தலைப்பு

வெள்ளி, 29 மே, 2020

மறைத்து வைத்த கடிதத்தால் ஒரு சாயி கீதை!


(இறைவன் சத்யசாயி இடம் எதையும் மறைக்க முடியாது. சர்வாந்தர்யாமி அவர். சிறு சிறு சம்பவங்களிலும்.. சந்தர்ப்பங்களிலும் கீதை நடத்தும் சத்ய சாயி கிருஷ்ணர் அவர் என்பதற்கான உதாரணம் இதோ)

ஒருநாள் தரிசனத்தின்போது பேராசிரியர். அனில்குமார் அவர்கள் USAவில் மின்னியாபோலைஸ்(Minneapolis)எனும் இடத்தில் இருந்து, அவள் மகள் எழுதிய கடிதத்தை படித்து கொண்டு இருந்தார். அவள் அங்கு மருத்துவத்துறையில், உட்புற வகுப்பு பயிற்சியில்(Internship) இருந்தாள். எனவே இங்கும் அங்குமாக செல்லவேண்டியிருந்தது. தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை மனதை தொடும் அளவிற்கு அக்கடிதத்தில் விவரித்திருந்தாள். ஒரு சிறிய அற்புதம் நடந்ததையும் கூறியிருந்தாள்.

ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும்பொழுது, பாதையில் ஒரு திருப்பத்தை தவறவிட்டு விட்டாள். ஹாஸ்டலுக்கு திரும்பி செல்லும் வழியை மறந்து விட்டாள். அழுகையாக வந்தாலும், மனதில் சாயியின் பஜனையைப் பாடியவாறு, அவரிடம் பிரார்த்தித்தாள். உடனே ஒரு அமெரிக்கர், காரை நிறுத்தி தான் உதவ முன்வந்தார். அவர் அவளை ஹாஸ்டலில் பத்திரமாக கொண்டுபோய் விட்டார். அமெரிக்கர்கள் அன்பானவர்கள் என்று கூறி கடிதத்தை முடித்திருந்தாள்.

பேராசிரியர் அனில் குமார் கடிதத்தை மடித்து பையில் வைத்துக்கொண்டு தனது ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். திடீரென சுவாமி எதிரே நின்று கொண்டிருப்பதை உணர்ந்தார். சுவாமி, "என்ன கடிதம்" என்றார். ஆனால் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு, 'லெட்டரா ஸ்வாமி' என்றார். ஆனால் சுவாமி விடுவதாக இல்லை. "உன் சட்டைப் பையில் வைத்திருக்கும் கடிதத்தைக் கொடு" என்றார். ஆனால், "அது எனது பிரத்தியேக கடிதம் (Personal Letter) சுவாமி" என்று அனில்குமார் சொன்னார். "உனக்கும் எனக்கும் இடையில் வேறு ஏதாவது பிரத்தியேகமாக இருக்குமா என்ன?"... "நீ இதை கொடுக்காவிடில் நானே அதில் என்ன உள்ளது எனக் கூறி விடுவேன்" என்றார், சுவாமி!. அனில்குமார் கடைசி முயற்சியாக, "சுவாமி! இது என் பெண்ணிடம் இருந்து வந்துள்ள கடிதம்" என்றார். சுவாமி சொன்னார், "உன் பெண் USAவில் இருந்தும், என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் நீ என்னுடன் நெருக்கமாக சமீபமாக இருந்தும், உன் பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்கிறாய், அதுதான் வித்தியாசம்" , என்றார்.

இறைவனுக்கு அருகில் இருப்பதால் மட்டுமே பக்தி வெளிப்படுகிறதா...? இல்லை அது அகத்தில் இருப்பதால் மட்டுமே  வெளிப்படுகிறது என்பதை இறைவன் சத்ய சாயி உணர்த்திடும் பாங்கே பரவசம்...
இறைவன் சத்ய சாயிக்கு அருகாமை முக்கியமல்ல அகமே முக்கியம்.

ஆதாரம் : Prof. ANILKUMAR, Gem of Sai Story No 66
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக