தலைப்பு

ஞாயிறு, 31 மே, 2020

பயணத்தை நிறுத்தி உயிரைக் காப்பாற்றிய பாபா!


மனிதர்களுக்கு எல்லாமே உடனுக்குடன் நடை பெற்றுவிட வேண்டும்.. இறைவன் சத்ய சாயியை வேண்டிய உடனேயே வர மழையை அவர் பொழிந்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். சில சமயங்களில் ஏன் இறைவன் சத்ய சாயி அவ்வாறு செயல்படுவதில்லை என்பதற்கான அற்புத அனுபவம் இதோ...

ஒவ்வொரு முறை பயணத்திற்கும் முன்பும், நளினி தனது பாஸ்போர்ட்டையும், டிக்கெட்டையும் சுவாமியிடம் வைத்து, ஆசிகள் பெற்றுதான் கிளம்புவாள். ஒருமுறை பிரசில்ஸ் புறப்பட இருந்த அவளால், புட்டபர்த்தி செல்ல முடியவில்லை. நேரமில்லை! திங்கள் காலை 9 மணிக்கு வேலையை தொடங்க, சனிக்கிழமை மாலை கிளம்ப வேண்டியது இருந்தது.


டிராவல் ஏஜென்ட், 1 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் வந்து டிக்கெட்டை தருவதாக கூறியும் எந்த தகவலும் இல்லை! ரொம்ப அதையே யோசித்துக் கொண்டிராமல், வீட்டிற்குச் சென்று, மீதி இருந்த வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். மணிநேரம் கடந்து கொண்டே இருந்தது. இன்னும் டிக்கெட் வந்தபாடில்லை. அவளுக்கு வழக்கமாக பேப்பர்(விவரங்கள்) கொண்டு வரும் ஆள், எங்கோ வழி தவறி விட்டதால், எங்கு உள்ளார் என்று கண்டறிய முடியவில்லை. அந்த நாட்களில் கைபேசிகள் கிடையாது. ஒரு வழியாக அவன் டிக்கெட் கொண்டு வரும்பொழுது, செல்ல வேண்டிய விமானம் சென்றுவிட்டது. ஏதோ காரணத்திற்காக சுவாமி தன்னை போகவிடாமல் தடுத்து விட்டதாக உணர்ந்தாள். திங்கள் காலை, முதல் வேலையாக, வெளிநாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தாள். மறுநாள் காலை ஏன் சுவாமி தடுத்தார், என தெரிந்து கொண்டாள்.


பி.பி.சி நியூஸ் பார்ப்பதற்காக, டிவியை இயக்கிப் பார்க்கலானாள். அவள் தங்குவதாக இருந்த ஏர் ஹோட்டல், தீப்பிடித்து எரிந்து கொண்டு, ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது! தீயணைப்புப் படையினர் போராடிக் கொண்டிருந்தனர். குழப்பமும், மோதல்களும் வேறு நடந்து கொண்டிருந்தன. கார்களும், பொது உடமைகளும் சேதமாக்கப்பட்டு கொண்டிருந்தன. கலகக்காரர்களை போலீஸ் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவள் அந்தப் பயணத்திற்கு சென்றிருந்தால், ஹோட்டல் ரூமிலேயே உயிரோடு எரிந்திருப்பாள்.

சுவாமிக்கு மட்டுமே தெரியும், ஏன் இவளை பயணப்பட வைக்கக் கூடாதென்று! அதைத் தடுத்து, உயிரை காப்பாற்றியவர் அவர்தான்! தனது வாழ்நாளின் மீதி காலத்தை அவருக்கு சேவை செய்வதிலேயே கழிக்க வேண்டும், என நன்றியோடு உறுதி பூண்டாள். அவள் நன்றி உணர்விற்கு எல்லையே இல்லாது போயிற்று. "நன்றியுணர்வு தான் மனிதனின் அடிப்படை பண்பு" என்று சுவாமி சொல்வார். நளினியுடன் பணிபுரியும் சக அலுவலர்கள், செய்தி கேட்டு, அந்த ஹோட்டலுக்கு போன் செய்ய, அவள் அறை எடுக்கவில்லை என தெரியவந்தது. நிம்மதி ஆயினர். பிறகு மறுபடி மீட்டிங் நடைபெற்ற பொழுது, எப்படி சுவாமி தன்னை காப்பாற்றினார் என்று கூறினாள். நாம் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்; எல்லாம் நன்றாகவே நடக்கும். ஆனால் கேள்விக் கணைகள் அவர்களிடமிருந்து பாய்ந்தன! "எப்படி அவருக்கு தெரியும்? இந்தியாவில் எங்கோ இருப்பவருக்கு எப்படி முடியும்? யார் அவர்? என்ன செய்கிறார்?" -இவ்வாறாக!!

இந்த சம்பவம், அவர்களிடையே ஆர்வத்தை எழுப்புவதற்கு காரணமாக அமைந்தது. நளினிக்கும் சுவாமியின் புகழ் பாட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது!!!

தடங்கல் வருகிறதென்றால்... ஒரு செயல் நடைபெறாமல் தாமதமாகிறதென்றால் அதுவும் இறைவன் சத்ய சாயி சங்கல்பமே.. அதன் உள்ளும் பேரர்த்தங்களும்.. பூரண ஆசிகளும் அடங்கி இருக்கின்றன என்பதை உணர்ந்து  கொண்டு விட்டால் ஞானத்தின் வாசலை அடைந்துவிடுகிறோம்

ஆதாரம் : Nalini Gopal Ayya, Sai The Omnipresent One P 13,14,15.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக