தலைப்பு

வெள்ளி, 22 மே, 2020

தொலைபேசியில் அழைத்த தெய்வம்!


கடவுளின் செயல்கள் தான் எத்தனை ஆனந்தமானவை! அர்த்தமுள்ளவை! ஒவ்வொரு பக்தருக்குள்ளும் சுவாமி சத்ய சாயிபாபா என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்தி எத்தனை விதமான விசித்திர அனுபவங்களைத் தந்திருக்கிறார் தந்து வருகிறார் என்பதை உணரும் போதெல்லாம் அகண்ட பிரம்மாண்டமான அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற மகிமையில் மூழ்கிப் போய்விடுகிறது மனம்... 

தன் ஒன்பதாவது வயதிலிருந்து சுவாமி பாபாவால் ஈர்க்கப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தியில், 1952ல் 'சீரடி பாபா மந்திர்' திறக்க சுவாமி வந்திருந்தபோது, அவர் பேசியதைக் கேட்டதிலிருந்து சுவாமியின் பக்தரானார் பிரபாகரையா. 66 வயதாகும் பிரபாகரையா, 57 ஆண்டுகளாக,புட்டபர்த்திக்கு ஆண்டுக்கு மும்முறையாவது சுவாமி தரிசனம் சர்வீஸ் என்று சகபக்தர்களோடு போய் வந்து கொண்டிருக்கிறார். மகாசிவராத்திரி, குருபூர்ணிமா, சுவாமி பிறந்தநாள் வைபவங்களின் போது சென்னையிலிருந்து இரண்டு பஸ்களில் 90க்கும் மேற்பட்ட பக்தர்களை அழைத்துக்கொண்டு பர்த்திக்குத் தொடர்ந்து போய் 'சர்வீஸ்' செய்துவரும் பரம பக்தர் இவர். குடும்பமே சாயி குடும்பம்!

ஆரம்ப காலத்து பக்தராயிருப்பதால் பர்த்தி பிரசாந்தி நிலையத்தின் படிப்படியான வளர்ச்சி... இளம் பருவத்திலிருந்து மாறியதை சுவாமியின் தோற்றம் எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து வரும்போது இந்த பக்தருக்கு... சுவாமி அப்பல்லாம் முக்கால்கை கதர் சட்டை வேட்டியில் தான் இருப்பார். கிராப் வைத்திருப்பார். அப்புறம் தான் இப்போ போடற மாதிரியான உடை தலை முடி எல்லாம் மாறியது. கொஞ்ச பேர் உட்கார்ந்திருப்போம் சுவாமியை சுலபமா ரீச் பண்ண முடிஞ்சது.. தரிசன நேரத்தில் ரொம்ப கிட்ட வருவார் பேசுவார் விபூதி தருவார் இந்த மாதிரி  லெட்டர் வாங்கறதுன்றது இல்ல... எல்லாரையும் சுவாமி நேரா பார்த்து விசாரிச்சு பேசி அனுப்ப முடிஞ்சது. சுவாமியினுடைய நிறைய லீலைகளை கிட்ட இருந்து பாக்கற பாக்கியம் எனக்கு நெறைய கெடைச்சிருக்கு. ஒருமுறை சுவாமி எங்களுக்கு முன்னால் பேசிக்கிட்டிருந்தபோது மழை வந்துவிட்டது. சுவாமி, திறந்த வெளியில் உட்கார்ந்திருந்த எங்கள் மேல் மழை பொழியத் தொடங்கவும் கையை மேலே காட்டினார்.. பொழிந்த  மழை அப்படியே எங்களை விட்டுவிட்டுத் தள்ளிப்போய் பொழியத் தொடங்கியது!" என்று சொல்லும் இந்த பக்தருக்கு ராமர் மேல் கீர்த்தனை பாடுவதில் மிகப்பிரியம். ஒரு முறை 'சுந்தரத்தில்' அகண்டபஜன் நடந்தபோது, சுவாமி அங்கிருந்தார். ராமர் கீர்த்தனையை அன்று நான் பாடிய போது மேடையிலிருந்த சுவாமி கீழே இறங்கி வந்தார்! சுவாமி ராமர்தானே என்று சொல்லும் இந்த பக்தர் சுவாமியின் மேல் ஆஞ்சநேய பக்தி கொண்டவர். பிரபாகரையா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு பணிபுரிந்த போது தனக்கு ஏற்பட்ட ஒர் அனுபவத்தைச் சொன்னார்

அது நான் தேர்தல் துறையில் சார்புச் செயலராக (Election Dept.Under Secretary) வேலை செய்துகொண்டிருந்த சமயம்...  சீட்டில் உட்கார்ந்து வேலையில் ஈடுபட்டிருந்த போது தொலைபேசி மணியடித்தது. அன்று 5.7.1999 திங்கட்கிழமை மதியம் 12.24க்கு தொலைபேசி மணியடித்தது. தொலைபேசியை எடுத்து 'ஹலோ'ன்னதும் அந்தப் பக்கத்திலிருந்து குரல் கேட்டது.

'பிரபாகரையா சுவாமி பேசறேன்'
மௌண்ட் ரோட்ல கீதாகேப் எதிர்ல இருக்கும், 'சுவாமி ஆப்டிஷியன்ஸ்' என் சொந்தக்காரருடையது சுவாமின்ற தன் பேரையே கடைக்கு வைத்திருக்கிறார். நான் உடனே ரொம்ப இயல்பாக,
'என்ன சுவாமி என்ன..? என்று தூக்கலான குரலில் இழுத்தபடி கேட்டேன். உடனே, பர்த்தியிலிருந்து சுவாமி பேசுறேன்' அப்படின்னதும் சீட்ட விட்டு எழுந்திரிச்சிட்டேன். உடனே 'உக்காரு' என்றார் சுவாமி. உட்கார்ந்தேன்.
'இப்ப நான் சொல்றத எழுதிக்கோ' என்றார். பக்கத்திலிருந்த அப்பளம் மாதிரியான ஒரு பேப்பரில் சுவாமி சொல்வதை எழுத ஆரம்பித்தேன். நான் பிடித்திருந்த தொலைபேசி உடம்பு கை காலெல்லாம் தடதடவென்று ஆடிக்கொண்டிருந்தது. என்ன எழுதுறேன் எப்படி எழுதறேன்னு தெரியல.. சுவாமி தெலுங்கில்தான் பேசினார். 'பாதுகாடிரஸ்ட் சர்வீஸ் செப்டம்பர் 28 செவ்வாய்க் கிழமையிலிருந்து அக்டோபர் சனிக்கிழமை வரை இருக்கிறதால செப்டம்பர் 27ஆம் தேதி காலை ஆறரை மணிக்கு மெட்ராசிலிருந்து நீங்க புறப்படணும்' சுவாமி மெட்ராஸ் என்று சொன்னதை நான் 'சென்னை' என்று எழுதிக் கொண்டதும் சுவாமி ஆ..ங். சென்னை' என்றார்.

'27 ஆம் தேதி கிளம்புங்க.. சித்தூர் போங்கோ 'கானிப்பாக்கம்' போய்.. என்றதும், நான் 'கனம்பாக்கம்' என்று எழுதிக் கொண்டிருந்தேன். 'தப்பா எழுதறே' என்றார். k கானிப்பாக்கம் kanipakkam என்று ஸ்பெல்லிங்கோடு சுவாமி சொல்ல, நான் எழுதியதன் மேலேயே ஓவர்ரைட் செய்து கொண்டேன்.  அங்கே விக்னேஸ்வரர் கோயிலுக்குப் போங்க மதனபள்ளியில் மதியச் சாப்பாடு லஞ்ச் சாப்பிடுங்க அப்புறம் கதிரி போய் ரீச் புட்டபர்த்தி அட் 8 பி.எம்' என்றார். சுவாமி வேகவேகமாகச் சொல்கிறார்.


கொஞ்சம் இருங்க சுவாமி மெதுவா சொல்லுங்கன்னு  சொல்லமுடியுமா? வேகமாக எழுதிக்கொண்டேன். செப்டம்பர் 28ம் தேதியிலிருந்து அக்டோபர் இரண்டாம் தேதி வரை service days என்று அதை ஆங்கிலத்தில் சொன்னார். சனிக்கிழமை இரண்டாம் தேதி சென்னைக்கு புறப்படுங்க after dinner மூன்றாம் தேதி காலை சென்னைக்குப் போய் சேருங்க... என்னிடம் ஏதோ ஒரு தயக்கத்தை கண்ட சுவாமி கேட்டார்... 'என்ன?' சுவாமி எலெக்‌ஷன் வர்ற மாதிரி இருக்குதே; என்று இழுத்தேன்.. எலெக்‌ஷனா... அது வந்தா வரும் வரலேன்னா வராது என்றார்.

அப்புறம் பேச்சில்லை போனை வைத்துவிட்டார். ஹலோ சுவாமி சுவாமி என்று கூப்பிட்டேன். அதன் பிறகு குரல் வரவில்லை. அதிர்ச்சி ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் சுவாமி முதன்முதலா எங்கிட்ட பேசின சந்தோஷம்...! தொலைபேசியை நான் வைத்ததும் அக்கம் பக்கத்து சீட்டிலிருந்து பலரும் ஓடிவந்தார்கள்.


என்ன சார் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் பேசினாக் கூட இப்படி எழுந்து நின்று பேசினதில்லையே என்ன ஆச்சு ஏன் எழுந்து நின்னீங்க என்று கேட்க பர்த்தியிலிருந்து சுவாமி பேசிய விஷயத்தைச் சொன்னதும் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி! நான் சுவாமி பேச்சைக் குறித்து வைத்த பேப்பரை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்! அன்று மதிய உணவு நேரத்தில், மிலிட்டரி மந்திரில் நடந்த சாயிபஜனில் 'Thought for the day க்குப் பிறகு இந்த விஷயத்தை நான் சொன்ன போது சுவாமியின் ஒவ்வொரு படத்திலிருந்தும் தொப்பு தொப்பென்று பூ விழுந்து கொண்டேயிருந்தது. அப்படி ஒரு சந்தோஷம் பக்தர்களுக்கெல்லாம்.! மூன்று மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு சுவாமி சொல்லிவிட்ட சர்வீஸுக்கு 2 பஸ்களில் 95 பேர் கிளம்பினோம். எல்லாம் சுவாமி சொன்ன நேரப்படியே நடந்தது.எலுமிச்சம்பழம் சக்கரங்களின் கீழ் வைத்து ஆரத்தி காட்டி வண்டியிலேறி உட்கார்ந்து வண்டியை எடுத்த நேரம் காலை 6.30 மணி. நான்கு முப்பதுக்கு கதிரி வந்தபோது கண்மண் தெரியாத மழை... தயங்கிய டிரைவருக்கு தைரியம் தந்து ஓட்டச் சொல்ல சில கிலோமீட்டர்களில் மழை நின்றது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் அருகே வரும் போது ஏழு முப்பது. கணேஷ் கேட்டருகே வரும்போது 7.57 செக்யூரிட்டி கேட் அருகே போகும்போது 7.59 பஸ்ஸை விட்டு எல்லோரும் இறங்கிய நேரம் சரியாக சுவாமி சொன்னபடியே இரவு 8 மணி! அப்போது தன்னருகே நின்ற பக்தரிடம் சுவாமி கேட்டாராம் பிரபாகரையா வந்துவிட்டாரா?! இந்த முறை 7ஆயிரம் பேருக்கு மேல் சாப்பாடு பரிமாறுவது சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்வது என்று எங்கள் பணியை வழக்கத்தைவிட உற்சாகத்தோடு செய்தோம். அப்படி ஒரு சந்தோசத்தோடு செய்தோம். சுவாமியின் விசேஷ அழைப்பில்லையா!
1970இலா 80 இலா என்று நினைவில்லை சத்யசாயி மாநில ரீதியான மாநாடுகள் கூட்டங்கள் சுவாமி ஆபட்ஸ்பரியில் நடத்திய சமயம். அப்படி நடந்த மூன்று வருடமும் அங்கு சர்வீசுக்கு போயிருந்தோம். சமையல் செய்வதும் பரிமாறுவதுமாக எங்கள் சர்வீஸ் இருந்ததால் சுவாமியை தரிசனம் செய்வதோ சுவாமி பேச்சைக் கேட்பதோ முடியாமலிருந்தது. இரண்டு வருடம் இப்படியே ஆனதால் மூன்றாவது வருடமும் எல்லாம் நடந்து சுவாமி கிளம்பி விட்டார் என்றதும் மனதில் ஏக்கம் பெரிதாய் வந்தது. சுவாமியை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று... சுவாமி வண்டியில் ஏறப் போனவர் திரும்பி டைனிங் ஹாலை நோக்கி வந்து கிச்சனுக்குள் நுழைந்து விட்டார். முதுகு காட்டியபடி நின்ற எனக்குத் தெரியவில்லை. அப்போது நான் அண்டாவிலிருந்த சாம்பாரை மக்கில் முகந்து பக்கெட்டில் மாற்றிக் கொண்டிருந்தேன். தோளில் யாரோ தட்டியது போலிருந்ததும் திரும்பிப் பார்த்தால் சுவாமி அபயஹஸ்தம் காட்டியபடியிருக்கிறார். அதிர்ச்சியில் பக்கெட்டில் மக்கை அப்படியே போட்டுவிட்டேன். சுவாமி அன்போடு கேட்டார்.

பங்காரு நன்னு சூடலேதனி பாத படுதுன்னாவா? பங்காரு என்னைப் பார்க்கலியேன்னு கவலைப்படறியா என்று கேட்டதும் பிரமை பிடித்தது போல் நின்றேன். பாத நமஸ்காரம் எடுத்துக்கோ என்றார். என் கைகளைப் பார்த்தேன் கையெல்லாம் கரி.. எண்ணெய் பிசுக்கு.. சாம்பார்.. எப்படி சுவாமி பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்வது? தயங்கியபடி நின்றேன். சுவாமி வேகமாக நடந்து போய் காரில் ஏறி விட்டார். எல்லோரும் ஓடி வந்து சுவாமி தொட்ட தோளைத் தொட்டு குதூகலம்  கொண்டாடிவிட்டார்கள். அதன் பிறகு மே மாதம் புட்டபர்த்தி சர்வீஸுக்கு போனபோது சுவாமியின் ரோஜாப்பூ மாதிரியான பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது!

ஓய்வு பெற்ற பிறகும் மிலிட்ரி மந்திரில் நடக்கும் சாயிபஜனுக்கு வழக்கம்போல் சைக்கிளில் போய் வருகிறேன். ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையும் ஆந்திர மகிள சபாவிலிருக்கும் ஊனமுற்றோருக்கு உணவு வழங்கும் நாராயண சேவையை தொடர்ந்து செய்கிறோம். ஆடம்பரமாகப் பண்டிகைகள் கொண்டாடுவதை இவர் ஏற்கவில்லை. அந்தச் செலவை குறைத்து அனாதை ஆசிரமங்களுக்கு 100 பெட் சீட் பாய்கள் வாங்கித் தருவதோ ஏழைகளுக்கு நாராயண சேவை செய்வதோ எத்தனை நல்லது என்று கேட்கிறார். சதா சாயி சேவையில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரையா சொல்கிறார்.இது சுவாமி சொல்வது தான்.நாம் செய்யும் சேவையால் நமக்கு மட்டும் புண்ணியம் கிடைக்கணும்னு நினைக்கக்கூடாது, நம்மள சேர்ந்த எல்லாருக்கும் புண்ணியம் கிடைக்கணும்னு நினைக்கணும். சாயி பஜன்களைப் பாடியபடியே சைக்கிளில் போய் வரும் இந்த பக்தருக்கு சுவாமியே வாழ்க்கையாக இருக்கிறார்.
     
ஜெய் சாய்ராம்

ஆதாரம்: சாயி பிருந்தாவனம் (சாயி பக்தர்களின் அனுபவங்கள்) - கவிஞர். பொன்மணி
வெளியீடு: ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக