தலைப்பு

திங்கள், 7 செப்டம்பர், 2020

ரண சிகிச்சை வேண்டாம் என ஷிர்டி சாயி வடிவில் கூறிய சத்ய சாயி!


ஒரு பக்தைக்கு ஷிர்டி சாயி ரூபத்தில் காட்சி கொடுத்து குணமாக்கிய இறைவன் சத்ய சாயியின் அற்புத மகிமை பதிவு இதோ...

தோற்றங்களில் மயங்கிப் போயிருக்கும் புறக் கண்கள் .. புறம் நோக்கியே செல்லும் போது இன்னும் உலக வடிவங்களில் மட்டுமில்லை... இறை வடிவங்களிலும் சிக்கிக் கொள்கிறது.

இந்த வடிவில் வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என இறைவனுக்கே கோரிக்கை விடுக்கிறது..
இவை எல்லாம் பக்தி என்று வேறு நினைத்துக் கொள்கிறது..
எப்போது கண்கள் அகம் நோக்கிச் செல்கிறதோ... அப்போது ஞானத் தெளிவு பிறக்கிறது...

இறைவன் சத்ய சாயி காற்று போல் எந்த வடிவத்திலும் வருவார்.
இறைவனே ஷிர்டி சாயி... சத்ய சாயி .. பிரேம சாயி வடிவங்களாய் வந்திருப்பது இறை சங்கல்பமே!
எந்த வடிவத்தில் ஆட்கொள்ள வேண்டும் என முடிவு செய்வது இறைவனே தவிற பக்தன் அல்லன்.


பக்தி என்பது மெனு அட்டை இல்லை.. கட்டளை இட்டவுடன் இறைவன் உணவோடு பரிமாற‌..

இறைவன் சத்ய சாயி இதயம் கனிந்திருக்கிறதா எனப் பார்க்கிறார்.
அகம் பக்குவப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கிறார்.
உள்ளம் இறைவன் அளிக்கும் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதா என்றே உற்று நோக்குகிறார்.

யாவும் சாயி சங்கல்பம் என்று ஏற்றுக் கொள்ளும் அந்த மையப் புள்ளியிலே வந்து குவிந்து போகிறார்.
துளி சந்தேகப்பட்டாலும்
அது சூரியனை மறைக்கும் மேகம் போல் நமக்கு கதிரொளி கிடைக்காதது போல்..
இறை ஒளியும் சந்தேகத்தால் மூடி மறைக்கப்பட்டுவிடுகிறது.

எந்த வடிவிலும் வருவார் என்றோம்..

இதோ 1944ல் ஒரு பக்தை பெங்களூர் ரயில்வே ஸ்டேஷனில் மைசூர் செல்லும் வண்டிக்காக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் மைசூரில் உள்ள மிஷன் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்வதற்காக போகின்றவள். ரயிலடிவாரத்தால் ஓடி வரும் ரயிலுக்காக வாடிப் போய் தண்டவாளங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்..
இறைவன் சத்யசாயியோ தலையில் தலைப்பாகையுடன் உயரமான கிழ உருவம் தரித்து அந்தப் பெண்மணிக்கு காட்சி அளிக்கிறார்.


அந்தப் பெண்மணியோ ரண சிகிச்சைக்காக விரைந்து செல்ல வேண்டியவள்.
அவள் கவனம் எல்லாம் ரயில் சத்தத்துக்காகவே காத்திருந்தது..
ரண சிகிச்சை பெறும் போகிற பெண்மணிக்கு மன சிகிச்சை அளிக்க மகா மருத்துவர் .. அவள் அமர்ந்திருக்கும் அருகே அமர்ந்து..


அவரே பேச்சை ஆரம்பிக்கிறார் ..
"தொட்டதிற்கெல்லாம் உடலை அறுப்பது என்பது மருத்துவர்களுக்கு இப்போது ஒரே பைத்தியமாகி விட்டது" என்று
இன்றைய வர்த்தக மருத்துவ முறையைக் கிழித்து தொங்கவிடுகிறார்..

முகம் தெரியா மருத்துவரை நம்பும் மனிதர் உயிரோட்டமாய் இருக்கும் இறைவனை நம்ப மறுப்பதே இந்தக் கலியின் ஆகச்சிறந்த முட்டாள்தனம்.

அவளுடைய கவனம் திசை திரும்புகிறது..
நாம் அறுவை சிகிச்சைக்குத்தானே செல்கிறோம்.. எப்படி இவருக்கு தெரியும்? என யோசித்தவாறு கழுத்தைத் திருப்புகிறாள்.
இறைவன் சத்ய சாயிக்கு இவ்வுலகில் தெரியாததேதும் இல்லை.. அவர் அறியாததொன்றுமே இல்லை..

இப்போதுதான் ஷிர்டியிலிருந்து திரும்பி வருகிறேன் எனக் கூறி பிரசாதம் தருகிறார்.

என்ன ஒரு கருணை..
அவரவர்களை அவரவர் போக்கிலே சென்று அனுகிரகம் செய்வது என்பது இறைவனால் மட்டுமே சாத்தியம்.

"நீ அங்கே சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.. இதைச் சாப்பிடு சரியாகிவிடும்" எனக் கூறி ஷிர்டி பிரசாதமான பேரிச்சம்பழத்தைத் தருகிறார்.

பாலைவனத்தில் எத்தனை கடும் தவம் செய்தனவோ.. கொடுத்து வைத்த பேரிச்சம் பழங்கள் இறைவனின் விரல் ஸ்பரிசங்கள் பெற்றன..
சிறிதும் யோசிக்காமல் அந்தப் பெண்மணி இறைவன் முன்பாகவே பிரசாதம் சாப்பிடுகிறாள்.


தன்னுடைய ஆசிரமம் விதுராஸ்வதத்தின் அருகே இருப்பதாகவும் சொல்கிறார்.
இந்த இடம் புட்டபர்த்தி அருகே இருக்கின்ற ஒரு புண்ணிய ஸ்தலம்..
அங்கே இருக்கும் தன் சீடர்களை ஷிர்டி அழைத்துப் போகவிருக்கிறதாகவும் சொல்கிறார்..

அந்தப் பெண்மணிக்கு அந்தக் கணமே சரியாகிப் போகிறது...
ரயில் வந்து சத்தம் போட்டு நின்றது..
அந்த சத்தத்திலும் அவளுக்கு சாயி ராம் என்ற நாமமே கேட்டது..

அந்த வண்டியில் அவள் செல்லவில்லை..
அந்தப் பெண்மணிக்கு தான் ஆரோக்கியம் எனும் புஷ்பக விமானமே கிடைத்து விட்டதே..
திரும்பிப் பார்க்கிறாள் இறைவனை காணவில்லை..‌
நன்றியைக் கூட எதிர்பார்க்காத இறைவன் சத்ய சாயி என்பது அவர்களுக்கு மட்டுமல்ல பல பக்தர்களுக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...

(மூல ஆதாரம் : சத்தியம் சிவம் சுந்தரம் - பாகம் 1. ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரி)

திடீரென நேரடியாக நம் எதிரே இறைவன் சத்யசாயி தோன்றினால் அந்த அதிர்வலைகளைத் தாங்கவே முடியாது..
தியானத்தில் கூட அது தாங்க முடியாததாகவே இருக்கும்.. உடல் நடுங்கும்... மனம் ஒடுங்கும்..

ஆகவே தான் பல பக்தர்களுக்கு எளிமையான ரூபத்தில் வந்து காட்சி அளிக்கிறார். அப்போது தான் அவரின் அருகாமையை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியும்.


இந்த மனித வாழ்க்கையை அவரே கர்மாவின் கணக்குப்படி நிர்வகித்து நடத்துகிறார் என்பதை பல பிறவிகள் கடந்தே உணர்கிறோம்..
இதை உணர ஆரம்பிக்கையில் வாழ்க்கை என்பது தண்ணீரில் மிதந்து செல்லும் இலை மேல் நிற்கும் எறும்பாய் எளிதாய் அவரின் அக்கறையோடு அக்கரை சென்றுவிட முடிகிறது..

சத்தியம் எதிர்நீச்சல் செய் எனச் சொல்லவில்லை..
மிதந்து விடு.. நான் கரை ஏற்றுகிறேன் என்கிறார் இறைவன் சத்யசாயி‌.

அந்த மிதத்தலே சரணாகதி

சத்தியம் தொடரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக