தலைப்பு

புதன், 6 மே, 2020

பரமாத்மா ஸ்ரீ சத்ய சாயியை சந்தித்த மகாத்மா காந்தி!


சத்யம்  தர்மம்  சாந்தி  ப்ரேமை அஹிம்சை  அத்தனையும் ஒரு  உருக்கொண்டு, இத்தரையில் இறங்கி, அத்தனை மக்களையும் அன்பு வழி நடத்தும் சத்திய சாயியை சந்தித்து தரிசிக்காத பிரபலங்களே இல்லை. 'என் வாழ்க்கையே என் போதனை ' என்று, உபதேசித்து அதன் வண்ணம் நடந்து காட்டிய பாபா நமக்கெல்லாம் ஈடு இணையற்ற வழிகாட்டும் தெய்வமல்லவா?

இதே போன்று, காந்தி அவர்கள் தமது வாழ்வில் சத்தியம் தர்மம் சாந்தி அஹிம்சை போன்ற குண நலன்களை கடைபிடித்து மகாத்மா காந்தியாக உயர்ந்தார். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றை நடத்தி, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் வல்லரசை மண்டியிடச் செய்து, சுதந்திரத்தை வாங்கித் தந்தார். கோடிக் கணக்கான மக்களை ஈர்த்து பல போராட்டங்களை அஹிம்சை வழியில் நடத்தினார். மக்கள் பலம்..தன்னுடைய மனோபலம்.. அறவழி ஆகிய இவை.. இணைந்தால் அதை முறியடிக்க எந்த ஆயுதத்திற்கும் பலம் இல்லை என்பதை நிரூபித்தார். மகாத்மா காந்தியின் சரிதம் நம் நாட்டின் சரிதமுடன் பின்னிப் பிணைந்தது. உலக வரலாற்றில் ஒப்புயர்வற்றது.


🌹தமிழகமும் காந்தியும்:

தமது சுதந்திர போராட்டத்திற்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்தார். 1924 ம் ஆண்டு அவர் மதுரைக்கு வந்தார்.  அங்குள்ள  மக்கள் தங்கள் வறுமையின் காரணமாக  ஒரு  நான்கு முழம் துண்டை  மட்டும் இடுப்பில் கட்டியிருந்தனர். அதைப் பார்த்த காந்தி அடிகள் மனம் நொந்து ஒரு பிரதிக்ஞை எடுத்தார். அதன்படி அன்று முதல் அவர் மேலாடை ஒன்றும் உடுத்தாமல் வெறும் நான்கு முழ வேட்டியை இடுப்பில்  அணிந்தார். இதை தன் வாழ்நாள் முழுவதும் பின் பற்றினார். லண்டனில் வட்டமேஜை மாநாட்டிற்கும் இந்த உடையில்தான் சென்றார். அரை நிர்வாண பக்கிரி என்று கேலி செய்யப்பட்ட போதும் அவர் மனம் தளரவில்லை. காந்திஜி தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். தமிழ் மொழி பயின்ற அவர் திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஸ்ரீ குமரகுருபரர் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலில் வரும் "நீரினில் எழுத்தாகும் வாழ்க்கை" என்ற வரிகளைத் தன் கையால் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார். 


மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என விருப்பம் என்று தெரிவித்திருந்தார்.


🌹காந்திஜியை பற்றி பாபா:

பாபா தமது கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் அடிக்கடி அளவலாவுவதுண்டு. அந்த சந்திப்புகளில் அவர் கேள்விகள் பல கேட்டு தக்க விளக்கங்கள் அளிப்பதும் உண்டு. பிப்ரவரி 27, 2002 (புதன்கிழமை) அன்று நடந்த சந்திப்பில் பாபா காந்திஜி பற்றி இவ்வாறு கூறினார்...

ஒரு சமயம் பிரிட்டிஷ் பிரதமர் காந்திஜியை சந்திக்க வந்தார். காந்திஜியின் மேஜை மேல் பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலே இருந்த பைபிளைப் பார்த்த பிரதமர் எங்கள் பைபிள்தான் உயர்ந்தது. ஆகவே அது மேலே வைத்திருக்கிறீர்கள் என்றார். காந்திஜி கூறினார்.. அடியில் உள்ளது ராமாயணம். ஆகவே அனைத்துக்கும்  அடித்தளம் அதுவே.


பிறகு பாபா கூறினார் காந்திஜி என்னை ஐந்துமுறை சந்தித்துள்ளார். முதன் சந்திப்பு சென்னை ஆந்திர மகிள சபா நடத்திய கூட்டத்தில் நிகழ்ந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த காந்திஜி என் அருகில் அமர்வதற்கு விரும்பினார். நான் இசைவு தெரிவிக்கவே, தன் இரு கால்களை மடக்கி  கையூன்றி என் அருகே அமர்ந்தார்.  அடுத்த சந்திப்பு ஹைதராபாத்தில் நிகழ்ந்தது. அதற்கடுத்து நடந்த சந்திப்பு காந்திஜி இந்திய தேசிய காங்கிரஸ் நிதி திரட்டிய போது. மக்கள் அவரது கோரிக்கையை ஏற்று தங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி அங்கு விரித்திருந்த துணியில் போட்டனர். அவைகளை விற்று, வரும் நிதி ஏழைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று என்னிடம் காந்திஜி விளக்கினார். இந்த விளக்கத்தை கூட்டத்தில் வெளிப்படையாக அறிவிக்குமாறு நான் கூறினேன். இல்லை என்றால் மக்கள் தவறாக உங்களை கருதி விடுவர் என்றேன். அந்த உண்மை உணர்ந்து  அவர் மகிழ்வுடன் ஏற்று, "சுவாமியின் நுண்ணறிவு மெச்சதக்கது. நான் ஒரு தவறு செய்ய இருந்தேன். சுவாமி தடுத்துவிட்டார்" என்றார்.


பின்னர் நடந்த சந்திப்பு டெல்லியில் கமானி ஹாலில் நிகழ்ந்தது. காந்திஜி அக்கூட்டத்தில் நகைச்சுவை ததும்ப பேசினார். மேலும் ஒரு செய்தி. காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்ட முனைந்தபோது நான் தான் பித்தாபூர் அரசரிடம் பேசி சில காலிமனைகளை வாங்கித் தந்தேன்.


🌹அண்ணலின் ஆன்மா இறைவனுடன் இணைதல்:

1948 ஜனவரி 30ம் நாள் மாலை 5.30 மணி. இந்தியமக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு நடந்தது. அன்று மாலை வழக்கம்போல் பாபா சில பக்தர்களுடன் சித்ராவதி நதி கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அனைவருக்கும்  ஏதேதோ எதிர்பார்ப்பு. பாபா இன்றும் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்த்துவார் என்று. மணலில் சென்று அமர்ந்த ஸ்வாமி திடீரென பழைய மந்திரை நோக்கி ஓட ஆரம்பித்தார். பழைய மந்திரத்தை அடைந்து தன் அறையில் நுழைந்து தாளிட்டுக் கொண்டார். பக்தர்களுக்கு பாபாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் புரியவில்லை. இடை இடையே அறையை விட்டு வெளியே வந்தாலும் பாபா இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். யாருடனும் பேசவில்லை. 7.30 மணி அளவில் பக்தர்களை சந்தித்த பாபா "மகாத்மா மறைந்துவிட்டார். அதனால் தான் இன்றைய மாலை சித்ராவதியில் நான் பக்தர்களுடன் இருக்கவில்லை."


இந்த அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் "மகாத்மா" என்றால் யாரோ ஒரு யோகியோ அல்லது ஞானியோ இறந்து விட்டதாக எண்ணினர். இரண்டு நாட்கள் கழித்து திரு. பாலபட்டாபி செட்டியார் புக்கப்பட்டணத்திலிருந்து ஹிந்து பேப்பர் பிரதி ஒன்றை வாங்கிவந்தார். அதில் மஹாத்மா காந்தி அவர்கள் 30.1.1948 மாலை 5 30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பாபா அதே நேரத்தில் சித்ராவதி நதிக் கரையிலிருந்து ஓடி வந்து அறையை தாளிட்டுக் கொண்டது ஏன் என பக்தர்களுக்கு அப்போது தான் புரிந்தது.

தம் வாழ்நாள் எல்லாம் சத்ய தர்ம சாந்தி ப்ரேமை அஹிம்சையை கடைபிடித்த மகாத்மா காந்தியின் ஆன்மாவை எதிர் கொண்டழைத்து தம்முடன் ஐக்கியம் செய்யத்தான் பாபா அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.



🌻 இறைவன் அவதாரம் எடுத்து கீழிறங்கி வருவது, மனிதனை உயர் தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குதான். ராம நாமத்தை சதா ஜெபம் செய்த காந்திஜி இறக்கும் போதும் .. ஹே ராம்..எனக் கூறி உயிர் துறந்து உயர்வடைந்தார்.  இறைவனும் அத்தகைய பக்தர்களை தன் இணையடி நிழலில் இளைப்பாற்றி கடை சேர்க்கிறார். 🌻

ரகுபதி ராகவ ராஜா ராம் 
பதீத்ர பாவன சாயி ராம்

ஆதாரம்:
Students with Sai: Conversations (2001-2004)
Sri Sathya Sai Digvijayam (1926 to 1985)
காந்திஜி வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் -  தேனி எஸ். மாரியப்பன்

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

1 கருத்து: