்தேறும், என்று அன்புடன் உறுதி அளிக்கிறார்!!
-சாய், கனடா
ஆதாரம்: SAI YOUNG ADULTS
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.
🌻 இறைவன் சத்ய சாயி யாரையும்/ எதையும் தன் கருவியாகப் பயன்படுத்தி தன் பக்தர்களின் நியாயமான / பயனுள்ள / பேராசை இல்லாத வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. காரணம் கடவுள் சத்ய சாயி மட்டுமே சர்வ நிரந்தரம். யாவற்றுக்கும் சத்திய சாட்சியம்! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக