தலைப்பு

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஐந்தாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...

5.சத்ய சாயி சேவா நிறுவனம் நடத்தும் சமூகப்பணி முதலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்

நான்காவது படிநிலையான சூழ்நிலை சுத்தீகரிப்பான நகர சங்கீர்த்தனம் தொடங்கி அடுத்த நிலையான சமூக சுத்தீகரிப்புக்கு வித்திடுகிறார் இறைவன் சத்ய சாயி.

தன்னலமில்லா சேவையை மனிதனுக்கு உணர்த்தவே தன்னலமில்லா சேவையாக மண்ணில் அவதரித்த இறைவன் சத்ய சாயி தியாக மனப்பான்மையை வலியுறுத்தவே பெரும்பாலும் காவி நிறத்திலேயே வலம் வந்தார் நம் கடவுள்.

சேவை என்பது ஆன்மாவில் படிந்திருக்கும் ஜென்மாந்தர கர்மா எனும் அழுக்கை சுத்தப்படுத்துகிறது..

கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியைத் துடைக்க துடைக்க நம் பிம்பம் தெரிவது போல்...

சேவை புரியப் புரிய கர்மா கழிகிறது...

ஆத்ம தரிசனம் வெளிப்படுகிறது.

இறைவன் சத்ய சாயி வலியுறுத்தும் ஒன்பது கோட்பாடுகளுமே ஒவ்வொருவிதமான சேவைதான் என்பதை உணர வேண்டும்.

தியானம் ஜபம் புரிவது நமக்கே நாம் ஆற்றிடும் அக சேவை.. 

கூட்டு பஜனை நம் குடும்பத்திற்கான ஆன்மீக முன்னேற்ற சேவை..

பாலவிகாஸ் வகுப்புகளில் குழந்தைகளை அனுப்புவது நாம் அவர்களுக்காக புரியும் அடித்தள சேவை.. 

நகர சங்கீர்த்தனம் மூலமாக சூழலை சுத்தப்படுத்துவது அண்டத்திற்கு நாம் ஆற்றுகிற சேவை..

இதோ நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு பக்த இதயமும் இணைந்து நாம் ஆற்றும் சேவை ... ஒட்டுமொத்த சமூகத்திற்கான சேவை.

குகையில் தவம் ஏற்றுக் கொண்டிருந்த மகான் பப்பா ராம்தாஸ் அவர்களின் தியானத்தில் சுவாமி ராமர் வடிவில் என் தரிசனம் உனக்கு கிடைக்க வேண்டுமானால் அந்த குஷ்டரோகிகளுக்கு சேவை செய்து அவர்களை குணமாக்கு என குரல் எழுப்புகிறார்.

அதைப் போலவே அவர் வசித்து வந்த அருகாமையிலேயே அதைப் போன்றவருக்கு தொடர் சேவை ஆற்றியே இறுதியில் அவருக்கு சுவாமி (ராம) தரிசனம் கிடைக்கிறது.

சேவை என்பது அவ்வளவு பவித்ரமானது.

உண்மையான சேவாதளத் தொண்டர் தன் சேவையை குறித்து பெருமை அடித்துக் கொள்ளவே மாட்டார். 

சேவை என்பது அன்பு எனும் வாகனத்தில் பயணிக்கிறது.

சேவை செய்ய சொல்பவரும் அன்போடு இயங்க வேண்டும்.

சேவை செய்பவரும் அன்போடு இயங்க வேண்டும்.

இதில் அகந்தை என்பதற்கு இடமே இல்லை.

சேவாதள தலைவரின் பக்குவத்தையும் பேரன்பையும் கண்டு சேவைக்கு இன்னும் நிறைய தொண்டர்கள் வரவேண்டுமே அன்றி அவர்களின் கர்வத்தையும்.. கடிந்து கொள்ளும் கோப போக்கையும் எண்ணி சேவை செய்பவர்களும் சேவை செய்வதை நிறுத்திவிடக் கூடாது . 

தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் சேவையை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டுமே அன்றி அதட்டுதலும் .. உருட்டலும்.. பழித்தலும்.. குறைகளையே குத்திக் குத்திக் காட்டுதலும் தன்னலமில்லா சேவை நோக்கத்தை சிதறடித்துவிடுகிறது.

சேவை பொதுவாக வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.

மாதா / பிதாவுக்கு நாம் ஆற்றும் சேவையிலிருந்தே அது சமூகத்திற்கான சேவையாக நீள்கிறது.

வீட்டில் பெற்றவர்களுக்கு எந்த சேவையும் புரியாமல் வெளியே சென்று சேவை புரிவதால் எந்த நன்மையும் இல்லை.

மாதா பிதாவுக்கு பாத சேவை (கால்களை அமுக்குவதல்) புரிந்து கொண்டிருந்த ஒரு சுவாமி பக்தனுக்கு சுவாமியே(கிருஷ்ணனே) தரிசனம் அளிக்கிறார்.

நான் உன் கிருஷ்ணன் வந்திருக்கேன் என்கிறார் .. அந்த பக்தர் சுவாமியின் முகத்தையே பார்க்காமல் நான் என் தாய் தந்தைக்கு பணிவிடை செய்துவிட்டு உன்னை தரிசனம் செய்கிறேன் சுவாமி.. அது வரை இதோ என செங்கல்லை (விட்) நகர்த்தி இதில் காத்திரு என்கிறான் அந்த பக்தன்.

சுவாமி உடனே செங்கல்லில் ஏறி.. அந்த விட்'டில் ஏறி நிற்கிறார்.

ஆகவே தான் சுவாமிக்கு விட்டல் எனப் பெயரே வந்தது. இது பண்டரிபுரியில் நிகழ்ந்தது.

ஆகவே தான் சுவாமி பாண்டுரங்க விட்டல் ஆனார்.

பிள்ளைகள் ஆற்றுகிற மாதா பிதா சேவையே முதியோர் இல்லங்களை ஒழிக்க வல்லது.

சேவையால் நிகழ்கிற ஆன்மீக உணர்வையும்.. சேவையின் மகிமையையும் ஏற்கனவே புரிந்து வருகிறவர் சொல்லச் சொல்ல நமக்கு புரிய ஆரம்பிக்கிறது .

அத்தகைய சேவா அதிர்வலைகளை இதயத்தில் பெறவே சமிதிக்குச் செல்ல வேண்டும்.

தனிமரம் தோப்பாகாது.

ஆகவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சேவையாற்ற வேண்டும்.

அதில் ஆத்ம நிம்மதி ஏராளமாய் ஏற்படும்.

"நீ என் வேலையைச் செய்ய.. நான் உன் வேலையைச் செய்வேன்" என சுவாமி சொல்வது போல்.. (இதை சுவாமி பாண்டுரங்க பிரபாவத்திலேயே மகான் பக்த துகாராமுக்கு நிறைவேற்றிய மகிமைகள் அநேகம்)

இதையே தான் சுவாமி கீதையில்..

என்னிடம் முழுதாய் நீ சரணடைந்து விடு நான் உன்னை காப்பாற்றி கடைத்தேற்றுவேன் என்கிறார்.

அத்தகைய சரணாகத உணர்வை சேவையே தருகிறது.

ஒரு கருமியும் சத்ய சாயி சேவை புரியப் புரிய தாராள பிரபுவாய் மாறிவிடுகிறான்.

ஒரு கர்வியும் சத்ய சாயி சேவை புரியப் புரிய சுவாமியின் பக்குவமான கருவியாய் மாறிவிடுகிறான்.

இதில் சேர்ந்து செய்யும் சேவை அநேகம்.

பலர் புரிவது. 

இதில் தனியாக புரியும் சேவை எழுத்து சேவை . சிலர் புரிவது‌.

எழுத்து சேவை மிகவும் உன்னதமானது.

சிலரை தன் கருவியாய் மாற்றி சுவாமி எழுத வைக்கும்/ எழுதும் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றுவிடுகின்றன..

பிரேம சாயியின் தாயாராய் பிறந்திருக்கும் ஸ்ரீமான் கஸ்தூரி எவ்வளவு பெரிய உதாரணம் அதற்கு...

தன்னலமில்லா சேவையே அகந்தையை கரைக்கிறது..

அனன்ய பக்தியைத் தருகிறது..

தான் சேவை செய்கிறோம் என்கிற எண்ணத்தையும் அது ஒரு சேவா தள தொண்டரிடமிருந்து எடுத்துவிடுகிறது.

ஸ்ரீ சத்குரு சாயி சேவா கரோ எனவும்.. 

குரு சேவ பினா நிர்வாண நஹி எனவும் சுவாமி பஜனிலும் சேவையே ரீங்கரிக்கிறது.

பிறருக்கு நன்மை புரியும் எல்லாமே சேவையாகிறது.

பக்தர்கள் ஒன்று கூடிச் செய்கையில் அது இன்னும் பலருக்கு அந்த பெரும் நன்மை சென்று சேர்கிறது.

நீ பிறருக்கு செய்பவை எல்லாம் உனக்கு நீயே செய்து கொள்கிறாய் எனும் பகவான் ரமண மகரிஷியின் சத்திய வாக்கே இறைவன் சத்ய சாயி வலியுறுத்தும் சேவைக்கு சிறந்த உதாரணம்.

"பிரார்த்திக்கும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை" என்றும்

கிராம சேவையே ராம சேவை என்றும்

மானவ சேவையே மாதவ சேவை என இறைவன் சத்ய சாயி வலியுறுத்தி வருவது பரம சத்தியம்.

நவரத்தினம் ஒளிரும்

பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக