தலைப்பு

புதன், 13 மே, 2020

ஏன் தியானம் செய்ய வேண்டும்?


ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் மிகத் தெளிவாக .. மிக எளிமையாக அரிய பெரிய தியான சாதனையைச் சொல்லிக் கொடுக்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி இதோ...

ஒரு குழந்தை நடக்கத் துவங்கும் போது, தாய் அதை வீட்டில் படிப்படியாக நடக்கக் கற்றுக் கொடுத்து,பின் தெருவில் நடக்க அனுமதியளிக்கிறாள். அதற்குப் பதிலாக அவனை வீதியில் நேராகவே நடக்கச் செய்தால், அவன் எவ்வாறு கற்றுக்கொள்வான்? அதுதவிர, ரஸ்தாவிலுள்ள (சாலையிலுள்ள) எவ்வளவு அபாயங்களை அது எதிர் கொள்கிறது?ஆகவே முதலில் உள் அம்சங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு வெளி அம்சங்களான நீதிநெறி நடத்தை போன்றவை சுலபமாகி விடுகின்றன.உள் முன்னேற்றத்தின் அடிப்படையில் இல்லாத ஒழுக்க நெறிகள் ஆழ்ந்தவையல்ல. ஆகவே ஆத்ம உணர்வை வளர்த்துக் கொள்ளுதலே முதற்செயலாகும்.

சாதனை முயற்சியின் குறிக்கோள், சுய நோக்கம், விருப்பம், பற்றுதல், பலனுக்கு வேட்கை ஆகியவற்றை விலக்குதலாகும். இதை நன்கு உணர்ந்து கொண்ட சாதகன், தளர்ச்சி, நிராசை, தோல்வி மனப்பான்மை, சந்தேகம் இவற்றிற்கு இடம் கொடுக்கலாகாது. அவன் பொறுமையுடன் இருந்து, சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதகன் தனக்குத்தானே உற்சாகத்தையும் நம்பிக்கையையும்,செயல்படுதலையும், மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். கடைசியில் கிடைக்கப்போகும் ஆத்ம ஞானத்தின் பலனை எப்போதும் நினைவின் முன் இருத்திக் கொள்ள வேண்டும். துணிச்சலாக ஆசாபாசங்களின் தூண்டுதலை விலக்க வேண்டும். இவை சிறிது காலமே இருக்கின்றன. பலவீனமானவை. இவற்றை சிறிது பொறுமையுடன், சுலபமாக வெல்லலாம். சாதகன் கவனமாகவும், பொறுமையாகவும் இல்லாவிடில், அவன் அடைந்த பயன்கள் எல்லாம் அயர்ந்திருக்கும் வேளையில் மறைந்துவிடும்.
 சாதகர்கள்,யோகிகள், சன்னியாசிகள் எல்லோரும் பல படிகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அவை ஸவிதர்க்க, நிர்விதர்க்க, சவிசார,
 நிர்விசார, சம்மத.....போன்றவை. அதாவது வாதாடுதல், வாதாடாதிருத்தல், பலகோணங்களில் ஆராய்தல், பல கோணங்களில் ஆராயாது இருத்தல், ஒத்துக்கொள்ளுதல் போன்றவையாகும். உலக அறிவு உண்மையான அறிவல்ல.இது உறவுகளை பற்றிய அறிவு. உண்மையல்லாததைப் பற்றிய அறிவு. அழிவற்ற பரிபூரணத்தைப் பற்றிய அறிவே உண்மையான அறிவு.அத்தகைய அறிவு தியானத்தின் மூலம் கிட்டுகிறது. யோகமும், தியானமும் ஆகிய நெருப்பு, மனதின் சாரமில்லாத சக்கையாகிய செயற்பாடுகளை, எரித்து சாம்பலாக்கும். அதற்கு அடுத்த கணமே உண்மையைப் பற்றிய ஞானம் ஒளியுடன் தோன்றும். குன்றாத ஒளியுடன் பளபளக்கும். அதன் ஒளி ஒருபோதும் மங்காது. இந்த உண்மையான ஞானத்தில் நிலை பெற்றவர்க்கு சென்ற காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. ஒவ்வொரு கண அனுபவத்திலும், முக்காலத் தோற்றங்களும் நிகழ்காலத்திலேயே இருப்பதாகக் காண்கிறார்கள்.


எவ்வாறு புற உடலைச் சுத்தம் செய்ய "சோப்" தேவைப்படுகிறதோ, அதேபோல உள் மனதைச் சுத்தம் செய்ய, ஜபம், தியானம், ஸ்மரணம் போன்றவை தேவைப்படுகின்றன. எப்படி உணவும் நீரும் உடலை வலிமையாக வைத்திருக்கப் பயன்படுகின்றனவோ அதைப்போல மனதுக்கு வலிமை கொடுக்க கடவுளைப் பற்றிய தொடர் சிந்தனையும், ஆத்மாவைப் பற்றிய தியானமும் தேவைப்படுகின்றன. இவை இல்லாது போனால் மனம், இங்கும் அங்குமாகத் தள்ளாடும். மேலே அலைகள் கொந்தளிக்கும் வரையில், தண்ணீருக்கு அடியில் உள்ளவைகளைக் காண முடியாது.ஆசையென்ற அலைகள், மனம் என்ற தண்ணீரைக் குழப்பிக் கொண்டிருக்கையில், அடித்தளத்தில் இருக்கும் ஆத்மாவை காண்பது எவ்வாறு? தள்ளாடுதல், அலைகளை உருவாக்குகிறது. ஆகவே மனதிற்கு ஆண்டவனை பற்றி தொடர் சிந்தனையை உணவாக கொடுக்கவும். ஆத்ம தியானத்தின் மூலம் மனதை சுத்தம் செய்யவும். தியானமும், சாதனை பயிற்சியும் மட்டுமே மனதின் ஆழ்ந்த இடங்களைச் சுத்தம் செய்ய முடியும். தூய்மையும் வலிமையும் இல்லாதபோது, ஆத்மா வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது. அமைதியும் மனிதனிடமிருந்து பறந்தோடி விடுகிறது. அதற்கு பதிலாக அஸாந்தி உறுதியுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

ஆதாரம்: தியான வாஹினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக