தலைப்பு

செவ்வாய், 5 மே, 2020

கனவு காணும் வாழ்க்கையில் இறைவனே சுப்ரபாதம்!


கனவுகள் தூக்கத்தில் எழுந்த பிறகும் தொடரவே செய்கின்றன.. உறவுகள், நட்புகள் என்று கனவுகள் மேலும்  அதில் நம்மை அழுத்துகின்றன... இறைவன் சத்ய சாயியே இந்த கனவுகளிலிருந்து நம்மை  விடுபட வைக்கும் ஒரே விழிப்பு நிலை...

இவ்வுலகிலுள்ள எதுவும் இன்று இருந்து நாளையே மறையக் கூடியது. ஆகையால் நீ எதையாவது நாட விரும்பினால், கடவுளையே நாடு. அவரே தேய்வற்றவர். மாறாக, சந்ததிக்கோ, சொத்து சுகங்களுக்கோ ஆசைப்பட்டால் அவற்றை விட்டுச் செல்லும் போது, அளவற்ற மன துன்பத்துக்கு ஆளாவாய். அத்தருணத்தில், "இவ்வாறு கதறியழும் அளவுக்கு, நான் ஏன் இவற்றை இத்தனை ஆழமாக நேசித்தேன்: என்று புலம்புவாய். தோன்றி மறையும் இவ்வுலகில் மகிழ்ச்சியும், துன்பமும் கூட தோன்றி மறையக் கூடியவையே. ஆகவே மறைந்தோடுவதை தேடுவதிலேயே மிக ஆழ்ந்து, ஒப்பற்ற அழிவற்ற ஆண்டவனை மறப்பது மனிதனுக்கு மிகுந்த இழுக்காகும்.மாயை அற்ற மாதவனை மறந்து, மாயை நிறைந்த மற்றவற்றில் காலத்தைச் செலவழிப்பது பயனற்றதாகும். இதனால் துன்பமே முடிவில் மிஞ்சும். இவ்வுலகில் அழிவற்றது என்று வணங்கத் தகுந்தது எதுவுமே இல்லை. யாரை விரும்பி நேசித்தாலும், அந்த அன்புக்கு ஒரு முடிவு உண்டு. கொடுத்த இறைவனே எடுத்துக் கொள்கிறார். அவர் விருப்பப்படி கொடுக்கிறார். அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்கிறார் அனைத்தும் ஆண்டவனுக்குச் சொந்தம். அவருக்கு சொந்தமானதை அவரே எடுத்துக் கொள்ளும் போது, அதற்காக புலம்புவது எவ்வளவு அறிவீனமானது? ஆகவே ஞானி யாருக்காகவும் ஏங்க மாட்டார். எதனிடமும் அளவற்ற பற்றுதலும் கொள்ள மாட்டார்.ஏங்குதலும், பற்றுதலும் இறைவனுக்காகவே இருக்கட்டும். அவர் மட்டுமே நித்தியமானவர். அவர் மட்டும் எல்லா ஆனந்தத்துக்கும் உறைவிடம். மற்றவற்றைப் பொருத்தவரையில், பொருளைப் பொருளாக மட்டும் நேசிக்க வேண்டும். அதற்கு மேல் கூடாது. மனிதனை மனிதனாக மட்டும் நேசிக்க வேண்டும். அதற்கு மேல் கூடாது. அதற்கு மேல் நேசித்தால், அவரது இயல்பான தன்மை அறியாமல் நீ ஏமாந்திருக்கிறாய் என்று பொருளாகும். உதாரணமாக, வாடகைக்கு குடி புகுந்த வீட்டில், குடியிருக்கும் வரையில் தான் சொந்தம் கொண்டாடலாம். கெடு முடிந்ததும், அது மற்றொருவருக்கு சொந்தமாகிறது.

 இவ்வாறு நீ எல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்த்தால், இவ்வுலகில் மனைவி, மக்கள், பொருட்கள், செல்வங்கள், உறவினர் யாவரும் சில நாட்களுக்கே உங்களுக்குச் சொந்தம் என்றும், பிறகு அவர்கள் பிரிவர் என்றும் உங்களுக்கு புரியும். அவ்வாறிருக்க நிலையற்ற இவற்றிற்காக ஏன் கவலைப்பட்டு தேயவேண்டும்? கோடீஸ்வரன் கூட உண்பது வயிற்றில் அளவுக்கே, அதற்கு மேலல்ல. வழிப்போக்கன் விடுதியில் ஓரிரவு தங்கி, மறுநாள் கிளம்பி விடுவது போல, மனிதனும் இவ்வுலகில் வந்து, உலகை விட்டுச் செல்கிறான். இவ்வாறு விடுதி விடுதியாக மனிதன் மாறி, மாறித்தங்கி தன் இலக்கை நோக்கிச் செல்கிறான். வாழ்க்கையை இந்த வகையில் எண்ணிப்பார்ப்பது மிகவும் நல்லது.

 பல கால்கள் உள்ள மிருகங்கள் தரையில் ஊர்ந்து தான் செல்ல முடியும். மனிதனுக்கு இரண்டு கால்கள் தான் உண்டு. ஆகவே அவன் சுயேச்சையாக அசைந்து செல்லலாம். கால்கள் அதிகமாகும்போது,பந்தம் அதிகம் கட்டுப்பாடு இறுகுகிறது. மனிதன் திருமணம் செய்து கொள்கிறான், கால்கள் நாலாகின்றன. பிறகு மகன், மகள், மருமகன், பேரக்குழந்தைகள் இவ்வாறு கால்கள் பலவாகி அவன் பூரான் போன்று தரையில் ஊர்ந்து செல்கிறான். அவனால் நிமிர்ந்து நிற்க இயலாது. நிமிர்ந்து தன்னிச்சைப்படி நடக்கும் சுதந்திரமில்லை. பொருட்களின் சகதி வழியாக மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. கடவுளின் அருளைத் தேட அவனுக்கு மனப்பாங்கும் இல்லை, நேரமும் இல்லை.

 இவ்வுலகிலுள்ள பற்றுதல்கள் அனைத்தும் குறைந்த காலமே இருப்பவை. மக்கள் பலமுறை பிறந்து, நேசித்து, அன்பினில் மூழ்கி, மற்றவரிடம் பற்றுதல்களை வளர்த்து, பலமுறை வாழ்ந்திருக்கிறார்கள். அப்போதிருந்த ஆசாபாசங்கள் எங்கு சென்றன என்று இப்போது யாராவது அறிவார்களா? அன்று தான் நேசித்தவர்களைப் பற்றி இன்று கவலைப்படுகிறானா? அவர்களைப் பற்றி எப்போதாவது ஞாபகமாவது வருகிறதா? இல்லையே. இப்போதுள்ள அன்பும், பற்றுதலும் அப்போதும் இருக்கத்தான் இருந்தன. ஆனால் காலப்போக்கில் எல்லாம் மறந்து விட்டது. அதேபோல, இவ்வுலகை விட்டு விலகும்போதும், மற்றவர்களிடம் ஒருவர் கொண்ட அன்பும், அவ்வன்பு மூலமாக அடைந்த இன்பமும், துன்பமும், ஆனந்தமும் அனைத்தும் மறந்து விடும். பிள்ளைகளின் விளையாட்டு அரங்கத்தில் நடப்பது போல, மனிதனின் செயலரங்கத்தில் உள்ள காட்சிகளும், இங்கிருந்து அங்கிருந்தும், அங்கிருந்து வேறிடமும் மாறிக்கொண்டே இருக்கும். இத்தகைய பாதுகாப்பற்ற மாறுகின்ற அன்பில் தன் மனதைச் செலுத்துவது மட்டுமில்லாமல், நிலையான இறையானந்தத்தை அளிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வளர்த்துக்கொள்ள மனிதன் மறந்து விடுதல் எவ்வளவு வருந்தக் கூடிய செயல்!!

அதாரம்: தியான வாஹினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக