தலைப்பு

திங்கள், 14 செப்டம்பர், 2020

உயிர் சேதமின்றி வன்முறையாளர் பிடியிலிருந்து காவலரை விடுவித்த கடவுள் சாயி!


திருமதி. சாரு சின்ஹா IPS. I.G( C.R.P.F) ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் செக்டரின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (CRPF) தலைமை தாங்கும் 👮‍♀️ முதல் பெண் I.G. திருமதி சாரு சின்ஹா  அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!

திருமதி சாரு சின்ஹா. 1996ல் I.P.S. ஆக தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு வயது 26. இந்த இளம் வயதில் அபாயகரமான  பல இடங்களில் சேவை செய்ய களமிறக்கப்பட்ட இவர் ,தம்முடைய சிறப்பான சேவையால் பீஹார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் தீவிரவாதிகளை அடக்கி அவர்களின் செயல்பாடுகளை முடக்கினார். தற்போதுவரை ஜம்மு பிராந்திய C.R.P.F தலைமை அதிகாரியாக இருந்த சாரு சின்ஹா அவர்கள் இப்போது இடமாற்றம் பெற்று காஷ்மீர் ஸ்ரீநகர் பிராந்திய , மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு  தலைமை தாங்கும் முதல் பெண் I.G. ஆக  நியமிக்கப்பட்படுள்ளார். இதன்முலம் காஷ்மீர் பிரதேசத்தில் பணியினுள்ள பல்லாயிரக் கணக்கான C.R.P.F படைக்கு தலைமை வகித்து வழி  நடத்தும் பெருமை பெறுகிறார்.

பெரும்பாலும் ஆண்களே உயர் பதவிகள் வகிக்கும் C.R.P.F போன்ற அமைப்புகளில்,  தீவிரவாதிகளின் தொடர் குறியான காஷ்மீர் மாநிலத்தில் , பெண் ஒருவர் இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு வியப்பான செய்தி அல்லவா? அரசியல் பின்புலமோ மற்ற எந்த வெளி உந்துதலுமின்றி , அவர் எவ்வாறு இப் பதவியை அடைய முடிந்தது? தம் கடமையில் உண்மையும் ,நேர்மையும்,  உறுதியும் கடைபிடித்த அவருக்கு தெய்வபலமும் உறுதுணையாக உள்ளது. ஆம். கலியுக அவதாரமான சத்யசாயி  அவரின் வாழ்விலும், பணியிலும் தொடர் வழி காட்டியாக இயங்கி அவரை ரட்சிக்கிறார். 


இதை, 2010ம் ஆண்டு அவர் அளித்த ரேடியோ சாயி பேட்டியில் உறுதிபட மனம் கசிந்து கூறி , பகவான் சத்ய சாயிபாபாவிடம் தாம் வந்தது எவ்வாறு அவர்   தம்மை  வழி நடத்தியது எப்படி என்பதை விவரமாக கூறுகிறார். இனி திருமதி சாரு சின்ஹா I.P.S. அவர்கள், ரேடியோ சாயிக்கு அளித்த பேட்டியைக் காண்போம்.

🌹அன்புக்கு ஏங்கினேன் ஆண்டவனைத் தேடினேன்:

நான் குழந்தையாக இருந்தபோது அன்புக்காக ஏங்கியதுண்டு. பிறரை ஒப்பிட்டு என்னை தாழ்த்தி பேசும் நபர்களிடமிருந்து நான் ஒதுங்கியே இருந்தேன். துருவன் மாதிரி  தவமியற்றவும், பகவான் மடியில் அமரவும், மற்றும் கிருஷ்ணரை என் நண்பனாக அடையவும்  கனவுகள் கண்டதுண்டு.இந்த ஆன்மீக தேடல் சிறிது சிறிதாக விதையிட்டு, என் 19 ம் வயதில் துளிர்விட ஆரம்பித்தது. 1989 ம் ஆண்டு என் தந்தையுடன் முதல் முறையாக புட்டபர்த்தி சென்றேன். பாபா தரிசனம் கிடைத்தது. ஆனால்  7 ஆண்டு காலம் ஆயிற்று என்  மன இருள், மயக்கங்கள், நம்பிக்கை இன்மை போன்றவை அகல. 1996ம் ஆண்டில் தான் எனக்கு பாபாவின் பூர்ணத்துவம் புலப்பட்டது. அன்று முதல் இன்றுவரை பாபாவின் அருட்காப்பு என்னைத் தொடர்கிறது.


நான் I.P.S. தேர்வு எழுதுவதற்கு 6 மாதங்களுக்குமுன் பாபா எனது கனவில் வந்து கூறியதாவது. "நீ வலிமையாகவும் தகுதி  வாய்ந்தவளாகவும்    இருப்பதால் ஒரு பாதுகாப்பு   வேலையை உனக்கு அளிக்கிறேன்." பாபா வாக்கு பொய்க்காமல்,நான் பிறகு I.P S. தேர்வு செய்யப்பட்டேன். 

🌹ஓடும்போதும் " ஓம் ஸ்ரீ சாய்ராம்" ஒவ்வொரு  செயலிலும் ஓதினேன் சாய்ராம்:

இந்திய போலீஸ் அகாடமியில் எனது I.P.S பயிற்சி ஆரம்பித்தது. பயிற்சியின் கடுமை சொல்லிமாளாது. ஓடுதல், குதித்தல், தாண்டுதல், குதிரை சவாரி இன்னபிற கடினமான பயிற்சிகளை செய்ய எனக்கு துணை இருந்தது   பகவான் சாயி நாம ஜெபம்.

ஒவ்வொரு கடினமான பயிற்சியின் போதும் சாய்ராம் சாய்ராம் என்று ஜெபிப்பேன் , ஒவ்வொர் தரம் ஓடும்போதும் , ஓம் ஸ்ரீ சாய்ராம் என அடி எடுத்து வைப்பேன்.  இறைவனின் நாம ஜெபத்தின் ஈடிலா வல்லமையால் I.P.S. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். பயிற்சி முடிந்து பணி ஆற்றும்போது , பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. உடனிருந்தவர்களின் அங்கீகாரம் அவ்வளவு விரைவில் கிட்டவில்லை. குற்ற வழக்குககளில் விரைவான முடிவுகள் எடுக்க நான் தயங்கினேன். நிரபராதிகள் தண்டிக்கப் படக்கூடாது என்ற  நல்லெண்ணத்தால் , உடனடியான அவசர முடிவுகளை எடுக்கத் தயங்கினேன். இது பணி வட்டாரத்தில் எனக்கு ஒருவித முத்திரையை பதித்தது. இதிலிருந்து விடுபட்டு, நேர்மையான விரைவு முடிவுகளை எடுக்க உதவுமாறு , நான் பாபாவை பிரார்த்தித்தேன். பாபாவின் வழிகாட்டுதல்,  மனத்தில் எனக்கு தெளிவாக விளங்கியது. அது " செயல்களைப் பார்த்து முடிவு எடு, ஆட்கள் பார்த்து அல்ல" இதுவே பிறகு என் வழிகாட்டியாக இயங்கத் தொடங்கியது.

🌹ஐயன் சேவையில் அகமகிழ அனந்தபூர் இடமாற்றம்:


2010 ம் ஆண்டு. காலங்காலமாக நான் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் வந்தது. D.I.G  ஆக பதவி உயர்வு பெற்று அனந்தபூர் வட்டத்திற்கு பணி இட மாற்றம் பெற்றேன். ஆனால் அடுத்த நாளே அந்த இடமாற்றம் ஏமாற்றம் ஆகிவிட்டது. அரசியல் தலையீட்டால்  அங்கு செல்லவேண்டாம் என கட்டளை இடப்பட்டது. அதிர்ச்சியும் , துயரமும் சேர, என் ஒரே துணையான பகவான் பாபாவை பிரார்த்திக்க ஆரம்பித்தேன் பாபாவின் கருணை. திடீரென ஒரு இரவு 10 மணிக்கு அனந்தபூர் இடமாற்றம் உறுதி செய்யப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு அங்கு சென்று பதவியில் சேர உத்தரவிடப்பட்டேன். பதவியில் சேர்ந்த அன்று மாலையே புட்டபரத்தி சென்று, மலர் செண்டுடன் பகவானை வணங்கினேன். பகவான் இன்முகத்துடன் "ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்" எனக்கூறி பாத நமஸ்காரமும் அருளினார். அப்போது எனக்கு தெரியாது , உலக ஆன்மீக சரித்திரத்தின் ஒரு முக்கிய நிகழ்வை நான் பார்க்கப்போகிறேன் என்று.

🌹ஆண்டவனுக்கு அருகிருந்து அணு அணுவாய் ரசித்தேன்:


பின்னர் விடுமுறை நாட்களிலும் மற்ற நேரங்களிலும் புட்டபர்த்தி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். பகவான் எப்போது தம் இருப்பிடக் கதவைத் திறந்து வெளிவருவார் எனக் காத்திருந்து கண் குளிரக் காண்பேன்.சில சமயம் ஏதாவது பேசி அவரது விளக்கம் கேட்டு மகிழ்வேன். பலமுறை மௌனமாக பகவானின் திருக்கோலத்தை ரசித்தபடி இருப்பேன். அவரது திருமுக மண்டலத்தின் நாட்டிய அசைவுகளை கூர்ந்து கவனித்து மகிழ்வேன். அவரது  மோகன புன்சிரிப்பு, தலையை அசைத்து பக்தர்ளை வரவேற்கும் நளினம், பரிவான பேச்சு, கவனமான பரிவு இவைகள் என்னை கவர்ந்தன. இவை மட்டுமா? பாபா  அழைத்ததும்  பக்தர்கள் மூச்சிரைக்க ஓடிவரும் காட்சி, அவர்களின் வியப்பான முகபாவம், ஆனந்தம், கண்களில் நீர்சோர அவர்கள் தம் வாழ்வின் பயன் இதுதான் என்று நெக்குருகும் காட்சி..இவைபோன்ற ஒவ்வொருவரின் அனுபவமும்  அவர்களின் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் என போற்றியதை கண்டு வியப்பேன்.

🌹பாபா கற்பித்த பாடம்:

நாட்கள் செல்லச் செல்ல என் ஆன்மீக பாடங்கள் விரிவடைந்தன. மனம் என்றால் என்ன. அதன் மாயை எத்தகையது. அகம்பாவம்(EGO) என்றால் என்ன? நான் யார்? உடல் மனம் சார்ந்த பிரமையால் நமது தெய்வீகத்தை உணர இயலாமல் போவது ஏன்? இத்தகைய கேள்விகளுக்கு விடை கிட்ட ஆரம்பித்தது. பகவான் கூறுகிறார். உன்னுடைய ஒவ்வொரு செயலையும் அன்பால் முழுமையாக்காவிட்டால் , நீ திரும்ப திரும்ப பிறவிகள் எடுக்கவேண்டி இருக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஜீவராசிகளிடம் நீ எவ்வளவு தூரம் அன்பைப் பகிர்ந்துகொண்டாய் என்பதுதான் முக்கியமே தவிர எதை சம்பாதித்தாய், என்ன சாதித்தாய் என்பது அல்ல. ஸ்வாமியின் கருணை அளவற்றது. என் பெற்றோர்களின் நலம் பற்றி அக்கறையோடு விசாரிப்பார். ஒரு Home Guard ஆன அபலை விதவைப் பெண்ணின் துயரம் பற்றி கூறி அவளுக்கு என்னிடம் விபூதி பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார். நான் எப்போது பிறர் துயர் பற்றி பேசினாலும், அதற்கு முன்பே தயாராக  சரியான எண்ணிக்கையில் விபூதி பாக்கெட்டுகளை  தம் கையில் பாபா வைத்திருப்பார். என் வாழ்க்கையின் பிரச்சனைகளையும், என்னை சுற்றியுள்ளவர்கள் பற்றியும் ஒரு குழந்தை மாதிரி பகவானிடம் முறையிடுவேன். முறையிட்ட திருப்தியுடன் , முடிவை பற்றிய கவலைகளை மேற்கொள்ள மாட்டேன். இந்த கால கட்டத்தில் நான் பேச நினைத்தவை அனைத்தையும் பகவானிடம் முறையிட்டுவிட்டேன். தவறு செய்பவர்களைக் கண்டால் சட்டென்று கோபம் கொள்ளும் என் சுபாவத்தை, பகவான் தமக்கே உரிய முறையில்  அறிவுரை கூறி திருத்தினார்.  இதை என் பாக்கியமாக கருதுகிறேன்.

🌹வன்முறையாளர்கள் இடமிருந்து காவலர்களை மீட்ட சாயி இறைவன்:


ஒருமுறை பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை சிறைபிடித்துச் சென்ற வன்முறையாளர்கள்.. நியாயமற்ற நிபந்தனைகள் வைத்திருந்தனர்...
அதை ஏற்க முடியாத உயர் அதிகாரிகளோடு இவரும் பணியில் இருந்தார்.
இப்படி நிறைய சம்பவம் நிகழும் போது பிணை கைதிகளால் பிடிபட்ட காவலர்கள் பிணமாகக் தான் வருவர். இந்த முறை விடாது பத்து நாட்கள் பாபாவிடம் பிரார்த்தித்த சாரு சின்ஹா பத்தாவது நாள் ஒரு பேரற்புதத்தைக் கண்டார்.. ஆம் பிணையாகப் பிடிக்கப்பட்ட அந்த பத்து பேர்களும் காரணமே இன்றி வன்முறையாளர்களால் விடுவிக்கப்பட்டு காட்டுப் பகுதிகளின் வெளியே உயிரைக் கையில் பிடித்து வருகின்றனர். இது சரித்திர சம்பவத்திலேயே நிகழாத ஒரு அற்புதம் என சிலிர்த்த படி கூறியிருக்கிறார்.

ஆரம்பப் பணிகளில் மிருக குணங்களோடு இருக்கும் வன்முறை மனிதர்களின் மேல் நேரடியாக நிறைய கோபம் இருந்தாலும்.. பாபாவின் "Love the human not his Deeds" (மனிதரை நேசி அவன் செயலை அல்ல") எனும் சத்தியத்தை உணர ஆரம்பித்து .. பற்றின்றி தன் கடமையை மட்டும் செய்து வந்திருக்கிறார்.


ஒருமுறை சாரு சின்ஹா அவர்களின் உயர் அதிகாரி ஒருவரால் பணியில் இவர் புறம் தள்ளி சிறுமைப்படுத்தப்படுவார் என்பதை முன்கூட்டியே இவரின் அமெரிக்கா நண்பரிடம் பகிர்ந்து அதை தெரிவிக்கும் படி சொல்லி..
அந்த நேரத்தில் சுவாமி கூடவே இருப்பதாகவும்.. அந்த வீண் பழி எனும் கம்பே அந்த உயர் அதிகாரி மேல் பூமராங்காய் திரும்பும் எனச் சொல்லியும்...
அந்த உயர் அதிகாரியின் உடல் தோற்றத்தை விவரித்திருக்கிறார் பாபா.
இதை அறிந்து.. தனக்கு வரப்போகிறவற்றை முன்கூட்டியே தெரிந்தபடியால் பதட்டமடையாமல் அந்த எரிமலைத் தருணங்களை அமைதியாய் சாயி ராம் என உள்ளம் நிரம்ப அணுகி இருக்கிறார்.

ஒருமுறை சுவாமி நீ எங்கிருக்கிறாய் என ஒரு எண்ணம் மனதின் முன்னுக்கு வர..அந்த கணமே இவர் வாகனத்தின் முன் சென்ற சேவைக்கான தண்ணீர் லாரியியின் முதுகில் "சத்ய சாயி பாபா 24/7" என எழுதி இருந்ததை வாசித்துப் புல்லரித்துப் போயிருக்கிறார்.

ஆதாரம்: Radiosai's Heart 2 Heart | CONTINUING THE JOURNEY FROM ME TO MYSELF By Ms. Charu Sinha, IPS
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம் ஐயா மற்றும் கவிஞர். வைரபாரதி

🌻 எங்கிருந்தோ வந்தான் கண்ணன்.. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்ற பாரதியார் கவிதைக்கேற்ப , பகவான் திருமதி சாரு சின்ஹாவின்  வாழ்வில் தாயாய் , தந்தையாய் , நண்பனாய், குருவாய், தெய்வமுமாகி வழி காட்டிய அற்புத கருணை நீட்சியை கண்டோம். இவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் மூலம் வாசிப்பவர்கள் இரண்டு சத்திய அம்சங்களை உணர வேண்டும்.ஒன்று எந்தவித கோப தாபங்கள் இன்றி ... பற்றின்றி நம்முடைய கடமைகளை ஆற்றுவது.. இரண்டாவது மனிதரை நேசிப்பது அவர்களின் செயலை அல்ல...என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டு அந்தச் செயலை இறைவன் சத்ய சாயி பாதங்களில் நீயே யாவையும் செய்ததென சமர்ப்பித்துவிட வேண்டும். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக