தலைப்பு

வெள்ளி, 1 மே, 2020

பரம்பொருள் சாயி பற்றி பாரதப் பிரதமர் மோடி!


பிரபஞ்சம் ஆளும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றியதான பாரதம் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திவ்யமான அனுபவங்கள்..

நீ பாரத பிரதமராவாய் என இறைவன் சத்ய சாயி மோடியிடம் சொல்லிய போது அவர் குஜராத் முதலமைச்சர் மட்டுமே.. அந்த சூழலில் அது கற்பனைக்கே எட்டாத கருத்து.. அப்படி இறைவன் வாக்குரைத்த ஆண்டு எது என பார்ப்பதற்கு முன்...
அப்படி சொல்லப்பட்ட இந்த மோடி யார்?
இன்றைய இந்தப் பிரதமர் எப்படிப்பட்டவர்? இதோ

இத்தனை துணிச்சல் மிகு பிரதமரை இந்தியா இதற்கு முன் கண்டதுண்டா..?
வல்லபாய் படேல் கொண்ட உறுதி.. நேதாஜி கொண்ட தேச பக்தி... வாஜ்பாய் வழியே உதித்த இறை பக்தி... இந்தியாவை தன்னிரு கண்ணாகவும்.. அதற்கு இமையாகவும் செயல்படும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.. பெயரில் மட்டுமல்ல உயிரிலும் நரேந்திர விவேகானந்தரின் "தொண்டும் துறவுமே நம் அடையாளம்" என்ற சுவாச ஜோதியை ஏந்திய தலைவர். இந்தியா
ஜனநாயக நாடு என்பதால் பெரும்பான்மையானவரின் மதச் சின்னங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்ட வேளையில் .. எந்த போலி நடிப்புமின்றி.. தன் நம்பிக்கையை தரணிக்கு வெளிப்படுத்திய தைரியத் தலைமை இவர்.. அடியேன் சொல்ல வேண்டியதில்லை.. காஷ்மீர் முதல் விண்வெளி வரை இவரின் இந்திய சாதனையை நிகழ் நொடிகள் உச்சரித்தபடியே சுற்றி வருகின்றன...

எப்பேர்ப்பட்ட ஆற்றலும்.. சக்தி நிலையும் அவரை இயக்குகின்றது.. இறைவன் சத்ய சாயியின் பேராற்றல் உள்ளே இறங்கினால் அன்றி இத்தகைய நிஷ்காம்ய கர்மம் (பலன் வேண்டா செயல்) அவருக்கு சாத்தியமில்லை.. நாற்காலிக்கு மட்டும் சுயநலமாய் அவர் குறி வைத்திருந்தாரெனில் காஷ்மீரில் ஒரு பொட்டு மண் கூட இந்தியா கையகப்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை...


சாதாரண குடும்பத்தில் 1950'ல் செப் 17 தாமோதர் தாசுக்கும்... ஹீராபென்னுக்கும் பிறந்தவர். அவர் தாசுக்கு பிறந்த எளிமையே.. காசுக்குப் பிறந்த தாந்தோணி அல்ல... தந்தையின் தேநீர்க் கடையே இந்த அரசியல் புத்தனுக்கு முதல் போதிமரம். தந்தையின் சேவையே தயாபரன் சேவை என தடுத்தாட் கொண்டு தேநீர் ஆற்றினார். தாயோ பிறர் வீட்டு கழிப்பறை கழுவும் வேலை பார்க்கிறார்.வறுமை மிக வசதியாய் அவர் வீட்டை வாடகைக்குப் பிடித்துத் தங்குகிறது. சிறுவனான மோடி தினசரி ஆற்றிய தேநீரில் இவரின் எத்தனை வேர்வைத் துளிகள் கலந்து எத்தனைப் பேர் பருகி உழைப்பின் உத்வேகம் பெற்றார்களோ. பால்ய வயதில் ஜசோதா பென் என்பவரோடு மோடி அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது. பிறகு தேசத் தொண்டு காரணமாக துணையைப் பிரிந்து தனிமை பூண்டு தனது தலைவர் வழியில் செயல்புயல் ஒரு புதிய பூபாளம் எழுதப் புறப்பட்டது.

ஒவ்வொரு சிகரமும் அடிமட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன... ஒவ்வொரு தலைவனும் சிறந்த தொண்டன் எனும் நிலையிலிருந்தே துவங்குகிறான். அந்தத் தேநீர்கடை ராணுவ வீரர்கள் முதல் சாதுக்கள் வரை இரு துருவ மனிதர்களையும் மோடிக்கு அறிமுகம் செய்து விடுகிறது. இவையே சாதுக்களைப் போல் துறவு மனப்பான்மையையும்... ராணுவ வீரர் போல் தேசக் காவலையும் தேநீர் சூட்டாய் மோடிக்கு  தொண்டையில் இறக்கியது.


ஒருநாள் வீட்டில் சொல்லி.. நேபாளம் செல்கிறார். இமாலயம் சுற்றி வருகிறார். எல்லை வீரர்களை காண்கிறார். நேசமுறுகிறார்.. சின்னஞ்சிறு வயதிலிருந்தே மோடிக்கு முன் வைத்த காலை பின் வைக்காத ஒரு சுபாவம் உண்டு... தான் நம்பும் ஒரு விஷயத்தை மிக மிக தீர்க்கமாக நம்புவது. அதில் விடாப்பிடியாக நிற்பது. தவறென்றால் உடனே பரிசீலிப்பது.. அதுவே தவம்... அதிலும் ஓய்வறியா உழைப்பு.. முக்கியமாகப் பற்றின்மை... இந்தப் பற்றின்மையால் தான் வல்லமை இந்தியா சுற்றி படர்கிறது.

இதன் பால பாடம் அவருக்கு எடுத்தது தேசிய ஜோதியான ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ் திருக்கூட்டத்தில் தான் பல தலைவர்களை சந்திக்கிறார் மோடி. வாஜ்பாய் இவரின் ஆதர்ஷ தலைவர். அவரும் இறைவன் சத்ய சாயி பக்தர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


துறவறம் , தியானம் என்று ஆரம்பித்த வாழ்வு... தேசத் தொண்டு , சுயம் சேவக் என நீண்டது.. சுத்தப்படுத்தவே அரசியலில் குதித்தார். கையில் கறையே படாமல் சுத்தப்படுத்துவது சாதாரண செயல் அல்ல.. இன்றுவரை செய்து கொண்டும் இருக்கிறார்.

அமெரிக்காவுக்கே இன்று மருந்தனுப்புவது எல்லாம் வேறு தளம் நோக்கிய பாரதப் பயணம்.


கிருஷ்ணனைப் போல் முடிவெடுத்து அர்ஜுனனைப் போல் மோடி பணியாற்றுகிறவர்.. இவரின் ஐந்து விரல்களும் பஞ்சபாண்டவர்கள்.
சாணக்கிய தந்திரமும்.. சத்ய சாயி மந்திரமும் இயக்க இவர் இயங்குபவர்.

2004 ல் நரேந்திர மோடி அவர்கள் இறைவன் சத்ய சாயியை தரிசிக்க வருகையில் அவரிடம் இறைவனோ நீ பிரதமராவாய் என மொழிந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் வாஜ்பாய் அவர்களே பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். மோடி அவர்கள் பி.ஜே.பியில் தனக்கான காலடித் தடத்தை இன்னும் ஊன்றாத நேரம்.. அந்த நேரத்தில் இறைவனால் மொழியப்பட்ட அசரீரி சத்தியம் இது. அவரிடம் மட்டுமல்ல.. தன் மாணவரான அருண் கரைதேகல் என்பவரிடமும் இதை சுவாமி மொழிந்திருக்கிறார்.

இன்னொரு மாணவர் 2012 ல் உலகம் அழியுமா? எனக் கேட்டதற்கு.. இல்லை அழியாது.. 2012 லிருந்தே கலியுகம் முடியத் துவங்கி.. 2022 ல் சத்ய யுகம் ஆரம்பித்துவிடும் என்றிருக்கிறார்.

நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

2007 ல் அதிருத்ர மகா யக்ஞ சென்னை விழா வைபவத்தில் .. சுந்தரத்தில் ஒரே அரசியல் தலைவர்கள் கூட்டம். ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்க.. அப்போது அவர் பிரபலமும் இல்லை... ஒரு சாயி சேவாதளர் அவரை அணுகி விசாரித்திருக்கிறார். அப்போது அவர் அந்த நாற்காலி விட்டு எழுந்து "சாய்ராம்.. மேரா குஜராத் Chief minister நரேந்திரமோடி ஹை" என்கிறார்.


அவர் எழ வேண்டுமென்ற அவசியமில்லை.. ஒரு மாநிலத்திற்கே முதல்வர். ஆனால் எழுகிறார். அது தான் இறைவன் சத்ய சாயி மீது அவர் வைத்திருக்கும் பரம பக்தி. பக்தி எப்போதும் பவ்யமாகவே நடந்து கொள்ளும். இந்த சம்பவத்தை  அடியேனிடம் சொன்னவர் சேவாதள முரளி. அன்று இவரே அவரை விசாரித்தது. இந்த சந்தர்ப்பத்தில் சுவாமியால் மோடிக்கு பிரத்யேகமான நேர்காணல் வழங்க முடியாத காரணத்தால் மீண்டும் புட்டபர்த்திக்கு அழைப்புவிடுக்கிறார் இறைவன் சத்ய சாயி. அவரும் செல்கிறார்.

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முப்பதாண்டு கால சத்ய சாயி பக்தர். முப்பதாண்டுக்கு முன்பு இறைவன் சத்ய சாயியை தரிசிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவர் குஜராத் முதலமைச்சர் கூட இல்லை... சராசரி குடிமகன். அப்போதும் இறைவனுக்கு அதே அன்பு.. முதலமைச்சரான பிறகும் அதே அன்பு..


மோடிக்கும் அதே பக்தி...
அவரின் தரிசன காரணங்கள் கேட்டால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். தரிசிக்க வேண்டியே தரிசிக்கச் செல்வேன்வேறெந்த காரணமும் இல்லை என்கிறார். அது தானே தூய பக்தி. இவரோடு வருபவர்க்கு சுவாமி விதவிதமாக சிருஷ்டி செய்து வழங்குவார். இவருக்கு மட்டும் எதுவுமே வழங்குவதில்லை..


ஒரு முறை இறைவன் சத்ய சாயி "ஏன் உங்களுக்கு நான் எதுவும் வழங்குவதில்லை தெரியுமா? இதை விட வேறொன்றை உங்களுக்காக வைத்திருக்கிறேன்" என்று மோடியின் கையை எடுத்து தன் இதயத்தில் வைத்திருக்கிறார்.

இதுவே நான் உங்களுக்கு தரக் கூடியது.. இதுவே நான் உங்களுக்கு வழங்கப் போகும் விருப்புரிமை கொடை (Divine Will).. கிட்டத்தட்ட மாட்சிமை பொருந்திய உயில் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...

இப்போது புரிகிறதா?
யார் தேசம் ஆள்கிறார் என்று?பல முறை புட்டபர்த்திக்கான பயணம் மோடியால் ஒத்திவைக்கப்படுவதை சுவாமி விசாரிக்க.. அவரோ ஏதோ ஒரு காரணம் சொல்கிறார்.. இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.. உங்களுக்கு தோள் வலி.. நீங்கள் சிம்லாவிலிருந்து சண்டிகர் பயணப்பட்டீர்கள் என எல்லாவற்றையும் ஒரே அந்தர்யாமி இறைவனான சத்ய சாயி தெரிவிக்க அன்றிலிருந்து எதையும் சுவாமியிடம் மறைத்ததே இல்லை மோடி.

எப்படி முடியும்?
இறைவனிடம் மறைத்து மனிதனால்  என்ன செய்துவிட முடியும் இந்த ஈரேழு உலகத்தில்?

உண்மையில் தன் உடல் அசௌகரியத்தைப் போய் சுவாமியிடம் பகிரக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே மோடி அந்த பயணத் தள்ளிப்போடலுக்கு வேறொரு காரணம் சொல்லியிருக்கிறார்.

தாயின் அருகாமையைப் பல சந்தர்ப்ப சூழலில் பிரிந்த மோடிக்கு இறைவன் சத்ய சாயியே தாயாக இருந்திருக்கிறார். ஒருமுறை ஒரு நேர்காணலில்.. நிச்சயமாக இந்தியா வருங்காலத்தில் ஒளிரும் என எவ்வாறு சொல்கிறீர்கள்.. அது நிச்சயம் நிகழுமா சுவாமி? " என ஒரு ஆவல் மிகுந்த... தேச பக்தி நிறைந்த குழந்தை போல் மோடி கேட்கிறார்.


அதற்குக் கண்களை மூடிக் கொண்டு தனக்குள் நிறைந்த இறைவன் சத்ய சாயி .. கண்களைத் திறந்து மோடியின் அருகில் வந்து அவரையே உற்றுப் பார்த்து தோளைத் தட்டிக் கொடுத்திருக்கிறார். இதை மோடியே கேட்டிருக்கிறார். இதை சராசரி பக்தராக கேட்டு .. உலகத்திடம் அவர் ஒரு முதலமைச்சராக இருந்தபோது பகிர்ந்து கொள்கிறார்.

அடியேனுக்கு என்னவோ ... உன்னை வைத்துத் தானடா அதை எல்லாம் சாதிக்கப் போகிறேன் என இறைவன் சத்ய சாயி மோடிஜியை உற்றுப் பார்த்ததற்கும்.. தோளைத் தட்டியதற்குமான  உட்பொருளைத் தருகிறது.

மகான்கள் பொதுவாக நடக்கப் போவதை சொல்வார்கள். ஆனால் இறைவன் எதைச் சொல்கிறானோ அதுவே நடக்கும்...
முதலாவது தீர்க்க திருஷ்டி..
இரண்டாவது அண்ட சராசர இயக்கம்.


இறைவன் சத்ய சாயி ஒருவரே அண்ட சராசர இயக்குநர்.

மாணவ சக்தியை நம்புகிறார்.. மகிமையை விட சுவாமி பொதுத் தொண்டை நம்புகிறார். சுவாமி அருகில் சேவை பார்ப்பவருக்கும்.. பேருந்து நிலையத்தில் சேவை பார்ப்பவருக்கும் ஒரேவிதமான சுவாமி பக்தி குறித்து வியக்கிறார். சேவையும் சாதனையுமே சுவாமி செயல்படுத்திடும் ஆன்மிகம் என்று கூறிடும் மோடிஜி அன்றாடம் யோகா பழகுபவர். தியானத்தில் ஆழ்பவர்.
அவர் அருகே சென்றாலே நேர்மறை அதிர்வலைகளோடு சேர்ந்த ஆன்மிக சக்தி அணுகுபவரையும் சுற்றிக் கொள்ளும்.

தான் பிரதமரானதும் கங்கா ஆரத்தியில் இறைவன் சத்ய சாயியின் புகைப்படம் சேர்த்து வைத்து வழிபட வழிவகை செய்தார். அவரும் கங்கைக்கு ஆரத்தி எடுத்து பலமுறை வழிபட்டிருக்கிறார்.


கங்கையில் முங்கி எழுந்தால் மட்டுமே பாவம் போகும். ஆனால் கடவுள் சத்ய சாயியை நினைத்தாலே... அவரைப் புகைப்படத்தில் கண்டால் கூட போதும் நம் பாவங்கள் யாவும் கரைந்தோடும். அனுபவ சத்தியமிது.

"என் குழந்தை பருவம் முழுக்க வறுமையில் கழிந்தது. வறுமையே என் முதல் உந்துசக்தி. அதுவே வறுமைக் கோட்டின் கீழிருப்பவர்களை மேலேற்ற அவர்களை எல்லாவிதத்திலும் முன்னேற்ற  கடமைப்பட்டிருக்கிறேன்"
என்று மோடிஜி தெரிவிக்கிறார்.

இறைவன் சத்யசாயியும் பக்தர் மோடி போல் எளிய குடும்பத்தில் உதித்தவரே...
எளிமையே ஞானத்தின் திறவுகோல்...
இறைவன் சத்ய சாயி இதயத்தில் குடி வந்து விடுவதால் இதய வெறுமையும் போய்விடுகிறது.. மனித வறுமையும் போய்விடுகிறது..

இங்கே இறைவன் சத்ய சாயி சங்கல்பமே நிகழ்கிறது..
நாம் பாதுகாப்பான கவசக் கரத்தில் தான் நம்மையும் நம் தேசத்தையும் ஒப்படைத்திருக்கிறோம்.

தேச பக்தி .. தெய்வ பக்தி இதுவே நம் பாரதத்தை ஒவ்வொரு அடியாக உன்னதத்தை நோக்கி அழைத்துச் செல்லும்... அதுவே
சாயி பாரத் மாதா கி ஜெய் என உரத்த குரலில் சொல்லும்...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக