தலைப்பு

ஞாயிறு, 17 மே, 2020

அவதாரப் பிரகடனங்கள்!


இறைவன் ஷிர்டி சாயியும்... சத்ய சாயியும் எந்தெந்த தெய்வீகப் பொழுதுகளில் எல்லாம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்கள் என்பதனை துல்லியமாக விவரித்து உணர்த்தும் பதிவு இதோ..

ஷிர்டி சாயியும் சத்ய சாயியும் ஒன்றே.
எப்படி ஒன்று ?
எப்படி ராமரும் .. கிருஷ்ணரும் ஒன்றோ அப்படி ஒன்று.

முக ஒற்றுமை ஒரு அம்சம். குண ஒற்றுமை இன்னொரு அம்சம்.
ஷிர்டி சுவாமியின் நிஜ புகைப்படங்கள் நிறைய இல்லை என்றாலும் ...
ஓரிரு நிஜப் புகைப்படங்களை உன்னிப்பாக கவனித்தால் இவை புலனாகும்.


ஷிர்டி சாயி மகானா?
இல்லை அவர் இறைவன்.

எந்த மகானும் தன்னை இறைவன் என்று சொல்லிக் கொண்டது இல்லை.

இந்தக் கலியுகத்தில் அப்படி சொல்லிக் கொண்டது இரண்டே இரண்டு பேர்..
ஒன்று ஷிர்டி சாயி.
இன்னொன்று சத்ய சாயி.

தான் கடவுள் என ஷிர்டி சுவாமி மிகத் தெளிவாகச் சொல்கிறார் பாலகங்காதர திலகரோடு நின்ற சுத்தானந்த பாரதி இதற்கு சாட்சியாக இருந்திருக்கிறார்.
(ஆதாரம்: சாயி அவதாரம் பற்றி மகான்கள் -- சுத்தானந்த பாரதி)

"சாயி அவதாரங்கள் என்பது மும்முறையான விஜயம். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. எல்லாமே பாரத பூமியில் நிகழப் போவது‌. ஷிர்டி சாயி நிகழ்ந்தாகிவிட்டது. 
இது சத்ய சாயி அவதாரம். பிறகு கர்நாடகாவில் பிரேம சாயி அவதாரம்"
-- இறைவன் சத்ய சாயி

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி ஆனந்ததாயி.பக்கம் : 59)




பரத்வாஜ ரிஷிக்கு கொடுத்த வரம் இறைவன் மூன்று முறை கலியில் அவதரிப்பது.

திரேதா யுகம் ... யுக ஆரம்பம் .. நல்லவரே அதிகம். ஆக இறைவன் அவதரிக்கையில் தன் இறை சக்தியை அதிகம் காட்ட வேண்டியதாக இல்லை.
மனித சக்தியையேக் காட்டினார்.
எப்படி மனிதனாக வாழ வேண்டும் என்பதை தான் வாழ்வதை வைத்தே போதனையாக்கினார்.
நிர்வாக சத்ரியனின் நெறியை பிறழாமல் நிலை நாட்டினார்.

துவாபர யுகம் ... யுக நடு..
நன்மை தீமை சரிசமமாக கலந்திருந்தது. ஆக இறைவன் தன் இறை சக்தியை அதிகம் காட்ட வேண்டி இருந்தது.

இந்த கலியிலோ... தீமை அதிகம். நன்மை இரண்டும் கெட்டான்.
ஆக இறைவன் மும்முறை அவதரிக்க வேண்டி இருந்தது..

"ஷிர்டி சாயியாய் நான் உணவு சமைத்தேன். சத்ய சாயியாய் நான் பரிமாறினேன். பிரேம சாயியாய் அதன் ருசியை உங்கள் அனைவருக்கும் ஊட்டப் போகிறேன்"
என இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.


ஷிர்டி சுவாமியை ஸ்ரீ ராமருக்கும்
சத்ய சாயியை ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஒப்பிடலாம்.
அவதார ஒற்றுமையோடு நூலிழையிலேயே இருவருக்கும் வேறுபாடு இருக்கிறது..

ஷிர்டி சுவாமி சமாதி ஆனதற்கு அடுத்த நாளே சிம்லாவில் உள்ள தன் பக்தை கிருஷ்ணப்ரியா வீடு சென்று தனக்குப் பசிப்பதாக சொல்லி.. சப்பாத்தி சாப்பிட்டு விட்டு ஒரு மல்லிகை மாலையை அவர் கையில் கொடுத்து "1926ல் என்னை மீண்டும் பார்ப்பாய்" என்கிறார்.
சில வருடம் கழித்து இறைவன் சத்ய சாயி சிம்லா வந்த போது அவரை நேரில் கண்டு கேட்டார். "நான் முன்பு கூறியதை நீதான் மறந்துவிட்டாய்" என்றார்.

(ஆதாரம் -- ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் -- ஆசிரியர் சரோஜினி . பக்கம் -- 31)



வெங்காவ தூதர் எனும் மகான் இறைவன் சத்ய சாயியின் தாத்தாவான கொண்டம ராஜுவின் குரு. இந்த மகானே இறைவன் ஷிர்டி சாயியை வளர்த்தவர்.

எத்தனை ஆச்சர்யமான தெய்வத் தொடர்பு!

அவர் கொண்டம ராஜுவிடம் "ஓ.. கொண்டமராஜு .. பூமாதேவி அழுகிறாள். இதை நீ உணரவில்லையா.. சீக்கிரத்தில் இந்த புண்ணியபூமியில் ஸ்ரீமன் நாராயணன் அவதரிக்கப் போகிறான்." என்கிறார்.

இந்த வெங்காவ தூதரே.. ஷிர்டி சுவாமி தன் சரிதத்தில் விவரித்த வெங்குசா.

அந்த மகான் சமாதியாக.. ஒருமுறை கொண்டம ராஜுவின் கனவில் வந்து "நான் முன்பு கூறினேன் அல்லவா ஸ்ரீமன் நாராயணன் பூமிக்கு இறங்கி வருகிறார் என்று.. உனக்கு ஞாபகம் இருக்கிறதா..? அந்தக் கடவுள் இப்பொழுது உன் குடும்பத்தில் அவதரித்து விட்டார். கவனமாக இரு" என்கிறார்.

(ஆதாரம் -- THE DIVINE STORY Of SHIRDI SAI PARTHI SAI - RADIOSAI PART - 10)


சங்கல்பத்தினால் மட்டுமே இறைவன் உலக பரிபாலனத்தை ஆற்ற முடியும் என்றாலும் அவர் உடலெடுத்து வருகிற போது ஏற்படுகிற அணுக்கப் பேரானந்தத்தை பக்தர்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவதரித்து பேரன்பின் ருசியை ஏற்படுத்தி பேரன்பாய் நாம் இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்.

"பாபாவின் அடியவர்கள் அவரவர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவை செய்ய அவர் அனுமதித்திருந்தார். இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்புவதில்லை"
(-- ஷிர்டி சாயி சத்சரித்ரம் -- பக்கம் : 199. ஆசிரியர் : ஹேமான்த் பந்த்)

மேற்சொன்னவை இருவருக்குமே கனகச்சிதமாய்ப் பொருந்தக் கூடிய குண அம்சங்கள்.
பலரின் சேவை அனுபவங்கள் இதற்கு சாட்சி. பிரத்யேகமான.. மிகத் தனித்துவமான சேவையை ஒவ்வொருவருக்கும் இறைவன் சத்ய சாயி ஒதுக்கி இருக்கிறார்.
அதன்படியே அந்தந்த சேவைகள் எல்லாம் மிக நேர்த்தியாய் நடந்து கொண்டு வருகின்றன..


"என்னை வந்து சோதனை செய்துபாருங்கள்" என்கிறார் இறைவன் சத்ய சாயி.
இப்படி இறைவனால் மட்டுமே அழைக்கமுடியும்...

ஹரே ராம ஹரே ராம என்று முதலில் ராமரை அழைத்த பிறகு
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என அழைத்தாலும்..

இல்லை.. ஹரே கிருஷ்ணாவை முதலில் அழைத்து பிறகு ராமரை அழைத்தாலும் எப்படி எல்லாமே ஒன்றோ அப்படியே

ஷிர்டி சாயி என்றாலும் சத்ய சாயி இடமே அந்த அழைப்பு வருகிறது.
சத்ய சாயி என்றாலும் ஷிர்டி சாயி இடமே அந்த அழைப்பு வருகிறது.

மனிதர்களின் மறு பிறப்பை நிர்ணயிக்கும் இறைவனால் தனது அவதாரத்தை நிர்ணயிக்க முடியாதா என்ன?

மறுபிறப்பை வைத்தே இப்பிறப்பில் மனிதரின் அடிப்படை குணாதசியங்கள்.
அது போல் இறைவனின் அவதாரங்களிலும் அடிப்படை கல்யாண குணங்கள் இருக்கின்றன..

எங்கும் நிறைந்திருப்பது
எல்லாம் அறிந்திருப்பது
ஐந்தொழில்களும் ஆற்றுவது..

இது இரண்டு பாபாக்களுக்குமே அடிப்படை குணங்கள்.

ஷிர்டி சாயி .. சத்ய சாயி இருவருமே அடிக்கடி கையை அசைத்து .. ஆகாயத்தைப் பார்த்தும்.. காற்றில் கையெழுத்து இட்டும் என விநோத குணங்களை வைத்து இருவரும் ஒருவரே என உணர்ந்து கொள்ளலாம்..

சத்தியம் வளரும்...

பக்தியுடன்
வைரபாரதி  ✍🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக