தலைப்பு

சனி, 26 செப்டம்பர், 2020

ஆறாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...


6. சாயி இலக்கியங்களை தவறாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும்:

சத்ய சாயி இலக்கியங்கள் பாற்கடலாய் நிதம் பெருகிக் கொண்டு வருகிறது.

சுவாமியின் மகிமைகள் / உபதேசங்கள் / அற்புதங்கள் / வாஹினிகள் என அந்த பேரருட் பேரலைகளில் மூழ்கிட அதன் கரை காண இந்த ஒரு ஜென்மம் போதாது என்பதே பொதுவாக உணர்தல்.

ஸ்ரீமத் பாகவதமும் ... பகவத் கீதையுமே நம் சுவாமியின் இலக்கியங்கள் என்கிற தெளிவும் பேருணர்வும் எழுகிற போது சத்ய சாயி இறைவன் என்னும் பரம சத்தியம் நம் மனித ஆன்மாவில் சென்று எதிரொலிக்கிறது!

சத்யம் சிவம் சுந்தரம் எனும் அற்புதமாய் ஐந்து அத்தியாயங்களும் கடந்து விரிவாய் ஆழமாய் எழுத எழுத நெடும் அத்தியாயங்கள் வாசிப்பவர்களின் இந்த நொடி வரை வளர்ந்து கொண்டே வரும்.

தனியாக வாசித்தல் அக சாதகம்.

கூட்டாக சத்சங்கில் வாசித்தல் இன்னும் அதிக பக்த இதயங்களில் குடி கொண்டு...பக்த இதயங்களை ஆட்கொள்ளும்.

ஸ்டடி சர்கிள் நம் வாழ்க்கை எனும் கோடுகளை இணைத்து முழு ஆன்மீக வட்டமாய் மாற்றும்.

இதில் சுவாமி சொல்வது போல்

சிரவனா ...

மனனா ...

நித்ய சாதனா ...முக்கியமானவை.

சிரவனம் என்பது கேட்டல்.

இப்போது சுவாமி வாஹினிகள் ஒலிநாடாவாகவும் .. யுடியூபிலும் இருப்பதால் கண்களை மூடி மனம் விட்டு எண்ணங்களின் ஓசைகள் இன்றி வாஹினியை நாம் அணு அணுவாய் அனுபவிக்கலாம்.

சத்ய சாயி யுகம் வாட்ஸ் அப் குழுவில் இருப்பதாலும் .. சத்ய சாயி யுகம் பிளாகில் சத்ய சாயி இலக்கியங்களை வாசிக்கும் பழக்கத்தை தினசரி சுவாமி சங்கல்பத்தால் நாம் பழகி வருகிறோம்.

ஆன்மீக வாழ்க்கைக்கு வாசித்தல் பல குழப்பங்களை தீர்க்கும். பல சந்தேகங்களை தெளிவாக்கும்.

சுவாமி மேல் பக்தி இன்னும் ஆழமாகவும் திடமாகவும் மாறும்.

ஒரு யோகி தன் குருவின் ஒரே புத்தகத்தை பல தடவை வாசித்துக் கொண்டே இருப்பாராம்.

இப்படி வாசித்துக் கொண்டே இருக்க ஒவ்வொரு தடவை வாசிப்பிலும் நமது புரிதலும் .. தெளிதலும் பரிணாம வளர்ச்சி அடைகிறது. 

Quantity அல்ல quality யை மட்டுமே சுவாமி விரும்புவது.

ஆக .. அதிகமாய் சுவாமி இலக்கியங்கள் வாசித்தவன் என்ற உணர்வு எந்த நன்மையும் அளிக்காது.

வாசித்தவற்றை கடைபிடிக்கும் போதே ஞானம் ஸித்திக்கிறது.

எனக்கு தெரியும் என்ற நிலையிலிருந்து இது என் அனுபவம் என்ற நிலை அதை வாழ்க்கையில் தினசரி கடைப்பிடிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது.

பக்தியில் Steady ஆவதற்கே சத்ய சாயி இலக்கியங்களை Study செய்ய வேண்டும்.

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி சுவாமியின் லீலா விநோதமும்.. சுவாமி அளிக்கின்ற பரம ஞானமும்..

அட்சய பாத்திரமே பக்தர்களாகிய நம் இதயம் தான் ..

அதை தினசரி தேய்த்து வெளுக்க சுவாமி இலக்கியங்கள் மட்டுமே உதவுகின்றன...

வாசிக்கையில் சிலர் மனதிற்குள்ளும்.. பலர் உதட்டை அசைத்தும் வாசிப்பர்.

சுவாமி லீலைகள் வாசிக்கையில் உடல்/மனம் சிலிர்த்துப் போகும்.. இவை எல்லாமே பக்தி முளைவிடுவதற்கான முன்னேற்பாடுகள் தான்.

சிலர் சுவாமி இலக்கியங்கள் வாசிக்கையிலே கண் கலங்குவர். அப்போது

பக்தி ஆழம் பதிகின்றன .. பக்குவம் தளிர் விட ஆரம்பிக்கிறது ... ஞானம் தன் கிரணங்களைப் பரப்புகிறது.

எப்போதெல்லாம் சத்ய சாயி இலக்கியம் திறக்கப்படுகிறதோ.. அப்போதெல்லாம் இதயமும் திறக்கப்படுகிறது . 

மோட்சங்களுக்கான மலர்விதைகள்

சரணாகத பக்திக்கான தோரணங்கள்

ஆத்ம பசி தீர்க்கின்ற அக சமையல்

பக்குவம் ஏற்படுத்துகின்ற உள்ளொளி வெளிச்சங்கள்

சத்ய சாயி இலக்கியங்கள்.

நவரத்தினம் ஒளிரும்

பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக