தலைப்பு

வியாழன், 28 மே, 2020

இரு சாயியின் சூட்சும சரீர பயணம்!


இறைவன் ஷிர்டி சாயி தனது சூட்சும சரீரத்தில் பல முறை பயணித்திருக்கிறார். பல பக்தர்களை ஆபத்திலிருந்தும் மீட்டிருக்கிறார். அந்தந்த பக்தர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். முக்கியமாக மூன்று நாள் உடல் இறந்த நிலையில் சூட்சும பயணம் மேற்கொண்டு .. இங்கே அவரைப் புதைக்க வேண்டும் என்ற சர்ச்சையும் களேபரமும் உருவாக .. சாயி தன் வாக்குப்படி மூன்றாவது நாள் சூட்சும பயணம் முடித்து உடலுக்கு திரும்புகிறார்.பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.

இதே போல் மறுஅவதாரமான இறைவன் சத்ய சாயியும் பல பரவச சந்தர்பங்களை பக்தர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
ரிஷிகேஷில் தண்ணீரில் அடித்துச் சென்ற ஒரு யோகியைக் காப்பாற்றியது. பிரசவங்கள் பார்த்தது.. (காருண்யானந்தா -- பிரசவ அனுபவம் -- கல்பதரு புத்தகம் -- கவிஞர் பொன்மணி) நோய்களைத் தீர்த்தது உட்பட பல தெய்வீகப் பொழுதுகளைப் பற்றி உள்ளம் வியந்து நேரடியாய்க் கண்ட பக்தர்கள் நிறைந்திருக்கிறார்கள். புத்தகத்தில் பதிவும் செய்திருக்கிறார்கள்.

லீலா மோகன சாயி புத்தகத்தின் முதல் பாகத்தில் தமிழ்நாட்டு  சாயி பக்தர் தான் கண்ணால் நேடியாகக் கண்டதை பதிவு செய்கிறார்.

மூர்ச்சை அற்று சுவாமி அவரது மடியில் விழுந்திருக்கிறார். என்ன ஒரு பாக்கியம். இவர் என்ன ஆயிற்றோ என பயந்தே போயிருக்கிறார். சில மணி நேரம் கடந்து சுவாமி தனது சூட்சுமப் பயணத்தை விளக்க.. வேர்த்த உடம்பிற்கு சாமரம் வீசியிருக்கிறது அந்த சாந்நித்ய அனுபவங்கள்.

நைஜாம் அரசாங்கத்தைச் சேர்ந்த சிஞ்சோலி ராஜா இறைவன் ஷிர்டி சாயி பக்தர் . அந்த அரண்மனையில் தங்கி இருக்கிறார் ஷிர்டி சாயி. ராஜாவோடு டாங்கா வண்டியில் பயணித்திருக்கிறார்.(அந்த வண்டி இப்போது புட்டபர்த்தி சைதன்ய ஜோதி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது)
இவை எல்லாம் நிகழ்த்திய போது அவர் ஷிர்டியிலேயே இருந்திருக்கிறார்.
இது எப்படி சாத்தியம்?

அந்த சூட்சுமப் பயணங்கள் இறைவனுக்கு சர்வ சாதாரணமானது.

ஒரு முறை நாரதர் துவாரகையை பார்வை இடுகிறார். கிருஷ்ண தரிசனம் காண வேண்டும் என ஆவல் மேற்கொள்கிறார். எல்லோரும் இங்கேயே கிருஷ்ணர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
வியக்கிறார் நாரதர்.
ஒவ்வொரு இல்லத்திலும் இறைவன் கிருஷ்ணர் இருப்பதை தரிசித்து நாரத மகரிஷி புல்லரித்துப் போகிறார்.

மகரிஷிகளையே புளகாங்கிதம் அடையச் செய்வதுதான் இறைவனின் லீலா விநோதம்.
காரணம் சராசரி மனிதர்களைப் போல் ரிஷிகளுக்கு எந்த எதிர்பார்ப்போ.. உலகாயத ஆசைகளோ.. தனிப்பட்ட வேண்டுதலோ.. எதுவுமே இருந்ததில்லை...

அதே இறைவனான கிருஷ்ணர் தான் ஷிர்டி சாயியாக.. சத்ய சாயியாக அவதாரம் எடுத்து வந்திருப்பது.


"சம்பவாமி யுகே யுகே... "
யுகந்தோறும் தான் சம்பவிப்பேன் என்பதும்..
இரண்டு யுகே தொடராய்ச் சொன்னது போல் இருமுறை கலியுகத்தில் அவதரித்ததும்..
சத்ய யுகத்தில் பிரேம சாயியாய் தன்னை பிரகடனப்படுத்தப் போவதும் என
எல்லாமே இறைவனால் திட்டமிடப்பட்டே நடக்கிறது.

இறைவன் விஜயம் மட்டுமல்ல..
மனிதனின் அன்றாட காரியங்கள் மற்றும் சகல ஜீவராசிகளின் இயக்கங்களுமே இறைவன் சத்ய சாயி சங்கல்பப்படியே நிகழ்கிறது.
இதை உணர்வதற்கு பக்தியும்.. விழிப்புணர்வுமே தேவைப்படுகிறது

அதே சிஞ்சோலி அரண்மனையில் இறைவன் சத்ய சாயி வந்திருந்த போது எங்கே தான் அமர்ந்தது.. உணவருந்தியது .. என எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்கிறார்.
ஷிர்டி சாயியாக தான் வந்திருந்த போது அரண்மனை கட்டமைப்பு மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது..
அந்த அரண்மனைவாசிகள் ஆனந்தக் கண்ணீர் விடாமல் என்ன செய்வார்கள்?

எப்பேர்ப்பட்ட பெரும் பேறு அவர்கள் அடைந்தது...

(ஆதாரம் -- சத்தியம் சிவம் சுந்தரம் -- பாகம் 1. ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரி. 
லீலா மோகன சாயி - பாகம் 1-- ஆசிரியர் சாயி மோகன்)

ஷிர்டி சாயி ஒரு யோகியைப் போல் மகானைப் போல் வெளித்தோற்றத்தில் காட்சி அளித்திருக்கலாம். ஆனால் அவர் இறைவனே. இதைப் பல பேரிடம் அவர் உணர்த்தி இருக்கிறார்.

இறைவன் சத்ய சாயியும் தான் இறைவன் என்பதற்கான சத்தியப் பிரமாணத்தையும் அருளி இருக்கிறார். காட்டியிருக்கிறார்.

நொடி தோறும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த சூட்சும பிரேவசங்களும்.. ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டு பல இடங்களில் பல்வேறு பக்தர்களுக்குக் காட்சி அருள்வதும்...
நமக்கு வேண்டுமானால் பிரம்மிப்பை அளிக்கலாம்.
மனிதர்கள் மூச்சு விடுவதைப் போல்  இவையெல்லாம் இறைவனுக்கு ஒரு அனிச்சை செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாமாய் இறைவனே நிறைந்திருக்கும் போது.. எதனின் உள்ளும் புக.. எவர் முன்னும் காட்சி அளிக்க அவருக்கு சர்வ சாதாரணமே.


பஞ்ச கோஷம் என்பர் உடலை.. அதில் பௌதீக உடல் கண்களால் பார்க்கக் கூடியது.
மனோ சரீரமே சூட்சும சரீரம்.. கண்களால் பார்க்க முடியாதது.. கனவில் நாம் அனுபவிக்கும் சரீரம்.
இப்படி பிராண சரீரம்.. ஜோதி சரீரம்.. பிரபஞ்ச சரீரம் என (புரிதலுக்காக எளிதான வகையில் பெயர் இடப்பட்டிருக்கிறது)

இந்த பிரபஞ்ச சரீரம் என்பது அஞ்சறை பெட்டி போல்.. அதனின் உள் இருக்கும் அறைகளைப் போலவே மீதி சரீரங்கள்.

உண்மையில் உடை மாற்றுவது போலவே இறைவன் உருவங்களை மாற்றுவதும்.

எந்தவித சிரமங்களும் இன்றி இறைவனால் எதையும் சாதிக்க முடிகிறது. காரணம் அந்தப் பேராற்றல் எல்லாம் அவரே.

அசரீரமும் (தேகமற்ற நிலையும்) அவராகவே இருப்பதால் சரீரம் எடுப்பதொன்றும்.. மனித சரீரத்திற்குள் நுழைவதொன்றும் கடினமே இல்லை..

காற்றுக்கு நெடுந்தூரம் ஓடினால் மூச்சு வாங்குமா?
அந்தக் காற்றிலும் லயமாய் இயங்குபவர் இறைவனே..

எந்த இறைவன் கிருஷ்ணராக அவதரித்தாரோ.. அவரே ஷிர்டியில் வாழ்ந்தது .. புட்டபர்த்தியில் பிறந்தது..

இரண்டு சாயியின் சூட்சும பிரவேசங்களும் பக்தர்களின் நலன் கருதியே.. தர்மத்தை நிலை நாட்டவே...
காலச் சக்கரம் பிறழாமல் நகர்வதற்கே.
சாயி தரிசன அணுக்கத்தை நாம் அனுபவிப்பதற்கே..
ரிஷிகளைப் போல பக்தர்களை உயர்நிலைக்கு மாற்றுவதற்கே...

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக