தலைப்பு

சனி, 9 மே, 2020

லிகித ஜபம் செய்வது எப்படி?


லிகித ஜபம் என்பது நாமஸ்மரணத்தின் ஒரு வகை ஆகும்.  லிகித ஜபம் என்பது இறைவனின் நாமத்தைத் திரும்பத் திரும்ப எழுதுவதாகும். லிகித ஜெபத்தை எழுதுபவர்களுக்கு ஒருமுக நோக்கு சக்தி அதிகரிக்கிறது. அது எழுதுவோருக்கு சரணாகதி உணர்வைக் கொடுக்கிறது.  அது உள்ளுறையும் உணர்வுக்கு ஊக்கத்தையும் அமைதியையும் அளிக்கிறது.  நாம் அனுதினமும் குறைந்த பட்சம் 108 தடவையாவாது இறைநாமத்தை எழுத வேண்டும். லிகித ஜெபத்தைத் தொடர்ந்து விடாமல் இருபத்து ஒரு நாட்கள் எழுதி வந்தால் அது பின்னர் ஒரு தினசரி நாமஸ்மரணப் பயிற்சியாக பழக்கத்தில் வந்து விடும்.

லிகித ஜபத்தை எப்படி செய்ய வேண்டும்? பூஜை அறையில் இறைபெருமான் படத்திற்கு முன் அமர வேண்டும்.  சம்மணமிட்டு நிலையில் கண்களை மூடி இறைபெருமானின் பாதங்களை மனக்கண்ணில் கொண்டுவந்து சரணாகதியில் இருக்க அவரது அருளை வேண்டி எழுத ஆரம்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் அவரது நாமத்தை எழுதும்போது அதே நாமத்தை உச்சரித்துக்கொண்டு அவரது அழகிய தெய்வீக வடிவத்தை மனதில் பதித்துக்கொண்டு எழுத வேண்டும்.  தொடர்ந்து இறைவன் சர்வ வியாபி, சர்வமும் அறிந்தவர் மற்றும் சர்வ சக்தியுள்ளவர் என்பதை நினைவு கூற வேண்டும்.

ஆண்டவனே இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும் படைத்தவர், காக்கின்றவர் மற்றும் அழிக்கின்றனர் என்று தியானிக்க வேண்டும்.  அவரது விருப்பம் இல்லாமல் உலகத்தில் எந்த ஒரு நிகழ்வும் ஏற்படுவதில்லை என்பதை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

லிகித ஜபம் செய்யும்போது கீழ்க்கண்டவாறு நமது பிரார்த்தனைகளை சாயி இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். பரம்பொருள் நீயே என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.  நான் என்றும் உன் மலர்ப்பாதங்களில் சரண் அடைந்திருக்கும்படி அருள் பாலியுங்கள் சாயி இறைவா! நீங்கள் எப்போதும் என்னுடன் இருங்கள! எங்களது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அதை உணர்ந்திருக்கப் பிரார்த்திக்கிறேன். எனது எண்ணம், சொல், மற்றும் செயல் யாவும் உங்களால் வழிநடத்தப்பட்டுப் புனிதப்பட வேண்டும் என்று மன்றாடுகிறேன்.  எங்கள் மனதில் உங்கள் மீதான அன்பு என்றென்றும் குறையாமல் வளர்ந்து வரவேண்டும் என்று இறைஞ்சுகிறேன். நீங்கள் கொடுத்த இந்த வாழ்க்கையை உங்களது சிறந்த கருவியாக இருந்து உங்களை மகிழ்விக்கும்படி நான் பயனுடன் செயலாற்ற அருளாசிகள் புரியுங்கள் என் இறைவா!

சாயி இறைவா! உங்களை நான் என்னுள் காண அருள் புரிய வேண்டும்! அதே போல் நான் உங்கள் அன்பைப்பெறும் அருகதையை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்! என் வாழ்வில் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் நீங்கள் உறைகிறீர்கள் என்பதை நான் தினமும் நினைவு கூற ஆசீர்வதியுங்கள்! நான் ஒவ்வொருவரையும் என்னைப்போலவே கருதி நேசிக்க வேண்டும். என்னால் இயன்ற சேவையை, உதவியைப் பிறருக்கு நான் அளித்திட அருள் புரியுங்கள்!

நீங்கள் கற்பித்த மனிதப் பண்புகளான சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அஹிம்சை ஆகியவற்றைத் தவறாமல் என் வாழ்வில் பின்பற்ற அருள் புரியுங்கள்! என்றும் உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் தெய்வ வடிவத்தை மனதில் இருத்தி எங்கள் வாழ்க்கையைத்தொடர நீங்கள் ஆசிபுரிய வேண்டுகிறேன்! என்றென்றும் உங்கள் புகழைப்பாடி, நல்ல குணங்களைப் பின்பற்றி தீய குணங்களை முழுவதுமாக விலக்கி நான் ஒரு சிறந்த சாயி பக்தனாக விளங்க வேண்டும்.  நீங்கள் எனக்கு அளித்த அத்தனை நன்மைகளையும் நான் எண்ணிப்பார்த்து உங்களிடம் நன்றி பாராட்டி உங்கள் அருளால் உங்கள் தாள் பணிந்து சிறப்புற வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி இதனை நிறைவு செய்கிறேன். ஜெய் சாயி ராம்!

-மா.மோகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக