தலைப்பு

சனி, 9 மே, 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருதேவ்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                              - இறைவன் ஸத்ய ஸாயி

வாழும் கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருதேவ்:

"ஓ வந்துட்டியா வா" என அழைத்தார். அப்படித் தான் அவர் அடியேனைப் பார்த்த மாத்திரத்தில்... முதன்முதலில் அழைத்தது...

சிறுவயதிலிருந்தே சிவானந்தரின் புத்தக யோகா செய்து கொண்டிருந்தவனுக்கு குரு வழி யோகா கற்பது அலாதி ஆனந்தத்தை அளித்தது..

வெறும் யோகா ஆசிரியர் என அவரை நினைத்துக் கொண்டிருந்த அடியேனுக்கு ஆச்சர்யங்கள் ஒவ்வொன்றாகக் காத்துக் கொண்டிருந்தது.

ஒரு சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவரை எங்கேயோ பார்த்த முகம் போல் தோன்ற.. அதுவரை பார்த்ததில்லை ஆயினும்.. ஓர் உந்துதலில் உள்ளே சென்று பெயர் பதிந்து வாழும் கலை யோகம் பயின்றேன்.

அப்போது வருடம் 2000. அடியேனுக்கு வயது 16.


சுதர்ஷன் கிரியா மிக சுலபமான அதே சமயம் சக்தி பூர்வமான பிராணாயாமம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உள்முக அனுபவம். இன்றும் தொடர்கிறது..

அவர் பெயர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்..
குருதேவ் என்றும் ஸ்ரீ ஸ்ரீ என்றும் அழைப்போம்.

சிதார் ரவிசங்கர் பெயர் குழப்பத்தில் அடியவர்கள் ஸ்ரீ ஸ்ரீ என்று நீட்டிக் கொண்டே போயினர்..
குருதேவர் சிரித்து இரண்டு போதுமென்றார்.

அந்த வைபவ சம்பவத்தில் அடியேன் கூட இருந்திருக்கிறேன்.

ஒரு ஸ்ரீ அவரைப் பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்மா
இன்னொரு ஸ்ரீ இந்தப் பிரபஞ்சத் தாய் சத்ய சாயி அம்மா



இப்படியே அடியேன் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

குருதேவரின் மேல்  காதல் வர முதல் காரணம் சுதர்ஷன் கிரியாவையும் தாண்டி அவர் இறைவன் சத்ய சாயியின் பாலவிகாஸ் மாணவர் என்பதே...

ஆம் சுவாமியின் குழந்தை அவர்.
அவர் வழியே தான் அந்த சுதர்ஷன் கிரியா எனும் யோக முறை பூமியில் இறைவன் சத்ய சாயியால் நிறுவப்பட்டது.

பலருக்குப் பல தெய்வ தரிசனம் கிடைத்திருக்கிறது.. சுதர்ஷன் கிரியா வழியாக... நேரடியாக பலர் பேசிக் கேட்டிருக்கிறேன்.
தீவிரவாதிகள் திருந்தி அமைதி வடிவாக பேசிடும் நேரடி காட்சிகள் நிறைய பார்த்திருக்கிறேன்.
வியந்திருக்கிறேன்.

W.H.O ஆய்வில் சுதர்ஷன் கிரியாவை ஆய்வு செய்ததில் அது மூளைக்கு புது வித படைப்பாற்றல் மிகுந்த அணுவை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். படித்திருக்கிறேன்.

எழுத்தின் பரிணாமத்திற்காகவே என் இறைவன் சத்ய சாயி அடியேனை அதை கற்க அனுமதித்தார் என்பது புரிந்தது...

முன்ஜென்ம கர்மா கூட அழிக்க வல்லது சுதர்ஷன் கிரியா..
எப்படி எனில்..
கர்மாவின் வாகனம் மனம்.
மனம் என்பது எண்ணக் குவியல்.
சுவாசம் என்பது எண்ணத்தை நாசம் செய்யும் சூட்ச்சுமக் கருவி...


சுவாசம் அடங்க மனம் ஒடங்கும்.
மனம் ஒடுங்க கர்மா அடங்கும்.

இப்பேர்ப்பட்ட சுவாமியின் பாலவிகாஸ் மாணவரான குருதேவர் கும்ப கோணம் பாபநாசத்தில் (மே 13-- 1956) பிறந்தார்.
அந்த இடத்திற்கு.. அவர் பிறந்த அதே வீட்டிற்கு வாழும் கலையைக் கற்ற அதே ஆண்டு சென்றிருக்கிறேன்.

அது ஒரு அக்ரஹாரம். அக்கம்பக்கத்து வீட்டாரோடு பேசி இருக்கிறேன்.
ஆதி சங்கர ஜெயந்தியில் ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் குருதேவருக்கு ரவி சங்கர் எனப் பெயரிட்டனர்.

அந்தப் பெயரிட்ட போது ராமானுஜ ஜெயந்தியும் கலந்திருந்தது தெய்வீக ஆச்சர்யமே.

பிறந்த பொழுதே அபார தேஜஸோடு விளங்கி இருக்கிறார்.
எப்போதும் சாந்தம். அழுது அடம் பிடிக்கும் குழந்தை போலன்றி பரம சாந்த சுபாவமாகவே திகழ்ந்திருக்கிறார்.


தந்தை (ஆச்சார்ய ரத்னானந்தா) பூஜை செய்வதைப் பார்த்துப் பார்த்து .. இரண்டு வயதில் தானும் சாளகிராமத்திற்கும்.. சிவலிங்கத்திற்கும் பூஜை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தந்தை தியானம் செய்வதைப் பார்த்து.. தானும் செய்யலாமா எனக் கேட்க.. செய்யேன் என தந்தை சொல்ல..
தியானம் செய்கிறார்‌.
தந்தை கண் திறந்த பிறகும்.. இவர் கண் திறக்கவில்லை.. நீண்ட நேரம் கழித்து கண் திறந்த குருதேவரைப் பார்த்து தந்தையார்..  கடவுளோடு என்ன பேசினாய் எனக் கேட்க..

"உலகத்தில் பிச்சைக்காரர்களே இருக்கக் கூடாது எனக் கேட்டேன்" என்கிறார் குருதேவர்.

தாய் கடவுளுக்கு உணவு நெய்வேத்யம் கொடுத்த பின்னரே உண்பாள்.. அதைப் பார்த்தே தானும் அதைப் போலவே இறைவனுக்குப் படைக்காமல் எதையும் உண்ணுவதே இல்லை..

குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் வாங்கலாமே என முடிவு செய்து ...  என்னடா வேணும் கண்ணா  என்றால்..
சிவலிங்கத்திற்கு சூலம் வேண்டும் என்பார்.. நாகாபரணம் வேண்டும் என்பார் தனது பெற்றோர்களிடம்..

தனக்கென்று குருதேவர் எதையும் கேட்டுக் கொண்டதே இல்லை...

இன்று வரை ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் ருத்ர பூஜை செய்து கொண்டும் வருகிறார்.
ஒரு ருத்ர பூஜையில் அடியேன் அவருக்கு கைங்கர்யம் செய்யும் மகா பாக்கியமும் இறைவன் சத்ய சாயி வழங்கி இருக்கிறார்.

தங்கையை அம்பாள் போல் அமர்த்தி அவர்களின் மேல் பூக்களை அள்ளி குருதேவர் பூஜை செய்திருக்கிறார்.
குருதேவருக்குப் பிறந்த கொடுத்து வைத்த தங்கை பானுமதி அவர்கள்.


இன்று வாழும் கலையில் தியான ஆசிரியராகவும் பலருக்கு உள்ளொளி எழுப்பி வருகிறார்.

இவரின் தாயின் முகம் பார்த்தாலே தெய்வாம்சம் பொருந்தியாக அமைந்திருக்கும். சுவாமி பக்தை அவர்கள்.

காசியில் சென்று... கங்கா ஸ்நானம் புரிந்து... விரதம் இருந்து ... பூஜை செய்து வேண்டிக் கொண்டு பிறந்ததால் குருதேவரின் தாய்க்கு காசி தெய்வமான விசாலாட்சி எனும் பெயரைச் சூட்டினர்.

நான்கு வயதான குருதேவருக்கு பால வகுப்புகள் எடுத்தனர்.
பால விகாஸ் வகுப்புகளுக்கும் குழந்தையை அழைத்துக் கொண்டு தாய் விசாலாட்சி  செல்வார்.


ஒரு முறை ஆசிரியர் பகவத் கீதை ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தவுடன் நான்கே வயதான குருதேவர் கட கட வென கீதையை ஒப்பிக்க ஆரம்பித்தார்..

மிரண்டு போனார் ஆசிரியர்.
எப்படி தெரியும் எனக் காரணம் கேட்க..
எனக்கு தெரியுமே என மழலை மொழியில் மகிமை பேசி இருக்கிறார் குருதேவர்.

ஒன்பது வயதில் ரிக் வேதம் முழுவதையும் கற்கிறார்.
பதினான்கு வயதில் வேத ஞானத்தில் பி.எச்.டி முடிக்கிறார்.
யோக சிரோன்மணி என்ற பட்டமும் பெறுகிறார்.

உலகம் எனக்காக காத்திருக்கிறது என அடிக்கடி தன் தந்தையிடம் சொல்வார் குருதேவர். இதைத் தந்தையாரே பேசுகிற காணொளி இன்றளவும் யூடியூபில் இருப்பதை காணலாம்..


முன் ஜென்ம ஞானம் சிறு வயதிலேயே திறந்து கொண்டது குருதேவருக்கு.

அவர் ஜோதிர் மடத்து ஆச்சார்யரான பிரம்மானந்த சரஸ்வதி மகராஜின் (20 டிசம்பர் 1868 -- 20 மே 1953) மறு பிறவி என்று வாழும் கலை வகுப்பில் அடியேனுக்குச் சொல்லப்பட்டது..


கூகுள் இல்லாத காலம் அவை...
அவர்கள் (ஆசிரியர் காஞ்சனா மற்றும் நாகராஜன்)  காட்டிய புகைப்படத்தில் அப்படியே குருதேவரைப் போலவே பிரம்மானந்த சரஸ்வதி இருந்ததை எண்ணி பிரம்மித்தே போயிருக்கிறேன்..

பிரம்மானந்த சரஸ்வதிக்கு தினமும் பிக்ஷா வந்தனம் செய்யும் பெண்மணி குருதேவர் காஷ்மீரில் வாழும் கலை வகுப்பு எடுக்கையில் வந்திருக்கிறார் ஒரு மூதாட்டியாக..

அப்போது ... போன ஜென்மத்து விஷயங்களை அம்மூதாட்டியோடு பேச.. அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்களை குருதேவரே மொழிய கண் கலங்கி காலடி விழுந்து வணங்கி இருக்கிறார் அந்த மூதாட்டி...


குருதேவர் தனது பூர்வ ஜென்ம ஆன்மிக வாசனையால் தியானத்தில் ஆழ்வது அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சாதாரண குழந்தை போலன்றி அவரின் ஞானமும் சாந்தமும் நாள்தோறும் பெருகி வந்தது.

தனது 19 வயதில் முதிர்நிலை விஞ்ஞான கல்வியும் கற்கிறார்.

உலகம் அவரை வேத வேதாந்த உபநிஷத் குறித்த உபன்யாசம் ஆற்ற அழைத்தது...
தனது எளிமையான அணுகுமுறையாலும்.. தெளிவான உபன்யாசத்தாலும் பலரின் சந்தேகங்களைப் போக்கி வந்தார்.

உலக வேதாந்த மாநாடு மற்றும் கும்ப மேளா நடை பெற்ற சமயத்தில் மகரிஷி மகேஷ் யோகியை சந்திக்கிறார்.

இவரே தனது குருவான பிரம்மானந்த சரஸ்வதி எனப் புரிந்து கொண்டார் மகரிஷி மகேஷ் யோகி.

அப்போதே குருதேவர் தியான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருந்தாலும் .. வாழும் கலை நிறுவனமும்.. சுதர்ஷன் கிரியா பேரனுபவமும் நிகழ்ந்திருக்கவில்லை..

மகரிஷி மகேஷ் யோகி  குருதேவரான ரவிசங்கருக்கு சரிசம ஆசனம் வழங்கி குரு வணக்கமாக அவரோடு பல மணி நேரம் உரையாற்றுவார்.
பல ஆன்மிக விஷயங்களுக்கும்.. செயல்களுக்கும் குருதேவருக்கே முன்னுரிமை வழங்குவார்.


சில நாட்கள் மகரிஷியோடு தங்கி இருந்த குருதேவர்... பல மகான்களையும் தரிசனம் செய்கிறார்..
நீ உலகத்திற்காக தோன்றியவன் எனப் பல மகான்கள் அவருக்கு ஆசிகள் வழங்கி அனுப்புகின்றனர்.

மாதா ஆனந்தமயி அவர்களை தரிசனம் செய்ய அவரின் ஆசிரமம் வருகிறார்.
மாதாவோ காரில் எங்கோ பயணம் செய்ய ஆரம்பிக்க.. குருதேவர் ஓடிக் கொண்டே பின் தொடர..

கார் நிற்கிறது..

ஓ.. தூய ஆத்மா .. நீ கங்கையைப் போன்றவன்.. என்னை ஏன் பின் தொடர்கிறார்.. போ.. போய் பாய்ந்து உலகத்தைத் தூய்மைப் படுத்து என்கிறார்..

ஹரித்வார் அனுபவம் இது.

இதைத் தொடர்ந்து காசிக்கு சென்று அங்கே சிறிது காலம் தியானத்தில் அமர்ந்து.. இடுகாட்டை அவ்விடத்தில் காட் என்பர்.
அங்கே மரண தகனத்தை.. உடல் எறிவதை எல்லாம் நேரடியாகக் கண்ணுறுகிறார்.

இதுவும் ஒரு வகை ஆன்மிகப் பயிற்சி..
தன்னிடம் புதிய சீடராக வருகின்ற ஒவ்வொருவரையும் ஆறுமாதம் சுடுகாட்டில் இருந்துவிட்டு வா என்பார் பகவான் புத்தர். அதைப் போன்ற உள்முகப் பயணத்திற்கான உறைகல் இது.

பிறகு குருதேவர் ஷிமோகா எனும் மலைப் பகுதியில் ஓர் குகையில் பத்து நாட்கள் மௌனத்திலும்.. தியானத்திலும் ஆழ்கிறார்.

பிரம்மானந்த சரஸ்வதியாக வாழ்ந்த தனது முற்பிறவியிலும் இவர் குகையில் தவம் செய்தபிறகே சன்யாசம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த ஜென்மத்தில் அந்த ஷிமோகா குகையிலேயே இறைவன் சத்ய சாயி அவருக்கு ஓர் பேரனுபவம் நிகழ்த்துகிறார்..

ஆம் ...அவருக்கு சுதர்ஷன் கிரியா எனும் சூட்ச்சும பேரனுபவம் ஏற்படுகிறது.

என்னுள் ஓர் கவிதையைப் போலது நிகழ்ந்தது என்கிறார் பிற்காலத்தில் குருதேவர்.


1981 ம் ஆண்டிலிருந்து வாழும் கலை ஆரம்பிக்கப்பட்டு சுதர்ஷன் கிரியா எனும் பேராற்றல் கீற்றின் ஆன்மிக சாதனை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கப்படுகிறது..

உடம்பிலிருந்து ஆன்மா வெளியே வந்து அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. வெளியை தரிசிக்க முடிந்தது.. உடம்பு கீழே கிடப்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.. இது அடியேனுக்கு 16 வயதில் சுதர்ஷன் கிரியாவால் நேர்ந்த சத்திய அனுபவம்.

மயக்கமில்லை.. கனவு இல்லை.. மூச்சு ஒடுங்க.. மனதை மூச்சு கரைத்து உடம்பை பிரபஞ்ச இயக்கத்தில் விட்டுவிட கிட்டிவிடும் எளிய சூட்ச்சுமப் பயிற்சியே!

இன்னமும் அந்த முதல் பேரனுபவம் நினைவிலிருக்கிறது.
நாம் உடம்பில்லை எனும் முதல் ஞானக் கதவு அடியேனுக்குத் திறந்தது கிரியாவே.

பலர் குருதேவர் ரவிசங்கரை மகரிஷி மகேஷ் யோகியின் சீடர் எனத் தவறாக கருதுகின்றனர்.. இருபது ஆண்டு கால கிரியா சாதனையாலும்.. குருதேவருடனும் ‌..பல அணுக்க பக்தர்களுடனும் பழகும் வாய்ப்பு பெற்றதாலும்... மேற் சொன்ன அரிய விஷயங்களை மிகத் தெளிவாகப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

குருதேவர் ரவிசங்கரின் பூர்வ ஜென்ம சீடரே மகரிஷி மகேஷ் யோகி அவர்கள்.
ஆழ்நிலை தியான நிறுவனர் அவர்.

இறைவன் சத்ய சாயியை குருதேவர் மார்ச் 24 -- 2008 ஆம் ஆண்டு 10.30 மணி அளவில் குல்வந்த் ஹாலில் தரிசிக்கிறார்.


மகான்கள் பெரும்பாலும் இறைவன் சத்ய சாயியை தியானத்திலும்.. ஆன்மிக சாதனையிலுமே தரிசிப்பார்கள்.. உள்ளுணர்வு மொழியால் உரையாற்றுவார்கள்.

சிலபோதே பாபாஜி போல் உடல்வழி தரிசனம் பெற வருவார்கள்.

வணங்கி..சிறிது நேரம் உரையாடி விட்டு பிரத்யேக விமானத்தில் திரும்புகிறார்.

வெறும் யோகா ஆசிரியராக மட்டுமே குருதேவர் இருந்திருப்பாரெனில் ஆசனங்களை மட்டுமே கற்றுத் தந்து .. அதில் வளைய .. நெளிய வைத்து வித்தைக் காட்ட வைத்திருப்பார்.

யோக ஆசனம் அஷ்டாங்க யோகத்தின் ஓர் அங்கம் மட்டுமே.. தியான சூழலை உடலுக்கு ஏற்படுத்த வேண்டியே ஆசனங்கள்.

சுதர்ஷன் கிரியா தியானத்திற்கான தடங்கல்களை விலக்கி விடுகிற ஒரு அதி உன்னதப் பயிற்சி.

அடியேன் குருதேவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். கவிதை வாசித்திருக்கிறேன். அவரோடு நடனமாடி இருக்கிறேன்.
ஒருமுறை குருதேவரிடம் "ஏன் நீங்கள் சுதர்ஷன் கிரியாவை இலவசமாகக் கற்றுத் தரவில்லை?" எனக் கேள்வி கேட்டேன்..

அதற்கு குருதேவர் "இலவசத்தை உலகம் மதிப்பதில்லை.. இலவசமாகக் கற்று தந்தால் இந்தக் காலத்தில் மக்களுக்கு commitment ஏற்படுவதில்லை.. ஆறு நாள் வகுப்புக்கு.. இரண்டு நாள் வருகிறார்கள்.. குறித்த நேரம் வரவேண்டிய வகுப்பிற்கு வர மறுக்கிறார்கள். அவர்களின் போக்கில் போய் தான் அந்த ஞானத்தை வழங்க வேண்டி இருக்கிறது" என்றார்.

எதார்த்தமான உண்மை இது.

உங்களின் இலட்சியம் என்ன? என ஒரு நிருபர் குருதேவரைக் கேட்க ...
எனக்கென்று எந்த இலட்சியமும் இல்லை.. எதையும் நான் பெறுவதற்காக இந்த உலகில் வரவில்லை.. பகிர்ந்து கொள்வதற்காகவே வந்திருக்கிறேன் என்றார்.

அடியேனின் கவிதைப் புத்தகமான தூரிகை அம்புகளை குருதேவரே தொட்டு அருள் வழங்கி பெங்களூர் ஆசிரமத்தில் அடியேனை அச்சில் ஏற்றும்படி ஆசி வழங்கினார்.


அந்தப் புத்தகமே பிற்காலத்தில் அடியேன் திரைத் துறையிலும் நுழைவதற்கு ஒரு தோரண வாயிலாக அமைந்தது.

இறைவன் சத்ய சாயி பற்றி குருதேவர் மொழிந்த வாசகம் மறக்க முடியாதவை..

தான் குறித்த நேரத்திற்கு முன்பே சுவாமி உடலை விட்டு பயணப்பட்டிருக்கிறார் என்றால் விரைவாக தனது அடுத்த அவதாரத்தை எடுத்து வருவார் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று சுவாமி பக்தர்களான சில சுதர்ஷன் கிரியா பயிற்சியாளர்களிடம் அறிவித்திருக்கிறார்.

மகா சமாதி என்பது இறைவன் சத்ய சாயி நிகழ்த்திய ஒரு லீலா நாடகம்.
அடுத்த பிரவாகத்திற்கான ஒரு குடமுழுக்கு..

இரண்டு வசனத்திற்கு நடுவே விடும் மௌனம் போல்..
இரண்டு வாக்கியத்திற்கு நடுவே இடும் முற்றுப்புள்ளி போல்..
இறைவன் சத்ய சாயியின் மகா சமாதி லீலா நாடகம்.

அந்த நேரம் சுவாமிகள் சத்யோஜாதா மற்றும் விஷ்ணு பாதா அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

ஜெர்மனியிலிருந்து குருதேவர்..
பாபா மீண்டும் ஆறு வருடம் கழித்து மாண்டியாவில் பிறப்பார் ... சமூக வாழ்க்கையில் அவதாரப் பிரகடனத்தோடு தரிசனம் தர தனது பதினெட்டாவது வயது முதல் தெரிய வருவார் எனத் தெள்ளத் தெளிவாய் திருவாய் மொழிந்திருக்கிறார்.


இதை வாழும் கலையான தனது இணைய தளத்திலேயே பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

2011 ம்ஆண்டு குருதேவர் தந்த திருச்செய்தி இது...

குருதேவர் பரிபூரண ஞான விழிப்பு நிலை அடைந்தவர்.
அவர் தியான அமைதியில் புத்த அம்சத்தையும்..
அவரின் தோற்றப்பொலிவில் ஏசுவையும்...
அவரின் குழந்தைத்தனமான விளையாட்டில் இறைவன் சத்ய சாயி கிருஷ்ணரே அவரை உள்ளிருந்து இயக்குகிறார் என்பதையும் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

ஒருமுறை தந்தையார் எப்படி நீ அப்படிப் பேசினாய் எனக் கேட்க.. நான் எதையும் பேசுவதில்லை.. அதுவாக வெளிப்படுகிறது என்றிருக்கிறார்.

அந்த உள்ளாற்றலே இறைவன் சத்ய சாயி.


"இந்த சம்பந்தம் வேண்டாம்" என ஜாதகத்தைத் திறந்து பார்க்காமலேயே தூக்கி வீசி எறிந்தார் என்றார் ஒரு வாழும் கலை ஆசிரியை .. இந்தச் சம்பவம் கேட்ட அடியேன் புதிராய் வியந்தேன்.. அலசி ஆராய்ந்து விசாரித்த பிறகு தான் தெரிந்தது அந்த மாப்பிள்ளை ஏமாற்றுக்காரன் .. ஏற்கனவே திருமணம் ஆனவன் என்று .. என அந்த ஆசிரியைச் சொல்லி.. குருதேவரே என் வாழ்க்கையைக் காப்பாற்றியது என்றார்..
இப்படிப் பல அனுபவங்கள் அடியேன் கேட்டிருக்கிறேன்.

"கடவுள் என்னோடு இருக்கிறார்...இந்த நொடியில் இருக்கிறார்..இதை ஆழமாக உணர... இதைவிட ஆனந்தப்பட வேறொன்றும் வாழ்வில் இல்லை என்று
இந்த ஆனந்த லயிப்பிலேயே  உங்களின் எல்லா வேண்டுதலும் நிறைவேறுவதை நீங்கள் நிதர்சனமாக கண்முன் காண்பீர்கள்"

"கோபத்தை கஞ்சத்தனமாகவும்
புன்னகையை ஊதாரியைப் போலவும் செலவு செய்யுங்கள்"

இது குருதேவரின் ஞான மொழிகளில் சில...

"இந்த நொடியில் வாழுங்கள்"
"அந்தந்த சூழ்நிலையை குறைபடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்"
"அந்தந்த மனிதர்களின் சுபாவங்களை குறை கூறாமல் அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்"
"பொறுப்புணர்வே சக்தியைத் தரும்"
என்பவை வாழும் கலையின் சில ரகசிய ஞானச் சாவிகள்..

ஸோஹம் (சுதர்ஷன் கிரியா)  பயின்றால் உங்கள் சோகம் வெறும் கற்பனை எனப் புரிய வரும்.

ஸோ (அதுவே) ஹம் (நான்)
ஆம்.. அந்த அதுவே இறைவன் சத்ய சாயி.
அந்த உள்முக இறைவனே சத்ய சாயி .. நாளை உதித்து ஜொலித்து உயிர்களுக்கு எல்லாம் உள்ளொளி தரப் போகிற பிரேம சாயி..

ஜெய் குரு தேவ்
ஜெய் பிரேம சாயி ராம்

   பக்தியுடன்
 வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக