தலைப்பு

வியாழன், 6 ஜனவரி, 2022

PART 1 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


பிரம்மிப்பின் உச்சமும்... முக்தியின் முகப்புமான இமாலயத்தில் சுவாமி தான் தேர்ந்தெடுத்த 11 மகான்களை தியான சமாதிகளில் ஆழ வைத்து எவ்வாறு முக்தி வழங்கினார் ? என்பதைப் பற்றியும்... அவர்களின் தியான வாழ்க்கையைப் பாதுகாக்க சுவாமி அருளிய அட்சயப் பாத்திர மகிமையைப் பற்றியும்... உண்மையில் சுவாமி யார்? வெறும் அவதாரம் மட்டுமா?  மகாவதார் பாபாஜி முதல் இமய யோகிகள் சுவாமி பற்றி என்னென்ன பகிர்ந்திருக்கிறாரகள் ? என்பதைப் பற்றியும் முதன்முதலாக தெளிவாக... முழுமையாக... சுவாரஸ்ய சுருக்கமாக... ஆதாரப்பூர்வமாக ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் இதோ‌...அந்த இமயத்துப் பொக்கிஷங்கள்!!


இந்தியாவின் தலையும் கிரீடமும் இமாலயமே! அந்தப் பனிச்சிகரங்கள் சூரியோதயத்தில் ஒளிர்வதைப் போல் தான் சுவாமியின் தேஜோமய பிரகாசங்கள்... அந்தப் பனிச்சிகரங்கள் உருகுவதைப் போல் தான் சுவாமியின் இதயம்... குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கிற பொருள் கெடாது... அதைப் போலவே குளிர் சூழும் அந்த பெரும்புண்ணிய தலத்தில் செய்கிற தவமும் ஆன்மாவும் கெடாமல் முக்தி நிலைக்கு முன்னேறிச் செல்கிறது! குளிரக் குளிர கங்கையிலும் மானசரோவரிலும் குளித்து... நாடி நரம்புகள் விறைத்து... இமய மலை நோக்கி தவம் செய்கையில்... முகத்தில் அடிக்கின்ற தேவலோகக் காற்று மனதை விறைத்துப் போக வைத்து... உடல் மறத்து... மனித ஆன்மாவை அங்கிங்கெணாதபடி நிறைத்துவிடுகிறது...  தியானம் சுலபமாகிறது... தியானம் சுலபமே...மனமே அதனை கடினமாக்க முயற்சிக்கிறது... அந்த கடின மனத்தை உறைய வைத்து உருக்குலைத்து விடுகிறது இமாலயம்...! அந்த இமாலயத்தின் கர்ப்பப்பைகளாகிய குகைகளில் ஒன்று ஸ்ரீ நரநாராயண குகை... கருவறைக்குள்ளிருந்து வெளியேறும் கர்ம மனிதன் மீண்டும் கருவறைக்குள் போகவே கூடாது என்பதற்காக இமயமலை குகைகள் எனும் இறை கருவறைக்குள் புகுந்து மகானாகி வெளியே வெட்டவெளியாகிறான்! 

சாயி பக்தர்கள் நாம் அனைவரும் ஸ்ரீ மகேஸ்வரானந்த சுவாமிகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்... அவர் தான் வால்மீகி போல்... வியாசர் போல் அந்த அரிய பெரும் இமயப் பொக்கிஷங்களை இந்தியில் முதன்முதலாக எழுதியது! ஒரு துறவு மனநிலையே அதனை எழுத முடியும் என்பதால்தான் அவரை வைத்து அந்த மாபெரும் பாக்கியத்தை சுவாமி எழுத்தாகப் பிரசவிக்கச் செய்தார்... எல்லாக் கருவறைகளும் புத்தரை ஈன்றெடுக்க முடியாது என்பது போல்...சுவாமிகள் மகேஸ்வரானந்தா பெற்ற அருந்தவப் பேறு அது! "நரநாராயண குகை ஆசிரமம்" எனும் புத்தகப் பெயருடைய அந்தப் பொக்கிஷம் அது‌.. 1978ல் சுவாமிகள் சுவாமியை தரிசிக்க வருகிறார்..அவரை தங்கும்படி சுவாமி சங்கல்பிக்க... அங்கே அவர் தங்கியிருக்கும் போது நேபாள ஜனக்பூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய ஒரு இமயத்து இளம் மகான் சுவாமியை தரிசிக்க வருகிறார்... மக்கள் மகான்களை தரிசிப்பர்... ஆனால் மகான்களே சுவாமியை தரிசிக்க வருகிறார்கள் எனில் சுவாமி யார்? என்பதைப் பற்றிய உணர்வு... நமக்கான இந்த இமயப் பயணம் முடிவதற்குள் தெள்ளத்தெளிவாக விளங்கிவிடும்...! அந்த இமயத்து இளம் மகானை மகேஸ்வரானந்த சுவாமிகள் தரிசித்து நேர்காணல் பெறுகிறார்... அப்போது அவர் சொன்ன அவரது ரிஷிமூலமும்... இமாலயத்தில் அவர்கள் வாழ்கின்ற ரிஷிவாழ்க்கையும் முதன்முதலாக வெளிச்சத்திற்கு வருகிறது...

ஜனக்பூர்: சீதா தேவியின் பிறந்த இடம் மற்றும் குளங்களின் நகரம்

வாருங்கள் புட்டபர்த்தியிலிருந்து நேபாளம் செல்வோம்!  நேபாள ஜனக்பூர் மிதிலா நகரில் பிறந்தவர் அந்த இளம் மகான்! ஆன்மீக பாரம்பரியம் அவருடைய குடும்பம்..‌. தான் இன்னார் எனும் அடையாளங்களை தொலைப்பதே ஆன்மீக வாழ்க்கை என்பதால் அந்த மகான் தனது பெயரையும்...பூர்வாசிரம பெயர் விபரங்களையும் சொல்லவில்லை... நேர்காணல் எடுப்பவர் சராசரி அல்ல சன்யாசி என்பதால் அபத்தமான கேள்விகளையும் அவர் முன்வைக்கவில்லை... அந்த இளம் மகான் மேற்படிப்பான எம்.எஸ்.சி'க்காக பெங்களூர் வருகிறார்... தேர்வு முடிந்து வீட்டுக்கும் பெங்களூருக்குமாக பயணிக்கிறார்.. அப்படி ஒரு நாள்... அந்த அபூர்வ நாள்... அதிசயம் நிகழ்கிறது... ஒரு சன்யாசி இவரது தாயார் வீட்டு வாசலில் யாசகத்திற்கு நிற்கிறார்.. 

உள்ளே அழைத்து கால்களில் வணங்கி "சுவாமி.. என்ன சேவை தங்களுக்கு செய்ய வேண்டும்! தயாராக இருக்கிறேன்" என கண்களை மூடியபடி கைகூப்பி வேண்டுகிறார்... "நான் விரும்பியதை கொடுக்க நீ தயார்தானா?" எனக் கேட்கிறார்... இதற்கிடையே அவர் கணவனும் , கடைசி மகனும் இல்லம் வந்து துறவியை தரிசித்த படி வணங்குகிறார்கள்...

        "முதல் நான்கு மகன் கல்வி முடித்து மணம் முடித்து விட்டனர்.. இவன் கடைசி மகன்... எம்.எஸ்.சி எழுதி இருக்கிறான்.. 6 மாதத்திற்குள் அவனுக்கு திருமணமும் செய்து வைத்தபின்.. அப்பாடா என ஆன்மீக வாழ்க்கை , தியானம் என இருந்து விடுவோம்" என்கிறாள் தாய்...

    "அதாவது.. உனக்கு திருமணம் நடக்கும்... நீ குழந்தைகள் பெறுவாய்...அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வாய்... அவர்களுக்கும் குழந்தை பிறக்கும்... அப்படியே கர்ம வலைகளுக்குள் நீயும் சிக்கி.. அனைவரையும் சிக்க வைத்து... இது தான் லட்சிய வாழ்க்கை என நினைக்கிறாயா?" என சத்திய ஞானம் எனும் சுத்தியலால் உச்சந்தலையில் நச் என அடிக்கிறார்...

    "அறநெறிகள் அறிந்தும்... அந்தணர் குலத்தில் பிறந்தும்... ஆன்மீகம் புரிந்தும்... ஐந்தைப் பெற்றும்... ஒருவனையாவது இந்த உலகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என உனக்கு தெரியாதா?" என மேலும் ஒரு அடி... அறியாமையில் இருப்பவர்களுக்குத் தான் அது பேரிடி... அறநெறி அறிந்த தாய்க்கு அச்சொல் அடி அல்ல தெய்வத் திருவடி!

    அந்த சன்யாசியின் சத்தியச் சொல்லுக்கு மௌனமாக தலை குனிகிறார்... சத்தியத்தின் முன் எப்போதும் பொய் தலைகுனிந்து நிற்கிறது... பிரேம வருகையில் கர்வ வெறுப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுகிறது! 

    "நீ ஏற்கனவே நான் கேட்பதை தருவேன் என ஒப்புக் கொண்டுள்ளாய்... வேறு எதுவும் எனக்கு தேவையில்லை...ஆகவே உன் கடைசி மகனை எனக்கு யாசகமாக கொடுத்துவிடு.. அவனை தலைசிறந்த யோகியாக... தர்மகர்த்தாவாக உருவாக்குகிறேன்" என்கிறார்.. 

    தலை அசைத்து கண்கலங்கி தாயும் தந்தையும் கைகூப்புகிறார்கள்...

"இப்போதல்ல... அந்த நேரம் வரும்... நானே என் யாசகத்தை எடுத்துக் கொள்கிறேன்" என விடைபெறுகிறார் அந்த சன்யாசி...


தலையே சுற்றுகிறது எம்.எஸ்.சி படித்த அந்த இளைஞனுக்கு... அவனுக்கு கடவுள் நம்பிக்கை வேறு இல்லை... என்ன அபத்தம்! நான் என்ன பண்டமாற்றுப் பொருளா? யார் அந்த தாடிவாலா? பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகத்தில் இதை எல்லாம் யாராவது நம்புவார்களா? விஞ்ஞான உலகமிது... இந்த காலத்தில்... இப்படி ஒரு மூடத்தனமா? என் தாய்க்கும் தந்தைக்கும் பைத்தியம் தான் பிடித்துவிட்டது...என அவன் தலைசாய தலையணையில் சரிகிறான்...

தலை கிறு கிறுவென சுற்றுகிறது...

யார் அந்த சன்யாசி என அவரை வெறுப்பாக யோசித்துக் கொண்டே இருக்கிறான்...

விட்டத்தில் மின்விசிறியும் இவன் தலையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கிறது...


(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமமும்-- பாகம் 2, 3/ மூலம் - மகேஸ்வரானந்தா/ தமிழாக்கம்- விஜயராமன்)


இமயப் பயணம் 

இன்னும் குளிரும்...


 பக்தியுடன்

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக