சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...
7. எல்லோரிடமும் முகம் மலர்ந்து பணிவாகவும் மென்மையாகவும் பேச வேண்டும்!
ஆறாம் படிநிலையான சத்ய சாயி இலக்கியங்கள் இதயத்தில் ஆழமாய்ப் பதிந்து வருகையில் அதே பக்குவ நிலையில் மென்மையாக பேசுவது என்பது சுலபமாகிறது.
இறைவன் சத்ய சாயி எங்கும் நிறைந்தவர்... எல்லாம் வல்லவர்...என்ற பேருணர்வு சத்ய சாயி இலக்கியம் வாசிப்பதாலும்... அதை துணையாகக் கொண்டு அனுபவிப்பதாலும்
பிறரோடு பேசுகையில் சுவாமி உடன் இருந்து கேட்கிறார் என்பதும் உள்ளம் உணர ஆரம்பிக்கையில் எப்படி கடுகடுப்பாக.. அகந்தையோடு.. கோபமாக குரல் உயர்த்தி பேச முடியும் ??
சுவாமி தன் பக்தர்களை எப்போதுமே கவனிக்கிறார்.. கண்காணிக்கிறார் .. காப்பாற்றுகிறார்..
இதனை பக்தர்கள் உணர்ந்தாலும்.. உணர முடியாவிட்டாலும் இதுவே பரம சத்தியம். ஆகையால் நாம் எவ்வாறு சுவாமியிடம் பேசுவோமோ / நடப்போமோ அவ்வாறே பிறரிடமும் பேச வேண்டும்/ நடந்து கொள்ள வேண்டும்.
சுவாமி வழங்கி இருக்கிற ஒவ்வொரு கோட்பாடுகளுக்கு உள்ளும் ஒரு inter connecting chain இருக்கிறது.
ஒன்றை முழுதாய் கடைபிடிக்க ஆரம்பித்தால் மட்டுமே இரண்டாவதை முழுதாய் கடைபிடிக்க முடியும்.
மென்மையாக பேசுவது என்பது உள்ளத்தில் வன்மையை சுமந்து கொண்டு வெளியே மட்டும் போலியாக பேசுவதல்ல...
உள்ளம் மென்மையாக ஆனால் மட்டுமே மென்மையாக பிறரிடம் பேச முடியும்.
அதட்டிப் பேசுகிற உண்மை கூட பிறரால் ஏற்றுக் கொள்ளும்படியாக இருப்பதில்லை.
அதற்காக பொய்யையே மென்மையாக சொன்னால் உண்மையாகிவிடுமா?
நிச்சயம் இல்லை.
ஆகவே உண்மையே பேச வேண்டும்.. அதையும் மென்மையாகப் பேச வேண்டும்.
நான் இப்படித் தான் எதையும் வெளிப்படையாக / முகத்திற்கு நேராகக் கேட்டுவிடுவேன் என்று சிலர் சொல்வர். அதற்காக பிறர் மனம் நோகச் செய்வது மிக மிக தவறு. பாவம். தீய கர்மா.
நேர் பட பேசு என்று தான் மகாகவி பாரதி சொன்னாரே தவிர பட பட என பேசு என்று சொல்லவே இல்லை!
நீங்கள் எப்போதும் பணிவாக நடந்து கொள்ள முடியாது.. ஆனால் பணிவாகப் பேசலாமே என்கிறார் சத்ய சாயி பரம் பொருள்.
சுவாமி மட்டுமே the least possibilityயிலும் ஒருவரை ஆன்மீகமாக வாழ வலியுறுத்துகிறார்.
ஒரு சிறு வாய்ப்பு / சிறு நேரம் / சிறிய இடைவேளை இதிலும் கூட ஆன்மீகமாய் ஒருவரால் வாழ முடியும் என்பதை தானே வாழ்ந்து காட்டு நிரூபிக்கிறார்.
அவர் கடவுள். நாம் மனிதர் என்றாலும் கூட
ஈஸ்வர சர்வ பூதானாம் என்ற வேக வாக்கிற்கு ஏற்ப..
நம் உள்ளே உறைந்திருக்கும் சுவாமி.. மென்மையாக பேசும் போதே வெளிப்படுகிறார்.
மனம் சலனமற்று.. எதிர்பார்ப்புகள் அற்று.. அமைதியாக இருக்கும் போதே மென்மையாக பேசுவது சாத்தியமாகிறது.
மனதை எப்படி அமைதியாக வைத்திருப்பது..?
முதல் கோட்பாட்டினை விடாப்பிடியாக கடைபிடிப்பவர்களால் மட்டுமே மற்ற எல்லா கோட்பாடுகளும் சாத்தியம்.
சிலர் தங்களின் கருத்தை பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக குரல் உயர்த்தி பேசுவர். ஆனால் அவர்கள் நினைப்பதற்கு நேர் மாறாக தான் நடக்கிறது. காரணம் அந்த குரல் உயர்த்தல் பிறர் மனதிற்கு எரிச்சலை தருகிறது.
அகந்தை இல்லாதவர் வாய் மொழி மென்மையாக இதழ் விட்டு மணம் பரப்புகிறது!
இதழ் என்று உதட்டிற்கு பெயர் வரக் காரணமே அதிலிருந்து மென்மையான மலர் போன்ற வார்த்தைகள்.. புன்னகை என்ற சுகந்தம் வர வேண்டும் என்பதற்காகவே !
சிலர் எப்போது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்.
மன நோய் அது. உளவியல் பிரச்சனை.
ஒருவர் ஒரு செயல் செய்யும் போது அதில் நிறையும் / குறையும் இருப்பது சகஜமே.
நாம் அந்த குறையை சுட்டிக் காட்டுவதற்கு முன் முதலில் அவர்கள் செயலில் இருக்கும் நிறையை சுட்டிக் காட்டிப் பாராட்டிய பிறகே குறையை மிக மிருதுவாய் மென்மையாய் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுவே உளவியல் விஞ்ஞான கல்விமுறை (psychological science).
இன்னும் ஆழமாக யோசித்தால்... தன் குறையை மட்டுமே கண்டுபிடித்து சீர் செய்து வருபவர்களுக்கு பிறர் குறையை கண்டறியவும் ... சுட்டிக் காட்டவும் நேரமே இருப்பதில்லை.
தான் எப்போதும் சரியானவன்.. பிறரே சரியில்லை என்ற மனப் பிறழ்சியால் மட்டுமே குறை சுட்டல் நேர்கிறது.
காரணம்.. வன்மையாக / கடினமாக / தடித்த வார்த்தையால் பேசி பிறர் மனதை புண்படுத்துவது நமக்கே தீய கர்மாவை விளைவிக்கிறது.
மனித கர்மாவை அகற்றி அவனுக்கு பிறவா நிலை வழங்கவே இறைவன் சத்ய சாயி அவதரித்திருக்கிறார்.
நீ யாரையும் பழி வாங்க வேண்டிய அவசியமே இல்லை.. அந்த வேலையை அவரவர் கர்மாவே பார்த்துக் கொள்கிறது என்கிறார் சுவாமி தான் புத்தராக அவதரித்த போது...
(ஆதாரம் : புத்தரின் தம்ம பதம் )
வார்த்தைக்கு வார்த்தை என்பது பக்குவமில்லாத போக்கு.
சில வார்த்தைக்கு புன்னகையையும்..
சில வார்த்தைக்கு மௌனத்தையுமே பரிசாக வழங்க வேண்டும்.
"சுவாமி இருக்கிறார்.. பார்த்துக் கொள்வார் சாயி ராம்" என்று மென்மையாக பேசி சில தர்ம சங்கடமான சூழ்நிலையை பிறரிடமிருந்து நாம் கடந்து போக வேண்டும்.
அதுவே சத்தியமும் கூட..
நம் வாழ்க்கை சம்பவங்களையோ அதன் பின்னணியையோ.. சந்தர்ப்ப சூழ்நிலையையோ... மனம் சார்ந்த நியாயங்களையோ... அடுத்தவர்க்கு எப்போதும் புரிய வைக்க வேண்டும் என அவசியமோ / கட்டாயமோ இல்லவே இல்லை.
பிறரிடமிருந்து நல்லவன் / நல்லவள் என்ற நற்சான்றிதழ் எதிர்பார்ப்பதும் குழந்தைத்தனமானது.
ஆன்மீக முதிர்ச்சியில்லாதது.
எல்லோரையும் நேசித்து யார் மனதையும் புண்படுத்தாமல் நாம் நம் பணியை / சேவையை ஆற்றிக் கொண்டிருந்தாலே போதுமானது.
பிறரை நேசிக்கிறேன் என்பதற்காக எதையாவது தொண தொண என பிறரோடு பேசிக் கொண்டே இருப்பதும் ஆன்மீகம் அல்ல...
அது ஆன்ம முன்னேற்றம் அளிக்காது!
ஆழமாய் உணர்ந்தால்.. மென்மையாக பேசுபவர் ஓரிரு வார்த்தையே பேசுவர்.
மென்மையாக பேசுவது பேச்சு வார்த்தைகளின் ஊளைச் சதையைக் குறைத்துவிடுகிறது.
எதை / எப்படி/ எப்போது பேச வேண்டுமோ அதை மட்டுமே கன கச்சிதமாய்ப் பேசுகிறது.
மென்மையாக மாறிய இதயம்
மென்மையாகவே பேசும்!
இறைவன் சத்ய சாயி எப்போதும் நம் உரையாடலையும் பேச்சையும் கேட்டுக் கொண்டே இருக்கிறார் எனும் சத்தியம் உணர்ந்த உள்ளத்தால் ஊறிப் போன உதடுகள் மென்மையாகவே பேசும்!
நவரத்தினம் ஒளிரும்
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக