தலைப்பு

புதன், 12 ஜனவரி, 2022

PART 7 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


அந்த தேஜோமய வெளிச்சத்தில் யார் தோன்றி? என்ன சொன்னார்? அவர்களின் மர்ம குகை வாழ்வு எத்தகையது? உணவை தவிற அந்த அட்சயப் பாத்திரம் அப்படி என்னவெல்லாம் கொடுத்தது? அவர்கள் அந்த இமயக் காடுகளில் கண்டெடுத்த அந்த அபூர்வ மூலைகைக் கொடியில் என்ன தான் சிறப்பம்சம்? சாயி அவதாரம் பற்றி குறிப்பிடும் ஒரு புராண புத்தகம் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? இதோ... வாருங்கள் நொடிக்கு நொடி சுவாரஸ்யப் பயணம் தொடர்வோம்!! 


"ஆஹா..." என அப்படியே கண்களை கசக்கியபடி பார்க்கிறார்கள்... அவர்களால் நம்பவே முடியவில்லை... "சுவாமி" என ஒரே சுதியில்...ஜோதிப் பிழம்பு வாகனத்தில் வந்திறங்கிய சுவாமியை வரவேற்கிறார்கள்! அப்போது அந்த 11 போதிமரங்களுக்கும் புல்லரிக்கின்றன! ஆசனத்தில் அமர்ந்து... அபயஹஸ்தம் காட்டி... நலம் விசாரிக்கிறார் சுவாமி... ஸ்ரீ சத்ய சாயி புத்தர் தனது 11 போதிமரங்களுடன் உரையாடுகிறார்... எத்தனையோ மகிமைகளை தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அந்த அற்புத நரநாராயண குகை... இந்த அற்புத ஞானப் பரிவர்த்தனைகளையும் தனது கல்கண்களால் பதிவு செய்து கொள்கிறது!

   "என்னுடைய சங்கல்பத்தினால் தான் நீங்கள் இங்கே தங்குகிறீர்கள்! இல்லை எனில் இந்த இடத்திற்குக் கூட ஒருவராலும் வர இயலாது!  காணாமல் போன அந்த 12 ஆவது சகாவை  நீங்கள் எண்ணியது பற்றி எனக்கு தெரியும்..!" என என்ன நடந்ததோ அதை எல்லாம் ஒன்றுவிடாமல் விவரிக்கிறார் சுவாமி... விவரித்து விட்டு "ஏற்கனவே அவனை நான் உங்களோடு செல்ல வேண்டாம் என்றேன்! என் பேச்சைக் கேட்காமல் உங்களோடு வந்தான்... அவனுக்கும் என் அன்பும் கருணையும் இருக்கிறது...அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் ஆத்ம சாதனையிலேயே கவனம் செலுத்தி... சென்ற ஜென்மத்தில் முக்தி பெறாமல் விடுபட்டதை இந்த ஜென்மத்தில் அடையுங்கள்!" என ஆசி வழங்குகிறார்... "ஹோம திரவியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது சுவாமி " என்கிறார் 11 பேர்களில் ஒருவர்.. சுவாமி அந்த அட்சயப் பாத்திரத்தை உற்று நோக்குகிறார் பசு நெய் பொங்கி வழிகிறது... 

"இனி ஒரு மாதத்திற்கு தேவையானதை எல்லாம் அட்சயப்பாத்திரமே தரும்... கவலை வேண்டாம்...!" என்கிறார்.. "என் வழிகாட்டுதல்களை அவ்வப்போது செய்வேன்!" என ஆசி வழங்கிவிட்டு சுவாமி மின்னலாய் மறைந்து போகிறார்! 

            என்ன !! சுவாமி தோன்றி மறைவாரா? இவை எல்லாம் நடந்திருக்குமா? சுவாமி இப்படி எல்லாம் செய்திருப்பாரா? என நினைக்கலாம்... செய்திருப்பாரா அல்ல இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார் என்பதே நிஜம்!  வெறும் அழிந்து போகக்கூடிய இந்த உடம்பின் மேல் ஆசை கொண்டவர்க்கே சுவாமி எவ்வளவோ மகிமையை செய்து கொண்டிருக்கும் போது... உடல் பற்றை சட்டையாக... உறவுப் பற்றை பனியனாக கழட்டி வீசி...சுவாமி சொல் எனும் சங்கல்பத்தை மட்டுமே அருட் கம்பளியாய் போர்த்திக் கொண்டு புறப்பட்டு வந்தவர்களுக்கு சுவாமி இதற்கு மேலும் செய்வார் என்பதே எதார்த்த உண்மை!


ஒருமுறை அவர்கள் ஆழ்நிலை தியானம் முடித்து உணவும் உட்கொண்டு விடுகிறார்கள். அது மாலை 5 மணிக்கு மேல்... சுவாமி திடீரென ஒளிரூப லாவண்யமாய் பிரஸ்ஸனமாகிறார் (தோன்றுகிறார்).  வரவேற்று சுவாமியை உபசரிக்க உணவேதும் இல்லையே என அவர்கள் நினைக்கும் அடுத்த நொடி அட்சயப் பாத்திரத்தை உற்றுப் பார்க்கிறார் சுவாமி.. பழரசம் குபுகுபுவென பொங்கி வழிகிறது... கண்ணாடி குவளையில் ஊற்றி சுவாமிக்கு தருகிறார்கள்... நீங்கள் முதலில் அருந்துங்கள் என்கிறது சாயித்தாய்! அந்த தாய்க்கு இணை சொல்ல இன்னொரு தாய் இதுவரை அந்த சத்யசாயி தாய் கூட பூமியில் படைக்கவில்லை! அவர்கள் தம் உதட்டோரம் பழரசம் கொண்டு வர... கசக்கிறது! "என்ன கசக்கிறதா?" எனக் கேட்டுவிட்டு... அனைத்துக் கோப்பைகளையும் வாங்கி தன்  கோப்பையிலிருந்து சிறு சிறு துளியை சமமாய் ஊற்ற.. இப்போது பருகுங்கள் என்றவுடன்... முகம் மலர்கின்றன அந்த 11 தெய்வீக பூக்கள்... சுவாமி சிரிக்கிறார்... அந்த சிரிப்புக்கு எந்த மலரை ஒப்பிடுவது? சூரியனை ஒப்பிட்டால் கூட சுவாமியின் புன்னகையை விட அது ஒளி மங்கலாய்த் தான் இருக்கிறது!! "இப்படித் தான் உலகம் கசக்கிறது...! என் அருள் கிடைத்துவிட்டால் இனிக்கிறது" என மீண்டும் சிரிக்கிறார் சுவாமி... இது தான் நடைமுறை ஆன்மீகம்...! சுவாமி நமக்கு அனுபவம் தந்தபிறகே பாடம் எடுப்பவர்! வெளிப்பூச்சல்ல... பக்குவமே ஆன்மீகம்!

ஒரே வகையான உணவே வந்து கொண்டிருந்தபடியால்... சாப்பிட வேண்டாம் ... தியானத்தையே தொடர்வோம்... பால் மட்டும் போதும் என நிறுத்திய அவர்களின் 3 நாட்களுக்குள்ளாக ரொட்டி வகைகள் தோன்றி அவர்களை குதூகலப்படுத்துகிறது அந்த அட்சயப்பாத்திரம். அந்த அருள்மிகு அட்சயப்பாத்திரம் என்பது சுவாமியின் உலோக வடிவமே! என்பதை உணர முடிகிறது! சுவாமி எடுக்காத வடிவங்கள் தான் பூமியில் ஏது? 

நித்திய அக்னி ஹோத்திரத்திற்காக அட்சய பாத்திரம் வேள்விப் பொருட்களை தந்து உதவிய போதிலும்... 18,000 அடி கீழிறங்கி சிலவகை மூலிகைப் பொருட்களைப் பெற காட்டுக்குள் போகிறார்கள்... அப்போது ஒரு பேரதிசயம் ஏற்பட்டது.. இதுவரை புராணங்களில் மட்டுமே படிக்கப்பட்ட ஒரு மூலிகைக் கொடியை கண்டெடுக்கிறார்கள்... அது அத்தனை விசேஷமானது! தேவலோக கொடி வகை அது! 11 பேர்களில் சிலர் ஆயுர்வேதம் படித்தவர்கள்... சிலர் பி.எச்டி... நம் தலைமை நேபாள துறவி என எல்லோரும் உலகக் கல்வி கற்றவர்களே! 

வேதங்களில் மூஜ்பான் மலைகளைப் பற்றிய குறிப்பு இருக்கிறது... அதில் தான் இவ்வகைக் கொடி அடர்ந்து வளர்ந்திருந்தது... காலப்போக்கில் குறைந்தது... "சோமலதா கொடி" என்பது அதன் பெயர்...! இதனிலிருந்து வருகின்ற பாலை அருந்தினால் இளமையோடு இருக்கலாம்... இதை யாகப் பொருளாகப் பயன்படுத்தினால் பலவகை மேன்மைகள் அடையலாம்... அத்தகைய கொடி இவர்களின் கைகளுக்குக் கிடைக்கிறது! துளசி, வில்வம் போல் சோமலதா கொடியும் பூஜிக்கத் தகுந்ததே! மாறா இளமையோடு இருக்க வைக்கும் இந்தக் கொடி மனிதனின் கண்ணில் பட்டால் அவ்வளவு தான்...பூமி தாங்காது! என்பதற்குத் தானோ சித்தர்களைப் போல் அது மறைந்தே வாழ்கிறது! ஒருமுறை சுவாமி குகையில் தோன்றிய போது... ஆம் இது தான் சோமலதா கொடி என உறுதிப்படுத்துகிறார்! அவர்களுக்கு அதை வைத்து இளமை மாறா கோலம் அடையும் ஆசையே இல்லை... அவர்கள் இலக்கு அதுவல்ல... உண்மை தான்...! ஆசைப்படாதவர்களுக்கே அபூர்வங்கள் நிகழ்கின்றன...! ஆக ஹோமப் பொருட்களாக அதனை பயன்படுத்துகிறார்கள் அந்த ஆசையற்ற 11 அபூர்வத் துறவிகள்! 

அந்த நரநாராயண குகைக்கு இமய யோகிகள் அவ்வப்போது தோன்றியதற்கு இருவகை காரணங்கள் இருக்கின்றன...ஒன்று சுவாமி சிருஷ்டிக்கும் அட்சயப் பாத்திர பிரசாத பாக்கியம் பெறுவதற்காகவும்... இன்னொன்று 11 இளம் தவசியர்களின் தன்னை மறந்த தவ வாழ்வை காண்பதோடு சேர்த்து அந்த குகையில் இருந்த ஜைமினி பாகவதத்தை அவர்கள் வாயிலாக கேட்டு அறிவதற்காகவுமே!! 

(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - 1  / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்)


அது என்ன ஜைமினி பாகவதம்...? ஸ்ரீமத் பாகவதம் தெரியும்... வியாசர் எழுதியது... ஆம் வியாசரே அந்த நரநாராயண குகையில் தானே எழுதினார்...! அது யார் ஜைமினி? சீனத் துறவியா? எங்கே கண்டெடுக்கப்பட்டது? அதில் அப்படி என்ன தான் சுவாமியை பற்றி  எழுதப்பட்டிருக்கிறது...? பொறுமை...! புராதன புத்தகம் அது... அவசரப்பட்டு திறக்க வேண்டாம்... அந்தப் புத்தகத்தை தலைமேல் பரதன் சுவாமி பாதுகையை தாங்கியது போல் தாங்கி... மெதுவாக திறக்க வேண்டும்... அப்படி திறந்து படிக்கின்ற அந்த 22 கண்களும் கலங்குகின்றன... ஆனந்தக் கண்ணீருக்கும் கங்கையின் சுவை இருக்கத்தான் செய்கிறது... அப்படி என்ன தான் அந்த 11 பேரும் வாசித்தார்கள்?


இமயப் பயணம்

இன்னும் குளிரும்...


  பக்தியுடன் 

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக