தலைப்பு

செவ்வாய், 12 மே, 2020

சாயி கிருஷ்ணாவின் குடும்பம் பகவானின் பொற்பாதங்களுக்கு கொண்டுவரப்பட்டது!


தன் மேல் நம்பிக்கை உடையவர்களிடம் அதிக நம்பிக்கையை உண்டாக்குவதும்.. நம்பிக்கையே இல்லாதவர்களிடம் பக்தி வரவழைப்பதுமே இறைவன் சத்ய சாயியின் இந்த அவதாரத்து மகிமை. அதில் ஒரு நற்சான்று இதோ...

2000ம் ஆண்டு ஒருநாள் இரவு 11.30க்கு அவருடைய தந்தையார் ஒரு பெரிய விபத்தில் சிக்கி மண்டை எலும்பில் முறிவு ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்குடன் யாரோ ஒரு நல்லவரால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை எல்லாம் செய்த பிறகு நிலைமை தீவிரமாகவே இருந்தது. அந்த நல்ல மனிதர் (ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்) அடிபட்டவர்கள் குடும்பத்திற்கு அதிகாலை 3 மணிக்கு தெரிவித்தார். சாயி கிருஷ்ணாவும் அவரது தாயாரும் ஆஸ்பத்திரிக்கு ஓடினர். படுக்கையில் இருந்த அவரது தந்தை காலை 5 மணிக்கு படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தார். அவரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். மருத்துவர்களும், நர்சுகளும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். அவர் சாதாரண ஆரோக்கியமான மனிதரைப் போல் காணப்பட்டார். மறுநாளே அவர் படுக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையின் வாயிலில் ஒரு பெரிய சத்யசாயி புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இருந்த மற்றொரு நோயாளி, சாயியின் தெய்வீகத்தை பற்றி விவரித்தார். ஆனால் சாயி கிருஷ்ணாவின் தந்தை நம்ப மறுத்தார். மேலும் சாயியைப் பற்றி கடுமையாகவும் பேசினார். சாயி கிருஷ்ணாவின் தாயார் வீட்டில் இறைவன் சத்ய சாயியை வழிபட ஆரம்பித்தார். இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை நடக்க ஆரம்பித்தது. ஒருநாள் தந்தை, தாயாரின் மேல் தனது தட்டை கோபத்தில் தூக்கி எறிந்தார். அன்று இரவு தாயாரின் கனவில் சாயி தோன்றி, "பங்காரு நீ குடும்பத்தோடு புட்டபர்த்திக்கு வா. நான் உன் குடும்பத்தின் வருகைக்காக காத்திருக்கிறேன்" என்றார். ஆச்சரியப்படத்தக்க வகையில் தந்தையும் புட்டபர்த்தி வருவதற்கு ஒத்துக்கொண்டார்.


2001 ஆம் ஆண்டு அனைவரும் சுவாமியின் தரிசனத்திற்காக புட்டபர்த்தி வந்தனர். அவர்களுக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தது. சாயி தந்தையின் அருகில் வந்து, அவரை மட்டும் நேர்காணல் அறைக்கு அழைத்தார். சுவாமி, அவரிடம் மிகவும் அன்புடனும், பாசத்துடனும் பேசினார். சுவாமி, தன் உள்ளங்கையில் ஒரு காயத்தை காண்பித்து "அன்று ஒரு நாள் தட்டு ஒன்றை உன் மனைவியின் கையில் வீசி எறிந்தாய் அல்லவா? அந்த வலியை நான் வாங்கிக் கொண்டேன். இப்படியா உன் மனைவியை நடத்துவாய்? இதுதான் குடும்பத் தலைவனுக்கு அழகா? உன் மனப்பாங்கை உடனே நீ உடனே மாற்றிக் கொள்ள வேண்டும். உனக்கு, என் மேல் கோபம் இருந்தால் என்னை திட்டி விடு! ஆனால் உன் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் நான்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உன்னை நான் விரும்புகிறேன் பங்காரு! ஏனெனில் நீ ஏழைகளுக்கு சேவை செய்கிறாய். நீ கட்டாயம், நிச்சயமாக உன் கோபத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். செய்வாயா?" என்றார். தந்தை மனமுடைந்து சுவாமியை கெஞ்சி மன்னிப்பு கேட்டார். சுவாமி அவர் கையைப் பற்றி "என் அருகில் உன் மொத்த குடும்பமும் புட்டபர்த்தியில் வந்து வசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். உன் குடும்பம் மெல்ல மெல்ல எனக்கு நெருக்கமாகி விடும். நான் உன் குடும்பத்தை கைவிட மாட்டேன்" என்றார். அன்று முதல் அந்த குடும்பத்திற்கு பின்னடைவு என்பதே இல்லை! சுவாமியின் தன்னலமற்ற அன்பு, மொத்த குடும்பத்தையும் அவர் திருவடிகளிலே கட்டிப்போட்டு விட்டது எனலாம்!!!


🌻தன் பக்தர்களுக்கு வரும் இன்னல்களைத் தானே தாங்கிக் கொள்வதும் .. அவ்வாறு இன்னல் செய்தவர்களையும்  பக்தர்களாக தன் காலடியில் வாங்கிக் கொள்வதும் இறைவன் சத்ய சாயியைத் தவிர வேறெவராலும் சாத்தியமில்லை... 🌻

ஆதாரம்: Sai Chandana, p30
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக