தலைப்பு

திங்கள், 28 செப்டம்பர், 2020

வேறு உருவத்தில் வந்து தரிசனத்துக்காக பக்தரை அழைத்துப் போன பாபா!


ஒவ்வொரு பக்தர் வாழ்விலும் ஏதோ வகையில் ஒரு பக்தரின் சுவாமி பக்தி ஈர்த்திருக்கும்‌.. அவர் சொல்கின்ற அனுபவங்கள் ஆச்சர்யங்கள் அளித்திருக்கும். அது அவர் அனுபவமாக இருக்கலாம் அல்லது வாசித்த அனுபவமாகவும் இருக்கலாம். 

அடியேனுக்கு இரண்டு பேர் அப்படி பக்தி விளக்கை இன்னும் தூண்டி விட்டவர்கள்.

நாம் ஒவ்வொருவரும் பூர்வ ஜென்ம வாசனையாலேயே இறைவன் சத்ய சாயி பக்தர்களாவது‌. அந்த வாசனையின் வீர்யத்தால் மட்டுமே நமக்கு வரும் பக்தி என்பது சரணாகத பக்தியா இல்லை தவணை முறை பக்தியா என்பதை உணரலாம்.

எட்டுவயதில் ஒரு பெரியவர் அடியேன் இதயத்தில் எரிந்து கொண்டிருந்த சுவாமி பக்தி விளக்கை பெரிதாக்கியவர் அவர் பெயர் போஸ்ட் மாஸ்டர் நரசிம்மன் (நெல்லை)

இன்னொருவர் என் தாய்வழி உறவினர் பெரியவர் ஹரிஹரன். 

ஒருவர் இப்போது இல்லை என்பதால் இன்னொருவரை தொடர்பு கொண்டேன்.

நரசிம்மன் அவர்களின் இல்லத்தில் 1992 ல் சுவாமி பஜன் நடக்கும் . கலந்து கொள்வேன். ஓரிரு படங்களில் விபூதி பொழிந்திருக்கும் அது வாசலில் போவோர் வருவோரை வா வா என வாசனைத் தோரணங்களாலும் .. தெய்வீக அதிர்வலைகளாலும் இழுக்கும்.

அப்போது அவர் வீட்டில் சுவாமி கண்களை மூடி கைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து தியானிப்பதான ஒரு புகைப்படம் பார்த்தேன்.

அப்போது 8 வயது அடியேனுக்கு... எல்லாரும் உன்னையே தியானிக்க நீ யாரை சுவாமி தியானிக்கிறாய்" என்ற கேள்வி எழும். அவரிடம் கேட்க பயம். சமர்த்தாக அமர்ந்திருப்பேன். பிறவி சாது அடியேன்.

அப்போதிருக்கும் பயம் இப்போது இல்லை எனினும் மனம் அதீத பதட்டம் காணாத அளவிற்கு எந்த நிகழ்விலும் ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்தேன்.

அந்த மாதிரியான படத்தை புட்டபர்த்தி முழுதும் தேடினேன் .. பல ஆண்டுகள் கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் வட விருக்ஷத்தில் அந்த சுவாமி படம் பார்த்து தொலைந்து போன பார்வை கிடைத்ததாக பூரித்துப் போனேன்.

ஏன் சுவாமி கண்களை மூடி தியானிக்க வேண்டும் என்ற கேள்விக்கும் சமீப நாட்களில் பதில் கிடைத்தது..

துவாபர யுகத்தில் நம் சுவாமி கிருஷ்ணராக அவதரித்திருந்த போது..

ஒரு நாள் இரவு தர்மர் சுவாமியை தரிசிக்க வருகிறார்.. சுவாமியோ தியானத்தில் இருக்கிறார்.. சிறு வயதில் அடியேனுக்கு எழுந்த அதே கேள்வி அவருக்கும் எழுந்தது.

கண்களைத் திறந்த சுவாமியிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது...

"ஆம் நீங்கள் என்னை நோக்கி தியானம் செய்கிறீர்கள் .. நானோ உண்மையான பக்தரை நினைந்து கண்களை மூடுகிறேன்" என்கிறார்.

இப்போது நீங்கள் நினைந்த பக்தர் யார் எனும் தர்மரின் கேள்விக்கு..

அம்புப் படுக்கையில் ரத்தம் உறைய.. ரணம் வலிக்க.. அந்த சூழ்நிலையிலும் எனையே நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மரை நோக்கித்தான் எனது தியானம் என்கிறார் சுவாமி!

அந்த பெரியவர் நரசிம்மனே முதன்முதலில் பெரிய சுவாமி படம் கொடுத்தார் . பிரேம் செய்ய ஏது காசு? யார் தருவார்? அட்டையில் ஒட்டி வழிபட்டேன்.

ஆகவே சுவாமியின் கண்ணாடி இல்லா பெரிய பிரேம் படம் அன்று அடியேனை ஆலிங்கனம் செய்தது.

இன்னொரு பெரியவர் உறவினர் ஹரிஹரன்..

கன்னியாகுமரியில் அடியேன் படித்துக் கொண்டிருந்த போது எனது தாயின் பெற்றோர் வீட்டில் வந்திறங்கினார்.

அடியேன் சத்ய சாயி பக்தன் என்று தெரிந்த காரணத்தினால் சுவாமி காலண்டர் வாங்கி வந்தார் (1997 வாக்கில்)

ஒரு படம் கூட கிடைக்காத அந்த பால்ய வயதில்.. காலண்டர் பிரிக்கப் பிரிக்க சுவாமி படம்..

அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முதல் வேலையாக அணியில் மாட்டி பூ சாற்றினேன். அவர் எனக்கு ஒரு விநாயகர் மந்திரமும்.. சுவாமி விபூதி மந்திரமும் சொல்லிக் கொடுத்தார்.

பரமம் பவித்ரம் அல்ல..

இன்னொரு வித்தியாசமான .. தற்காலத்தில் பெரும்பாலும் யாரும் அறிந்திராத மந்திரம்.

அதை இன்றளவும் விடாமல் ஜபித்து வருகிறேன்

அக்ஷய அபூர்வ ஆனந்த பிரபாவம்

தீக்ஷாத் நேத்ர அதிசய சுபாவம்

சாக்ஷாத்கார ஸ்ரீ ஸ்படிக மணி ரூபம்

ஸ்ரீ சத்ய சாயி விபூதிம்

பரமம் பவித்ரம் சொல்லிய பிறகு மனதிற்குள் இதையும் சொல்வேன் !!

மேலும் சுவாமியின் ஆதிகாலத்து மூன்று லீலைகள் சொன்னார்...

ஒன்று ஒரு பக்தரின் இல்லத்தில் பஜன் நடந்து கொண்டிருக்கிறது .. சுவாமி தன் மேல் அங்கியை (தொடைப் பகுதியில்) கசக்குகிறார்.. பிறகே விபரம் தெரிந்தது.. வீட்டினுள் பிரசாதம் எடுத்து வருவதற்காக சென்ற பக்தையின் புடவையில் நெருப்புப் பற்றி இருக்கிறது.. சுவாமி தன் மேல் அங்கியைக் கசக்க .. அதை அவர்களுக்கே தெரியாமல் அணைந்தும் போயிருக்கிறது.

பிறகே தீக்கறை கண்டு சுவாமியின் கருணை புரிந்திருக்கிறது.

பக்தர்கள் உணர்கிற அனுபவம் ஒரு சில மட்டுமே.. பக்தர்களே உணராமல் சுவாமி தினந்தோறும் ஆற்றிவரும் அற்புதங்கள் ஏராளம்.. ஏராளம்...

இரண்டாவது.. ஒரு பக்தர் பாதுகாப்பு அரணில்லா கிணற்றில் தவறி விழுகிறார்.. 

உள்ளே மூழ்குகிறார்.. தன்னையும் அறியாமல் சாயிராம் எனக் கத்துகிறார்..

சரியாக மூக்கு நுனி வரை மூழ்க வந்த தண்ணீர் நின்றுவிடுகிறது.

நடுக்கிணற்றில் ஏதோ பாறை மேல் ஏறி இருப்பதான ஓர் உணர்வு. பிறகு அவர் காப்பாற்றப்படுகிறார்.

புட்டபர்த்தி செல்கிறார்..

சுவாமி அவரிடம் தரிசனத்தில் "இப்படியா கவனமே இல்லாம கிணத்துல போயி விழுவ.. நான் தான் உன்ன என் தலையில தாங்கி காப்பாத்தினேன்"

பிறகே அவருக்கு நடுக்கிணற்றில் தோன்றியது பாறை அல்ல .. சுவாமியின் சிரசு என உணர்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார்..

பெரியவர் ஹரிஹரன் சொல்லச் சொல்ல அந்த அற்புதங்கள் எல்லாம் அடியேனுக்கே நிகழ்ந்தது போல் உடம்பெல்லாம் புல்லரித்தது.. 

பசுமரத்தாணி என்பார்களே.. அது தான் இது!

மூன்றாவது அனுபவம்... சுவாமி நாற்காலி வைத்து ஒரு பக்தரின் வீட்டில் பஜனை நடந்து கொண்டிருந்தது மின்விசிறி காற்றால் சுவாமி நாற்காலியில் வைத்த கைக்குட்டை விழுந்து கொண்டே இருந்தது. ஆகவே ஒரு safety pin வைத்து சுவாமி நாற்காலி கைப்பிடியோடு அந்த வெண்ணிற கைக்குட்டையை மாட்டி வைக்கிறார்கள். பிறகு அது விழவில்லை.

ஒருமுறை அந்தக் குடும்பத்தினர் புட்டபர்த்தி வருகிறார்கள்.. சுவாமி தரிசனத்தில் இன்டர்வியூக்கு அழைக்கிறார்.

அவர்கள் நுழைந்த மாத்திரத்திலேயே "இதோ பார்.. இப்படியா என்ன குத்தி காயமாக்குவ" என தன் கைகளில் safety pin குத்திய அந்த ரத்தத் தடத்தைக் காட்டி இருக்கிறார்..

"பஜன் ஆரம்பிச்ச உடனேயே நான் வந்து உட்காருவேன்னு உனக்கு தெரியாது??"

எனக் கேட்டிருக்கிறார்..

அவர்கள் பரவசப்பட்டு கண் கலங்குவதை தவிர வேறு என்ன பேசியிருக்க முடியும்..!!

இந்த மூன்று அனுபவத்தையும் பகிர்ந்தார். அடியேன் அப்போது இந்த உலகத்திலேயே இல்லை..

அவர் இப்போது எண்பதை நெருங்குகிறார்.

அவர் அன்று சொன்னதை அவரே ஞாபகம் வைத்திருக்கிறாரோ... இல்லையோ... என்னால் அந்த அற்புதங்களை மறக்கவே முடியாது.

சுவாமியின் அற்புதங்களை சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் அளவிற்கு அடியேன் ஒரு அதிகப் பிரசங்கியாக அன்றிலிருந்தே இருந்ததில்லை..

அந்தர்யாமி.. சர்வாந்தர்யாமி என்ற வார்த்தைகள் அன்று தெரியாமல் இருந்ததே தவிர சுவாமி எதையும் செய்ய வல்லவர் என்பதில் அடியேனுக்கு அன்றிலிருந்தே சந்தேகமே எழுந்ததில்லை..

பெரியவர் ஹரிஹரன் தங்கிய அன்றிரவு எங்கள் அக்ரஹாரத்தில் திருடர்கள் புகுந்தனர். ஓட்டு வீடுகள் தான். 

ஒவ்வொரு வீட்டின் ஓடுகள் மீது ஓடிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டில் திருடன் திருடன் எனக் கத்துகிறார்கள்.

அனைவரும் எழுந்து கொண்டோம்..

என் தாத்தாவும் பாட்டியும் ஓ.. ஓ.. என்றும் டேய்.. யாருடா நீங்க.. என்றனர்

பெரியவர் ஹரிஹரனோ "போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துருவோம்" எனக் கத்தினார்..

சத்தம் இன்னும் அதிகமானது...

திக் திக் நிமிடங்கள் அவை.

அடியேன் நேரடியாக அன்று வந்திருந்த சுவாமி காலண்டரின் முன் 

"சுவாமி .. எங்கள எல்லாரையும் காப்பாத்து.. இந்த கிராமத்துல யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது... உன்னால முடியாதது எதுவுமே இல்லை சுவாமி" என்று மழலை மனதோடு .. சுவாமியின் கண்களையேப் பார்த்துக் கொண்டு பேசினேன்... 

சுவாமி அந்தப் புகைப்படத்தில் கைகளில் பழுப்பு நிறத்தில் காயோ/ கனியோ வைத்திருப்பார்.

சுவாமியிடம் பேசி முடிப்பதற்குள் அதே நிறத்தில் அதே வடிவத்தில் அதே காய் ஒன்று கீழே வீட்டுக்குள் விழுந்தது..

எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

அந்த நொடி முதல் எந்த சப்தமும் கேட்கவில்லை..

அந்தப் பெரியவர் ஹரிஹரன் அவர்களிடம் இருபது வருடங்களுக்குப் பிறகு சத்ய சாயி யுகத்திற்காக தொலைபேசி நேர்காணல் செய்தேன் ...

அது 1972... ஹரிஹரன் ரூர்கலாவில் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார்.

பக்கத்து வீட்டில் சலபதிராமன் அவர்களின் சாயி பஜனில் கலந்து கொள்வாராம்...

ஒரியாக்காரர் ஒருவர் வீட்டிலும் பஜனை நடக்குமாம்.. கலந்து கொள்வாராம்.

அதே ஆண்டு சுவாமி தரிசனத்துக்காக குடும்பத்துடன் பெங்களூர் வருகிறார்.. 

ஒயிட் ஃபீல்ட் எங்கே என விசாரித்துக் கொண்டிருக்க இப்போது தான் ஒரு பேருந்து சென்றதாக.. அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகே அடுத்த பேருந்து என்றனர்.

ஒன்பது மணி பஜனைக்கு நேரமாகிவிடுமே.. தரிசனத்திற்கு கியூ பெரிதானால் அருகிலும் செல்ல முடியாதே என அவர் மனம் வருந்திய அடுத்த நொடி..

மார்வாடி ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு சகஜமாய் வந்து கண்ணாடி திறந்து ஹிந்தியில் வாருங்கள் .. ஏறிக் கொள்ளுங்கள் நானும் ஒயிட் ஃபீல்ட் தான் செல்கிறேன் என்கிறார்

இவர் பரவசப்பட்டும் அதிர்ச்சி அடைந்தும் குடும்பத்தோடு காரில் ஏறி அமர்கையில் பயணத்தில் சகஜமாய் பேசி வருகிறார் அவர்

 புட்டபர்த்தியில் தங்கி இருந்தேன்.. இப்போது ஒயிட் ஃபீல்ட் என மாறி மாறி வந்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.. பக்தர்கள் பெருகி விட்டார்கள்.. நாம் வேகமாக செல்வோம் என ஹிந்தியில் பேசி.. இவர்களை மிகச் சரியான நேரத்தில் டிராப் செய்ய ஹரிஹரன் குடும்பம் முன்னே செல்ல.. சுக்ரியாஜி என தலை திருப்பிச் சொல்வதற்குள் கார் மறைந்திருக்கிறது.

 அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் இருந்திருக்கிறது அவருக்கு..

முன் வரிசையிலேயே இடம் கிடைத்திருக்கிறது. இவரின் மகள் புஷ்கலாவும் பஜனில் உடன் சேர்ந்து பாடியிருக்கிறாள் எனச் சொல்லி முடித்தார்

நேத்தைக்கு தான் ஷிர்டி பாபா படம் கெடச்சுது வாசல்ல.. எடுத்து மாட்டினேன்.. இன்னிக்கு நீ சுவாமி அனுபவம் கேட்குற என்றார்..

அதே பாபா தானே இவர் என்று மனம் உணர்ந்து மகிழ்ந்தது.

இப்போது விசாகப்பட்டினத்தில் வசிக்கும் இவர் அருகில் இருக்கும் ஷிர்டி பாபா கோவில் செல்கிறார்.

முன்பு செக்டார் 6'ரில் சுவாமி பஜனை.. சேவா என எல்லாவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.

1997 ல் அடியேன் கேட்ட அதே உற்சாகக் குரல் இந்த 2020லும் அப்படியே இருக்கிறது.. எதுவும் மாறவே இல்லை.

அந்த உற்சாகக் குரல் தானே அடியேன் இதய பக்தி விளக்கில் நெய் வார்த்தது..

எப்படி மறக்க இயலும்?

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக