பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
பகவான் ஸ்ரீ நிஸர்க தத்தா மகராஜ்(1897-1981):
மகான்களின் வாழ்வியல் மிக எளிமையானவை.
பிறரின் அபிப்ராயங்களுக்கு அப்பாற்பட்டவை.
அடுத்தவர்களின் அங்கீகாரங்களை எதிர்பார்க்காதவை.
எப்போது தங்களின் சுயநலமான ஆசைகள் நிறைவேறுகிறதோ அப்போதே மகான்களின் மீது மனிதர்களுக்கு நம்பிக்கை வருவது.
இதை பக்தி என்று வேறு நினைத்துக் கொள்வர்.
இது பக்தி அல்ல அபத்தம்.
மகான்களிடம் எதையாவது பெறுவதற்காக செல்வது பக்குவமில்லாத மனித நிலையையே காட்டுகிறது.
தங்களையே இழப்பதற்காக மகான்களிடம் செல்ல வேண்டும்.. அகங்காரத்தையே அவர்களிடம் விட்டு விட்டு நிராயுதபாணியாய் திரும்ப வேண்டும்.
இறைவன் சத்ய சாயிடமோ துளி சந்தேகமே இல்லாமல் பூரணமாக சரணாகதி அடைந்து விட வேண்டும்..
அப்படி அடையும் போது "நான்" என்ற எண்ணமே அழிந்து போய்விடுகிறது.
மகான்கள் என்பவர்கள் ஆன்மீக வாழ்க்கையின் முன்மாதிரிகள். அவர்களை உணராமல் ஆன்மீக வாழ்வில் எப்படி முன்னேற முடியும்?
பகவான் ஸ்ரீ நிஸர்க தத்தா மகராஜ் மிக ஏழ்மையான குடும்பத்தில் 17 ஏப்ரல் 1897 ல் பிறந்தார்.
பெற்றோர்கள் தீவிரமான பாண்டுரங்க பக்தர்கள்.
பாண்டுரங்க இயக்கமான வர்காரி சம்பிரதாயத்தை கடைப்பிடித்தனர்.
மஹாராஷ்ட்ர மண்ணில் இந்த வழிமுறையினரே அதிகம்.
ஹனுமத் ஜெயந்தியில் பிறந்ததால் குழந்தைக்கு மாருதி எனப் பெயரிட்டனர்.
இவரோடு இரண்டு ஆண்.. நான்கு பெண் கூடப் பிறந்தவர்கள்.
தந்தை பசுவைப் பராமரித்தல் மற்றும் விவசாயம் புரிந்த மிக எளிய கூட்டுக் குடும்பம்.
படாடோபம் இல்லாதவற்கே பக்தி வருகிறது.
வெளி அலட்டல் குறையக் குறைய உள்ளே ஆழ்ந்து போவது சாத்தியமாகிறது.
மிக சாதாரணமே அசாதாரண இறைநிலையை எட்டுகிறது.
சித்தார்த்தன் இளவரசனாக இருந்தவரை புத்தராகவில்லை.
குரு மகாராஜ் குடும்பம் வழிபட்ட விடோபா எனும் பாண்டுரங்கனை ஒன்பதாவது அவதாரமான புத்தராகவே பலர் உணர்ந்தனர்.
விட் என்றால் செங்கல்.. ஒரு பக்தன் நில் என்று சொல்லி வீசி எறிந்த செங்கல்லின் மேல் நின்றதால் விட்டோபன்..விடோபா.. விட்டலன்..
1915 ல் குருமகராஜின் தந்தை காலமாகிறார்.
எல்லா மகான்களுக்கும் எதாவது ஒருவகை மரண அனுபவம் அவசியப்படுகிறது.
நிதானமாய்ப் பயணித்த அவர் வாழ்வில் திடீர் திருப்பம்...
அதனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வேறொரு எளிய கிராமத்தில் குடிபெயர்கின்றனர்.
அங்கே கிளார்க் காக பணியாற்றுகிறார்.
பூர்வ கர்ம பந்தம் என்பதால் சுமதி பாய் என்பவரோடு குருமகராஜுக்கு திருமணம் நடக்கிறது.. நான்கு குழந்தைகள்...
இப்படி விட்டுச் சென்ற தந்தையின் குடும்பப் பொறுப்பையும் சேர்த்து சுமந்து கொண்டிருக்கிற குரு மகராஜ் வாழ்வில் அந்த அற்புத சம்பவம் நிகழ்கிறது.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் புரட்டிப் போடப்படும்.
தாங்கள் நம்பிக் கொண்டிருக்கிற பொய்களும்.. புரட்டும் .. அதுவே உண்மை என்று வாதிடும் அறியாமையும் ஒரே நொடியில் தவிடு பொடியாகும்.
அது இந்த வாழ்விலோ அல்லது ஏதாவது ஒரு ஜென்மத்திலோ நடக்கும். ஆனால் நடந்தே தீரும்.
ஆன்மீகமே எல்லா ஜீவராசிகளும் வந்து சேரப்போகிற இலக்கு.
குருமகராஜ் நிஸர்க தத்தாவுக்கு அது நிகழ்ந்தது.
அவர் தன் குருவை 1933ல் தரிசனம் செய்கிறார்.
ஸ்ரீ சித்தராமேஷ்வர் மகராஜ் ...
நவநாத் குரு பரம்பரையைச் சேர்ந்தவர்.
நவநாத் குருபரம்பரை என்பது ஆதி குரு ஸ்ரீ தத்தாரேயரை குருவாக கொண்டு அதன் கிளையான ஒன்பது குருமார்களை (ஏக்நாத்... கோரக்நாத் போன்ற மகான்கள்) கொண்ட மார்க்கம்.
இன்றும் புட்டபர்த்தியில் ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவிலில் இந்த ஒன்பது குருமார்களை தரிசிக்கலாம்.
தன் குருவை தரிசிக்கிறார் மாருதி எனும் நிஸர்க தத்தா மகராஜ்.
அவர் பெற்ற குரு உபதேசம் ஆழமானது. அற்புதமானது.
அந்த உபதேச விதை மிக மிக வீர்யம் வாய்ந்தது.
"நீ இதுவரை உன்னை எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அதுவல்ல நீ. எப்போதும் என்ன வேலை செய்தாலும் உள்ளேயே கவனித்து கொண்டிரு..
என்ன விதமான செயல் புரிந்தாலும்.. ஆத்ம உணர்வையே உற்று நோக்கி.. அதிலேயே கவனிப்போடு. அதையே பிடித்துக் கொண்டிரு" என்று தனது குருவின் மகா வாக்கியம் பெறுகிறார்.
எப்பேர்ப்பட்ட சத்திய வாக்கிது.
பிறகு மந்திர தீட்சையும் அவரின் குரு தருகிறார்.
குரு கொடுத்த அந்த மகா வாக்கியத்தையே செயல்முறை படுத்தி மகானானவர் பகவான் ஸ்ரீ நிஸர்க தத்தா மகராஜ்.
வேறு தியானமோ.. யோக முறைகளோ எதுவும் செய்யவில்லை அவர்.
எப்போதும் எது நடந்தாலும்.. எதைச் செய்தாலும் அவர் தன் உள்ளேயே ஆத்ம உணர்வுடனே உற்று நோக்கியபடி அதனுடனேயே உறவு வைத்துக் கொண்டிருந்தார்.
"நான்" என்ற எண்ணம் என்பது அகந்தை.
"நான்" என்ற உணர்வே ஆன்மா என்பார் பகவான் ரமணர்.
அந்த ஆன்மாவையே எப்போதும் அனுபவித்துக் கொண்டிருந்தார் குரு மகராஜ்.
தேசாந்தரம் செல்கிறார்.
மீண்டும் மரணப் புயல் வீசுகிறது.
தனது மனைவியையும்.. ஒரு மகளையும் இழக்கிறார்.
சலனப்படவில்லை..
ஓ என அழவில்லை..
அப்போதும் குரு உபதேசப்படியே நடக்கிறார்.
ஆன்ம உணர்வையே கவனித்தபடி இருக்கிறார்.
தன் இயற்பெயருக்கு தகுந்தாற் போல் குருமகராஜுக்கு தன் குரு மீது பக்தி அதிகம்.
ஒரே மின்சாரம் பல இயந்திரங்களை இயக்குவது போல்.. ஒரே பேராற்றல் பல யோகங்களை இயக்குகிறது..
பக்தி யோகம். ஞான யோகம்... கர்ம யோகம்.. ராஜ யோகம் எல்லாம் ஒரே பேரான்மப் பேராற்றலின் பரிமாணமே..
எங்கே உடல் அலைவதாலும் எதுவுமில்லை என தன் சிறு வீட்டிலேயே தன் ஆத்ம உணர்வோடு கலந்து போகிறார்.
கண்களை மூடி அதிலேயே லயிக்கிறார்.
அதைத் தான் தியானம் என்கிறது ஆன்மிகம்.
பிழைப்புக்காக பெட்டிக் கடையை நடத்தி வருகிறார். அதில் பெரும்பாலும் பீடிகள் விற்கப்பட்டன..
பகவான் நிஸர்க தத்தா மகாராஜின் அணுகுமுறை மிக மிக வித்யாசமானது..
பக்குவமின்றி வருபவரை அடித்து விரட்டுவார்.
கைகளில் ஒரு கம்பு வைத்திருப்பார்..
யாராவது தற்குறித்தனமாக அல்லது அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்டால் ஒரே ஒரு அதட்டும் பதிலில் அவர்களுக்கான விடையும் கிடைக்கும்... அவர்களின் அந்த அதிகப் பிரசங்கித் தனமும் அடங்கிப் போய்விடும்.
இவர் பகவான் யோகி ராம்சுரத்குமார் போல் புகைப்பார்.
இவரிடம் பேசி தெளிவுப் பெற்ற பதில்களை மராத்தி மொழியில் புத்தகமாக வெளியிட்டனர்.
அது ஆங்கிலத்திலும் மொழியாக்கமானது.
"I am That"
அந்த ஒரே ஒரு புத்தகச் சிறகே இவரை நோக்கி பல வெளிநாட்டு பக்தர்களை.. ஆன்மிக வாதிகளை.. ஆத்ம சாதகர்களை இழுத்து வந்தது.
மிக மிக சுவாரஸ்யமான .. மிக மிக வெளிப்படையான புத்தகம் அது.
இதை 1991 ல் இறைவன் சத்ய சாயியும் தனது சில பக்தர்களான ஆன்ம சாதகர்களுக்கும் பரிந்துரைக்கிறார்.
சரி.. இறைவன் சத்ய சாயி பற்றி குரு மகராஜ் என்ன மொழிந்திருக்கிறார்?
ஓ.. இவரும் நம் சுவாமியைப் பற்றி மொழிந்திருக்கிறாரா .. என ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டோம்..
இறைவனை உணராத மகான்கள் இருக்க முடியுமா?
அப்படி உணராதவர்கள் மகான்களாக இருக்க முடியுமா?
அந்த சாயி அனுபவம் அவரின் புத்தகத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது..
ஒருமுறை தென் இந்தியாவிற்கு பயணமாகிவிட்டு இவரின் பக்தர்கள் குருமகராஜை தரிசிக்க வருகிறார்கள்.
அவர்கள் அனைவரும் குருமகராஜால் தீட்சை பெற்றவர்கள்.
தீட்சை என்பது குரு முகமாக ஆன்மநிலை அடைய குருமார்கள் பல வழிமுறைகளில் (மந்திரமாகவோ.. ஆன்ம சாதனையாகவோ..) இடும் குருவுக்கும் சீடனுக்குமான ஆன்ம பந்தம். ஆன்மிகப் பாலம்.
I am That (நான் அதுவே) என்ற புத்தகம் பெரும்பாலும் கேள்வி பதில்களாகவே அமைந்திருக்கின்றன..
"புட்டபர்த்தியில் சத்ய சாயியை தரிசித்தோம்..
திருவண்ணாமலையில் ரமணாசிரமத்தில் அவரின் சந்நதியில் தியானம் செய்தோம்" என்று அவர்கள் தங்கள் ஆன்மிக அனுபவம் பேசுகின்றனர்.
அதை எல்லாம் ஆத்ம உணர்வில் கவனம் செலுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார் குருமகராஜ்.
(ஆதாரம் :- I am That புத்தகத்திலிருந்து -- Chapter --63)
ஒரு பக்தர் குருமகராஜிடம் ..
"குருதேவ் சத்ய சாயி யார் ?" எனக் கேட்கிறார்.
இந்த ஒரே ஒரு கேள்வியை வைத்து எப்படி அந்த பக்தரை குரு மகராஜ் ஆன்ம சாதனைக்குள் ஆழ்த்துகிறார் என்பதைப் பார்க்கப் போகிறீர்கள்.
அதற்கு குருமகராஜோ "அவர் தன்னை யார் எனச் சொல்கிறார்?" என பதில் கேள்வி கேட்கிறார்.
அந்த பக்தரோ "அவர் தன்னை ஷிர்டி சாயி பாபாவின் மறு அவதாரமாக சொல்கிறார்" என பதில் தருகிறார்.
"ஷிர்டி ஸாயி எப்போது சமாதி ஆகிறார்?"
"1918 ஆம் ஆண்டு"
"இவர் எப்போது தோன்றுகிறார்?"
"1926"
(குரு -- சீடரின் கேள்வி பதில்கள் இவை.)
"சரி .. 1918 முதல் 1926 வரையிலான இடைப்பட்ட காலத்தில் சத்ய சாயி யார்?" எனக் கேட்கிறார் பகவான் நிஸர்க தத்தா மகராஜ்...
எப்பேர்ப்பட்ட ஆழமான கேள்வி இது.
"நீங்கள் என்ன கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை" என்கிறார் பக்தர்.
"சத்ய சாயி ஒரு பரிபூரண பரபிரம்மம்" என்கிறார் அந்த ஞான குரு மகராஜ் பகவான் ஸ்ரீ நிஸர்க தத்தா...
கேட்ட பக்தருக்கு பரம திருப்தி. அவர் குருமகராஜையும் வழிபடுபவர்.
இறைவன் சத்ய சாயியையும் வழிபடுபவர்.
ஆனால் இது தான் இருவரின் உரையாடலுக்கான முடிவுரையா..?
அது தான் இல்லை..
குரு மகராஜ் அவரை விடுவதாக இல்லை..
குருவின் அருளில் அகப்படுவது என்பது புலியின் வாயில் அகப்படும் மானைப் போன்றது.
"சரி.. இப்போது சொல் அவரைப் பற்றி.. என்ன புரிந்தது என?"
என கேள்விக் கணையால் இழுக்கிறார்.
பக்தரோ குருமகராஜையே மௌனமாகப் பார்க்கிறார்.
"வெறும் வார்த்தையாலோ .. அடையாளங்களாலோ .. அற்புதங்களாலோ அவரைப் புரிந்து கொள்ள இயலாது. முதலில் நீ யார் என நீ உன்னை உணர்ந்து கொள்.. பிறகே ஸத்ய ஸாயி பாபா யார் என உணர்ந்து கொள்ள முடியும்.. ஜீவாத்ம உணர்வே பரமாத்ம உணர்வை புரிந்து கொள்ளும்" என நெற்றிப் பொட்டியில் ஆணியால் சுத்தியல் வைத்து அடித்ததைப் போல சத்திய ஞான மொழியைப் பேசுகிறார்..
கண்கலங்கி குரு சந்நதியில் சத்தியத் தேடலுக்கான ஆத்ம சாதனையில் புறக் கண்களை மூடுகிறார் அந்த வெளிநாட்டு பக்தர்.
(ஆதாரம் -- சத்யம் சிவம் சுந்தரம் -- அத்தியாயம் - 6...
Prashanthi Reporter -- SEP 26th 2014)
நம்மை நாம் உணர்ந்து கொள்வதன் ஆரம்பமே இறைவன் சத்ய சாயியை உணர்வதக்கான பேரருள் வாய்ப்பைத் திறக்கும்.
அதற்கு தியானம் அவசியம்.
இறைவன் சத்ய சாயி பரபிரம்மம்..
நமது அனுமானங்களுக்கும்.. எதிர்ப்பார்ப்புகளுக்கும்.. கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவர் அவர்.
பரம வஸ்து என இறைவனை பெரும்பாலான மகான்கள் மொழிவர்.
உடல் எடுத்து இன்றும் நடந்து கொண்டிருக்கிற நம் சூட்சும பேரியக்கமே இறைவன் சத்ய சாயி.
"நான் அதுவே" என்ற புத்தகமும்..
"நான் அதுவே" என்ற வேத வாக்கியமும் எத்தனை அனுபவ சத்தியம்!
அந்த "அதுவே" இறைவன் ..
அந்த "அதுவே" உடலெடுத்த இறைவன் சத்ய சாயி.
அந்த "அதையே" தனக்குள் மகான்கள் அனுபவித்தனர்..
அப்படி அனுபவித்த ஒரே சத்யத்தையே பல மொழிகளில் அவர்கள் மொழிந்தனர்.
அந்த ஆதிப் பரம் பொருளான இறைவன் சத்ய சாயியின் பெயர் ஜபித்து.. புகழ் பாடி..
அவரின் திருப்பாதங்களைத் தலைமேல் தாங்கி.. தனக்குள் தானாய் மௌன தியான வெளியில் நிறைந்தபடி...
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக