தலைப்பு

வியாழன், 17 செப்டம்பர், 2020

தங்க வெகுமதியை நாடி கச்சேரி செய்ய வந்த கலைஞரின் மனதை தங்கமாக மாற்றிய சாயி விந்தை!


Whistle Wizard Mr. Siva Prasad, World-renowned whistle artists. He is the First professional whistling artist in Indian classical music.

உலகப் புகழ்பெற்ற விசில் இசை கலைஞர், திரு. சிவபிரசாத் அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்தியசாயி அனுபவங்கள்.

திரு. கொமாரவெலு சிவபிரசாத் அவர்கள்,ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.  இளம் வயதிலேயே சுய ஆர்வத்தின் காரணமாக கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை பற்றிய விவரங்களையும்,  நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தார். இயற்கையிலேயே திரு. சிவபிரசாத் அவர்களுக்கு, இனிமையான குரல் வளமும், அழகான தோற்றப் பொலிவும், கடவுளின் கிருபையால் அமையப் பெற்றிருந்தது. பல புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடல்களையும், கீர்த்தனைகளையும், தனது கடின முயற்சியால் விசில் கச்சேரி வாயிலாக வழங்கும், அபார திறன் பெற்றிருந்தார். காற்றை மதுரகானமாக்கி, தனது இனிய விசில் இசையின் மூலம் வழங்கி, மனதை வசீகரிப்பதில் வல்லவரானார், திரு.சிவபிரசாத்.


இசை வெள்ளத்தில், விசில் இசை என்ற புதிய நீரோட்டமாக பொங்கிப் பிரவாகம் செய்தார். பிரபல இசை நட்சத்திரங்கள் மத்தியில், புதிய துருவ நட்சத்திரமாக புகழ் பெற்றார். திரு. பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் சீனிவாசன், ஆகியோரது வழிகாட்டுதல்கள் இவரை மெருகேற்றின. ஆந்திர நைட்டிங்கேல், மனித புல்லாங்குழல், இசை முரளி, லிம்கா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற பட்டங்களும், திருமதி. இந்திரா காந்தி, திரு.பி.வி. நரசிம்ம ராவ், திரு. எம்ஜிஆர், திரு. என்.டி.ஆர் அவர்களின் பாராட்டுதல்களும், இவரது விசில் இசை திறமைக்கு சான்றாக அமைந்தது.

முந்தைய பிறவிகளின் நல்வினைகளின் காரணமாக, 1998இல், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் முன்னிலையில், புட்டபர்த்தியில் கச்சேரி செய்யும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கப்பெற்றது. இதை அறிந்த இவரது நண்பர்களும், உறவினர்களும், "பகவான் உன்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்பார். தங்க டாலர் கேள்! தங்க மோதிரம் கேள்! தங்க பிரேஸ்லெட் கேள்!", என அறிவுறுத்தி இருந்தனர். திரு. சிவபிரசாத் அவர்களுக்கு, அப்போது பகவானிடம் பக்தியோ நம்பிக்கையோ கிடையாது. எனவே, அவர் பகவானிடம் தங்க வெகுமதிகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கச்சேரி செய்ய சென்றார்.

கச்சேரி மிகச்சிறப்பாக அமைந்தது. பகவான், திரு. சிவபிரசாத் அவர்களை ஆசீர்வதித்து, அவர் விரும்பிய வண்ணம் தங்க வெகுமதிகளையும், பணம் மற்றும் பட்டாடைகளையும் கொடுத்து அனுப்பினார். கச்சேரி முடித்து ஹைதராபாத் திரும்பினார், திரு. சிவபிரசாத். சில நாட்கள் கழித்து, ஒரு சாயி பக்தை, திரு. சிவபிரசாத் அவர்களை சந்தித்தார். "உங்களுக்கு சுவாமியின் பஜன் பாடல்கள் தெரியுமா?", என்றார். திரு. சிவபிரசாத், "தெரியாது.",என்றார். அவர் பஜன்பாடல்கள் சிடிகளை, சிவபிரசாத் அவர்களிடம் கொடுத்து, "இந்த பஜன் பாடல்களை விசில் இசை மூலமாக, தகுந்த பக்கவாத்தியங்களை கொண்டு, இரண்டு ஆல்பங்களாக தயாரித்து தாருங்கள்.", எனக்கூறி, ஒரு ஆல்பத்திற்கு 3 லட்சம் வீதம், ரூ 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.


"திருப்பதி சென்று வந்தால், பணம் கொட்டும் என்பார்கள். ஆனால் எனக்கு, பர்த்தி சென்று வந்ததும், பணம் கொட்டுகிறது.", என மிகுந்த சந்தோஷம் அடைந்தார். மிகுந்த ஆர்வத்துடனும், சிரத்தையுடனும், 2 ஆல்பங்களை ரெடி செய்து, பகவான் ஆசிர்வாதத்துடன் வெளியிட்டார். அந்த ஆல்பங்கள்,  இவருக்குப் பெரும் புகழையும், வரவேற்பையும், சாயி அன்பர்கள் மத்தியில் பெற்று தந்தது. இந்நிலையில், 2010ஆம் ஆண்டு, குருபூர்ணிமா நிகழ்ச்சியில்,  சுவாமியின் முன்னிலையில், புட்டபர்த்தியில் கச்சேரி நிகழ்த்துமாறு, சுவாமியின் செயலாளர், திரு. சக்கரவர்த்தி அவர்கள் மூலம் இவருக்கு அழைப்பு வந்தது.

திரு. சிவபிரசாத் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 13 திறமையான பக்கவாத்திய கலைஞர்களை அழைத்துக்கொண்டு, சிறப்பான பயிற்சியுடன், கச்சேரிக்காக புட்டபர்த்தி சென்றடைந்தார், திரு. சிவபிரசாத். இந்த முறையும், சிறப்பாக கச்சேரி செய்து, சுவாமியை மகிழ்வித்து, ஒரு தங்க வேட்டை ஆடி விட வேண்டும் என்று ஆவலுடன் சென்றார்.


திரு. சிவபிரசாத், கச்சேரி செய்யும் நாளில், காலை தனது குழுவினருடன் தயாராக இருந்தார். பகவான் வந்தார், வேறு சில நிகழ்ச்சிகள் நடந்தன, பகவான் கிளம்பிவிட்டார். இவர் கச்சேரி நடக்கவில்லை. இவர் கச்சேரி மாலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மதியம், கேன்டீன் அறையில், புகழ்பெற்ற மல்லாடி சகோதரர்களை (கர்நாட்டிக் சங்கீத வித்வான்கள்) சந்தித்தார்.

மல்லாடி சகோதரர்கள்

அவர்கள், சுவாமி தரிசனத்திற்காக வந்திருப்பதாக தெரிவித்தனர். மாலை தனது விசில் கச்சேரிக்கு வருகை தருமாறு, அவர்களுக்கு சிவபிரசாத் அழைப்பு விடுத்தார்.மாலை கச்சேரிக்கு, சிவபிரசாத் குழுவினர் தயாராக வந்தனர். சுவாமி வந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்தார். மல்லாடி சகோதரர்களுக்கு பாத நமஸ்காரம் கொடுத்த, சுவாமி அவர்களை பாட அழைத்து, chairல் வந்து அமர்ந்தார். மல்லாடி சகோதரர்களின் கச்சேரி நடைபெற்றது. சிவபிரசாத் ஏமாற்றம் அடைந்தார். திரு. சக்கரவர்த்தி அவர்கள், "கவலைப்பட வேண்டாம். நாளை  சுவாமி உங்களை அழைக்கலாம்.", என கூறி சென்றார். குழுவினரில் சிலர், வேறு  commitment காரணமாக, இரவு ஊருக்கு புறப்பட்டு செல்ல, திரு. சிவபிரசாத்  சலிப்பு அடைந்தார்.

மறுநாள் காலை, கச்சேரி செய்ய, சிவபிரசாத், தயாராக வந்து காத்திருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமியைக் காண குழுமியிருந்தனர். சுவாமி வந்து தரிசனம் தந்து, கையை தூக்கி அவர்களை ஆசீர்வாதம் செய்தார். தரிசன ஹாலில் அமர்ந்திருந்த மல்லாடி சகோதரர்களை மீண்டும் பாட சொல்லிவிட்டார் சுவாமி. சிவபிரசாத் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. திரு. சக்கரவர்த்தி அவர்களை, சிவபிரசாத் சந்தித்தபோது, "முடிவு எடுப்பது சுவாமி மட்டுமே. நான் இல்லை. மாலை வாருங்கள்.", எனக் கூறி  சென்றுவிட்டார்.


எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்த சிவபிரசாத், "சுவாமி invite me and insult me!", என்று சுவாமியை குறைகூறி, திட்டலானார். சாப்பிட்டு அறைக்கு வந்த சிவபிரசாத், அதே கொதிப்படைந்த மனநிலையில், ஜன்னலை திறக்க  முற்பட்டார். ஜன்னல் கண்ணாடி உடைந்து, கையில் கிழித்து ரத்தம் கொட்டியது. சேவாதள தொண்டர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கட்டு போட்டனர். அப்போது 3 மணி இருக்கும். சுவாமி, 4 மணிக்கு கச்சேரி செய்ய அழைத்து உள்ளார், என்ற தகவல் சிவபிரசாரத்திற்கு கிடைத்தது. சிவபிரசாத் தனது குழுவினருடன் உடனடியாக, மேடையில் வந்து தயாராக அமர்ந்தார்.

சுவாமி, குல்வந்த் ஹாலுக்கு வந்து, திரு. சிவபிரசாத் அவர்களைப் பார்த்து புன்னகை செய்தவாறு, chairல் அமர்ந்தார். திரு. சிவபிரசாத் அவர்களின் விசில் கச்சேரி இப்பொழுது நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. திரு. சிவபிரசாத் கம்பீரத்துடன் பக்கவாத்தியகாரர்களை  பார்த்து தலையசைத்து, உற்சாகமாக உதடுகளை குவித்து, மூச்சை உள்ளிழுத்து,  விநாயகர் பாடலை விசில் மூலம் ஆரம்பித்தார். எந்த ஓசையும் வரவில்லை.  சப்தமும் வரவில்லை.  சிவபிரசாத் திடுக்கிட்டுப் போனார். மீண்டும் முயல, ஒரு சத்தத்தையும் காணோம். "பத்தாயிரம் கச்சேரிகளுக்கு மேல் செய்துள்ளோம். ஒரு நாளும் இது போல ஆனது இல்லையே.", என்று குழம்பினார்.


மீண்டும் பக்கவாத்தியகாரர்களை பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, உதடுகளை குவித்து விசில் இசையை துவக்கினார்.  எந்த ஓசையும் சப்தமும் வரவில்லை. பதட்டத்துடனும், துக்கத்துடன், சுவாமியை பார்த்தார். "சுவாமி! நீங்கள் புட்டப்பர்த்தி அழைத்து, எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, என்று உங்களை அவமரியாதை செய்தேன். இப்போது நீங்கள் வாய்ப்பு கொடுத்தும், எனக்குப் பாட, குரல் இல்லை. சுவாமி, நீங்கள் சாட்சாத் பகவான்! அறியாமல் நான் செய்த இந்த பிழையை மன்னித்து விடுங்கள். ", என மௌனமாக உள்ளத்தில் வேண்டி அழுதார்.

தயைக்கும் பிரேமைக்கும் ரூபம் தாங்கிய பகவான்,ஙகையை உயர்த்தி ஆசீர்வதிக்க, அவரை அறியாமல் நாக்கு சுழன்று, 'ஓம்!' என்ற வார்த்தை வெளிப்பட்டது. உயிர் வந்தது போல மகிழ்ந்த சிவபிரசாத், அடுத்த  ஒரு மணிநேரம் புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், சத்தியசாயி பஜன்களையும், விசில் மூலம் பாடி, பலத்த  கைதட்டல்களுடன், அமர்க்களமாக கச்சேரியை நிறைவு செய்தார். சுவாமி, பல வெகுமதிகளை வழங்கி, சுமார் அரை மணி நேரம், அவருக்கும், அவர் மனைவிக்கும், நேர்காணல் வழங்கினார்.


சுவாமி, சிவபிரசாத்திடம், " பங்காரு! நான் உன் அன்னை. நீ என் குழந்தை. எங்கேனும் தாய் குழந்தையை இன்சல்ட் செய்வாளா ? மேலும், நீ ஊமையாகி குரல் வராமல் தவித்து, என்னை வேண்டிய போது, உன் நாவை சுழற்றி, ஓம் என்று உனக்கு குரலை தந்தது நானே.", என்றார். "நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன். கவலைப்படாதே!", என்றார். சிவபிரசாத் கேட்ட பல கேள்விகளையும், அவரது சந்தேகங்களையும், நிவர்த்தி செய்து பகவான், கிளம்பும்போது நிறைவாக, "குருபூர்ணிமா." , எனக் கூறி சென்றுவிட்டார்.

மிகுந்த சந்தோஷத்துடன் வெளியே வந்த சிவபிரசாத் அவர்களுக்கு, சுவாமி கிளம்பும்போது, குரு பூர்ணிமா என்று ஏன் கூறினார் என்பது மட்டும் புரியவில்லை. அப்போது, சுவாமிக்கு மகா மங்கள ஆரத்தி எடுக்கும் பண்டித சாஸ்திரி  அவர்களை பார்த்தார். அவரிடம் சென்று, சுவாமி குரு பூர்ணிமா என்று தன்னிடம் கூறியதன் பொருள் என்ன எனக் கேட்க, அதற்கு அவர், இந்த விநாடி வரை பௌர்ணமி திதி உள்ளது. ஆகவே, குரு பூர்ணிமா என்று  கூறினார். சுவாமி தான் கூறியபடி, குரு பூர்ணிமா அன்று தன்னை பாட அழைத்து விட்டார். தான் தான் தவறாகப்  எண்ணி விட்டோம் என்பதை புரிந்து  கொண்டார்.
உயர்ந்த தெய்வீகத்தின், பரம்பொருளின், அருகாமையில் தான் இருப்பதை உணர்ந்து கொண்டார், புடம்போட்ட தங்கமாக, உயர் மனமாற்றம் அடைந்தார் , திரு. சிவபிரசாத்.


அன்று,
பாட்டுக்காக, பாண்டிய நாட்டில், ஹேமநாத பாகவதரின் கர்வத்தை மாற்றி திருவிளையாடல் செய்தான், பரமேஸ்வரன்!

இன்று,
பாட்டுக்காக,ஆந்திர நாட்டில், சிவ பிரசாத்தின் தவறான புரிதலை மாற்றி, திருவிளையாடல் செய்தான், பர்த்தீஸ்வரன்!

சுவாமி,
பாட்டும் நீரே!  பாவமும் நீரே!
பாடும் அனைவரையும் பாட வைப்பதும் நீரே!
அசையும் பொருளில் இசையும் நீரே!
எதிலும் இயங்கும் இயக்கமும் நீரே!
எம்பெருமானும் நீரே!

ஆதாரம் : திரு.சிவபிரசாத் அவர்கள் 2013ல் சேலத்தில் ஆற்றிய உரையிலிருந்து...
தொகுத்து வழங்கியவர்: S. Ramesh, Ex-Convenor, Salem samithi.

இவர்  கன்வீனர் ஆக இருந்தபோது, இவரது வேண்டுகோளை ஏற்று, ஹைதராபாத்தில் இருந்து சேலம் வந்து, இரண்டு முறை விசில் இசைக் கச்சேரி நடத்தி, சேலம் சாய் பக்தர்களை மகிழ்வித்த, திரு.சிவபிரசாத் அவர்கள், தனக்காக ஒரு ரூபாய்கூட பெற்றுக் கொள்ளவில்லை என்பதை நன்றியுடன் குறிப்பிடுகிறார், திரு S. ரமேஷ் அவர்கள்.

விசில் விசார்ட்  திரு சிவபிரசாத் அவர்களின் விசில் கச்சேரியின் தொகுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக