மாமிசம் உண்ணுவதையும் , குடிப்பதையும் இவற்றையே வாழ்க்கையின் கேளிக்கையாக கருதி வாழும் பக்தர்களை தனது தனிப்பெரும் கருணையால் சுவாமி எவ்வாறு தடுத்தாட் கொண்டு தீயப்பழக்கத்திலிருந்து விடுவித்து தூய்மைப்படுத்துகிறார் என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம் இதோ...
இலங்கையைச் சேர்ந்தவர் ஆசிரியர் இரா. தெய்வராஜன் அவரின் மனைவி மட்டுமே சுவாமி பக்தை... பாலவிகாஸ் குரு. புட்டபர்த்தியில் குரு பயிற்சி முகாமிற்கு செல்ல வேண்டும்.. தனியாக அனுப்ப மனமில்லாமல் தானும் கூடவே செல்கிறார் கணவர். தரிசனத்தில் பெரிய சிகரெட் பெட்டியை புடைத்தபடி பேன்ட் பாக்கெட்டில் வைத்து மணலில் அமர்கிறார்...
சுவாமி பேரழகோடு மிதந்து வருகிறார்.. அவர் காலடி எடுத்து வைக்கின்ற அதே நொடி... சிகரெட் பாக்கெட் மறைந்து போகிறது... சுவாமி அவரின் அருகே வந்து "ஆசிரியர், சிகரெட் பிடிக்கலாமா?" எனக் கேட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்... அன்றிலிருந்து சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுகிறார்... சிகரெட் சிறுபெட்டி மட்டுமல்ல சிகரெட் பிடிக்கும் தீய பழக்கமே மாயமாக மறைந்து போகிறது... சுவாமியே மனதின் எண்ண போக்குவரத்தின் வழிநடத்துனர் என்பது இந்த அனுபவத்தின் வாயிலாக உணரமுடிகிறது!
பிறகு இல்லம் வருகிறார்... அவ்வளவு நாளும் சாப்பிடாத மாமிசங்களை எல்லாம் சாப்பாட்டு மேஜையில் வேட்டையாடுகிறார்.. வேண்டாம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கிறோம் என மனைவி சொல்லியும்... அந்த ஆண் சிங்கம் வேட்டையாடுவதை நிறுத்தாமல்... எனக்கு எப்போது சுவாமி சிருஷ்டி விபூதி கொடுக்கிறாரோ அப்போதே மாமிசம் உண்பதை நிறுத்துவேன் என உறுமுகிறார்... ஒரு கழுகு புறா ஆவதற்கான வள்ளலார் அகவலாய் வாய்வழி வாசிக்கிறது... சில நாள் கடந்து பர்த்தி செல்கின்றனர்... தரிசனத்தில் சுவாமி இவர் அருகே இருந்த ஒரு பக்தருக்கு சிருஷ்டி விபூதி அளித்து இவர் முகத்தில் சிதறவிட்டு நெற்றியில் இட்டு விடுகிறார்! இருந்தும் மனைவியிடம் "பாபா எனக்கு விபூதி கொடுக்கவில்லை... அருகில் இருந்தவர்க்கே கொடுத்தார்... " எனப் பிதற்றுகிறார்... மாயை எப்படி எல்லாம் பேச வைக்கிறது! அன்றே சுவாமி கனவில் சென்று... "உனக்கும் சேர்த்தே விபூதி கொடுத்தேன்" என்கிறார்... மனம் இளகுகிறது... மெழுகு இளகுகிறது எனில் ஒளி வந்துவிட்டதென அர்த்தம்... மனிதன் இரக்கப்படுகிறான்... கருணை காட்டுகிறான் என்றால் ஆன்மீகம் அவனுக்குள் நிகழ்கிறது என அர்த்தம்... சில தீயப் பழக்கம் விடாத வேதாளமாய் துறத்தும்.. விட்டு விட்டு தோன்றும் மின்னலாய் கண்களைப் பறிக்கும்... ஒரு நாள் வேறோரு ஆசிரியர் தந்த விருந்துக்கு சென்று சிறிதளவு மது அருந்திவிடுகிறார்... அன்றிரவு தூக்கத்தில் மீண்டும் கனவில் வந்த சுவாமி... ஒரு புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்...! உச்சந்தலையில் சுத்தியல் வைத்து அடித்தது போல் அந்த புத்தகச் செய்தி இருக்கிறது! உறக்கத்திலிருந்து எழுந்து அந்த புத்தகத்தை எடுக்கச் சொல்லி.. மனைவி கொண்டு வர... அதே புத்தகம்.. அதே பக்கம்... கனவில் வாசித்த அதே சம்பவம்...
"ஒரு முறை சுவாமியை ஒரு வீட்டில் உணவருந்த அழைத்ததால் சுவாமியும் சென்று... சென்ற அடுத்த கணத்தில் திரும்பிவிடுகிறார்.. சுவாமியோடு வந்த பக்தர்கள் காரணம் கேட்க.. அந்த வீட்டில் மது அருந்துகிறார்கள்.. ஆகவே நான் அங்கே சாப்பிடுவதாக இல்லை" என்கிறார்.. இதை வாசித்த நொடி.. அவர் வீட்டு வாசலை விட்டு வெளியேறியது குடி!!
அதைப்போலவே.. லஷ்மி குட்டி என்ற பெண்மணி... ஒரு ஆங்கிலோ இந்தியர் வாழும் முறையில் வாழ்கிறார்... காரணம் சிநேகிதர்கள் ஆங்கிலோ இந்தியர்கள்... ஆகவே மது அருந்தாமல் மீன் உண்ணாமல் அவர்களின் உணவு நிறைவு பெற்றதே இல்லை.. மது அருந்தி ஏதோ தேவலோகத்தில் மிதப்பது போல் ஆடவும் செய்வார்.. அவருக்கு உதவியாக இருந்த ஆயா வேணி மூலமாக சுவாமியை பற்றி முதன்முதலாக கேள்விப்படுகிறார்... சுவாமி எவரையும் தன் கருவியாக்கி எவரையும் பக்தராக்கிக் கொள்வார்! 1963ல் ஒரு டென்ட் அமைத்துக் கொண்டு பர்த்தியில் தங்குகிறார்... ஆரம்ப காலக்கட்டத்தில் தங்கும் வசதி இல்லை... சிறுகச் சிறுக சுவாமி உருவாக்கிய உன்னதம் தான் பிரசாந்தி நிலையம்... சுவாமியே அவ்வளர்ச்சிக்கு காரணமே தவிர... ஒரு தனி மனிதனால் அத்தனைப் பெரிய சுயநலமற்ற சாம்ராஜ்யம் மன்னராட்சியில் கூட சாத்தியப்படவில்லை...! காரணம் சுவாமி பரிபூரண அவதாரம் என்பது இதன்வழி உணர முடிகிறது! கோபுரத்தை தாங்கிக் கொண்டிருப்பது போல் ஒரு பொம்மை கோபுரத்தில் இருக்கும்... அது தன்னால் தான் கோபுரம் சரியாமல் நிற்கிறது என நினைப்பது போல் தான் மனிதன்... சுவாமியே சிருஷ்டி கர்த்தா! ஆக வசதி இல்லா ஆரம்ப காலத்தில் வசித்து தரிசனம் பெற இருந்த லஷ்மி குட்டியை சுவாமி அழைத்து "மதராஸ் அம்மா... உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்கிறார்.. லஷ்மி குட்டிக்கோ கைகால் நடுங்குகிறது... இக்கரம் இரண்டை என் தலைமேல் வைப்பாய் என்பது போல் சுவாமி தலைமேல் கைவைக்கிறார்... மெழுகு தலையின் மேல் பட்டாம்பூச்சி அமரவில்லை... நெருப்பு விரல் அல்லவா அமர்ந்திருக்கிறது..! ஆகவே அவர் உருகுகிறார்... "உனக்கு பக்தி இருக்கிறது!" என சுவாமி ஆசி வழங்குகிறார்!
ஊர் திரும்புகிறார்... சாப்பாட்டு மேஜையில் மீன்.. இவர் அமர அது தவளையாக காட்சி தருகிறது! மீன் எப்படி தவளையாக மாறும்? நரியையே பரியாக மாற்றிய சுவாமியால் மீனை தவளையாக மாற்ற முடியாதா ! உதவியாளர் வேணி ஒரு துண்டு சாப்பிட்டுவிட்டு இது தவளை இல்லை மீன் தான் என்கிறார்... லஷ்மி குட்டி சிறிது சாப்பிட்ட உடனே வாந்தி எடுக்கிறார்... தலையில் சுவாமி கை வைத்தது இப்போது தனது வேலையைக் காட்டுகிறது... வேலை காட்டுவது மட்டுமல்ல வேலையை காட்டுவதும் சுவாமி தான்! அன்றிலிருந்து மது மாமிசம் இரண்டையும் விட்டுவிடுகிறார்... முட்டையும் மாமிச உணவைச் சேர்ந்ததே... ஆகவே அதைக் கூட அவர் விட்டுவிடுகிறார்! சுவாமி கனவில் தோன்றி வானுக்கும் பூமிக்கும் வளர்ந்து விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார்... உடனே பர்த்திக்கு பறந்தோடுகிறார்... தரிசன வரிசையில் சுவாமி தனது சிருஷ்டிப் படம் ஒன்றை தருகிறார்... தனது வஸ்திரத்தை பிடித்தபடி... இது என்ன.. நூலைப் பிரித்துவிட்டால்.. இதில் என்ன இருக்கிறது...? ஒன்றுமே இல்லை... வெறும் மாயை இந்த உலகம்.. என கைவிரல்களை உதறியபடி செல்கிறார்... தீய பழக்கம் மட்டுமல்ல மாயையும் உதற வேண்டும் என உணர்த்திவிட்டு நகர்கிறார்... அப்போது எங்கிருந்தோ ஒரு சேவல் கூவியபடி அந்த சைவ லஷ்மி குட்டியை கொக்கரக்கோ என ஒலி எழுப்பி ஆசீர்வதிப்பது காதுகளில் கேட்டபடியே இருக்கிறது!!
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 69/ ஆசிரியர் : திருமதி சாயிசரஜ்)
மதுவும் மாமிசமும் உடலையும் மனதையும் கெடுத்துவிடுகிறது...ஆகவே அவை தீயப்பழக்கங்கள்... ஆன்மாவையே அழித்துவிடும் தீயப் பழக்கங்கள் இருக்கின்றன... அவை தான் அகந்தை... பொறாமை எனும் வயிற்றெரிச்சல்... உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது... கவலைப்படுவது... பயப்படுவது... எதிர்பார்ப்பது போன்றவை... இவை அனைத்தும் மாயையால் அரங்கேறுகிறது.. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு எனில் அகந்தையும் கோபமும் உலகத்திற்கே கேடு! ... தியானம் எனும் ஆன்ம சாதனா சிகிச்சை பெற்று பெருந்தீய பழக்கத்திலிருந்து விடுபடுவோமாக! மது அருந்தும் வீட்டில் சாப்பிடவே மாட்டேன் என கூறிய சுவாமி அகந்தையான அகத்தில் மட்டும் எப்படி அரியாசனம் இட்டு அமர்வார்?
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக