தலைப்பு

வியாழன், 21 மே, 2020

முரட்டு ஷிர்டி சாயி பக்தை சத்ய சாயி காலடியில் மலர்ந்த அனுபவம்!


இங்கே பலர் இறைவனான ஷிர்டி சாய்பாபா பக்தர்கள். மகிழ்ச்சியே. ஆனால் அந்தப் பலரில் ஒருசிலருக்கு ஷிர்டி சாயியும்.. புட்டபர்த்தி சாயியும் ஒருவரா எனும் சந்தேகம்... ஏன்.. ஷிர்டி சாயியை நேரில் தரிசித்திருந்த பலருக்குமே இறைவன் சத்யசாயிடம் ஆரம்ப காலத்தில் சந்தேகம் இருக்கவே செய்தன.. அந்த சந்தேகங்களை எல்லாம் நீக்கி இரு இறை உருவங்களும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கினார் இறைவன் சத்ய சாயி.

அரிய அற்புதங்கள் செய்தும் சந்தேகம் தீர்த்திருக்கிறார். சிறு சிறு விஷயங்களை உணர்த்தியும் சந்தேகம் தனை தெளிவாக்கி இருக்கிறார்.
சந்தேகப்படுவதும் ஒரு கர்மாவே.  காலப்போக்கில் அந்த சந்தேக நோயை குணமாக்குகிறார் சுவாமி.

அப்படி ஒரு பக்தை. ஷிர்டி சுவாமியின் டாலரை சிறுவயதிலேயே அணிந்து அவரைப் பற்றி தெரியாமலேயே அவர் பக்தராகிறார். அவரை சரோஜம் என அழைப்பர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் கவியோகி சுத்தானந்த பாரதி (ஷிர்டி சுவாமியை நேரில் தரிசித்த மகான்) உரையாற்றுவார். இவரோ அங்கு சென்று ஆர்வமாய்க் கேட்பார். ஷிர்டி சுவாமி மேல் பக்தி வளர்ந்தது.
பதினோராம் வகுப்பில் சேர்ந்து படித்த மாணவி காந்திமதியும் ஷிர்டி சுவாமி பக்தை. சரோஜம் பக்தி இதனால் இரட்டிப்பானது.

அதன் பிறகு 4 வருடங்களில் சரோஜத்திற்கு  திருமணமானது.
 கணவரின் பணி மாற்றத்தால் கோவைக்கு  வருகிறார் சரோஜம். 
 ஆறா துயர் தனது ஆவன்னாவையும் எழுதியது அவர்களின் வாழ்வில். 
 ஆம் இரண்டு குழந்தைகள் இறந்தன.. அதனால் சரோஜம் சுருங்கிப் போனது. அதன் இதயத்தில் நாத்திகம் வீசியது.
 எல்லா தெய்வப் படங்களும் பரணுக்குப் போயின..

ஆனாலும் விடுவாரா ஷிர்டி சுவாமி..!
எதிர்வீட்டில் இருந்த ரத்னா ஷெட்டி ஷிர்டி சுவாமி பக்தை..
இருவரும் பழகினர். இணைந்து அருகில் உள்ள நாக சாயி கோவிலுக்கு மலர் தொடுத்து வியாழன் தவறாமல் சென்றுவர ஆரம்பித்தனர்.

ஷிர்டி சுவாமி படம் ஒன்றை வாங்கி வந்து சரோஜம் வீட்டில் மாட்டினார்.
ஷிர்டி சுவாமியின் அருள் வளையத்தில் சரோஜம் மீண்டும் மாட்டினார்.

பரமன் கருணை என்பது துருப்பிடித்த இரும்பையும் காந்தமாக்கி தன்னகம் இழுத்துக் கொள்ளும்!

"நீ என்னை நிராகரித்தாலும் நான் உன்னைத் தொடர்வேன்" என சரோஜம் வாங்கி வந்த ஷிர்டி சுவாமி புகைப்படத்தில் எழுதி இருந்தது.


இந்தக் கட்டத்தில் தான் இறைவனின் இரண்டாவது அவதாரமான சத்ய சாயி கோவை நாக சாயி மந்திருக்கு வருகிறார். 
தனக்கு எப்போதும் ஒரே பாபா தான் என்ற வரட்டுப் பிடிவாதத்தால் இறை தரிசனத்தைத் தவிர்க்கிறார். எப்பேர்ப்பட்ட நஷ்டம்.

அதைப் போன்ற நஷ்டத்தை யாரும் பிரேம சாயி அவதார வருகையின் போது சந்திக்கக் கூடாதென்பதே அடியேன் வேண்டுதல்...

இரண்டு குழந்தை இறந்ததற்கும் மேலாக சரோஜத்தின் தங்கையும் அவள் கணவரும் விபத்தில் இறக்கவே.. துக்கம் இதயத்தைப் பிசைகிறது.. இதனால்  சரோஜத்தின் தந்தை விவேகானந்தரையும் ரமணரையும் வாசிக்கச் சொல்கிறார். ஷிர்டி சாயி தந்த குரு ரமணர் என உணர்கிறார். ரமண தியானம் புரிகிறார்.

காலம் உருள்கிறது. மகப்பேறு புலர்கிறது.

டெல்லிக்கு பணி மாற்றமான சரோஜத்தின் கணவர் பழனிவேலுவின் அலுவலக நண்பர் ஒருவர் இறைவன் சத்ய சாயி பக்தர். நிறைய மகிமைகளை அன்றாடம் பகிர்வார்.
இதை எல்லாம் கணவர் சொல்லி கேட்பார் சரோஜம்.

இறைவன் சத்ய சாயி மீண்டும் செவி வழியாக நுழைகிறார்.

பிருந்தாவன் வொயிட் ஃபீல்ட் செல்ல அங்கே சரோஜத்தின் கணவர் சுவாமியை தரிசனம் செய்கிறார். அருகே வந்த சுவாமி பழனிவேலு கையில் தாங்கி இருந்த கீதா வாஹினியைக் கேட்டு வாங்கி தன் கையெழுத்து எழுதித் தருகிறார்.


அது வெறும் கையெழுத்து அல்ல..
இறைவனை நோக்கி மாறப்போகிற சரோஜத்தின் தலையெழுத்து.

சுவாமி படம் வாங்கி வருகிறார். ஆனால் சரோஜம் அதற்கு ஃபிரேம் இடாமல் சுருட்டி வைத்திருக்கிறார்.

பிரசாத விபூதி எடுக்கின்ற போது கதவு திறக்கும் சத்தம்.. யாரோ காலடி நடந்து தன்னை நோக்கி வருகின்ற சத்தம்.

விரலை விபூதிக்குள் வைத்தபடியே வியந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார்.

இறைவன் சத்ய சாயியின் சூட்சும வருகை அதுவென அப்போது சரோஜத்திற்குப் புரிய வாய்ப்பில்லை.

டெல்லியில் அப்போது கள்வர் பயம் அதிகமாம். பயமுறுகிறார்.
வருகை புரிந்தது உள்ளம் கவர் கள்வன் எனப் பிற்காலத்தில் உணர்ந்து பூரிப்பாகிறார்.

சரோஜத்தின் இளைய மகளோடு படித்த பெண் இறைவன் சத்ய சாயி பக்தை. இப்படி ஒரு பள்ளிப் பெண்ணே சரோஜத்திற்கும் வாய்த்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள் கற்றுக் கொடுத்தாள் என சரோஜத்தின் மகள் "இரு சாயியும் ஒருவரே எனும் ஒரு பஜனைப் பாடலைப் பாடுவார்"
அந்தப் பாடலின் இனிமையில்.. சிறிது சிறிது அக மாற்றம் அடைந்து வருகிறார் சரோஜம்.

அதே பெண் வீட்டில் பஜனை... முன்பு தன் இளம் வயதில் ஒரு சத்ய சாயி பஜனில் ஷிர்டி சாயியை மட்டுமே பார்த்து சத்ய சாயியை பார்க்காமல் பஜனில் கலந்து கொண்டு விடை பெற்ற சரோஜம் மீண்டும் தன் மகள் வழி அதே போல் பஜனைக்கு மீண்டும் செல்கிறார்.

 சத்ய சாயி ஏன் ஷிர்டி சாயி போல் கால் மேல் கால் போட்டுக் கொள்வதில்லை.. அப்படி ஒரு படமே இங்கு இல்லையே என ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது. பஜனில் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆரத்தியில் சரோஜம் எழுந்து கொள்ள... முன் நோக்கி நகர விடாமல் ஏதோ ஒன்று பிடித்துக் கொள்கிறது என்னவென்று திரும்பிப் பார்த்த சரோஜத்திற்கு எதிர்பாரா ஆனந்தம்..

தாம் நினைத்த அதே கால் மேல் கால் வைத்த போஸில் இறைவன் சத்ய சாயி திருப்படம்.


சரோஜத்தின் மகள் பாலவிகாஸ் வகுப்புக்கு செல்கிறாள். பல பாடல்கள்.. பல மகிமைகள் என அறிந்து உணர்ந்து புளகாங்கிதம் அடைகிறார் சரோஜம். 

இப்படி சிறுகச் சிறுக .. ஒவ்வொரு அடியாய்.. மிகத் தெளிவாய் இரு சாயியும் ஒருவரே எனும் சத்தியம் புரிய வைக்கிறார்.

ரமண பக்தர்கள் முடிவில் என்னையே அடைவார்கள் எனும் இறைவன் சத்திய சாயியின் சத்ய வாக்கைக் கேள்விப்பட்டு பரவசமாகி ரமண தியானம் தொடர்கிறாள்.

1980 முதல் சத்ய சாயி சாட்சாத் இறைவனே அவர் ஷிர்டி சாயி அவதாரமே என உணர்ந்து கொள்கிறார்.
சரோஜத்தின் சேவையும் வளர்கிறது..

சாயி இலக்கியம் படிக்கிறார். பிறகு பக்திப் பெருகி...
சாயி இலக்கியம் படைக்கிறார்.

2006ல் புட்டபர்த்தியிலேயே தன் கணவரும் இறைவன் சத்ய சாயி காலடியிலேயே ஐக்கியமாகிறார்.
காசியில் இறப்பதால் முக்தி. பர்த்தியில் இறப்பதால் வைகுண்ட பதவி.

பல கனவுகள்.. பல நேரடி தரிசனங்கள்.. பல பேருணர்வுகள்.. என சாயி பயணம் இன்றுவரை நிலைத்த ஜோதியாய் நீடிக்கிறது.

அந்த சரோஜம் வேறுயாரும் அல்ல..
மூத்த சாயி பக்தரும் .. சாயி இலக்கிய எழுத்தாளருமான ஆர்.சரோஜினி சாய்ராம்.

(பதினைந்திற்கும் மேற்பட்ட சாயி இலக்கிய புத்தகம் இவர் எழுதியது)

இவ்வளவு எதிர்த்தோமே .. இறுகி இருந்தோமே.. சந்தேப்பட்டோமே.. வருங்காலத்தில் இத்தனை சாயி பொக்கிஷங்களை எழுதுவோம் என சரோஜினி சாய்ராம் நினைத்திருக்க சாத்தியமே இல்லை..
எவ்வளவு பெரிய பிரம்மிப்பு இவர்களின் இதயத்துள் நடந்த மடைமாற்றமும்.. விடை ஏற்றமும்... 

ஒருமுறை இறைவன் சத்ய சாயி இவர்களின் கனவில் வந்து இது என் வீடு என்றிருக்கிறார். அதுமுதல் அவர்களின் வீடு.. சாய்பாபா வீடானது.


வீடு தருவதும் வீடு பேறு தருவதும் எல்லாம் இறைவன் சத்யசாயி ஒருவரே

இப்போது சுவாமியே சதா சரணமாய்.. சாய்ராம் என்பதையே சதா ஸ்மரணமாய் .. வன பிரஸ்த வாழ்வை தின பிரஸ்தமாய் தவ வாழ்வு வாழ்கிறார் சரோஜினி சாய்ராம்.

இப்படித் தான் பாராமுகம் காட்டியவரையும் தன் பாதாரவிந்தம் இழுப்பதே இறைவன் சத்ய சாயியின் இந்த அவதாரத்து மகா மகிமை.

"கொஞ்சிட நினைக்கையிலே குழந்தையாவான் சாயி
கும்பிட நினைக்கையிலே
குரு ஆவான் சாயி
நேசத்தை தந்துவிட்டால்
உயிர் நண்பன் சாயி
கருணையை நினைத்திட்டால்
கடலாவான் சாயி
அருளை நினைத்தாலோ
அண்டமாவான் சாயி
எம்பெருமான் என்றிட்டால்
எங்கும் நிறைவான் சாயி"
      -- ஆர்.சரோஜினி 

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக