தலைப்பு

சனி, 30 மே, 2020

வெறுத்து ஒதுக்கியவரின் வீட்டுக்கு வந்த சாயி இறைவன்!


கடவுள் தனக்குச் சொந்தமான தன்னோடு தொடர்பு கொண்ட ஜீவன்களை தன்னிடம் இழுத்துக் கொள்ள என்னென்ன லீலைகளைப் புரிகிறார். எந்த அளவிற்கு இறங்கி வருகிறார் என்பதற்கு சாயி பக்தை சாருமதியின் அனுபவங்களே சரியான உதாரணம்... 

சாருமதி சொல்கிறார்.. ஆரம்பகாலத்தில் ஸ்வாமி பாபா என்றால் ஆகாமலிருந்தது எனக்கு. பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த மீனாட்சி என்ற தோழியின் மூலம் தான் பாபாவின் படத்தைப் பார்த்தேன். எல்லாரும் மதிய நேரத்தில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது வியாழக்கிழமைகளில் இவள் மட்டும் சாப்பிடாமல் ஒதுங்கிப் போவாள்.
பாபாவின் படத்தை என்னிடம் காட்டி, அவர் கடவுள் என்று சொல்லத் தொடங்குவாள். பாபாவின் அந்தத் தலையைப் பார்த்தாலே எனக்கு ஒரே பயமாக இருக்கும். ரவுடி மாதிரி இருக்கும் இவரைப் போய் நீ கடவுள் என்கிறாயா என்று சொல்லிப் படத்தை பிடுங்கிக் கிழித்துப் போட்டிருக்கிறேன். பிளஸ் டூ வரை அவள் என்னுடன் படித்தாள். அவள் பாபாவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் திட்டுவேன். அங்கிருந்து ஓடி விடுவேன். அந்தப் பெரிய பரட்டைத் தலைமுடியோடு கூடிய பாபாவைப் பார்த்தாலே திகிலும் பயமும் என் வயிற்றைக் கவ்வும்.

கல்லூரியில் படிக்கும்போது மாணவிகளுக்கு நல்ல வகையில் 'சர்வீஸ்' செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லக் குழந்தையாக வளர்ந்தேன். திருமணமானது. கணவர் சாய் மிகவும் அன்பான ஆதரவான நல்லியல்புகள் கொண்ட பண்பாளர். தெய்வ பக்தி மிகுந்தவர். 1991லிருந்து சில ஆண்டுகள் சிதம்பரத்தில் குடும்பம் நடத்தினோம். அப்போது அங்கிருந்த சத்யசாயி சமிதி கன்வீனரோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவர் பாபாவின் படத்தை என் கணவருக்குத் தந்தார். இரண்டு படங்களைத் தந்தார். ஆரஞ்சு அங்கியணிந்த பாபாவின் தோற்றம் தன் கனவில் எப்போதோ வந்ததைக் கணவர் நினைவுகூர்ந்தார். பூஜையறையில் கணவர், பாபாவின் படத்தை வைத்தபோது எதிர்த்தேன்... 'இத பாருங்க இவரைப் பார்த்தாலே எனக்கு பயம் ஒண்ணு நீங்களாகவே எடுத்தடறீங்களா இல்ல நான் கிழிச்சுப் போட்டுடட்டுமா' என்றதும் கணவர் எடுத்துவிட்டார். ஆனால் அங்கேயே எனக்குத் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டார். அவருக்கும் நம்பிக்கையில்லை என்றாலும் பூஜையறையில் படம் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கிறார். அந்தச் சமயம் எனக்கு இரண்டு முறை கருக்கலைப்பு நேர்ந்தது. வருத்தத்திலிருந்த எங்களிடம் கன்வீனர்.. பாபா படுக்கையிலிருந்து கொண்டே ஆசீர்வதிக்கும் படத்தைத் தந்து, ஸ்வாமியின் ஆசியால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் வைத்து வழிபடுங்கள் என்று தந்து விட்டுப் போனதும்,முருகனும் வெங்கடாஜலபதியும் இருக்கற எடத்துல இந்த ஆளோட படமா என்று எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டேன்.


அது சமயத்தில் இறால் பண்ணைத் தொழிலில் இறங்கியிருந்த கணவருக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. சிதம்பரம் கவரப்பட்டு என்ற இடத்தில், சின்னக்காரமேடு பெரியக்காரமேடு என்ற கிராமங்களில் மூன்றும் இரண்டுமான பிரத்யேகமான குளங்களை உருவாக்கி இறால்களை விட்டிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. எங்கள் குளத்தின் ஒரு கரையருகே பாபா நின்று கை தூக்கி ஆசீர்வதிக்கிறார். எதற்கு என்று புரியவில்லை. திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டு அந்தப் பெருவெள்ளத்தில் இறால் வளர்ப்பிற்கு உருவாக்கப்பட்ட எல்லாக் குளங்களும்  உடைத்துக்கொண்டு 'வாஷ்அவுட்ஆகி எல்லாம்  கடலில் போய் கலந்து கொண்டிருந்தது. எல்லாருடைய குளங்களும் வாஷ் அவுட் ஆகிப் போய்க்கொண்டிருந்த போது எங்களுடைய மூன்று குளங்கள் மட்டும் காப்பாற்றப்பட்டன! மிகப் பெரிய அளவில் லாபம் வந்தது! ஸ்வாமி உங்களுடைய குளங்களைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டார் என்று சாயி பக்தர்கள் சொல்லி சந்தோஷப் பட்டார்கள். இதை இவர் சொன்ன போதும் அதை அலட்சியம் செய்து விட்டேன்.


இதற்கிடையில் சிதம்பரம் சாயி சமிதி சார்பில் கண் மருத்துவ முகாம் நடந்தது. படித்தவர்கள் வந்து சர்வீஸ் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் இது சேவைதானே என்ற எண்ணத்தோடு, கன்வீனர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியோடு சென்று நோயாளிகளின் பெயர் முகவரி நோய் விவரம் முதலியவற்றைக் குறிக்கும் அட்டைகளைத் தயார் செய்தோம். அப்போதும் அந்த அறையிலிருந்த பாபா படத்தை எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டேன். இடையில் வீடு வந்து 'டிபன்' சாப்பிட்டுவிட்டு திரும்பவும் சென்று சர்வீசுக்குப் போகவேண்டியிருந்தது. டேப் ரிக்கார்டரின் மேல் வைக்கப்பட்டிருந்த பாபா படத்தைப் பார்த்து அந்தம்மாள் சத்தமிட்டார்.  'இங்க பாரு ஸ்வாமி படத்துலே விபூதி வந்திருக்கு ஸ்வாமி இங்கு வந்து விட்டார்' திக்கென்றது எனக்கு. 'இங்க வந்துட்டாரா? குண்டூசி நுனியளவில் விபூதி படத்தில் உருவாகியிருந்தது. வயிற்றில் பயம் பரவியது.. சரி வாருங்கள் போகலாம் என்று வீட்டைப் பூட்டிக் கொண்டு போய் விட்டேன். சர்வீஸ் முடிந்து திரும்பி வரும் போது வீட்டிற்குள் நுழைய மிகவும் பயமாகயிருந்தது. இரவு 8 மணிக்கு கணவர் வரும்வரை வெளியிலேயே உட்கார்ந்திருந்தேன். பக்கத்துவீட்டு அம்மாவிடம் பசிக்கிறது என்று சொல்லி தோசை வாங்கிச் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். இவர் வந்து என்னைக் கடிந்து கொண்டார். பக்கத்தில் குடியிருந்த அட்வகேட்டின் மனைவியும் எங்களோடு வீட்டிற்குள் வந்தார்கள். படத்தில் இப்போது விபூதி அதிகரித்திருந்தது. இவருக்கும் இது புதிராக இருந்தது. அந்த அம்மாளுக்கு ஸ்வாமி பற்றித் தெரியும் என்பதால் ஸ்வாமி பற்றிய அதிசயங்களைச் சொன்னார். விபூதி இன்னும் அதிகமாய் வரத் தொடங்கியது. எனக்கு ஒரே உதறலெடுத்தது. இவர் சொன்னார் கடவுள் உன்னைத் தேடிக் கொண்டு வருகிறார் நீ புரிஞ்சுக்கணும்! பயத்தை மீறிக்கொண்டு ஒரு வீம்பு வந்தது. கேட்டேன்... 'சரி.. இவர் விபூதி மட்டும்தான் குடுப்பாரா? குங்குமம் குடுக்க மாட்டாரா? உடனே குங்குமம் வரத் தொடங்கியது. ஸ்வாமி நான் கேக்கறத யெல்லாம் குடுப்பாரா என்று கேட்டேன். படத்திலிருந்து விபூதி பொங்கி வரத் தொடங்கியது... பொங்கிப் பரவி தரையில் விழுந்து அலைஅலையாய்ப் பரவத்தொடங்கியது. பூஜையறையிலிருந்து ஹால் முழுவதும் விபூதியில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக ஃபோன் செய்து படம் தந்தவர்களை வரவழைத்தோம். கன்வீனரும் மற்ற பக்தர்களும் பிரமிப்பில் மூழ்கி பய பக்தியோடு வணங்கி 'ஸ்வாமி இங்கே வந்து விட்டார்' என்று சொல்லி நெகிழ்ந்தார்கள். தரையில் விபூதி விழாமலிருக்க அங்கங்கே பேப்பர்களை வைக்கச் சொன்னார்கள்...பேப்பர் வைத்து மாளவில்லை. பேப்பர்களை மூழ்கடித்துக் கொண்டு விபூதி பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வந்து விபூதியைஅள்ளிக் கொண்டு போகத் தொடங்கினார்கள். விபூதி வாசனையில் வீடு திணறியது. ஹாலைத் தாண்டி சமையலறைக்கு தாண்டிக் குதித்தால் தான் போக முடியும். எப்படி சமைப்பது ?எங்கே நடப்பது? எங்கே படுப்பது? ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பமாயிருந்தது. எங்குமே நகர முடியாமல் சகஜநிலை பாதிக்கப்பட்ட மனநிலையோடு சங்கடத்தோடும் கலவரத்தோடும் வேடிக்கை பார்த்தபடியிருந்தேன். ஒரு தினப் பத்திரிகையிலிருந்து இதைப் புகைப்படமெடுத்து பேட்டி எடுக்க வந்தபோது 'இந்தா பாருங்க எந்த விளம்பரமும் பண்ணாதீங்க என்னை ஒண்ணும் கேக்காதீங்க எங்களுக்கு இதெல்லாம் என்னன்னு புரியலை' என்று சொல்லி அனுப்பிவிட்டேன். பிறகு மெல்ல மெல்ல பூஜையறை வரை விபூதிப் பெருக்கு அடங்கியிருந்தது.


தொடர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த கன்வீனர் சொன்னார்.. ஸ்வாமி இங்கே வந்து விட்டார். ஸ்வாமியோட பாதம் இங்கே நீங்க கட்டாயம் வெச்சு பூஜை பண்ணனும் என்றார். தூக்கிவாரிப்போட்டது எனக்கு. இது வேறெ... அசைவ உணவு உண்பவர்கள் நாங்கள்.. இன்னும் இதெல்லாம் வைத்தால் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். சுத்தமாக இருந்து பூஜை செய்ய வேண்டும். இதெல்லாம் எங்களுக்குச் சரிப்படாது என்றேன். அம்மா நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் விளக்கேத்தி வெச்சு ஸ்வாமி பாதத்தை அபிஷேகம் பண்ணிப் பூப் போட்டால் போதும்' யோசித்தேன்.. சரி சிம்பிளாத் தானே இருக்கு அப்படியே செய்யலாம் ஆனால் பாதம் வாங்கப் பணம் இல்லையே என்று நினைத்த போது போதுமான பணம் வந்தது. நெய்வேலியில் பாபாவின் வெள்ளிப் பாதுகைகளை வாங்கினோம். வாங்கி வரும்போது ஸ்வாமியின் கல்லூரியில் படித்த ஒரு மாணவி அங்கு வந்து, புது வீடு கட்டியிருக்கிறோம் ஸ்வாமி பாதம் வந்தால்தான் கிரகப்பிரவேசம் செய்வதாகக் காத்திருந்தோம். நீங்கள் ஊருக்குப் போகுமுன் எங்கள் வீட்டில் ஸ்வாமி பாதங்களை வைத்து வழிபாடு செய்துவிட்டு எடுத்துக்கொண்டு போங்கள் என்று கேட்டுக்கொண்டாள். அதன்படி அங்கு பாதுகா வழிபாடு பஜன் எல்லாம் நடந்தது. இதெல்லாமே எனக்கு புதிராக இருந்தது.பஜன் பாட்டு எதுவும் தெரியாது.. சும்மா உட்கார்ந்திருந்தேன்.

வீட்டில் கொண்டு வந்து பூஜையறையில் பாதத்தை வைத்தோம். தினமும் விளக்கேற்றி வைப்பேன். பாதங்களுக்கு தண்ணீரில் அபிஷேகம் செய்து பூப்போட்டு வைப்பேன். எந்த ஈடுபாடுமில்லாத ஒரு வேலையாக அது எனக்கு இருந்தது. அந்தச் சமயங்களில் மதியம் 1.30 மணியிலிருந்து 3 30 மணி வரை எங்கிருந்தோ ஒரு கீரிப்பிள்ளை வந்து அந்தப் பாதத்தில் வந்து உட்கார்ந்து விட்டுப் போகும். அதிலேயே படுத்துத் தூங்கும். அங்கு வைத்திருக்கும் பழம் பால் உணவு எதையும் சாப்பிடாது.. அப்போது பாம்புத் தொல்லையிருந்ததால் ஸ்வாமி தான் அப்படி வந்தார் என்று சில பக்தர்கள் சொன்னார்கள்.

புட்டபர்த்திக்கு நீங்கள் கட்டாயம் போக வேண்டும் என்று கன்வீனரும் மற்றவர்களும் வற்புறுத்த சரி போய்ப் பார்த்துவிட்டுத் தான் வருவோமே என்று 1995 அக்டோபரில் புட்டபர்த்திக்குச் சென்றோம்.கணவர் சொன்னார் நான் ஸ்வாமிக்கு கடிதம் எழுதப் போகிறேன். நீயும் கையெழுத்துப் போடு! மறுத்து விட்டேன். 'இதிலேயோ இவர் மேலேயோ எனக்கு நம்பிக்கை யில்லை' என்றேன். என் பக்கத்திலிருந்த சில வெளிநாட்டுப் பெண்கள் பாபாவின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து இப்போது தான் ஸ்வாமியிடம் முதலில் வருகிறாயா என்று கேட்டார்கள். எனக்குள் எதுவும் பதியவில்லை. ஆனால் எனக்குள் சொல்லிக்கொண்டேன்... என்னமோ ஸ்வாமி கிட்டே வருவாரு பாதங்களைத் தொட்டுக் கும்பிடலாம்னு சொல்றாங்க. எங்க நீ இங்க வந்து எனக்குப் பாதங்களைக் குடுக்கிறது? அப்படி மட்டும் நீ வந்து எனக்குப் பாதங்களைக் குடுத்தா உன்னை கடவுள்னு நான் நம்பறேன். இல்லியனா இன்னைக்கே ஊருக்கு கிளம்பிவிடுவேன் அப்புறம் வரமாட்டேன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன்.ஸ்வாமி மெல்ல நடந்து வந்து என் முன் நின்றார். என் தலையில் கைவைத்து அழுத்தினார். 5 நிமிடங்களுக்கு அழுத்தியபடியிருந்தார். அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதைத் தாங்க முடியாத நிலையில் வேறு ஏதும் செய்ய முடியாத நிலையில் அவர் பாதங்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டேன்.ஸ்வாமி என் தலையை அழுத்திய அழுத்தத்தில் எனக்குள் எல்லாம் மறந்து போனது. இருக்கிறேனா  இறந்துவிட்டேனா ஒண்ணும் புரியவில்லை. கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் கொட்டிக் கொண்டேருந்தது. அழுதேன். அழுதுக்கொண்டே இருந்தேன். திரும்பி வேறு பக்கம் நகர்ந்து விட்டார் ஸ்வாமி. ஸ்வாமி நீ கடவுள் கடவுள் என்று சொல்லி அழுதபடியே இருந்தேன். என் பக்கத்திலிருந்த வெளிநாட்டுப் பெண்கள் என் தலையில் முத்தமிட்டு மகிழ்ந்தனர்.ஸ்வாமியின் எப்படிப்பட்ட அனுக்கிரகம் உனக்கு.. 'நீ கடவுளின் குழந்தை' என்று சொல்லி மகிழ்ந்தனர்.அன்றிலிருந்துதான் சாயியின் மேல் பேரன்பு பிறந்தது எனக்கு... ஸ்வாமி எனக்கு எல்லாமானார்! என் மூச்சு பேச்சு எல்லாம் சாயியாகவே மாறியது. வழிபாடு பார்வையிழந்தோர்க்கு சேவை... உடற்குறை கொண்டோர்க்கு நாராயண சேவை.. பஜன் பர்த்தி சேவை என்று எல்லாம் அபரிமிதமான வேகத்தில் வளரத் தொடங்கியது.ஸ்வாமி பாபா அவதார புருஷன் தெய்வம் ஆண்டவன் ஆண்டவன் ஆண்டவனே என்று  ஆத்மாவிலிருந்து பொங்கி வந்த அறைக்கூவல் தாளாமல் நெகிழ்ந்துருகத் தொடங்கினேன் என்று மனம் கரைந்துருகிறார்.


குழந்தைக் குரலும் குழந்தை மனமும் கொண்ட சாருமதிக்கு குழந்தையில்லை. கடவுள் சாயியே குழந்தையாயிருக்கிறார். இந்த பக்தைக்கு தன் மீதிருந்த பயத்தை மெல்ல மெல்லத் தன் கருணையினாலும் அன்பினாலும் போக்கி இவரை ஆட்கொண்டுவிட்டார் சாயி... சாயியை கிருஷ்ணனாக உணர்கிறேன். பூஜையறையைத் துடைக்கும் போது மற்ற இடங்கள் உலர்ந்து போக பல இடங்களில் ஈரமான குட்டி குட்டிப் பாதங்கள் பதிந்திருக்குமாம்!ஸ்வாமியின் அனுக்ரஹம் இந்த பக்தையின் மேல் மழையாய்ப் பொழிகிறது!

ஒருமுறை காஞ்சிபுரம் போய் இருவரும் திரும்பி வந்ததும் இந்த பக்தை சொல்லியிருக்கிறார் 'இன்னைக்கு என்னால் சமைக்கமுடியாது சாமி சமைப்பார்' அப்படியே ஸ்வாமி வந்து சாதம் செய்து குழம்பு வைத்து விட்டுப் போயிருக்கிறார்! இருவருக்கும் ஒருமுறை உடல்நலம் சரியில்லாத போது இன்செக்‌ஷன் போட்டு விட்டுப் போயிருக்கிறார்! ஸ்வாமியோடு சென்று வெளிநாட்டிலிருக்கும் பக்தர்க்கு மருத்துவம் பார்த்து விட்டு அரை மணி நேரத்தில் திரும்பிய தெய்வீக அனுபவம் சாருமதிக்கு உண்டு! ஷீரடிக்குப் போய் சந்நிதியில் உட்கார்ந்த போது இவர் மேல் பெரியவர் அட்சதை போட்டிருக்கிறார். ஷீரடி அவதாரத்தோடு தொடர்பு கொண்ட மேலானதொரு புண்ணியாத்மாவாக இவர் சொல்லப்பட்டிருக்கிறார். தன்னோடு பூர்வ அவதாரத் தொடர்பு கொண்ட இந்த பக்தையை சொந்த வட்டத்திற்கு இழுக்க ஸ்வாமி செய்த லீலைகள் தான் என்னென்ன?! தந்து வரும் அனுபவங்கள்தான் என்னென்ன?!

இந்த பக்தையின் கனிந்துருகும் பக்தியே வார்த்தைகளாகிப் பொழிந்தது. சாயி பக்தர் அனைவருக்குமான புனித நினைப்பே இது. சாயியைத் தவிர உலகில் வேறு ஏதுமில்லை. சாயி என்னை நன்றாக வைத்திருக்கிறார். சாயியை உணர்ந்து விட்டதால் உடல் மனம் ஆத்மாவெல்லாம் இலேசாகியிருக்கிறது. நான் விடும் ஒவ்வொரு மூச்சும் சாயியின் மூச்சு. கடைசி வரை என் ஒவ்வொரு மூச்சும் சாயியுடையதாகவே இருக்க வேண்டும். சாயி சாயி சாயி சாயி சாயியே எல்லாம் என்று அவர் சொல்லி முடித்ததும் காற்று முழுவதிலும் சாயி நாமம் ரீங்கரித்துக் கொண்டேயிருந்தது. சாயி.. சாயி.. சாயி...!

ஜெய் சாய்ராம்

ஆதாரம்: சாயி பிருந்தாவனம் (சாயி பக்தர்களின் அனுபவங்கள்) - கவிஞர். பொன்மணி | Pg: 88 to 94
வெளியீடு: ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக