தலைப்பு

சனி, 1 ஜனவரி, 2022

இலங்கை முருகபக்தரை ஷஷ்டி அன்றே ஆட்கொண்ட புட்டபர்த்தி சாயி முருகன்!


இலங்கையைச் சேர்ந்த ஒரு தீவிர முருக பக்தருக்கு தானே திரு முருகன் என உணர வைத்து அவரின் ஆரோக்கியத்திற்கு அரண் போல் அமைந்த ஸ்ரீ சத்ய சாயி முருக அனுபவம் இதோ...

இலங்கை பக்தர் முத்துலிங்கம்... இலங்கையை சிலோன் என்பர்... ஆம்...! இலங்கையின் எழில் கொஞ்சும் இயற்கைப் பேரழகை 'லோன்' போட்டுத்தான் தமிழகமே வாங்க வேண்டும்... அத்தகைய அழகியல் பூமியில்  அழகு தெய்வ முருக வழிபாடும் பிரசித்தி... வேலை வணங்குவதே அவர்களின் பிரதான வேலை! கதிர்காமம் ஏழாவது படையாகவே முருக பக்த இதயத்தை அலங்கரிக்கிறது! முத்துலிங்கமோ யாழ்பாண நடேச சிவகாமி அம்மன் கோவிலில் 10 வயது முதல் குருக்களுடன் இருந்து திருத்தொண்டு செய்து வருகிறார். தனது 14 ஆவது வயதிலேயே கடவுளைக் காணும் பேராவல் எழுகிறது! 1964 ல் சுவாமி பற்றி பேப்பரில் படிக்கிறார்... படிக்கிறார் நடக்கிறார் என்கிற மனிதருக்கான செயல்பாடுகள் யாவும் படிக்க வைக்கப்படுகிறார் ... நடக்க வைக்கப்படுகிறார் என்றே பொருள்படுகிறது... அப்பொருள் ஸ்ரீ சத்ய சாயி பரம்பொருள் என உணர முடிகிறது...! ஆக மனிதன் எதையும் செய்யவில்லை... செய்விக்கப்படுகிறான்! 

25 ஆம் வயதிலிருந்து சமிதிக்கு செல்கிறார்... கந்தசஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருப்பவர் முத்துலிங்கம். இப்படி ஆறு முறை இருந்தால் நற்பலன் கிடைக்கும் என்பது முருக பக்தர் அனுபவம்... அப்படி முத்துலிங்கமும் காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் இரவு மட்டும் பால் பழம் அருந்துவார்... அப்படி அவரது ஆறாவது முறை (அதாவது ஆறு வருடம் தொடர் கந்த சஷ்டி விரத அனுஷ்டானம்) முதல் நாள் சென்னை வருகிறார்...ஆறாம் நாள் பர்த்தி விஜயம் 5 பேரோடு... இவரோடு சேர்ந்து ஆறு பேர்... கூட்டம் அதிகமில்லா பொற்பொழுதில் சுவாமி இரவு ஒன்பது மணியளவில் மேல்மாடியில் உலவுவார் என்கின்றனர்... முத்துலிங்கமும் ஒன்பது மணியளவில் தனது விரத உடம்போடு பக்தி உள்ளத்தோடு சுவாமியை மேல் மாடியிலிருந்து தரிசனம் செய்கிறார்... முத்துலிங்கத்தை கண்டவுடன் முகம் மலர்ந்து கைதூக்கி ஆசீர்வதிக்கிறார்...! சரியாக ஆறாவது முறை விரத அனுஷ்டானத்தில் ஆறு பேரோடு வந்த முத்துலிங்கத்தின் ஆறாவது விரத நாள் அது... சுவாமியெனும் சாட்சாத் திருமுருகனை தரிசித்த பிறகே விரதம் முடிக்கிறார்...!

பிறகு சுவாமியிடம் தனிப்பேட்டி பெறுகிறார்... "எங்கிருந்து வருகிறீர்கள்?" என சுவாமி கேட்கிறார்.. சுவாமிக்கு தெரியாது என்பதில்லை... எதுவும் அறியா மனிதரோடு எல்லாம் அறிந்த இறைவன் பேசுகிறபோது எதையாவது கேட்டு தனது திருப்பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.. அது கருணை... ஆகையால் சிலரிடம் இப்படி கேட்பார்... முத்துலிங்கத்தை பார்த்து "இந்த வயதிலேயே ஏன் உன் தலை சொட்டையாக உள்ளது?" எனக் கேட்கிறார்.. "தெரியாது சுவாமி" என பதில் உரைக்க... "நீ தேவைக்கு அதிகமாக யோசிக்கிறாய்... அதனால் தான் சொட்டை ஏற்பட்டிருக்கிறது... இனி அப்படிச் செய்யாதே!" என கனிவோடு கூறுகிறார்...

எவ்வளவு அக்கறை... எவ்வளவு கரிசனம் சுவாமிக்கு...! 

அடுத்த ஒரு மணிநேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்றே அறியா மனிதன் ஏன் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும்? நடப்பது யாவும் சுவாமி செயல் என நாம் நம் கடமையை மட்டும் குறிப்பாகப் பலனை எதிர்பாராமல் செய்துவர வேண்டும்! என்பது சுவாமியின் சொல்வழி உணர முடிகிறது... காரணம் மனிதன் யோசிப்பதில் 99.99 சதவிகிதம் கற்பனையே! 

வீணாய் யோசிப்பதால் ஏற்படும் உச்சந்தலை சூட்டால் சொட்டை ஏற்படுகிறது என்கிற பௌதீக விஞ்ஞான மொழியை சுவாமி சொன்னவுடன் வீண் யோசனையை விட்டுவிட்டதால் மீதி தலை தப்பித்தது என சிரிக்கிறார் முத்துலிங்கம்...

பின்னர் சுவாமி "உங்கள் யாழ்பாணத்தில் நகரசங்கீர்த்தனம் நடக்கிறதா"? எனக் கேட்கிறார்... அவரோ இல்லை என்கிறார்... "நீ போய் சமிதி ஆரம்பித்தவரிடம் நகர சங்கீர்த்தனம் நடத்தும்படி சுவாமி சொன்னதாகச் சொல்!" என்கிறார். சிருஷ்டி விபூதி கொடுத்து... புத்தகத்தில் கையெழுத்திட்டு தருகிறார்... திருப்பதி சென்றுவிட்டு சிலோன் திரும்புங்கள் என்கிறார்! 

சுவாமியின் 55 ஆம் அவதாரத்திருநாள் வைபவம்... பர்த்தியில் நடுவதற்காக 55 தென்னை மரக்கன்றுகளை கொண்டு வருகிறார் சிலோன் பக்தர்களோடு அவர்... பர்த்தி பிரதான சாலையில் பள்ளிக்கு எதிரே நடும்படி உத்தரவு தருகிறார் சுவாமி... விடிந்தால் சுவாமி அவதார வைபவ கொண்டாட்டம்... பரபரப்பாக நடுகின்றனர் சிலோன் பக்தர்கள்... நட்டபிறகு எண்ணிப் பார்க்கிற போது 54 மரக்கன்றுகளே நடப்பட்டிருக்கின்றன... அந்த ஒன்று எங்கே மாயமானது என விளங்கவே இல்லை..‌ சரி 12 மணிக்குள்ளாக உறங்கி விழித்தாக வேண்டும் என்பதால் தங்கிய அறைக்கு திரும்புகிறார்கள்...

                 

மறுநாள் சுவாமி தனது அவதார வைபவ திருவுரையாடலில் பேசுகிறபோது‌... திடீரென கூட்டத்தில் அவர்களை பார்த்தபடி "இரவு 12 மணிவரை தனக்கு 54 வயது தான் ... அந்த ஒரு நொடிக்கு பிறகே 55 வயது" என்றாரே பார்க்கலாம்... அவர்களுக்கு அழுகையே வந்துவிடுகிறது... அவர்கள் மரக்கன்றுகள் நட்ட வரை சுவாமிக்கு 54 வயது தான்... அந்த 1 மரக்கன்றை சுவாமி மறைத்துவிடுகிறார்... "உலகம் யாவையும்" என கம்பர் ஆரம்பிக்கிற கடவுள் வாழ்த்தில் "நீக்கலும்" என ஒரு சொல்லை குறிப்பிடுகிறார்... அதுவும் சேர்ந்துதான் இறைவன் ஆற்றுகிற ஐந்தொழில்... "ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல் அருளல்..." இதில் மறைத்தலை அதாவது கம்பர் குறிப்பிட்ட நீக்கலை மரக்கன்றின் வழி சுவாமி உணர்த்துகிறார்...! ஆக 54 என நவவிதமாக காற்றுக்கு சுவாமி கவசமாய் அருள்புரிகிறது 54 மரக்கன்றுகள்! இப்போது மரமாய் சுவாமி வரமாய் வளர்ந்தபடி...


1988ல் முத்துலிங்கத்திற்கு கழுத்து வலி. நியூரோ சர்ஜன் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என கத்தியை நீட்டுகிறார்... அவரோ பயந்து சுவாமியை நோக்கி பறந்து வருகிறார் கழுத்தில் மருத்துவ பட்டை (காலர்) அணிந்தபடி.. அப்போது கோடையில் சுவாமி விஜயம். சுவாமி நேர்காணல் தருகிறார்... அவர் எதுவும் சொல்லவும் இல்லை... சுவாமி எதையும் கேட்கவும் இல்லை... மேல்நாட்டவர் புகைப்படம் எடுக்கிறார்... சுவாமி இவரின் தோள் மேல் கை வைத்து கழுத்தை அணைத்தபடி புகைப்பட போஸ் தருகிறார்... அது போஸ் இல்லை கழுத்திற்கான மருத்துவ டோஸ்... பிறகு தரிசனத்தில் சுவாமி பக்தர் ஒருவரை சுவாமி சங்கல்பத்தோடு சந்திக்கும் வாய்ப்பு பெற ... "எவர் எதிர்வரினும் நீயே ஆகும்" என்கிறபடி ... ஆப்ரேஷன் தேவையே இல்லை...மருந்து தருகிறேன் ... நான் ஹோமியோபதி டாக்டர் " என்கிறார்...

சுவாமி கை வைத்ததில் கழுத்து வலிக்கு சிறகு முளைத்தது... கழுத்து சிகிச்சைக்கு வலியை கொத்தித் தின்னும் அலகு முளைத்தது... நம் வாழ்க்கை எனும் செஸ் அட்டையில் மனிதர் நாம் வெறும் காய்களே... இதில் ராஜாவோ சிப்பாயோ நாம் சர்வசாதாரண காய்களே‌... சுவாமியே நம்மை நகர்த்துகிறார்!! நகர்த்தி அந்தந்த ஜென்மத்திற்கான அந்தந்த இலக்கை அடையச் செய்கிறார்... விளையாட்டோ தொடர்கிறது...! யாரை வைத்து எதை எப்போது தனது திருவினையாகப் புரிய வேண்டும் என்பது சுவாமிக்கு நன்கு தெரியும்!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 86 / ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 


இறை ரூபங்கள் வெவ்வேறாயினும் பரப்பிரம்மம் ஒன்றே! மனிதனுக்கு பெயர் ஒன்றாயினும் கணவன் மகன் பாட்டன் தோழன் என உறவுமுறைக்கு தக்கவாறு அழைத்தலும் மாறுவது போல்... அழைப்பதற்கான பெயரே மாறுகிறது... யாரை நோக்கி அழைக்கிறோமா அந்த இறைவன் ஒன்றே...! என்பதை இப்பதிவில் உணர முடிகிறது... "கேள்விகள் கோடி பதில் நீ ஒன்றே" எனும்படி எல்லாவித பிரச்சனைகளுக்கும் சுவாமியால் தீர்வு தரமுடிகிறது என்பதை உணர முடிகிறது! 

காரணம் தலையதன் எழுத்தின் வலியையே குணமாக்கும் சுவாமியால் சாதாரண கழுத்தின் வலியை குணமாகும்படி செய்ய முடியாதா? என்ன!! இதில் சுவாமியின் காலத் துல்லியம் என்பது மனித கடிகாரங்களால் உணரவே முடியாதவை... சுவாமிக்கு ஈடு கொடுக்கும்படியான அப்படி ஒரு மனித கடிகாரங்கள் இதுவரை தயாரிக்கப்படவே இல்லை!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக