தலைப்பு

வெள்ளி, 15 மே, 2020

ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள் | மாதா அமிர்தானந்தமயி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                              - இறைவன் ஸத்ய ஸாயி

பேரன்பு மகான் மாதா அமிர்தானந்தமயி:

"அம்மா பிள்ளே .. செல்ல பிள்ளே"
என ஆரத்தழுவி காதோரம் அவர்கள் ஊற்றும் பேரன்பை.. ஆன்மிக அதிர்வலைகளை அடியேன் பலமுறை மெய் மறந்து அனுபவித்திருக்கிறேன்.
மடியில் பல நிமிடம் அப்படியே கிடத்தி இருந்த அந்தக் பெருங் கருணையை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

கன்னத்தில் கன்னம் வைத்து
காதோரம் அருள் உரைத்து
கட்டியே பிடித்தாயம்மா -- அம்மா
கருணையில் கரைந்தேனம்மா

என எழுதிப் பாடி கசிந்து கரைந்திருக்கிறேன்...

அடியேன் சிறுவயதிருக்கும் போதே திருநெல்வேலியில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஒரு சிறு படம் கொடுத்தனர்.
இவர்கள் தான் அம்மா அமிர்தானந்தமயி என்றனர்.

அந்த பேரன்பு ஒழுகும் முகம் என்னவோ செய்தது பசுமரத்தாணியான அடியேன் இதயத்தை.. பூஜை அறையில் வைத்து பூ சாற்றினேன்..


தாயை சிறுவயதிலேயே இழந்தவரால் மட்டுமே பெண் மகான்களைப் பார்த்தவுடன் ஏற்படும் பேருணர்வை இனம் காண முடியும்.

இறைவன் சத்ய சாயியே அடியேன் தாய் என்ற போதும்.. அந்த தெய்வீகப் பெண் உருவம் அடியேனின் உள்ளம் உருக்கியது பொய்யில்லை...

பிறகு எட்டாம் வகுப்பில் அடியேன் பயின்ற கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா பள்ளியில் ஒரு பெண் நூலகர் ஆதி காலத்து அம்மா பக்தை..
அவரோடு அம்மாவைப் பற்றி ஆச்சர்யமான பல வாழ்க்கை செய்திகளை கேட்டறிய முடிந்தது.‌

அம்மாவின் ஒரு புத்தகம்.. ஒரு டாலர் கொடுத்தார்.
இப்படி ஒரு அம்மா நமக்கு இல்லையே என்ற உணர்வைத் தாண்டி..
புகைப்படம் பார்க்கும் போதெல்லாம் என் தாய் என் அருகில் இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன்.

ஒரு முறை அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது .. அம்மா ஆசிரமம் அச்சடித்த லலிதா சஹஸ்ரநாமம் புத்தகத்தின் பின்புறம் அம்மாவின் பாத புகைப்படம் இருந்தது.. அதைத் தொட்டு வணங்கியும்.. அதே வாரம் ராமகிருஷ்ண விஜயத்தில் சாரதா தேவியின் பாதம் வரையான புகைப்படம் பார்த்து வியந்து ..
இரண்டு பாதமும் ஒன்றாக இருக்கிறதே எனக் கேள்வி கேட்ட போது அந்த பிரம்மச்சாரி பெண் நூலகர் (விவேகானந்த கேந்திர வாழ்நாள் பணியாளர் யாவரும் துறவிகளே)
அம்மாவின் 108 நாமத்திலேயே வருகிறதே.. அம்மா சாரதா தேவியின் குண அம்சங்கள் உள்ளவர்  என்றார்...


ஓம் சாரதா சமாரகாசேச ஸ்பாவ குண சம்பதே நமஹ என்ற நாமம் அது..

அம்மா பரயகடவு (வள்ளிக்காவு)  என்ற கடற்கரை கிராமத்தில் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தவர்.

மஸ்ய அவதாரம் எடுத்த இறைவன் சத்ய சாயி அதே மஸ்யம் வைத்து தொழில் நடத்தும் இல்லத்தில் தன் பக்தையைப் பிறப்பித்தார் என்றால் மிகையில்லை.

சுதாமணி எனப் பெயரிட்டனர்.

சுதாமணி மஹாநாம்னே என அம்மாவின் அதே அஷ்டோத்தரத்திலும் வருகிறது.

பிறந்த உடனேயே அம்மா அசைவற்றிருந்தார்.. கருநீலமாகவும் இருந்தார். அளவே இல்லை.

உலக அழுகையைத் துடைக்க வந்தவர் அல்லவா.. எப்படி அழுவார்.

குழந்தை இறந்துவிட்டது என நினைத்தனர்.
குழந்தை பாவ சமாதியில் இருந்ததென அப்போது பெற்றோர்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை..

ஆன்மிகம் என்றால் என்னவென்றே அறியாத வீட்டில் தான் அம்மா ஜனித்தார்.

குழந்தையை தட்டி.. அசைத்து .. அடித்து.. இறுதியில் அம்மா உடல் அசைந்திருக்கிறது. அப்போதும் அழவில்லை.

ஆறுமாதத்திலேயே அம்மா நடக்க ஆரம்பித்திருக்கிறார்.
மழலை மொழி போலன்றி பேசவும் செய்திருக்கிறார்.
இதை அவர் தந்தையார் சுகுணானந்தரே பதிவு செய்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே அம்மா அசாதாராண குழந்தையாகவே திகழ்ந்தார்.
மற்ற குழந்தைகள் போல் இல்லை.

ஜபம் செய்து கொண்டே இருப்பார்.
சாரதா தேவியார் இப்படியே ஜபத்திற்கே நிறைய நேரம் ஒதுக்கியவர்.

அதை எல்லாம் செய்ய நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு .. சமைக்கும் போதும்.. காய் நறுக்கும் போதும் ஜபம் செய்யலாமே.. ஆன்மிக முன்னேற்றமும் ஏற்படும்.. உணவும் பிரசாதமாகும் என்கிறார்.

இதைச் சொல்வதன் காரணம் சாரதா தேவியார் அப்படியே செய்வார்.
அதைப் போலவே அம்மா யாரின் அறிவுறுத்தலும் இன்றி.. தனக்கென எந்த குருவும் இன்றி தானாகவே ஆன்மிகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

முற்பிறவி வாசனை இன்றி இதுவெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை.

ஒன்பது வயதில் அம்மாவின் தாய் தமயந்தி உடல் தளர்வுறுகிறாள். என்பதால் நல்ல புத்தி கூர்மை உடைய பள்ளிச் சிறுமியான அம்மா தனது கல்வியை நிறுத்துகிறாள்.

ஒருமுறை படித்தாலே உள்ளத்தில் கிரகித்துக் கொள்ளும் அசாதாரண மாணவி என அம்மாவின் ஆசிரியையே வியக்கிறார்.

வீட்டு வேலையின் போது பாவ சமாதியில் ஆழ்ந்து விடுவார்.
கிருஷ்ணா உனை எப்போது காண்பேன் என மற்ற நேரங்களில் பாடிக் கொண்டிருப்பார்...

கடற்கரையில் நடந்த படி கடலின் நீலத்தை கண்ணனின் நீலமாய் உணர்வார்.. ஆகாயம் பார்த்து அந்த நீலத்தையும் அவன் நீலமாகவே உருகுவார்.

பசு முதல் வீட்டுப் பிராணிகள் வரை அனைத்து ஜீவராசிகள் வரை அன்பொழுகுவார். ஆரத்தழுவார். முத்தமிடுவார். கொஞ்சுவார்..

கிருஷ்ணா கிருஷ்ணா என்பார்..

வீட்டில் அனைவருக்கும் இந்த விநோத செய்கை மனம் வருத்தத்தையே அளித்தது..

வேலை செய்ய அதிகாலையில் அம்மாவை தேடினால்... படுக்கையில் காணாத அம்மாவின் அம்மா.

பாவ சமாதியில் தென்னைமர நிழலிலோ.. கடற்கரை மணலிலோ தனை மறந்து சமாதியில் லயித்திருப்பார்.

தேடிக் கண்டு பிடித்து அடிப்பாள் அம்மாவின் தாய்.

விழுகின்ற ஒவ்வொரு அடியும் தன் கிருஷ்ணனை நோக்கி நகர்கின்றன ஒவ்வொரு அடியாக நினைத்துக் கொள்வார்...


கடை வீதிக்குச் செல்கின்ற சமயம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதெல்லாம் .. ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கிருஷ்ணா என்பார்.
ஒரே ஒரு அடியில் கிருஷ்ணா என்பதை அழைக்க மறந்தால் மீண்டும் பின்நோக்கி நடந்து கிருஷ்ணா என்று அழைத்தே தொடர்வார்.

இந்த பிரகலாத பக்தி எல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதே அல்ல...
பூர்வ ஜென்மத்து தவத்தினால் மட்டுமே வாய்க்கப் பெற்ற வரப்பிரசாத பேருணர்வு.

மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு இதுவெல்லாம் பைத்தியக்காரத்தனம் போல் தோன்றும்.

கம்பி சிறைக்குள் இருப்பவர்க்கு அந்தப் புறம் காணும் போது எதிரே உள்ளவர் கம்பிக்குள் இருப்பதாகவே தோன்றுவது போல்... வெறும் கற்பனைத் தோற்றமே பிறர் பற்றிய மாய அபிப்ராயங்கள் எல்லாம்.

ஒருமுறை அம்மாவின் பாட்டியை பாம்பு சூழ்ந்ததை பார்த்த மாத்திரத்தில்.. இது என் பாட்டி என்று கூறி இருக்கிறார்..
உங்களை ஒன்றும் செய்யாது எனவும் கூறி பாட்டியை தேற்றி..
பாம்பை அரவணைத்து அது நீட்டிக் கொண்டிருக்கும் நாக்கில் முத்தம் தருகிறார்.

அப்பேர்ப்பட்ட பேரன்பு அம்மாவுக்கு.

அம்மா தியானம் செய்யும் போதெல்லாம் தாய் தமயந்தி கலைத்து விடுவார்.
பாவ சமாதியில் அம்மா இருந்தாலோ குடம் குடமாய் தண்ணீர் ஊற்றுவார்.

ஒருமுறை வீட்டு நகைகளை எடுத்து அம்மா கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுத்ததற்காக தாய் தமயந்தியின் பிரம்பு பேசாத பேச்சே இல்லை.

இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் அம்மா ஆன்மிக சாதனையை விடவே இல்லை..

நாம் தியானம் செய்யாததற்கே ஆயிரம் காரணம் சொல்கிறோம். கொசு கடித்தால் கூட சுணங்குகிறோம்.

அம்மாவின் விடாப்பிடியான பக்தியும் ஆன்மிக சாதனையுமே வாசிப்பவர்க்கு ஆன்மிகத்திற்கான உந்துசக்தியாக நிச்சயம் அமையும்.

பேரானந்த பொழுதில் எல்லாம் மெய் மறந்து சிரிப்பார்.
நடனமே கற்காத போதும் அந்த பேரானந்த நிலையில் ராமகிருஷ்ண பரமஹம்சரை போல் நடனம் ஆடுவார்.

ஓம் பிரதிபிம்பித சாந்த்ரேய சாரதோபய மூர்த்தயே நமக
 என அம்மாவின் 108 நாமத்திலேயே இந்த சுபாவம் குறிப்பிடப்படுகிறது.


இரவில் தொந்தரவுகள் இல்லை என.. அதிக நேரம் தியானம்.. ஜபம் புரிவார்.

இது சரிபடாது என பெற்றோர்கள் திருமணம் நிச்சயிக்கப் பார்க்கிறார்கள்.
இரண்டு சம்பந்தத்தை மறுத்தும் மூன்றாவது சம்பந்தத்தை எடுத்து வருகையில் கையில் தேநீருக்கு பதிலாக கம்பை எடுத்து அனைவரையும் விரட்டுகிறார்.

பிறகு திருமண பேச்சு எழவே இல்லை.

மீரா போல்.. ஆண்டாள் போல் .. ராதை போல் இருக்கும் அம்மாவுக்கு இறைவன் துணையே தவிர வேறெந்த உறவு அர்த்தமற்றதாகவே தோன்றியது.

நீங்கள் என் பெற்றோர் இல்லை.. இந்த உலகம் தான் பெற்றோர் என்கிறார்.

ஓரிரவில் கிருஷ்ண பாவ சமாதியில் மூழ்குகிறார்.
நீல பிரபஞ்ச விழிப்புணர்வை தரிசனம் செய்கிறார்.
கிருஷ்ணப் பேருணர்வை அடைகிறார்.

1965ம் ஆண்டு கிராம பூஜையில் கிருஷ்ண பாவம் காட்டுகையில்..
அம்மாவிற்கு அனைவரும் ஆரத்தி எடுக்கையில்.. கம்யூனிச சித்தாந்த ஊராகையால் பலர் விமர்சிக்கிறார்கள்.
சிலர் மகிமை ஏதாவது புரிந்தால் தான் நம்புவோம் என்கின்றனர். முதலில் மறுத்த அம்மா.. பிறகு வெறும் தண்ணீர் எடுத்து வரச் செய்து அதைத் தொட்டு பாலாக மாற்றித் தருகிறார்.
அதை உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டவர்க்கு ஒருவாரம் வரை அந்த விநோத மணம் இருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதுபோல் சிலருக்கு நம்பிக்கை ஏற்பட்டும்.
சிலருக்கு பொறாமை ஏற்பட்டும் வருகிறது.

அம்மாவின் இல்லத்து மாட்டுத் தொழுவமே ஆதி காலத்து அமிர்தபுரி ஆசிரமம்.

அதையும் தீ வைத்து அழிக்க நினைத்தவர் உண்டு.
குடும்பத்தையே புறம் கூறி ஒதுக்கி வைத்தனர்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தப் பெற்றோரை எண்ணி இதற்கு காரணமான தானே ஜல சமாதி அடைய முடிவெடுக்கிறார் அம்மா.

தடுத்த பெற்றோர்கள் அது முதல் அம்மாவின் ஆன்மிக சாதனைக்கு தடையாகவே இருக்கவில்லை. படிப்படியாக அக மாற்றம் அடைந்தனர்.

ஒருமுறை அம்மாவின் கிருஷ்ண பாவ தரிசனத்தில் குஷ்ட ரோகி ஒருவர் வாசலில் நிற்க.. அவரை ரத்ன பிறர் வெளியேற்ற நினைக்க... அவர்களைத் தடுத்து.. அவரை அருகழைத்து.. ஆரத்தழுவி.. பிறர் அருவருப்பைக் கடந்து தனது நாக்கால் அவரின் சீழ் பிடித்த குஷ்டத்தை நக்கி சுத்தம் செய்கிறார்.


இந்த அனுபவம் வாசித்து அடியேன் அழுதிருக்கிறேன்.
இதயத்தில் பேரன்பு நிரம்புகையில் அது பெருங்கருணையாகவே வழியும்.
அம்மாவிற்கே அன்றாடம் வழிந்தோடுகிறது.

ஓரிரு வாசகர்கள் மகான்கள் பதிவில் மகான்கள் வாழ்வே நிறைய வருகிறது.. சுவாமி அனுபவம் குறைவாகவே வருகிறது என்றனர்..

மகான்களின் வாழ்க்கை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடம் எடுக்கிறது..

நம் மனக் கசடை இந்த மகான்களின் பாகவதமே நீக்குகிறது..
மகான்களின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒரு ஆன்மிக சாதனையே. காரணம் அவர்களை இயக்குவதும் இறைவன் சத்ய சாயியே..

தியானத்தில் மனம் மட்டுமல்ல உடலின் அணுக்கூட்டங்களே மாற்றி அமைக்கப்படும்.. அப்படி அம்மாவின் பெண்ணுக்கு உரித்தான அந்த மூன்று நாட்களின் விலகல் கூட கிருஷ்ண பாவ சமாதி காலத்திலேயே நின்றுவிடுகிறது.

தியான அனுபவத்தை மிஞ்சிய ஆச்சர்யம் ஈரேழு பதினான்கு உலகத்திலும் இல்லவே இல்லை.

பத்து பேர் அம்மாவின் ஆரம்ப‌கால தரிசனத்திற்கு அன்றாடம் வருவர். இதை எல்லாம் கண்ணுற்ற அம்மாவின் தம்பி .. அம்மாவே குடும்பத்தின் இழுக்கு என நினைத்து ஆள் வைத்து அழிக்க திட்டமிடுகிறார்.


அம்மாவின் முன் ஒருவர் கத்தியை வைத்து ஆவேசமாகப் பேச.. தான் உடம்பில்லை.. தன்னை அழிக்க வந்த உங்களையும் ஈஷ்வரனாகவே பார்க்கிறேன் என்கிறார்.

ஓங்கி அம்மாவை அழிக்க வந்தவனுக்கு இதய வலி வந்து அவன் மயங்கி விழுகிறான்.

அவனுக்கு ஆகாரம் எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடுகிறார்.

புத்தர் -- அங்குலுமாலா கதையை எப்படி மறக்க முடியும்?

அம்மா குணப்படுத்திய அந்த குஷ்ட ரோகியும் அம்மாவின் ஆசிரமத்திலேயே புது ஜென்மம் எடுத்து சன்யாசியாக வாழ்கிறார்.

கொலை செய்ய வந்தவரோ உடல் அசைவற்று .. கண்ணீரை மட்டும் அம்மாவைப் பார்த்து சொரிகிறார்.

பேரன்பால் எதைத் தான் மாற்ற இயலாது?

அம்மாவின் அமிர்தபுரி ஆசிரமத்தில் கட்டட வேலையில் எல்லாம் அம்மாவே முதல் சித்தாளாய் கல் சுமந்து பணியாற்றி இருக்கிறார்.

டிரஸ்ட் போன்ற செயல்முறையை முதலில் மறுத்த அம்மா பிற்காலத்திலேயே சம்மதித்திருக்கிறார்.

தான் டிரஸ்டி என்ற உணர்வு கூட .. தான் டிரஸ்ட் உறுப்பினர் என்ற எண்ணத்தையும் விடுவது தான் .. ஆம் அடையாளத்தைத் துறப்பதே ஆன்மிகம்.

ஒருவன் எதனால் கர்வம் கொண்டிருந்தாலும் அவனுக்கு தன் தெய்வீக நிலையை வெளிக்காட்ட மாட்டேன் என்கிறார் பகவத் கீதையில் இறைவன் சத்ய சாயி.

அம்மாவை அடியேன் தரிசித்தது கல்லூரி காலத்தில் தான்.

அம்மாவை சென்னை வடபழநியில் (2002ம் ஆண்டு முதல்) தரிசித்து அடியேன் கேட்ட முதல் கேள்வி.. அம்மா மந்திர தீட்சை தா என்பதே..

பலருக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது அந்த தீட்சை எனும் சத்தியம் அப்போது அடியேனுக்கு தெரிந்திருக்கவில்லை.

கேட்ட மாத்திரத்திலேயே அம்மா தரிசனம் கழிஞ்சு தரேன் மோனே என்றார்.


ஒரு சுவாமிகள் கூடி இருந்த எங்கள் ஐந்து பேரை தனியாக அழைத்து .. யாராருக்கு என்னென்ன தெய்வத்தின் பெயரில் மந்திரம் வேண்டும் என்று கேட்டார்.

மந்திர தீட்சையில் இந்தக் கிளைகள் எல்லாம் இருப்பது அப்போது தெரியாதிருந்தேன்.
அடியேனுக்கு வயது அப்போது பதினேழு.

ஒரு உள்ளுணர்வினால் மட்டுமே அடியேன் அம்மாவிடம் மந்திரம் கேட்டேன்.

ஒவ்வொருவர் ஒவ்வொன்று கேட்க.. அடியேனோ அம்மாவின் பெயரிலேயே மந்திரம் தாருங்கள் என்றேன் வேறொன்றும் கேட்கத் தெரியாமல்.

அவரும் சரி என்று .. அம்மா காதுகளில் மந்திரம் சொல்வார் அதன் பிறகே நான் கொடுத்த சீட்டைப் பார்க்க வேண்டும் என்று போய்விட்டார். அந்தத் திசை பக்கமே வரவில்லை...
அடியேனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இவர் அம்மாவிடம் இன்னார் இந்த மந்திரம் கேட்டார் என்று அருகில் போய் சொல்லவே இல்லையே.. அம்மாவுக்கு எப்படி நாங்கள் சொல்லாமல் தெரியும் என்ற குழப்பம்.


அம்மா வழங்கிடும் தரிசன கியூ எதிரே அமர்ந்திருந்தேன்.
பல்லாயிரக் கணக்கான கூட்டம்.
சோர்வே இன்றி... அனைவருக்கும் ஆலிங்கன தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

விடிகாலை. பிரம்ம முகூர்த்தம்.
ஐந்து பேர் அழைக்கப்பட்டோம்...
முதலாய் அடியேன்.
அம்மா தாமரை மலரை சிரசில் தூவி ஆசி வழங்கி வலது காதில் மந்திரம் ஓதினார்..

அந்தப் பேரனுபவம் எழுத்தில் பொருத்துவது கடினம்.

அந்த சக்தி நிலையை வார்த்தையால் வடித்தெடுப்பது சுலபமில்லை.

கண்களை மூடி மெய் மறந்திருந்தேன்.
பிறகு கண் திறந்து கை திறந்து சீட்டைப் பிரித்தேன்..

என்ன மந்திரம் எழுதப்பட்டிருந்ததோ..
அந்த மந்திரமே காதில் சொல்லப்பட்டிருந்தது.

அவ்வளவு நேரமும் அங்கே தான் இருந்தோம்.. எழுதிப் போனவர் அந்த திசையை எட்டிக் கூட பார்க்கவில்லை...

அம்மாவின் அனைத்தும் அறியும் ஆற்றலை எண்ணி உளம் நெகிழ்ந்த உன்னத தருணம் அவை.

அந்த அனைத்தும் அறியும் ஆற்றலே உருவமெடுத்த இறைவன் சத்ய சாயி.



ஒருமுறை "அம்மா.. காமம் கிரோதம் படுத்துகிறது .. நீங்கள் தான் அதிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுவிட்டேன்"
ஏன் கேட்டேன்.. எதற்கு கேட்டேன்.. இன்று வரை காரணமில்லை..
ஒரு உத்வேக உந்துதல் கேட்கத் தூண்டியது.

அன்று முதல் முறை அடியேனின் தோளை இறுகப் பிடித்து கண்களை அகட்டி வைத்து மிக ரௌத்திர காளியாய் "அம்மா நான் இருக்கேன்.. உன்னைப் பார்த்துப்பேன்" என்றார்.

அழுதுவிட்டேன்.

அம்மாவிடம் பாத நமஸ்காரம் முதல் அவர் தன் கையால் பரிமாறிய உணவும் உண்டிருக்கிறேன்.

இந்த அரிய பெரிய சந்தர்ப்பம் எல்லாம் இறைவன் சத்ய சாயி சங்கல்பத்தால் மட்டுமே நிகழ்ந்தது.
இது சுவாமி பிளாக் என்பதால் குறிப்பிடவில்லை.
அம்மாவின் பிளாக் என்றாலும் இதையே குறிப்பிட்டிருப்பேன்.

இறைவன் என்பவர் சத்ய சாயி ஒருவரே.

அமுதக் கடலும்... பிரபஞ்சக் கடவுளும்

அம்மாவுக்கும் சுவாமிக்குமான பந்தம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ராதைக்கும் கண்ணனுக்குமானது..

சுவாமியின் பரம பக்தை அம்மா.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் உருகிக் கொண்டே இருப்பார்.

ஆரம்ப காலத்து அம்மாவின் வழிபாட்டில் இறைவன் சத்ய சாயியின் புகைப்படமும் இருக்கும். அதைக் கண்டு இன்றும் பரவசம் அடையலாம்.



அடியேனின் நேரடி அனுபவம் ஒன்று உண்டு. அடியேன் இதுவரை எழுதிய எல்லா புத்தகங்களையும் அம்மாவை தரிசிக்கையில் சமர்ப்பித்திருக்கிறேன்.
அந்த ஒரு தரிசனத்தில் அம்மாவுக்கு இரண்டு புத்தகம் சமர்ப்பித்தேன் ..
ஒன்றை வாங்கிக் கொண்டு தன்னருகே வைத்துக் கொண்டார்..
இன்னொன்றை வாங்கி உற்றுப் பார்த்து ..
தனது திருக்கரத்தால் அந்தப் புத்தகத்தை எடுத்து நெற்றிமீது வைத்து கண்களில் ஒற்றிக் கொண்டு தனது சிஷ்யை ஒருவரிடம் ஆசிரம லைப்ரரியில் வைக்கும் படி உத்தரவிட்டார்..

அந்தப் புத்தகமே "ஸ்ரீ சாயி மகா காவியம்"
அட்டைப் படத்தில் இறைவன் சத்ய சாயியின் பாத புகைப்படம் இருக்கும்.
கவிஞர் பொன்மணி அம்மாவின் அழகுதமிழ் அணிந்துரையோடு சுவாமியின் வாழ்க்கையைப் பற்றிய புதுக்கவிதை காவியமது.

இன்னொரு அரிதான... மிக ஆழமான சம்பவம் ...
மூத்த சாயி எழுத்தாளர் திருமதி சரோஜினி சாய்ராம் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தது..

ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் புத்தகம் எழுத வேண்டி பல ஞானிகளை தரிசனம் செய்து சுவாமி பற்றிய அவர்களின் அனுபவத்தை சேகரித்துத் தொகுத்த அபார உழைப்பு நூல் அது..
இறைவன் சத்ய சாயிக்கான சமர்ப்பண மாலை அது.

சுவாமி அனுபவம் கேட்கவே அம்மாவை தரிசிக்க வருகிறார். வரும் இடம் அடியேன் தரிசிக்கின்ற அதே வடபழநி அம்மாவின் கோவிலில்...

அம்மாவிடம் விபரம் சொன்னவுடன் சரோஜினி சாய்ராம் அவர்களை தனி அறையில் அழைத்துக் கொண்டு போகிறார் அம்மா.

ஆரத்தழுவி பிரசாதங்கள் கொடுத்து விட்டு...


"அவர் அவதார புருஷர். சூரியனுக்கு விளக்கெதற்கு? சூரியனுக்கே ஒளியைத் தருபவருக்கு விளக்கம் தேவையா?" என்கிறார்.

ஆதாரம்: ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் -- 2 . பக்கம் -- 26. நூலாசிரியர் : சாய் சரஜ் (சரோஜினி சாய்ராம்)

மகான்கள் சூட்ச்சுமமாய்ப் பேசக் கூடியவர்கள்.

"சூரியனுக்கே ஒளியைத் தருபவர்"
என்ற சொற்றொடர். சாதாரண சொற்றொடர் அல்ல. அந்தச் சொற்றொடர் ஒரு பிரபஞ்ச சூத்திரம்.
ஆன்ம சாதனையில் இழுக்கும் ஒரு அக ரசவாத மந்திரம்.

இந்த சொற்றொடரைக் குறித்து தியானம் செய்தால் கூட இறைவன் சத்ய சாயியின் அருட்பெருஞ் ஜோதி மயத்தை அகத்தே அனுபவிக்கலாம்.

மகான்கள் இறைவனை உணர்வதாலேயே மகான்களாகிறார்கள்.
மகான்கள் இறைவனுடன் ஐக்கியப் படுகிறார்கள்.
ஐக்கியப் படுவதன் மூலம் இறைவனின் கருவிகள் ஆகிறார்கள்.
ஐக்கியப்படுவதற்கே தியானம் போன்ற ஆன்ம சாதனைகள் எல்லாம்.

துறவே ஐக்கியப் படுவதற்கான முதல் அடியை இறைவனை நோக்கி எடுத்து வைக்கிறது.

அம்மாவின் சிறுவயது முதல் இன்று வரையான வாழ்க்கை நமக்கு கற்பிப்பது ஒன்றே ஒன்றைத் தான் ..
"சரணாகத பக்தியுடன் கூடிய விடாப்பிடியான ஆத்ம சாதனை"

இதுவே அவர்களின் வாழ்வு. பேரன்பே அவர்களின் பாதை.
ஸ்பரிச தீட்சையே அவர் உலகெலாம் தருவது.

அவரின் தொடுகை
கங்கையின் தொடுகை.
அவரின் ஆலிங்கனம்
ஆயிரம் தாயின் அரவணைப்பு.


"குழந்தைகளே...
ஆன்மிக சாதனை செய்யும் ஒருவன் உலகியல் விஷயங்களைப் பற்றிப் பேசவோ, வேறு அனாவசிய பேச்சுக்கள் பேசவோ நேரம் இருக்காது. யாரோடும் அவன் கோபமாகப் பேசமாட்டான். பிறரின் குற்றம் குறைகளைக் காணவும், பேசவும் செய்யும் ஒருவன் ஆன்மிக சாதனையில் ஒருபோதும் முன்னேறுவதில்லை"
என்ற அம்மாவின் சத்திய வாக்கோடு

ஓம் அம்ருதேஷ்வர்யை நமக
ஓம் நமோ பரபிரம்மனே ஸத்யஸாயி பாபாய

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக