தலைப்பு

செவ்வாய், 19 மே, 2020

"அவரே என் தந்தை" - பகவான் யோகி ராம்சுரத்குமார்


அரவிந்த் ஸ்ரீநிவாசன் அவர்கள்
இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் ஆத்ம பக்தர். அவரின் அருணை அனுபவம் அற்புதமானது. அதன் ஆழத்தையும் உள்ளர்த்தத்தையும் அவர் இரண்டு வருடம் கடந்து தான் புரிந்து கொள்ளவே முடிந்திருக்கிறது... 


ஒருமுறை 1997ம் ஆண்டு அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது நண்பர்களும் திருவண்ணாமலைக்குப் பயணம் செய்யலாம் எனத் திட்டமிடுகின்றனர்.
நான்கு யுகமாய் நிலைத்து கம்பீரமாய் நிற்கின்ற மலை.. சாதகர்களுக்கு ஞானப்பால் ஊட்டும் தெய்வீக முலை. வெளியிலேயே அலையும் மனதை உள்ளே இழுக்கும் விஸ்தார வலை வியனழகு அண்ணாமலை..

அந்தப் பயணம் மறக்கமுடியாத பயணமாகவே இருந்தது..
அந்தப் பயணம் பைக்கிலேயே அமைந்தது.
காற்றைக் கிழித்துக் கொண்டு நினைத்தாலே முக்தி தரும் அந்த புண்ணிய தலத்திற்கு வேகமாய் சென்று கொண்டிருந்தது..

வழியில் இளைப்பாறி தாக சாந்தி பெற்று வந்து சேரும் போது திருவண்ணாமலைத் தென்றல் அவர்களை வருக வருக என சாமரம் வீசியபடி அழைத்தது.


அவர்கள் வந்து சேர்ந்த இடம் ரமணாசிரமம்.. உலகியல் சிரமங்களை எல்லாம் களைவதற்கே பாரத பூமியின் ஆசிரமங்கள். அதில் மௌனத்தை ஊட்டி.. ஞானத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் ஆசிரமம் ரமணாசிரமம்.
பழநி மலைமேல் நின்ற முருகனே மலையிறங்கி அடிவாரம் வந்து அருள் புரிவதைப் போல் பகவான் ரமணர் கோலம்.

ரமணர் சமாதி தரிசனம் காண்கின்றனர். பகவான் ரமணர்  அறையில் தியானம் மேற்கொள்கின்றனர். மயில் தோகை விரிப்பைப் பார்த்துப் பூரிக்கின்றனர். பின்பு வேறெங்கு செல்லலாம் என யோசிக்கும் போது.. எதிரே பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் இருப்பதாகக் கேள்விப் பட்டு விரைகின்றனர்.

தன்னைப் பிச்சைக்காரன் என அழைத்துக் கொள்ளும் ஞான வள்ளல் இந்த மகான். வேர்க்க விறுவிறுக்க வருபவர்க்குப் புன்னகையால் குளிர்ச்சியூட்டும் விசிறித் தென்றல் இவர்.


நடமாடுகிறார். பிறகு சென்று விடுகிறார்.
அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கோ பகவானிடம் ஏதாவது பேசமுடியாதா? என ஆதங்கம் ஏற்படுகிறது..
ஒரு தன்னார்வலரைக் கேட்க பிரதான அறையில் காத்திருக்கச் சொல்கின்றார்.

அவர்களும் அந்த அறையில் பஜனைப் பாடலில் சேர்ந்து கொள்கின்றனர். நாம பாராயணத்தில் இணைந்து கொள்கின்றனர்..
இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அல்லவா அந்த ஆன்மிக அலையில் சங்கமமாகின்றனர். நொடிகள் ரெக்கை விரித்துப் பறக்கின்றன.. பகவான் வருவதான அறிகுறியே இல்லை. சரி ஊருக்குக் கிளம்பலாம் என பைக்கின் சாவியைத் திருப்பும் போது ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
ஆசிரம மேனேஜர் ஓடிவருகிறார்.
"யாரார் சென்னையிலிருந்து பைக்கில் வந்த மாணவர்கள்.. சுவாமிஜி அழைக்கிறார்" எனக் குரல் தூது வருகிறது.
இவர்கள் பகவானை தரிசிக்க ஆவலுடன் நெருங்குகின்றனர்.
பகவான் இருக்கை அருகே ஏழு இருக்கைகள் இவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கின்றன.. அது தான் பகவான் கருணை.. அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் யோகியின் கரிசனம்.
அந்த கரிசனத்தை தரிசனம் செய்யப் போகிறார்கள். நொடி நகர்கிறது.
பகவான் நின்றுயர்ந்த நாயகனாய் காட்சி தருகிறார்..
"என் தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி.. என் தந்தை உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கிறார்" என்ற வார்த்தையையே பலமுறை சொல்லியபடி புன்னகைத்து அனைவருக்கும் பிரசாதங்கள் தருகிறார் பகவான்.


பகவான் யோகி ராம்சுரத்குமார் எப்போதும் "தந்தை தந்தை தந்தை" என்றே சொல்வார்.
அவரின் வழி எந்த மகிமை நடந்தாலும்.. எந்த சிகிச்சை நேர்ந்தாலும் அதற்கு தான் அல்ல தன் தந்தையே காரணம் என்பார்.

இவர்களும் பகவானின் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு விடைபெறுகின்றனர்.

அவர் தந்தை... தந்தை... தந்தை என நொடி தோறும் கூறினாரே யார் அது?.. யாராக இருக்கும் என்ற வினாவையும் பைக்கில் ஏற்றிக் கொண்டே பயணிக்கின்றனர்.

இரண்டு வருடம் கடக்கிறது.
ஒருமுறை கிராம சேவையில் சுவாமி மாணவர் ஒருவரை சந்திக்கிறார் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.


அவரிடம் திருவண்ணாமலை அனுபவத்தை எதேர்ச்சையாகத் தெரிவிக்க.. ஆச்சர்யம் ஒன்று அவர்களின் சம்பாஷணையில் காத்திருந்தது..

அந்த சுவாமி மாணவரும் தனது அருணை அனுபவம் பகிர்ந்து கொள்கிறார். இவர் பெங்களூரில் சுவாமி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். விடுமுறைக்கு இல்லம் வந்து சமயமும் அது.

ஒருவர் ஒருவராய் தங்களின் ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதல்லவா சத்சங்கம்! சிறிய அனுபவ சத்சங்கமே பரிமாறப்படுகிறது.

அந்த சுவாமி மாணவரின் தந்தை உபன்யாசம் செய்பவர். அவரோடு அந்த முறை சுவாமி மாணவரும் உடன் செல்கிறார்

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு சென்று பகவானை தரிசிக்கிறார்.

எங்கிருந்து வருவதாக  பகவான் கேட்க..
சென்னையிலிருந்து என சுவாமி மாணவர் பதில் அளிக்க.. இப்போதல்ல.. எங்கிருந்து நீ வருகிறாய் என மறுபடியும் கேட்க..

புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி கல்லூரியில் படிக்கும் மாணவன் நான்.. அங்கிருந்து வருகிறேன் என மாணவர் பதில் அளிக்கிறார்.


"அவரே என் தந்தை (He is My Father)" என்கிறார் கடவுட் குழந்தை பகவான் யோகி ராம்சுரத்குமார்...
இதை அரவிந்த் அவர்களோடு அந்த சுவாமி மாணவர் பகிர்ந்து கொள்ள இரண்டு வருடத்திற்கு முன்பு எழுந்த கேள்விக்கான பதில் அந்த நொடி தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தது..
யாரை தன் கடைசி மூச்சு வரை தந்தை... தந்தை... தந்தை என்றாரோ அந்த பரம சத்தியத்தை பக்தர் அரவிந்த் ஸ்ரீ நிவாசன் மட்டுமல்ல... நாமும் இப்போது அறிந்து நெகிழ்கிறோம்.

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பக்தர்கள் சிலரிடம் "கடவுளிடமிருந்து ஏன் இந்தப் பிச்சைக்காரரிடம் வந்தீர்கள்?" எனக் கேட்ட அதே பகவான் .. "அவரே என் தந்தை" எனச் சொன்னதில் எந்த ஆச்சர்யமும் இல்லை..


தந்தையாய்.. தாயாய்.. சத்குருவாய்.. பரம்பொருளாய் இந்த விரி பிரபஞ்சத்தில் நிறைந்திருப்பது இறைவன் சத்ய சாயி ஒருவரே..

"மாத பிதா குரு தெய்வமு
மரி அந்தயு நீவே -- சுவாமி
மரி அந்தயு நீவே"

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக