தலைப்பு

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

சத்ய சாயி சமாதி ஆனதற்கு பிறகு வானத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சி தருவார் எனச் சொல்கிறார்களே..


கேள்வி: சத்ய சாயி சமாதி ஆனதற்கு பிறகு வானத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சி தருவார் எனச் சொல்கிறார்களே.. அதைக் குறித்தான புத்தகம் இருப்பதாகவும் கேள்விப் பட்டேன்.. அந்த அற்புதம் எப்போது நடக்கும்??

பதில்: நல்ல கேள்வி. ஆனால் அதில் சிறு திருத்தம்.

சுவாமி சமாதி ஆக வில்லை. மகான்களைப் போல் உடலின் ஆன்மா பரம்பொருளோடு கலந்து போவது..

அதாவது அந்த ஆதியோடு சமமாகிவிடுவது.. அதுவே சமாதி.. 

சிலர் உடம்பினுள்ளேயே ஜீவ ஆன்மாவோடு உயிர் ஒடுங்கிவிடுவர். ஒளி உடம்பாகிவிடுவர். 

இது ஜீவ சமாதி. மகான் ராகவேந்திர சுவாமிகள் போல்...

எந்த ஆதியோடு மகான்கள் சமமாகிவிடுகிறார்களோ அதாவது சங்கமமாகிவிடுகிறார்களோ அந்த ஆதியே இறைவன் சத்ய சாயி.

மழைத்துளி கடலோடு கலப்பது போல் அந்த மழை கடலிலிருந்தே சூரிய வெப்பத்தால் பிரிந்து மேகமாகிறது. பிறகு மழையாய்ப் பொழிகிறது.. நதியாகிறது.. கடைசியில் கடலே அதன் கதியாகிறது...

அந்தக் கடலே இறைவன் சத்ய சாயி.

ஒரு பறவைக்கு ஏதாவது அறிவுறுத்த வேண்டுமானால் இறைவன் சத்ய சாயி பறவையின் ரூபத்தில் வந்து.. அதற்கு புரிகிற பாஷையில் பேசி அருள் புரிவார்‌.

மனிதனுக்கு எனும் போது இறைவன் சத்ய சாயி மனித உடம்பெடுத்து வர வேண்டி இருக்கிறது ...

அவனுக்கு புரிகிற பாஷையில் பேசி .. அவனை மேலேற்றி .. கரையேற்ற வேண்டி இருக்கிறது ..

மனிதப் பிறவிகளைக் கடந்து மற்ற உயிர் வாழ் இனங்களுக்கு சூட்சும அறிவு அதிகம்.

சிறு பட்டாம்பூச்சியால் கூட சுனாமி வருவதற்கு முன் உணர முடிகிறது. மனிதனால் முடிவதில்லை...

ஆனால் மனித உடம்பே பெரும்பாலும் மோட்சத்திற்கு உகந்த வாகனமாக உணரப்பட்டதால் மனிதப் பிறவி அறிதென்றார் யோகினி அவ்வையார்.

மனித உடம்பு மோட்சத்திற்கான வாகனம்.. the ultimate possibility ...

ஆகவே மனித இனத்தைக் கடைத்தேற்ற 

சம்பவாமி யுகே யுகே எனும் தன் சத்திய வாக்கை மெய்ப்பித்துக் கொண்டே வருகிறார்.

இறைவனும் மனித உடம்பெடுத்து வருவதாலேயே .. மனிதனைப் போல் உடுத்தி.. நடந்து.. பேசி .. பழகுவதால் மாத்திரமே இறைவனை மனிதன் என நினைத்து விடுகிறது நம் அறியாமை.

இதில் இறைவன் சத்ய சாயிக்கு ஒரே ஓர் உடம்பு என நினைப்பதும் தவறு.

சுக்கிலமும் சுரோணிதமும் கலந்து போவதால் மட்டும் ஜீவன் தாயின் கருவில் ஜனிப்பதில்லை.

அந்தக் கருவில் அந்தந்த மனித ஆன்மா தான் செய்த கர்மாவுக்கு தகுந்தபடியே இறைவன் சத்ய சாயி மனிதனுக்கு இன்ன இன்ன தாய் தந்தை எனப் பிறவிகள் தருகிறார்.

பிறவிகள் தருபவர்க்கு .. ஏன் மகான்களுக்கு மோட்சமே (பகவான் ரமணர்... அப்துல்லா பாபா இத்யாதி) தருபவர்க்கு ஓர் உடம்பு மட்டுமே அவர் எடுத்து அவர் அதை சலவைக் கற்களில் உதிர்த்தார் என்பது அஞ்ஞானம் அல்லவா!

நாம் சமாதியை வணங்குவது என்பது அவர் தேர்ந்தெடுத்த அந்த தூய தேகம் உறைந்திருக்கிறது என்பதற்கான நினைவுக் குறியீடே..

மற்றபடி ஒரே ஓர் தேகமே அவருக்கு.. அதுவும் அதன் உள்ளே மட்டும் உறைந்திருக்கிறது உறைந்து மறைந்திருக்கிறது என்பது ஆன்ம நோக்கான புரிதல் அல்ல...

பரமஹம்ச யோகானந்தரின் சமஸ்கிருத ஆசிரியர் இரு உடம்பு கொண்டவர். ஒரே நேரத்தில் இரண்டு இடத்திலும் இருப்பார்.

(ஆதாரம்: ஒரு யோகியின் சுய சரிதம்)

அப்படி ஒரு யோகிக்கே இரண்டு உடம்பு சாத்தியமெனில்..

யோகீஷ்வரரான இறைவன் சத்ய சாயிக்கு!?

ஆழ்ந்து உணர முற்படுங்கள்.

வார்த்தைகளால் இறைவன் சத்ய சாயியை விளக்கமுடியாது!

அதோ நிலா எனச் சுட்டிக் காட்டுகின்ற விரலைப் போல் தான் இந்த வார்த்தைகளும்..

நீங்களே நிலாவை தரிசித்தாக வேண்டும்!

இன்றும் சில ஆத்மார்த்த பக்தர்களுக்கு காட்சி அளித்து .. தரிசனம் தந்து அவர்களோடு பூத உடலிலும் .. ஒளி உடலிலும் .. சூட்சும உடலிலும் தொடர்பில் வருகிறார்.

மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் வழியேயும் தொடர்பில் இணைவார் ...

மனிதனையே கண்டுபிடித்த மகா கடவுள் சத்ய சாயி மனிதன் கண்டுபிடித்தவற்றில் இணைவது அவர்க்கு சர்வ சாதாரணமே!

மனிதனைப் பொறுத்தவரை அவன் விடுகின்ற மூச்சு கூட அவன் கட்டுபாட்டில் இல்லாதபோது .. எது தான் அவன் கட்டுப்பாட்டில் இருக்கிறது?!

விஞ்ஞானத்திற்கு எப்படி? எவ்வாறு ? என்ற கேள்விகளுக்குத் தான் விளக்கம் இருக்கிறதே தவிற 

ஏன்? என்ற கேள்விகளுக்கு இதுவரை விளக்கமே இல்லை..

அதனால் எப்போதும் விளக்க முடியாது!

மனிதப் புலன்களே ஒரு எல்லை வரை தான் செயலாற்றக் கூடியது .. அதற்கு இயற்கை வரம்பை மீறி எதுவும் செய்யமுடியாது.

எதையும் செயலாற்ற முடியாது.

ஆக மனித அறிவு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்டது தான்...

பரவலாய் ... பெரும்பான்மையாய் .. இலவச பரவசமாய்... அனைவருக்கும் தரிசனம் தந்த நிலையிலிருந்து .. தொடர்பில் வந்த நிலையிலிருந்து ..

ஆத்மார்த்தமான பக்தரோடு தொடர்பில் வருகின்ற நிலையை இறைவன் சத்ய சாயி மேற்கொண்டு வருகிறார் இப்போது.

அப்படி எல்லாம் சாத்தியமா? என நீங்கள் யோசிக்கலாம்.

சாத்தியம்.

ஒரே ஒரு பக்தனுக்காக தான் இறைவன் சத்ய சாயி தூணிலிருந்து வெளிவந்தார்.

அந்தப் புண்ணிய பக்தன் பிரகலாதன்.

அந்த அவதாரப் பிரவேசமே அவன் ஒரே ஒருவனுக்காக நிகழ்ந்தது..

அதை அந்த அரண்மனையில் உள்ளோரைத் தாண்டி..

தேவாதி தேவர்களைக் கடந்து யார் கண்ணுற்றனர்.!?

சரி நாமும் தூணை உடைத்தால் இறைவன் சத்ய சாயி வெளிவருவாரா எனக் கேட்பது போல் உங்கள் கேள்வி.

முதலில் நாம் பிரகலாதனா..?

நமக்கு பிரகலாத பக்தியா?

தந்தையே விஷம் வைத்து தாயிடம் தந்து குடிக்க வைக்கும் போதும் 

சுவாமி நாமம் சொல்லி மலர்ந்த முகத்துடன் குடிக்கும் சரணாகத பக்தி நம்மிடம் இருக்கிறதா?

இங்கே கொசு கடித்தால் கூட வாழ்க்கையை நொந்து இறைவனைப் பழிப்பவர் எத்தனைப் பேர்??

இங்கே முக்கால்வாசி பேர் அனுபவித்ததாக சொல்லும் துன்பம்..

பிரகலாதன் அனுபவித்த துன்பத்தில்..

பக்த துகா ராம் அனுபவித்த துன்பத்தில் கால்தூசி கூட இல்லை...

நீ என்ன நரசிம்மனையும் சத்ய சாயி எனச் சொல்கிறாய் எனக் கேட்கலாம்.

கிருத யுகத்தில் இறைவன் நரசிம்மன்..

வரிசையாய் திரேதா .. துவாபர முடிய 

கலியில் ஷிர்டிசாயிக்கு பிறகு சத்ய சாயி ..

பெயர் மற்றும் ரூபத்தை மட்டுமே இறைவன் மாற்றிக் கொண்டிருக்கிறான் 

கருணையையோ.. பேராற்றலையோ .. பேரன்பையோ அல்ல...

துன்பம் என்று சொல்லப்படுகிறவையே இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

அகந்தையைக் கரைக்கிறது.

இல்லை எனில் மனிதனோ நான் தான் கடவுள் என இரண்ய கசிபு போல் கொக்கரிக்க ஆரம்பிப்பான்.

துன்பமோ வலியோ நன்மைக்கே என்பது மனிதப் பிறவிக்கு பக்குவம் வர வரப் புரிகிறது!

இப்போது அனைவருக்கும் காட்சி அளிக்கும் படி சத்ய சாயி தோன்றுவாரா என்ற கேள்விக்கான பதில் 

முன்பு பதிவு செய்த பிரகலாத பத்தியை இன்னொரு முறை வாசித்தால் விடை கிடைத்துவிடும்.

சுவாமி விஸ்வரூப தரிசனம் தந்திருக்கிறார்... 

வானத்தில் விமானம் கவிழுமோ என்ற நிலையில் வானத்திலேயே தோன்றி காப்பாற்றி இருக்கிறார்.

முன்பே வாசித்திருக்கிறோம்.

இதில் பதியப்பட்டவை ஒரு சிலவே. பதியாதவை ஏராளம்.

சுவாமிக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணம்.

பொதுவாக மனிதன் எனக்கு இறைவன் அருள்வாரா? என இறைவனை நோக்கியே கேட்கிறானே தவிற 

இறைவன் அருள்புரிவதற்கு முதலில் நீ தகுதி உடையவனா? என ஒருபோதும் தன்னைப் பார்த்து அவன் ஒருமுறை கூட கேட்பதே இல்லை.

சரணாகத பக்தியே அந்த தகுதி.

எண்ணமற்ற நிலையே அந்த தகுதி.

எல்லாம் சுவாமி சங்கல்பம் என உணர்வதே அந்த தகுதி.

பரஸ்பர அன்போடு உயிர்களை பேதமற்று நேசிப்பதே அந்த தகுதி.

ஆணவம் கிஞ்சித்தும் கலவாத அசைவுகளே அந்த தகுதி.

துரு பிடித்த பாத்திரத்தில் யார் பாலைக் காய்ச்சுவார்?

ஓட்டை வாளியில் யார் கிணற்றை இறைப்பார்?

தகுதி உடையவர்களுக்கு மட்டுமே இன்றளவும் சுவாமி தரிசனம் கிடைக்கிறது ...

ஆன்ம சாதனை புரிபவர்களுக்கு இறைவன் சத்ய சாயி இன்றும் பிரத்யட்சமாய் அருளிய வண்ணம் இருக்கிறார்.

இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

இனி பரபிரம்ம ஸ்ரீ பிரேம சாயி எனும் சத்ய சாயியின் அடுத்த அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு அதே போலான தரிசனம்.. கரிசனம்.. ஸ்பரிசம்.. சம்பாஷனம் இலவசப் பரவசமாய் தொடரும். 

இறைவன் வானத்தில் தோன்றி தரிசனம் தருவாரா ? என்ற கேள்வி அம்புகளை வளைத்து.. அதைக் காண நமக்கு நிஜமாய் .. மனசாட்சியைத் தொட்டுப் பார்த்த வண்ணம் பூரண பக்தியும் .. சரணாகதியும் இருக்கிறதா? என்று திரும்பும் போது..

அந்த நொடியிலிருந்து நமக்குள் ஆன்ம சாதனை வேர் விட ஆரம்பிக்கின்றது...

சத்ய சாயி இறைவனே! நாம் பக்தரா?என்ற ஆன்ம விசாரணையில்  

அகம் வெளி ஆகாயம் தேடாமல்...

உள் ஆகாயத்திலேயே இறைவன் சத்ய சாயியை தரிசனம் காணும்.

அப்படி கண்டவர்களும் உண்டு.

நாளை அப்படி காண்பவர்கள் நீங்களாக ஏன் இருக்கக் கூடாது???

 பக்தியுடன்

வைரபாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக