தலைப்பு

திங்கள், 28 செப்டம்பர், 2020

காயத்ரி ஜபம் செய்ததால் பிழைத்தேன்!


காயத்ரி மந்திர ஜபத்தை விட்டு விடாதீர்கள். வேறு எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் புறக்கணித்து விடலாம். ஆனால் காயத்ரியை நீங்கள் தினமும் சிலமுறையவது உச்சாடனம் செய்ய வேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், காரில், விமானத்தில், எங்கிருந்தாலும் உங்களை காயத்ரி மந்திரம் எந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்.
-ஸ்ரீ சத்ய சாயி பாபா 

குற்றாலம் அருவியில் மூழ்கி உயிர் தப்பியவர் பேட்டி – 06.08.1998 தேதி ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்த செய்தி:

“நான் அந்த இருட்டுக் குகையில் இருந்த போது இறைவனை வேண்டிச் செய்த காயத்ரி ஜெபமும், கணபதி மந்த்ரமும் தான் என்னைக் காப்பாற்றியது” என்று 72 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மரணப்பிடியில் இருந்து மீண்ட கல்லூரி மாணவர் கல்யானகுமார் கூறினார்.

மதுரை புதூர் இ.எம்.ஜி. நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜாமணி-ரங்கநாயகி தம்பதியர். இவர்களது ஒரே மகன் கல்யாண்குமார் (24). ராஜாமணி மதுரை வனச்சரக அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணி செய்கிறார். கல்யாண்குமார் மதுரை கல்லூரியில் எம்.எஸ்.ஸி., பயோ கெமிஸ்ட்ரி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி கல்யாண்குமாரும், இவரது நண்பர்கள் பாலாஜி, ஆனந்த், அசோக், ஸ்ரீராம், சத்யா உட்பட 8 பேரும், பகல் 3 மணிக்கு மதுரையில் இருந்து குற்றாலம் புறப்பட்டுள்ளனர். இவர்களில் அசோக், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றுகிறார். மற்ற நண்பர்கள் மதுரை அருகே உள்ள கல்லூரியில் பி.எஸ்.ஸி., படித்து வருகின்றனர். அனைவருமே ஒரே கல்லூரியில் பி.எஸ்.ஸி., படித்தவர்கள். இவர்கள் அனைவரும், “குற்றாலம் சென்று விட்டு, திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்க வேண்டும்” என்ற திட்டத்தில் மதுரையை விட்டுக் கிளம்பியுள்ளனர். 


செவ்வாய்கிழமை மாலை குற்றாலம் வந்து அங்கு ஒரு லாட்ஜில் தங்கினர். மறுநாள் காலை டிபன் முடித்து விட்டுக் குற்றால அருவிகளில் குளிக்கச் சென்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, ஆகிய அருவிகளில் குளித்துவிட்டுப் பகல் 3 மணி அளவில் செண்பகாதேவி அருவிக்குச் சென்றுள்ளனர். அங்கும் குளித்துவிட்டு பின்னர் அங்கிருந்து தேனருவிக்கு கீழே உள்ள ஓடை நீரில் குளித்துள்ளனர். 

குளித்து முடித்துக் கல்யாண்குமார் மட்டும் ஒரு மரப்பாலம் அருகே வந்து தலையை துவட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி, தவறி விழுந்தவர் திடீரென மாயமானார். 
தலை துவட்டிக் கொண்டிருந்த நண்பன் திடீரென்று மாயமானது கண்டு அருகே குளித்துக் கொண்டிருந்த அனிவருமே ஓடிவந்தனர். கூக்குரலிட்டு தேடினர். எந்தப் பதிலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. 

உடனடியாக அசோக், குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் செய்தார். அப்போது மாலை 5 மணி இருக்கும். “இருள் சூழ்ந்து விட்டதால் இரவில் தேடுவது கடினம். காலையில் தேடிப் பார்கலாம்” என்று போலீசார் கூறிவிட்டனர். 
உடனடியாக கல்யாண்குமார் பெற்றோருக்கும் போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. “குமார் தண்ணீரில் சிக்கியுள்ளான். பயப்படத் தேவையில்லை” என்று வந்த தகவலை கேட்டுப் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு இரவே குற்றாலம் வந்து சேர்ந்தனர். அங்கு குமாரின் நண்பர்களிடம் (கல்யாண்குமாரை அவர்து பெற்றோர்கள் ‘குமார்’ என்றே செல்லமாக அழைகின்றனர்) நடந்த சம்பவத்தைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

மறுநாள் காலையில் குமாரைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஒரு வழியாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத்தான் அந்த இருட்டுக் குகைக்குள் இருந்து குமார் மீண்டு வந்தார்.
தற்போது திருச்செந்தூரில் உள்ள அவரது சித்தப்பா ராமசந்திரன் வீட்டில் குமார் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 


அவரை பார்க்கச் சென்ற போது, அவரது முகத்தில் இன்னமும், அதிர்ச்சி ரேகைகள் இருப்பதைக் காண முடிந்தது. “என்ன நடந்தது?” எனற கேள்விக்கு: “நொடிப் பொழுதில் நடந்த விபத்தில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டேன். இருள் சூழ்ந்த குகைக்குள் தள்ளப்பட்டேன். தண்ணீரை குடித்துக் கொண்டு இறைவனை வேண்டி கணபதி மந்திரமும், காயத்ரி ஜெபமும் செய்தேன். ‘இறைவன் அருளாலும், என் பெற்றோர்களின் ஆசியாலும், நண்பர்களின் உதவியாலும் நான் எப்படியும் காப்பாற்றப்படுவேன்’ என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்றார் குமார். 3 நாட்கள் இருட்டுக் குகையில் ஆகாரமின்றித் தனிமையில் குளிர்ந்த நீரில் இருந்து வெளிவந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, அயர்ந்த நிலையில் மெல்லிய குரலில் பேசுகிறார். “அப்பாவிடம் எல்லாம் கூறியிருகிறேன். அவரிடம் கேளுங்கள்” என்று அப்பாவைக் கேட்கச் சொல்கிறார். 

மரணத்தின் பிடியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பின் மீண்டு வந்த மகன் தன்னிடம் கூறியதாக ராஜாமணி நம்மிடம் கூறியதாவது: 
"புதன் கிழமை காலையில் மகனை தேடும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எங்களுக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. இருந்தாலும் என் மகன் உயிரோடு வருவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாக இருந்தது. கடவுள் கைவிட மாட்டார் என்றும் நாங்கள் நம்பினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அவன் கிடைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் சின்னாபின்னமாகி இருப்போம். இரண்டாவது நாளும் மகனை தேடினார்கள். எங்களை மேலே வரக்கூடாது என்று கூறிவிட்டனர். ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு யுகமாக இருந்தது. மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகலில் உயிருடன் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அப்போது ஏற்பட்டது. எல்லாக் கடவுளையும் மனதில் நினைத்து நாங்கள் செய்த பிரார்த்தனை வீண்போகவில்லை. குமாரை அந்த இருட்டுக் குகையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக 15,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்தோம். அது எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
குகையில் இருந்து வெளியே வந்ததும் “அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள்?” என்று தான் குமார் கேட்டான். பிறகு நானும் என் மனைவியும் அவனைப் பார்த்துக் கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விட்டோம். அந்த நேரத்தில் குளிரில் நடுங்கியபடி விறைத்த நிலையில் வெளியே வந்தான் அவன்.
தலையை துவட்டிக் கொண்டிருந்த போது கால் இடறி மரப்பால ஓட்டையில் விழுந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு 50 அடி நீள குகையில் குமார் மாட்டிக் கொண்டான். அங்கு கரண்டைக்காள் அள்வு தண்ணீர் இருந்துள்ளது. குகைக்குள் மாட்டிக்கொண்டதும் தன்னை காப்பாற்றக்கூறி அவன் எழுப்பிய குரல் அருவியின் சத்தத்தில் யாருக்குமே கேட்காமல் போய்விட்டது. கத்திக் கத்தி தொண்டை வறண்டநிலையில் தண்ணீரை குடித்துக் கொண்டே பகல் இரவு எது என்று தெரியாமல் காயத்ரி ஜபத்தையும், கணபதி மந்திரத்தையும் குமார் சொல்லியிருக்கின்றான்.


அவனது அந்த பக்திதான் எங்களிடம் மீண்டும் அவனைச் சேர்த்துள்ளது. 
மூன்று நாட்கள் குகைக்குள் இருந்த போது ஏற்பட்ட அருவிச் சத்தத்தில் அவனது ஒரு பக்கக் காதில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த 72 மணி நேர சம்பவத்தை அவன் மறக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதற்காகவே அவனைச் சூரனை வதம் செய்த சுப்பிரமணியன் படை வீடிற்குக் கூட்டி வந்து தங்க வைத்துள்ளோம். குமாருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (9ம் தேதி) முடி காணிக்கை செலுத்த உள்ளோம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வம் உண்டு என்பது எனது மகன் திரும்பக் கிடைத்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து விளைவிக்கக்கூடிய பகுதியான தேனருவியில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்புவேலி அமைக்கப்படவேண்டும்".

இவ்வாறு ராஜாமணி கூறினார்.

(மதுரை திரு. J.V. கிருஷ்ணமூர்த்தி (JVK) அவரகள் தொகுத்து வெளிவந்த ‘ஸர்வ தேவதாதீத ஸ்வரூபிணி வேதமாதா காயத்ரி’ என்ற நூலில் இருந்து)

ஆதாரம்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக