தலைப்பு

ஞாயிறு, 31 மே, 2020

எல்லா மதங்களையும் அரவணைத்த இரு சாயி இறைவன்!


சாதம் ஒன்றே அதிலிருந்து சமைத்து வரும் உணவு வகை வெவ்வேறு வடிவங்கள்.. வெவ்வேறு ருசி ஆனால் அவை ஆற்றும் பசியில் வரும் நிறைவும் திருப்தியும் ஒன்றே என்பது போல் இறைவன் ஒன்றே அதன் வடிவங்களான ராமர்.. கிருஷ்ணர்.. ஷிர்டி சாயி.. சத்ய சாயி வெவ்வேறு வடிவங்கள்.. ஆனால் அவர்கள் பக்தர்களுக்கு உணர்த்திடும் அனுபவம் ஒன்றே..

உலகில் அவதரித்த இறைவனான இரு சாயியும் மதங்களைக் கடந்தவர்கள். சீரடி சாயி பாபாவும்  சத்ய சாயிபாபாவும் சூழ்ச்சியால் செய்யப்படும் மதமாற்றங்களை வெறுத்தவர்கள்.

ஸ்ரீ சீரடி சாயிபாபா, இந்து இஸ்லாம் மதத்திற்கும் இடையே அன்பு, பொறுமை, நல்லெண்ணம் போன்றவற்றை ஏற்படுத்தி, அந்த இன / மத மக்களை, அவரவர் மதத்தைப் பின்பற்ற வைத்தார். "ராமரும் ரஹீமும் ஒன்றுதான். அவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை. அதுபோல் இரு பிரிவு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இருவரும் போராடி, வாதாடுவதால் நன்றன்று, எனவே விவாதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் போட்டி போட வேண்டாம். தியானம், யோகம், ஞானம் என்ற வழிகள் மூலம் கடவுளை அறிந்து கொள்ளுங்கள். யாராவது ஏதாவது தீமையை உங்களுக்கு செய்தால், அதற்காக பழிக்குப் பழி வாங்காதீர்கள். நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால்,  சிறிது நன்மைகளைச் செய்யுங்கள். அது போதும்" என்றார். ஒரு தடவை, மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிய ஒருவர்,பாபாவை தரிசனம் செய்ய வந்தபோது அந்த பக்தரின் முகத்தில் வேகமாகத் தட்டி, கோபத்துடன் 'என்னடா, உனக்கு நீயே ஒரு தகப்பனைத் தேடிக் கொண்டு விட்டாயா'?என்று கடிந்து கொண்ட ஒரு சம்பவமும் உண்டு.

ஸ்ரீ சத்ய சாயி பாபா சர்வ மதத்தையும் அனுசரித்தவர். அத்துடன் அனைத்து மதங்களும் ஒன்றே! என்ற சத்ய பிரகடனமுடன், சாயி மார்க்கத்தை உலகமெங்கும் பரவச் செய்தார். இறைவன் ஒன்றே! என்ற சத்தியத்தை உணர்த்திய சுவாமி, அதை வாழ்ந்தும் நமக்கு உணர வைத்தார். அதனை விளக்க, ஒரு உன்னத சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

முன்னொரு காலத்தில், கண் தெரியாத நால்வர் யானை என்பது எவ்வாறிருக்கும் என அறிய ஆவல் கொண்டனர். ஒருவர் யானை அருகில் சென்று, அதன் காது ஒன்றைத் தடவிக்கொண்டு, யானை என்பது முறம் போன்றது என்று மனதில் நினைத்து கொண்டார். இரண்டாமவர் அதன் காலை தடவி அது தூண் போன்றது என எண்ணினார். மூன்றாமவர் அதன் வயிற்றைத் தடவி சுவர் போன்றது என்று அறிந்துகொண்டார். நான்காவதாக வந்தவர் அதன் தந்தத்தைத் தடவியபடி நெல் குத்த உபயோகிக்கும் உலக்கைப் போன்றதே யானை என்ற கருத்தைக் கொண்டார்.


இவ்வாறு ஒவ்வொருவரும் யானையின் ஒரு பகுதியை மட்டும் தடவி அந்த ஒரே அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு யானை எவ்வாறிருக்குமெனத் தீர்மானித்துக் கொண்டனர். ஆனால் எல்லாப் பகுதிகளையும் அறிந்தால் தான் யானை  எவ்வாறிருக்கும் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும். இதைப் போன்றே உலகிலுள்ள மதங்களும் இறைவனின் ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே பார்க்கின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் இறைவனின் பல்வேறு அம்சங்கள் பற்றி பூரண அறிவைப் பெற முடியும் என்கிறார் ஸ்ரீ சத்ய சாயிபாபா .
 இருவரும் ஒருவர்தான். இருவரது சத்திய பேரருளும் ஒன்றுதான். அவரே இவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது நாமே!!

மனம் எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கிறது.. இதயம் எல்லாவற்றையும் இணைக்க முயற்சி செய்கிறது. இறைவனான
இரு சாயியும் இதயவாசியே தவிர மனவாசி அல்ல...
அவதாரங்கள் மூன்று ஆனால் அந்த அவதாரங்கள் நமக்கு அருளிவரும் பேரனுபவம் ஒன்றுதான்

-ஆக்கம்: எஸ்.என். உதய நாயகம். ஸ்ரீ சத்ய சாயிபாபா மத்திய நிலையம், கொழும்பு ஸ்ரீலங்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக